search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. #ThoothukudiFiring #PoliceFiringReport
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை தொடங்கியதும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இதுவரை நடந்த 7 பேரின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். #ThoothukudiFiring #PoliceFiringReport
    வைரஸ் காய்ச்சலால் பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வியடைந்த சென்னை மாணவியை மறுதேர்வு எழுத ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படித்த ஷாரோன் நிவேதிதா என்பவரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார். எனவே தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத எனது மகளை அனுமதிப்பதுடன், அதே பள்ளியில் பிளஸ்-2 படிப்பை தொடரவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், ‘சி.பி.எஸ்.இ. விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே மறுதேர்வு எழுத முடியும்’ என்றும், ‘காய்ச்சலால் தான் தோல்வியடைய நேரிட்டது’ என்று மாணவி தரப்பிலும் வாதிடப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அந்த மாணவி தோல்வியடைந்த பாடங்களுக்கு நடைபெறும் மறுதேர்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. #Jayalalitha #Memorial
    சென்னை:

    ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சட்டவிரோதமாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.



    மேலும் அந்த மனுவில், ‘அடிக்கல் நாட்டு விழாவுக்காக மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பேனர்கள் அவைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற சென்ற என்னை அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கினார்கள். அப்போது தாக்குதலை தடுக்காமல், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்தனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. #Jayalalitha #Memorial 
    என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கிற்கு பதில் அளித்த அண்ணா பல்கலைக்கழகம், ‘ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கடந்த ஆண்டே அறிவித்து விட்டோம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்பதால் எந்த பாதிப்பும் இல்லை. விண்ணப்பத்தை எளிதாக விண்ணப்பிக்கலாம்’ என்று கூறியிருந்தது.

    இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர், ‘ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, கலந்தாய்வில் கலந்துகொள்ளும் இந்த புதிய முறையினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால், மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை நேரடியாகவோ அல்லது கேட்பு காசோலையாகவோ செலுத்த அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் நிரப்ப அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து இறுதி முடிவை தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

    அப்போது, ‘தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்களில் தலா 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர். விண்ணப்ப கட்டணத்தை ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்’ மூலமாக மட்டுமே முடியும் என்றும், கேட்பு காசோலை மூலம் பணம் பெறுவதை தொழில்நுட்ப சிக்கல் உள்ளது’ என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.

    இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதால்தான் மாற்று கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம் என்று நீதிபதிகள் கூறினர்.

    பின்னர், ‘விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    போலீசாரின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்துறைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.#policesuicide
    சென்னை:

    பணிச்சுமையால் போலீசார் தற்கொலை செய்துகொள்வதாகவும், எனவே அவர்களின் தற்கொலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், பல்வேறு இயற்கை சூழல்களில் தொடர்ந்து பணியாற்றுவதாலும், விடுப்பு இல்லாமல் பணிபுரிவதாலும் போலீசார் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன ரீதியாகவும் ஓய்வு தேவை. எனவே, அவர்களின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்துறைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். #policesuicide
    நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    ‘விருதுநகர் மாவட் டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

    இதற்கிடையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் தலைமையில், ஒரு விசாரணை குழுவை தமிழக கவர்னர் அமைத்துள்ளார். ஒரு குற்றச்செயலுக்கு இரு அமைப்பு விசாரணை நடத்தினால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.

    எனவே, நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கை, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக தலைமை செயலாளர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பதில் அளிக்கும் படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல், ஐகோர்ட்டில் முறையிட்டார்.

    ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் விசாரணை முடிந்து, வருகிற 15-ந் தேதி அவர் தன்னுடைய விசாரணை அறிக்கையை தமிழக கவர்னரிடம் வழங்க உள்ளார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.


    ×