search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலக்காடு"

    பாலக்காடு அருகே குடிபோதையில் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு அருகே உள்ள வாக்கோட்டை சேர்ந்தவர் மேத்யூ ஜோசப் (வயது 41). இவரது மனைவி ஜினா (35). இவர் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    மேத்யூ ஜோசப் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று மேத்யூ ஜோசப் அதே பகுதியில் உள்ள ஒரு பாரில் மது குடித்தார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

    இதில் மேத்யூ ஜோசப் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலக்காடு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மேத்யூ ஜோசப் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலக்காடு அருகே வன ஊழியரை யானை மிதித்து கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் மோகனன் (59). இவர் வாளையாறு வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மாலை 5 மணியளவில் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வேலஞ்சேரியில் காட்டு பகுதியில் இருந்து 3 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வாளையாறு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களுடன் மோகனனும் சென்று இருந்தார்.

    அவர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை திரும்பி வந்து வன ஊழியர் மோகனனை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    யானையை விரட்டும் போது தப்பி ஓடிய மற்ற ஊழியர்களான விஸ்வநாதன், சசி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் தலைமை வன அதிகாரி சுரேந்திர நாத் அங்கு விரைந்து சென்றார். வேறு ஊழியர்களை வரவைழத்து யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது.

    யானை தாக்கி உயிர் இழந்த மோகனன் உடல் மீட்கப்பட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    யானை தாக்கி பலியான மோகனன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதல் கட்டமாக ரூ. 5 லட்சம் இன்று வழங்கப்படும் எனவும் தலைமை வனஅதிகாரி சுரேந்திர நாத் தெரிவித்துள்ளார்.

    பாலக்காடு அருகே ரூ.5 கோடி போதை காய் கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Drugtrafficking

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு போதை தடுப்பு போலீசார் மற்றும் தெற்கு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பாலக்காடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்றனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய சோதனையில் ‘போப்பிஸ்ட்ரோ’ எனும் போதை காய் 2¾ கிலோ இருந்தன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

    விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருள்மணி (வயது 30), அதே ஊரை சேர்ந்த அருண்மோகன் (30) ஆகியோர் என்பதும், கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு போதைகாய்களை கடத்திச்செல்வதாகவும் கூறினர்.


    இந்த போதை காய்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    இந்த காய்களில் இருந்து தான் பிரவுன் சுகர், ஹெராயின், கருப்பு உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

    இந்த காய்களின் பிறப்பிடம் தென்னாப்பிரிக்காவாகும். போதை காய் ஆப்கானிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. புற்று நோய் வலிக்கு இந்த காய்களில் இருந்து நிவாரண மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது.

    இதனால் அரசு அனுமதியுடன் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 3 இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் வாலிபர்கள் இந்த காயை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்திருந்தால் சர்வதேச போதை கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Drugtrafficking

    பாலக்காடு அருகே விபத்தில் கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    பாலக்காடு:

    கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காதர் அமீன். இவரது மகன் அர்‌ஷத் (19). குனியமுத்தூர் குறிஞ்சி நகர் மொய்தீன் மகன் ரியாஸ் (18).

    இவர்கள் இருவரும் கோவை - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்துந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் பாலக்காடு புது நகரத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    அதிகாலை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கோவை திரும்பினார்கள். தத்த மங்கலம் அருகே வந்த போது வண்ணா மடையில் இருந்து ஆலப்புழாவுக்கு ஒரு வேன் சென்றது.

    இந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அர்‌ஷத் சித்தூர் தாலுகா மருத்துவ மனையிலும்,ரியாஸ் பாலக்காடு அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சை பலன் இன்றி இருவரும் இறந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகிறார்கள். 
    பாலக்காட்டில் 2½ கிலோ தங்க கட்டிகள் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் ரெயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு போலீசார் இணைந்து ஒற்றப்பாலம் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒருவர் சந்தேகப்படும்படி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 2½ கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இது குறித்து ரெயில்வே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அப்துல் முனீர் விசாரணை நடத்தினார். கடத்தப்பட்ட தங்க கட்டிகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை.

    விசாரணையில் தங்க கட்டிகளை கடத்தி வந்தவர் திருச்சூரை சேர்ந்த லூயிஸ் (வயது 46) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தங்க கட்டிகளை மீட்டனர். இது குறித்து வருமானவரிதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில் மன்னார்காடு-அட்டபாடி செல்லும் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ராட்சத மரம் சாய்ந்தது.மரம் விழுந்ததில் ஒரு பக்க சாலையே பெயர்ந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் மன்னார்காடு போலீசார் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் 12 மணி நேரம் சாலை சீரமைப்புக்கு பின் சாலை சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    இதேபோன்று பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீராதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பலத்த மழையால் பாலக்காடு அருகே பாலக்கயத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்தது.

    மண்சரிவால் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பாயப்புல்லு, முன்னாம்தோடு, இருட்டுகுழி ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. 
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண் 5 கி.மீ. தூரம் வரை தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த ஆதிவாசி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.

    மேலும் இவர்கள் இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து செல்லும் சிரமமான நிலையும் உள்ளது.

    இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

    முதலில் அவருக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முயன்றனர். அதில் சிக்கல் ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

    சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கில் கம்பில் சேலையால் தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு அவர்கள் ஓட்டமும், நடையுமாக அரளிகோணம் வரை சென்றனர். அங்குள்ள சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் இயங்காத நிலையில் இருந்தது.

    இதனால் பெண்கள் அமைப்பான குடும்ப ஸ்ரீ என்ற தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ் மூலம் மணியை அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    குழந்தையுடன் மணி.

    அந்த மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். மணிக்கு சுகபிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மணி இது பற்றி கூறும் போது, எங்களது குலதெய்வம் நல்லீஸ்வரன் ஆகும். எனக்கு குலதெய்வம் அருளால் தான் தற்போது நல்லமுறையில் குழந்தை பிறந்து உள்ளது என்றார்.

    சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டி தான்இந்த பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

    இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மகளிர் ஆணையம் தலைவர் ஜோசபைன் இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். #TribalWomen #AttapadiVillage
    ×