search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109458"

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை தேரோட்டம், 18-ந் தேதி காலை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, இரவில் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் மேல்சாந்தி பத்மநாபன் போற்றி பூஜைகள் செய்து கால் நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கோடைக்காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த வழிபாடு 60 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடைக்காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பானகாரம் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடு மொத்தம் 60 நாட்கள் நடைபெறும்.

    இதையொட்டி தினமும் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும், எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலக்காய், சுக்கு, புளி போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானகாரம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும். பின்னர், அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த பானகாரம் அருந்தினால், வெப்பம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், இந்த பிரசாதத்தை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பானகாரம் வழிபாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 60 நாட்கள் இந்த வழிபாடு நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. கோவிலில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 6.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் தீர்த்த கோஷ்டி நடந்தது.

    இரவு 7.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடந்தது. இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை இதேபோன்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு தாயார் தெப்பம் கண்டருளுகிறார்.

    வருகிற 2-ந்தேதி பந்தக்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டன. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்து மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.

    அங்கு விழா முடிந்து சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் வேளிமலை குமாரசாமி கோவிலுக்கு சென்றது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நவராத்திரி குழு தலைவர் வீரபத்திரபிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள் நான்கு ரதவீதிகள் வழியே அம்மனுக்கு திருக்கண் சார்த்தி வரவேற்பு அளித்தனர். கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.

    அம்மனுக்கு ஆறாட்டும், அபிஷேகமும் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், வாணியம்மைபாடி ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கு ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘வாக்கு’ என்னும் கல்விக்கு அதிபதி என்ற கர்வம் சரஸ்வதியிடம் காணப்பட்டது. இதனால் பேசும் சக்தியை இழக்கும்படி சரஸ்வதிக்கு பிரம்மன் சாபம் கொடுத்தார்.

    தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி, பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திருமறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவமிருந்தாள். பின்னர் அத்தல அம்பாளிடம் யாழ் இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தன் யாழில் இருந்து வெளிப்பட்ட இசையை விட இனிமையாக இருப்பதைக் கண்டு, யாழை மூடிவைத்து விட்டாள். இதனால் தான் வேதாரண்யத்தில் உள்ள இறைவியின் பெயர் ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்றானது.

    தன்னைப் பிரிந்து சென்ற சரஸ்வதியைத் தேடி பூலோகம் வந்தார் பிரம்மன். தவத்தில் இருந்த சரஸ்வதியை சமாதானம் செய்து, வாணியம்பாடி தலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் வழிபட்டதன் பயனாக சரஸ்வதிக்கு பேசும் சக்தி வந்தது. மேலும் அங்குள்ள ஹயக்ரீவன் முன்னிலையில் யாழை மீண்டும் சரஸ்வதி இசைக்க இறைவனும், இறைவியும் அருள்புரிந்தனர். இதையடுத்து சரஸ்வதி இனிய கீதம் இசைத்தாள்.

    சரஸ்வதிக்கு வாணி என்ற பெயரும் உண்டு. வாணி பாடிய தலம் என்பதால், அது ‘வாணியம்மைபாடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘வாணியம்பாடி’ ஆனது.



    சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது நம்பிக்கை. ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி.
    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாட்களில் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாட்களில் பக்தர்கள் 17 கோடியே 75 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்தது. விழாவில் தினமும் மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகன ஊர்வலத்தை தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி வலம் வந்த கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனையொட்டி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி, சக்கரத்தாழ்வார் உற்சவர்கள் கோவிலில் இருந்து மாடவீதிகள் வழியாக புஷ்கரணியை அடைந்தனர்.

    அங்கு உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. திருமஞ்சனம் நிறைவடைந்ததும் சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் புஷ்கரணிக்கு எடுத்துச்சென்று வேதமந்திரங்கள் முழங்க 3 முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் மூழ்கி எழுந்தனர். இதனையொட்டி புஷ்கரணி மற்றும் மாடவீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக புஷ்கரணியில் நீச்சல் வீரர்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். தீர்த்தவாரி முடிந்ததும் உற்சவர்கள் கோவிலுக்கு திரும்பினர். அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களிலும் மொத்தம் 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், கருடசேவை நடந்த அன்று மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் 29 லட்சத்து 30 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியிருந்ததோடு 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும், 6 கோடியே 70 லட்சம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கருடசேவை தினத்தில் மட்டும் 1,000 போலீசார் கூடுதலாக ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

    பிரம்மோற்சவ நாட்களில் கல்யாண கட்டாவில் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு முடி இறக்கும் பணியில் ஆயிரத்து 270 ஆண் தொழிலாளர்களும், 270 பெண் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். இந்த நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 17 கோடியே 75 லட்சம் இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    பழனி முருகன் கோவிலில் நடந்த விஜயதசமி விழாவையொட்டி, வன்னிகாசூரனை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசுவாமி வதம் செய்தார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் பத்ரகாளியம்மன் கோவில் மண்டபத்தில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், 6 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் ஆகியவை நடந்தது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, பத்ரகாளியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக மலைக்கோவிலில் காலை 5.50 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், விளா பூஜை, சிறுகால சந்தி, கால சந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நடந்தது.

    மதியம் 3 மணிக்கு மூலவரிடம் வில்-அம்பு, கத்தி, கேடயம், குத்தீட்டி, சக்திவேல் ஆகியவற்றை பெறும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சன்னதி வலம் வந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதன் பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இதனையடுத்து பாரவேல் மண்டபத்தில் வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்களை புலிப்பாணி பாத்திரசுவாமிகளிடம் வழங்கும் நிகழ்ச்சியும், மூலவர் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுத்தருளி சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கிடையே வன்னிகாசூரனை வதம் செய்வதற்காக லட்சுமிநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, கருட வாகனத்தில் லட்சுமிநாராயண பெருமாள், புலிப்பாணி பாத்திரசுவாமிகள் ஆகியோர் கோதைமங்களம் கோதை ஈஸ்வரர் கோவிலுக்கு இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோதைமங்களம் கோதை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கோவில் எதிரே அமைக் கப்பட்டிருந்த மேடையில் வன்னி, வாழை மரங்களாக மாறி நின்ற வன்னிகாசூரனை வில்-அம்பு கொண்டு முருகப்பெருமானின் பிரதிநிதியாக புலிப்பாணி பாத்திரசுவாமி வதம் செய்தார். இதைத்தொடர்ந்து வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்கள் முத்துக்குமாரசுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சக்திவேல் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சம்ரோட்சனை பூஜைக்கு பின்பு இரவு 11 மணிக்கு மேல் ராக்கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    நவராத்திரி, விஜயதசமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்திரமூர்த்திசிவம் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

    நவராத்திரி விழாவையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் தங்கரத புறப்பாடு நடைபெறவில்லை. நேற்றோடு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் இரவு 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.
    வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.

    * வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியை கண்டு வழிபடலாம்.

    * சிருங்கேரியில் சரஸ்வதி கோவிலில் ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.

    * கர்நாடக மாநிலம் பேலூர் என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் சரஸ்வதியை கண்ணார கண்டு மகிழலாம்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.

    * ஜப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார்.

    * இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.

    * விஜயதசமி நாளில் பாலித்தீவில் ‘தம்பாத் ஸரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மனை பல்வேறு ரூபங்களில் வழிபடுவார்கள். தொடர்ந்து 10-ம் நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த நிகழ்வை விஜயசதமி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

    மகிஷன் என்ற அசுரன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய பிரம்மன், மகிஷன் முன்பாக போய் நின்றார். பிரம்மனைக் கண்டதும் மகிஷன் மனம் மகிழ்ந்தான். தனக்கு அழிவில்லா வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் அசுரன் கேட்டான்.

    ‘பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேள்’ என்றார் பிரம்மன்.

    இதையடுத்து, ‘எனக்கு அழிவு வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை மகிஷன் கேட்டான்.

    பிரம்மதேவரும் அப்படியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர் களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. அந்த தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான்.

    மகிஷனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு.

    தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனாள்.

    சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

    போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10-ம் நாளில் மகிஷாசூரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

    கொடியவனான மகிஷாசூரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசூரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடிவருகிறோம். இந்தியாவில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் கொண்டாட்ட முறைகள் என்பது சற்று மாறுபட்டு வருகின்றது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்டு இருப்பினும் ஒன்பது இரவுகளில் மட்டுமே கொண்டாட்டம் என்பது மட்டும் ஒரே மாதிரியாகவே உள்ளது.

    தாண்டியா ஆட்டத்துடன் கூடிய குஜராத் நவராத்திரி

    நவராத்திரியின் ஒன்பது நாளும் மாலைநேர வழிபாடு என்பது தாண்டியா ஆட்டத்துடன் தான் மேற்கொள்ளப்படும். மாலை நேரங்களில் மகா சக்தியை வழிபடுவதற்கான புதிய பானை கொண்டு வருவர். அதில் சிறு சிறு ஓட்டை இடப்பட்டு இருக்கும். அதன் உள் ஓர் விளக்கு ஏற்றி மகா சக்தியை வழிபாடு செய்வர். இந்த பானைக்கு பெயர் கர்டி. இந்த தீப நிகழ்வுக்கு பின் ஆண்,பெண் இருபாலரும் கையில் தாண்டியா குச்சிகளுடன் கூடிய தாண்டியா நடனத்தை ஆடுவர்.

    மேற்கு வங்காளத்தின் துர்க்கா பூஜை


    நாட்டின் கிழக்கத்திய பகுதிகளில் அதிகமாகவே துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப்படுகிறது. மகிஷனை கொன்ற துர்க்கைதான் பிரதான தெய்வமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வீடுகள் மட்டுமின்றி மக்கள் கூடும் இடங்களில், பொது பூங்காக்களில் பெரிய உயரமான துர்க்கா உருவங்கள் இடம் பெற செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டு பின்னர் துர்க்கா பூஜை முடிந்து அச்சிலைகளை கங்கை ஆற்றிலும் கடல் பகுதிகளிலும் கரைத்து விடுவர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் துர்க்கா பூஜை காலங்களில் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்க்கையின் அருள் வேண்டி பூஜைகள் நடத்தப்படும்.

    பஞ்சாப்பின் நவராத்திரி

    பங்சாப் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏழு நாட்கள் மகா சக்தியின் வடிவங்கள் வணங்கப்படும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் பூஜை மேற்கொள்ளப்பட்டு இறைபாடல்கள் பாடப்பட்டு கொண்டாடப்படும். பிறகு அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் விரதம் மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீட்டிற்கும் ஒன்பது கன்னி பெண்களை அழைத்து வந்து பூஜை செய்து பரிசளித்து அனுப்பி வைப்பர். இந்த பெண்களை “கன்ஜக்” என்றவாறு தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றி வணங்குகின்றனர்.

    மலர் பதாகைகளுடன் ஆந்திர நவராத்திரி

    ஆந்திராவில் நவராத்திரி விழா என்பது “பத்தகம்மா பண்டூக” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று போட்டுவிடுவர்.

    செல்வ வளங்களை பெருக்கும் மஹாராஷ்டிரா நவராத்திரி

    மஹாராஷ்டிராவில் நவராத்திரி விழா என்பது ஓர் புதிய தொடக்கத்தை ஆரம்பிக்கும் விழாவாகவே அமைகிறது. இந்நாட்களில் சொத்துக்கள் வாங்குவது, புதிய வியாபார திட்டங்களை மேற்கொள்வது போன்ற செல்வ வளங்களை பெருக்கும் செயல்களை செய்கின்றனர். பெண்கள் திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து நெற்றியில் திலகமிட்டு புதிய பரிசுகளை வழங்கி கவுரவிப்பர். அபோல் குஜராத்தில் நடைபெறும் தாண்டியா நடன நிகழ்வு அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் நடைபெறும்.

    ஹிமாசல பிரதேச நவராத்திரி

    அங்கு நவராத்திரி என்பது மற்ற பகுதிகளில் நவராத்திரி முடியும் காலகட்டத்தில் தான் இங்கு தொடங்கும் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி வந்த நாள் என்பதை “குல்லு துஸ்ரா” என்றவாறு கொண்டாடப்படுகின்றனர். துர்க்கா தேவியையும் பூஜை செய்வர். குடும்பத்தினருடன் விருந்து மேற்கொள்வர். 
    கல்வியை தாயான சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்.
    சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி தாய். 

    கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம் .

    புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும்.

    மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம்.

    சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம்.

    படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். சகல நலங்கள் பெற சரஸ்வதியை புகழ் பாடி போற்றுவோம்.

    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
    ஓம் அன்பின் வடிவே போற்றி
    ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
    ஓம் அறிவுக்கடலே போற்றி
    ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
    ஓம் அன்ன வாகினியே போற்றி
    ஓம் அகில லோக குருவே போற்றி
    ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
    ஓம் ஆசான் ஆனவளே போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி
    ஓம் ஆதாரசக்தியே போற்றி
    ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
    ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
    ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
    ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
    ஓம் உண்மைப் பொருளே போற்றி
    ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
    ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
    ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
    ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
    ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
    ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
    ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி
    ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
    ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
    ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
    ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
    ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
    ஓம் குணக் குன்றானவளே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
    ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
    ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
    ஓம் சாந்த சொரூபினியே போற்றி
    ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
    ஓம் சாரதாம்பிகையே போற்றி
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    ஓம் சித்தியளிப்பவளே போற்றி
    ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
    ஓம் சுத்தஞான வடிவே போற்றி
    ஓம் ஞானக்கடலானாய் போற்றி
    ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
    ஓம் ஞானேஸ்வரியே போற்றி
    ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
    ஓம் ஞான ஆசிரியையே போற்றி
    ஓம் ஞானத்தின் காவலே போற்றி
    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
    ஓம் தகைமை தருபவளே போற்றி
    ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
    ஓம் தாயான தயாபரியே போற்றி
    ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
    ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
    ஓம் நவமி தேவதையே போற்றி
    ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
    ஓம் நன்னெறி தருபவளே போற்றி
    ஓம் நலம் அளிப்பவளே போற்றி
    ஓம் நாவிற்கு அரசியே போற்றி
    ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
    ஓம் நா நயம் அருள்வாய்போற்றி
    ஓம் நான்மறை நாயகியே போற்றி
    ஓம் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
    ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
    ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
    ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
    ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
    ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
    ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
    ஓம் பண்ணின் இசையே போற்றி
    ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
    ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
    ஓம் பிரணவ சொரூபமே போற்றி
    ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
    ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
    ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
    ஓம் பூரண வடிவானவளே போற்றி
    ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
    ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
    ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
    ஓம் மங்கல வடிவானவளே போற்றி
    ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
    ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
    ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
    ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
    ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி
    ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
    ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
    ஓம் மேதையாக்குபவளே போற்றி
    ஓம் மேன்மை தருபவளே போற்றி
    ஓம் யாகத்தின் பலனே போற்றி
    ஓம் யோகத்தின் பயனே போற்றி
    ஓம் வழித்துணை வருவாய் போற்றி
    ஓம் வரம் அருள்பவளே போற்றி
    ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
    ஓம் வாக்கின் நாயகியே போற்றி
    ஓம் வித்தக வடிவினளே போற்றி
    ஓம் வித்யா லட்சுமியே போற்றி
    ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
    ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
    ஓம் வெண்தாமரையினாளே போற்றி
    ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
    ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
    ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி 
    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார்.
    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.

    தினமும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு தங்க குதிரை வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வருகிறார்.

    நாளை காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்ய உள்ளனர். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    பிரம்மோற்சவ நாளில் வாடகை அறை முன்பதிவை தேவஸ்தானம் 50 சதவீதம் குறைத்தது. மேலும் பரிந்துரைக் கடிதங்களுக்கு வாடகை அறை முறையையும் ரத்து செய்தது.

    அதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வாடகை அறைகள் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது வாடகை அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.61.44 லட்சமும், இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ரூ.68.38 லட்சமும் வருவாய் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது ரூ.71.61 லட்சமும் நடப்பாண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6 நாட்களில் ரூ.54.91 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளது.

    வாடகை அறை பிரிவு- 2 மூலம் 2015 ஆம் ஆண்டு ரூ.1.39 கோடியும், தற்போது 6 நாட்களில் ரூ.1.01 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×