search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜ்வாடி"

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் தடை விதித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம் கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அசம் கான் 72 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.



    இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி சமாஜ்வாடி வேட்பாளரான அசம் கான், நாளை காலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.

    சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EC #AzamKhan
    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணியில் இருந்த நிஷாத் கட்சி விலகியதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #NishadParty
    லக்னோ:

    உ.பி.யில் பாராளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் நிஷாத் கட்சியும் இணைந்தது. இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களில் கூட்டணி உடைந்தது. கூட்டணி கட்சிகள் தங்களை மதிக்கவில்லை என்று கூறிய நிஷாத் கட்சி, நேற்று கூட்டணியில் இருந்து வெளியேறியது.

    பின்னர், அக்கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், நேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நிஷாத் கட்சி வெளியேறியிருப்பது, சமாஜ்வாடி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    கோரக்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்ற யோகி ஆதித்யநாத், 2017ல் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வராக பதவியேற்றார். பின்னர் இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத்தின் மகன் பிரவீன் நிஷாத் வெற்றி பெற்றார்.

    தற்போது நிஷாத் கட்சி வெளியேறியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி, இன்று காலை கோரக்பூர் மற்றும் கான்பூர் தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த 2 வேட்பாளர்களும் நிஷாத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர். கோரக்பூர் தொகுதியில் ராம் பவுல் நிஷாத், கான்பூர் தொகுதியில் ராம் குமார் நிஷாத் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.

    சமாஜ்வாடி அறிவித்த இரண்டு வேட்பாளர்களில், ராம் பால் நிஷாத், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.  சமீபத்தில் பாஜகவில் இருந்து சமாஜ்வாடியில் இணைந்தவர் ஆவார். மற்றொரு வேட்பாளர் ராம் குமார் நிஷாத்துக்கு இதுதான் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பாஜக கூட்டணியில் நிஷாத் கட்சி இன்று இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #NishadParty
    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜுக்கு எதிராக 7 தொகுதிகளில் போட்டி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. #Samajwadi #BahujanSamajParty #congress

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    காங்கிரஸ் கட்சியை இந்த இரு கட்சிகளும் தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க., சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் எதிர்த்து போட்டியிட மாட்டோம் என்று அகிலேஷ்-மாயாவதி இருவரும் அறிவித்தனர். அதன்படி அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்தும் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்தும் அவர்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

    நட்பின் அடிப்படையில் இந்த முடிவை முன்பு முலாயம்சிங் யாதவ் மேற் கொண்டார். தற்போது அதை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பின்பற்றியுள்ளனர்.


    இந்த நிலையில் அகிலேசுக்கும், மாயாவதிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கூறியதாவது:-

    சோனியா, ராகுலை எதிர்த்து சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. எங்களுக்கிடையிலான இந்த நட்பு, நல்லுறவு தொடர்கிறது.

    அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது. அவரது மருமகள் டிம்பிள் போட்டியிடும் கன்லோஜ் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்.

    அதுபோல முலாயம்சிங் யாதவ் உறவினர் அக்‌ஷய் யாதவ் போட்டியிடும் பைரோசாபாத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாது.

    இவ்வாறு ராஜ்பப்பர் கூறினார். #Samajwadi #BahujanSamajParty #congress

    மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Samajwadi #BahujanSamajParty
    மும்பை :

    உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மராட்டியத்தில் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மராட்டியத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியதாவது:-

    கூட்டணி குறித்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறோம். அகிலேஷ் யாதவிடம் பேசிவிட்டு இறுதி முடிவு எடுப்போம். பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிவதை தடுக்க வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். காங்கிரசுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.

    இ்வ்வாறு அவர் கூறினார்.



    இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் சுரேஜ் சக்காரே கூறுகையில், ‘‘வருகிற 20-ந்தேதிக்குள் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். விதர்பா, மரத்வாடா மண்டலத்தில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 16 லட்சம் வாக்குகளையும், 2014-ல் நடந்த தேர்தலில் 14 லட்சம் வாக்குகளையும் பெற்று உள்ளோம். எங்கள் கூட்டணியில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 முதல் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.

    பிரகாஷ் அம்பேத்கர் தனித்து போட்டியிடுவது, எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கொண்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு விதர்பா மண்டலத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளில் அந்த கட்சி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாக்குகளை பெற்று இருந்தது. இதேபோல முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பிவண்டி, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, நாந்தெட், அவுரங்காபாத் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Samajwadi #BahujanSamajParty
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தா:
        
    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



    நாங்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு பிரதமரை உங்களால் காட்ட முடியுமா? எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய அரசு ஏவி விட்டுள்ளது என்று அகிலேஷ் யாதவ் புகார் தெரிவித்துள்ளார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 2012-ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். அப்போது 2012-ல் இருந்து 2013 வரை சுரங்கத்துறை மந்திரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் வேறு மந்திரி நியமிக்கப்பட்டார்.

    இந்த காலக்கட்டத்தில் விதிமுறைகளை மீறி சுரங்கங்களை அனுமதித்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, சமாஜ்வாடி எம்.எல்.சி. ரமேஷ்குமார் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

    அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆட்சியில் சுரங்கத் துறை மந்திரியாக இருந்தவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய பாரதீய ஜனதா அரசு ஏவி விட்டுள்ளது.

    பழைய வழக்கை மீண்டும் தோண்டி விசாரிக்கிறார்கள். இதன்மூலம் பாரதீய ஜனதா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது.

    சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக வைத்து கொண்டு பாரதீய ஜனதா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    நாங்கள் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க செல்கிறோம். எங்களை தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். சி.பி.ஐ. என்ன செய்ய முடியுமோ? செய்யட்டும்.

    அவர்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் சொல்ல தயார். நாங்கள் சொல்லும் பதில் மட்டும் அல்ல, இந்த நாட்டின் மக்களும் பாரதீய ஜனதாவுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்.

    பாரதீய ஜனதா தனது உண்மை முகத்தை காட்டியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் காங்கிரஸ் இதை செய்தது. இப்போது பாரதீய ஜனதா செய்கிறது.

    பாரதீய ஜனதாவின் இந்த செயலுக்கு எதிர் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

    பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 71 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுபற்றி சமாஜ்வாடி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரஜேந்திர சவுத்ரி கூறியதாவது:-

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பல்வேறு கட்டமாக சந்தித்து பேசினர். வெள்ளிக்கிழமையும் டெல்லியில் அவர்கள் சந்தித்து பேசினர். இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணிக்கு முதல்கட்ட ஒப்புதலை கொடுத்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாதத்திலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதுதவிர ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட இதர சிறிய கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதா? என்பது குறித்து அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்வார்கள். முடிவு எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணி அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடாது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிட விட்டுக்கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த பொதுத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கட்சிகளின் கூட்டணி நெருக்கம் பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஹீரோ பாஜ்பாய் கூறும்போது, “இது சந்தர்ப்பவாத கூட்டணி, முழுக்க மக்கள் விரோத கூட்டணி” என்றார். #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha 
    தேர்தல் வெற்றி எதிரொலியால் காங்கிரஸ் அணியில் மாயாவதி இணைகிறார். இதனால் அந்த கட்சிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். #mayawati #congressparty #electionvictory

    லக்னோ:

    5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆகிய மூன்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதாவிடம் இருந்து அந்த கட்சி ஆட்சியை பறித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த அமோக வெற்றியால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மனமாற்றம் அடைந்துள்ளார்.

    5 மாநில தேர்தலில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். டெல்லியில் நடந்த எதிர்க் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள வில்லை.

    சத்தீஷ்கரில் அஜித்ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்து மாயாவதி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தில் 2 இடங்களிலும், ராஜஸ்தானில் 6 தொகுதியிலும், தெலுங்கானாவில் 1 இடத்திலும் பகுஜன் சமாஜ்கட்சி வெற்றி பெற்றது.

    சத்தீஷ்கர், ராஜஸ்தானில் மாயாவதியால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இதனால் காங்கிரசின் இந்த வெற்றியை அவர் பெரிதாக கருதுகிறார். இதனால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக மாயாவதி இன்று அறிவித்தார். ராஜஸ்தானிலும் தேவை ஏற்பட்டால் ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்தார்.

    இதன் மூலம் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதில் உறுதி ஏற்பட்டுள்ளது. மாயாவதிக்கு பல மாநிலங்களில் செல்வாக்கு இருப்பதால் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உருவாக்கும் அணியில் கூடுதல் பலமாக அமையும் எள்பதில் சந்தேகமில்லை.


    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும் பா.ஜனதாவுக்கு எதிராக உள்ள கட்சியாகும். ஆனால் அவர் டெல்லியில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அகிலேஷ் யாதவும் அறிவித்துள்ளார்.

    இதனால் பாராளு மன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பா.ஜனதாவை எதிர்க்கும்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் மாயாவதியும், அகிலேசும் இணைந்து பா.ஜனதாவை ஏற்கனவே வீழ்த்தி இருந்தனர். 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று இணைக்கும் பணியில் ராகுல் காந்தி, சந்திர பாபு நாயுடு ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த அணியில் பல கட்சிகள் இருக்கும் நிலையில் மாயாவதியும், அகிலேஷ்யாதவும் இணைய இருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். #mayawati #congressparty #electionvictory

    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். #ShatrughanSinha #bjp #pmmodi

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்த போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரு தொகுதிகளில் மோடி போட்டியிட்டார்.

    இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதி பதவியை வைத்துக் கொண்டு, வதேதரா தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

    வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட மோடி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதை கருத்தில் கொண்டே அவர் வாரணாசி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி அமல்படுத்தி வருகிறார்.

    வாரணாசி தொகுதி பாரம்பரியமாக பா.ஜ.க. வின் கோட்டையாக திகழ்வதால் அங்கு மீண்டும் களம் இறங்குவதே பாதுகாப்பானது என்று மோடி கருதுகிறார். ஆனால் சமீபத்தில் குஜராத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக வாரணாசியில் மோடிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    வாரணாசி தொகுதியில் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.


    வாரணாசியில் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்காவை வரும் தேர்தலில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரதமர் மோடிக்கும் சத்ருகன் சின்காவுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சத்ருகன் சின்கா உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அவர் மோடியின் ஒவ்வொரு திட்டத்தையும் மிக, மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    விரைவில் அவர் பா.ஜ.க. வில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. அவர் சமாஜ்வாடி கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலின் போது அவரை வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட வைத்தால் மோடிக்கு கடும் சவாலை உருவாக்க முடியும் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. #ShatrughanSinha #bjp #pmmodi

    சத்தீஷ்காரை தொடர்ந்து மத்திய பிரதேச தேர்தலிலும் மாயாவதி, அணி மாறுவதால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. #Mayawati
    லக்னோ:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்காக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் பல்வேறு மாநில கட்சிகளுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இந்த கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து வருகின்றன.

    ஆனால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் முடிவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எடுத்துள்ளார். அதன்படி சத்தீஷ்கார் மாநில தேர்தலில், அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் அவர் இறுதி செய்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, அங்கு 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. மேலும் அரியானாவிலும் இந்திய தேசிய லோக்தளத்துடன் கூட்டணிக்கு அந்த கட்சி தயாராகி விட்டது.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியை அமைக்க பகுஜன் சமாஜ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் உறுதி செய்தார். 3-வது அணி தொடர்பாக இடதுசாரிகள், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ்-பா.ஜனதாவை எதிர்க்கும் பிற மதசார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

    அதேநேரம் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்கள் மரியாதைக்கு குறைவாக எதையும் ஏற்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.

    மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. அப்படி 3-வது அணி உருவானால் மாநில தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். #Mayawati #BahujanSamaj
    ×