search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஐகோர்ட்டுக்கு எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில், நடைபாதைகளை ஆக்கிரமித்து பலர் சட்டவிரோதமாக கடை வைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

    இதையடுத்து, ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் தேவநாதனை, நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான முதல் அமர்வு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    பதிவாளர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி, அப்பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிதாக பதவி ஏற்ற அதிகாரிகள், சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.

    இந்தநிலையில், டிராபிக் ராமசாமி மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்.எஸ்.சி.போஸ் சாலை நெரிசலான பகுதி என்பதால் நடைபாதை கடை நடத்த ஏற்கெனவே ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.

    அவர்கள் மீது நான் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ள வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அடையாள அட்டை வழங்கியுள்ளனர். எனவே அந்த அடையாள அட்டைகளை ரத்து செய்வதுடன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை மதியம் 1 மணிக்கு தள்ளிவைத்து, அப்போது மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜரானார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் நடைபாதை கடை அமைக்க வியாபாரிகளை எப்படி அதிகாரிகள் அனுமதித்தார்கள்? நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. நடைபாதை வியாபாரிகள் தொடர்பாக தினமும் ஏராளமான வழக்குகள் தாக்கலாகிறது. ஒவ்வொரு வழக்கிலும் அரசு தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டு வருகிறது. நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் சி.மணிசங்கர், 20 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்றுஇடம் வழங்குவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

    இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ’கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே பதிலைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக வருகிற 20-ந்தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கின் விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #tamilnews
    கல்வி கடன் பிரச்சனை தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்த்து நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் நிராகரித்தது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மாணவியின் தந்தை கடன் வாங்கி திருப்பித்தரவில்லை. பல தவணைகளை செலுத்தாமல் உள்ளார். மேலும், நர்சிங் படிப்பு கல்விக்கடன் பெறும் படிப்புகளுக்கான பட்டியலில் இல்லை. அதனால், இவருக்கு கடன் வழங்க முடியாது’ என வாதிட்டார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், கடன் கொடுத்து விட்டு, கடனாளி பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதை விட, கடன் கொடுக்காமல் இருப்பதே மேலானது என்று தீர்ப்பு அளித்தார். மாணவிக்கு கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் தந்தை எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. எனவே, தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.#tamilnews
    கவர்னர் மாளிகையில் அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை துணைச் செயலாளர், கிண்டி போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், ‘2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கவர்னர் மாளிகைக்கு நாற்காலி, மேஜை, அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவர்னர் மாளிகைக்கு நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ‘சப்ளை’ செய்த முகமது யூனூஸ், கவர்னர் மாளிகை கணக்காளரான சிவக்குமார், ஓய்வுபெற்ற உதவி கணக்காளரான குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

    இதில், சிவக்குமாரும், குப்புசாமியும் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews
    ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வரதட்சணை வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt

    சென்னை:

    தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் வருண்குமார் என்பவருக்கு எதிராக பிரிதர்ஷினி என்ற இளம் பெண், போலீசில் வரதட்சணை புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னை காதலித்த வருண்குமார், ஐ.பி.எஸ். அதிகாரியானதும் திருமணம் செய்ய பெரும் தொகையை வரதட்சணையாக கேட்பதாக கூறியிருந்தார்.

    இதுகுறித்து, வரதட்சணை தடுப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வருண்குமார் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர், வருண்குமார் மீதான வரதட்சணை வழக்கை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தார். #HighCourt

    மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Jayalalithaamemorial
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை, உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை ஆகும்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது. அதாவது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறது.

    இந்த நினைவிடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச் சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை கேட்டு மார்ச் 14-ந் தேதி தான் தமிழ் வளர்ச்சித்துறை மனு கொடுத்துள்ளது. அந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல், இரண்டே நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும் ஒப்புதல் பெறவில்லை. அனைத்து விதிகளையும் மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான பகுதியில் கட்டுமானம் (நினைவிடம்) கட்டினால் மட்டுமே மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் தான் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெறத்தேவையில்லை’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வி.இளங்கோ வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #Jayalalithaamemorial
    நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். #ThangaTamilSelvan

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    இதை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி இருந்தனர்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கூறி இருந்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அளித்த தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று கூறி இருந்தார்.

    நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி சமூக வலை தளங்களில் மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.


    அரசுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுகிறார். கோர்ட்டில் இனி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் வழக்கை வாபஸ் பெற போகிறேன் என்று கூறி இருந்தார். மேலும் பல்வேறு கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.

    இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். மேலும் தலைமை பதிவாளர் சக்திவேலை நேரில் சந்தித்தும் மனு கொடுத்துள்ளார்.

    தலைமை நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு தாமாக முன்வந்து அவதூறு வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் அல்லது எனது மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும். #ThangaTamilSelvan

    18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமமானது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். #Highcourt #MLAsDisqualified
    சென்னை :

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அவர்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சமீபத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆயினும், நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து பரவலாக பலரும் விமர்சனம் செய்து பேட்டியளித்தனர்.

    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன், மனுதார்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சனம் செய்வது தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமமானது என தெரிவித்தார்.

    மேலும், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தங்க தமிழ்செல்வன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். #Highcourt #MLAsDisqualified 
    பேய் விரட்டும் சடங்கு என்ற பெயரில் யாரையாவது துன்புறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
    சென்னை:

    தர்மபுரியை சேர்ந்தவர்கள் சின்னபொண்ணு, சுசீலா, முத்தாயி, விஜயா. இவர்கள், தங்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சின்னபொண்ணு தன் மகனின் மனைவிக்கு (மருமகளுக்கு) பேய் பிடித்துள்ளது என்று கூறி கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி தங்கள் ஊருக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவருடன், அவரது மகள்கள் சுசீலா, முத்தாயி, விஜயா உள்பட 15 பேர் சென்றுள்ளனர்.

    கோவிலில் வைத்து, அந்த பெண்ணின் ஆடைகளை களைந்துள்ளனர். தலைமுடியை வழித்து மொட்டை போட்டுள்ளனர். பின்னர், தீயில் பழுக்க காய்ந்த ஊசியை, அந்த பெண்ணின் நாக்கில் வைத்து சுட்டுள்ளனர்.

    பேய் விரட்டுகிறோம் என்ற பெயரில் இதுபோன்ற சடங்குகளை நடத்தி, ஒருவரை துன்புறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. ஆண்டாண்டு காலமாக இதுபோன்ற சடங்குகளை நடத்துகிறோம் என்று கூறி, இதுபோன்று கொடூரமாக துன்புறுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

    சடங்கு என்ற பெயரில் ஒருவரது கண்ணியத்தை சிதைப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற செயல்களை ஜீரணிக்க முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தண்டனையை மாவட்ட செசன்சு கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

    அதேநேரம், இந்த சம்பவம் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தண்டனை பெற்றவர்களுக்கு வயதாகிவிட்டது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மாற்றி அமைக்கிறேன்.

    ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்கிறேன். அதற்கு பதில், இந்த வழக்கில் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக மாற்றுகிறேன். இதை தவிர, மனுதாரர்கள் 4 பேரும் தலா ரூ.15 ஆயிரத்தை தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செலுத்த வேண்டும். இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    தனக்கு எதிராக பாலியல் புகார் செய்த மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர் குமாரவேல். இவர், அவரது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த மாணவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் பேராசிரியரிடம் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குமாரவேல் கல்லூரி தலைவரிடம் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில், அந்த மாணவி தனக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்று தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். இதை எதிர்த்து குமாரவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் தந்தால் விசாரணை மேலும் தாமதமாகும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார்.

    பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘புகார் கொடுத்த மாணவியை கல்லூரியைவிட்டு வெளியே செல்ல தடை விதிக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார்.

    எனவே, மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை புதுச்சேரி மாநில சட்டப்பணி ஆணைக்குழுவிடம் 2 வாரத்துக்குள் செலுத்தவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் சூரிய பிரகாசம் ஆஜராகி, தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று நான் தொடர்ந்தேன்.

    ஐகோர்ட்டு, அதுகுறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு இந்த பிரச்சினையை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவசர அவரசரமாக ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழக அரசின் இந்த உத்தரவு சரியானது அல்ல. தற்போது அருணா ஜெகதீசன் விசாரணையையும் தொடங்கி விட்டார். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் தொடரும் வழக்கை இன்று விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்கள்.

    அதற்கு வக்கீல் சூரிய பிரகாசம், அதுவரை நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் இது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்று கூறினார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், அந்த கடைகளை காலி செய்ய டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, முதல்-அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடைகளை காலி செய்யும்படி கூறப்பட்டிருந்தது.

    இந்த நோட்டீசை எதிர்த்து குமார் என்பவர் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

    பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் வைத்து நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களின் தொல்லியல் தன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், மேலமாசி வீதியில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், அண்ணா நகர் சேவுகப் பெருமாள் கோவில், மதுரை கிருஷ்ணராயர் தெப்பம் ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், குற்றாலம், திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில்,

    சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், திருச்சி நாகநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் என்று 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு, கடையை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதாவது, கோவில் வளாகத்துக்குள்ளும், வெளியேயும், கோவில் மதில்சுவர் அருகேயும் கடை வைத்திருப்பவர்கள், பூஜை பொருட்கள், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர்கள் வைத்திருக்கும் கடைகளினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. எனவே, கடைகளை காலி செய்தால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்று வாதிட்டனர். கோவில்களை பாதுகாப்பது என்பது பொதுநலன் ஆகும். எனவே, கடை வைத்திருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறினாலும், தனிப்பட்டவர்களின் நலனைவிட, பொதுநலன் தான் முக்கியமாகும்.

    அதனால், கோவிலை சுற்றியுள்ள கடைகளை காலி செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சரியான முடிவினை எடுத்துள்ளனர். அந்த நடவடிக்கையில் சட்டவிரோதம், விதிமீறல் எதுவும் இல்லை. எனவே, இந்த நோட்டீசில் தலையிட இந்த ஐகோர்ட்டு விரும்பவில்லை.

    அதேநேரம், மனுதாரர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக, கடை வைத்திருப்பதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடியுமா? என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடியும். மற்ற கோவில்களில் மாற்று இடம் வழங்க இடம் இல்லை’ என்று கூறியது.

    எனவே, இந்த இரு கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், மாற்று இடம் கேட்டு மனு செய்தால், அதை கருணையுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். பிற கோவில்களில் கடை வைத்திருப்பவர்களை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கவேண்டும்.

    அதனால், வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் கடைகளை காலி செய்யவேண்டும். அதுவரையில் குத்தகை தொகை மற்றும் வாடகை கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் முறையாக செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, டிசம்பர் 31-ந் தேதி வரையில், கடை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனுவும் கொடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.#tamilnews
    ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் 7 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதனால், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளாக 7 வக்கீல்களை நியமித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதன்படி, புதிய நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த்வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகியோர் நேற்று பிற்பகலில் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.



    இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன் உள்பட அனைத்து நீதிபதிகளும், ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், நீதிபதிகள் கே.என்.பாஷா, எஸ்.நாகமுத்து, கீழ் கோர்ட்டு நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் உறவினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



    புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டதும், அவர்களை வாழ்த்தி, வரவேற்று அட்வகேட் ஜெனரல் பேசினார். அப்போது இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகள், அதாவது தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 12 பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டு என்ற பெயரை நம்முடைய வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட்டு பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

    இதையடுத்து, புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்து பேசினார்கள். அப்போது, அவர்களை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்த ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான சஞ்சய்கிஷன் கவுல், ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.

    அதேபோல, தங்களது பெற்றோர், மனைவி, குழந்தைகள், ஆசிரியர்கள், மூத்த வக்கீல்கள், சக வக்கீல்கள் என்று பலரது பெயரை குறிப்பிட்டும் நன்றி தெரிவித்தனர்.

    தற்போது 7 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளதால், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளன. காலிப்பணியிடங்கள் 12 ஆக குறைந்துள்ளன. 
    ×