search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள்"

    • அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம், இதயா மகளிர் கல்லூரி, பெண்கள் பாசறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை, கும்பகோணம் சார்பாக இதயா மகளிர் கல்லூரியில் உள்ள மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நடத்துனர், ஓட்டுநர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்வை கல்லூரி யின் முதல்வர் அருட்சகோதரி முனைவர். யூஜின் அமலா தொடங்கி வைத்தார். கணினிஅறிவியல் துறை தலைவர் மற்றும் பெண்கள் பாசறை ஒருங்கிணை ப்பாளர் முனைவர்.சி.பிரமிளா ரோசி, கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் கே. புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    சென்னை:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வுகள் மூலமாகவும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 570. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 289.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    10-ம் வகுப்பில் மொத்தம் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 94.5 சதவீதம் மாணவ-மாணவிகள்தான் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

    இந்த ஆண்டு மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 12,548 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுதி இருந்தனர். இந்த பள்ளிகளில் 6,100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

    அரசு பள்ளிகளில் 92.48 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.53, மெட்ரிக் பள்ளிகள் 99.05, இருபாலர் பள்ளிகளில் 95.42 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 88.94 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பாட வாரியாக தேர்ச்சியை கணக்கிட்டால் மொழி பாடத்தில் 96.12 சதவீத பேரும், ஆங்கிலத்தில் 93.35 சதவீத பேரும், கணிதம் பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 98.56 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 97.07 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய 4,816 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 4,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக் கைதிகளில் 152 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் அவற்றை 3 இணைய தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் பார்த்தனர். இதன் மூலம் மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    மேலும் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

    இவை தவிர கலெக்டர் அலுவலகங்களிலும், நூலங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் மிக எளிதாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். வருகிற 2-ந்தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மே 6-ந்தேதி முதல் மாணவர்கள் www.dge.tn.nic என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் மூன்றாவது வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் நான்காவது வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். #SSLC #SSLCResult

    தருமபுரி தனியார் கல்லூரி விடுதியில் நள்ளிரவில் புட்டு சாப்பிட 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கு விடுதி அருகே உள்ளது. இந்த விடுதியில் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நண்பர்கள் ஆவர்.

    இவர்களது தோழி ஒருவர் நேற்று விடுதிக்கு புட்டு சாப்பிட கொண்டு வந்துள்ளார். அதனை இந்த 5 மாணவிகளும் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டு மாணவிகள் அனைவரும் இரவு படுத்து தூங்கினர். இதையடுத்து நள்ளிரவு புட்டு சாப்பிட 5 மாணவிகளுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்களை சிகிச்சைக்காக 5 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #GoondasAct
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு , சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி அவரது தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் சிறைக்கு சென்று வழங்க உள்ளனர். #PollachiAbuseCase #GoondasAct

    பாளையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியரை கேலி செய்து டிக்-டாக் வீடியோ எடுத்து பரப்பிய 17 மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #TikTok
    நெல்லை:

    பாளையில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மாணவிகள் அனைவரும் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகிறார்கள். தினமும் தேர்வுக்காக படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகள் சிலர் படிக்கும் வேளையில் தங்கள் செல்போனில் டிக்-டாக் ஆப் மூலம் ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்து வீடியோ எடுத்தனர்.

    ஆசிரியர்களை மறைமுகமாக வீடியோ எடுத்து அதை சினிமா வசனங்களுக்கு ஏற்றவாறு டிக்-டாக் செய்து வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் சக மாணவிகளிடையே பரவியது. அவர்கள் வாட்ஸ்-அப்பில் மற்ற மாணவிகளுக்கும் பரப்பினர். தொடர்ந்து இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனிடையே இந்த விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி கூறினர்.

    பள்ளி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தியபோது, 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் 17 பேர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கையாக 17 மாணவிகளையும் வீட்டில் இருந்து தேர்வுக்கு படிக்குமாறு பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர் நிர்வாகத்தினரிடம் இதுபற்றி கேட்டனர். அதற்கு மாணவிகளை தேர்வு எழுத தடை செய்யவில்லை.

    பள்ளியில் இருந்து தேர்வுக்கு படிக்க தடை விதித்துள்ளோம் என்றனர். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்," தற்போது தேர்வு நேரம் என்பதால் பல பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை அளித்துள்ளார்கள். பாளை பள்ளியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மாணவர்கள் யாரையும் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தடை செய்ததாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றனர். #TikTok
    கோவையில் பேஸ்புக் மூலம் பழகி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைதான 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    கோவை:

    கோவை பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர் சபரிராஜன்(வயது 25). என்ஜினீயர்.

    இவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் அப்பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று மாணவிக்கு போன் செய்த சபரிராஜன் சுற்றுலா செல்லலாம் என ஆசை காட்டி ஊஞ்சவேலம்பட்டி பகுதிக்கு அழைத்தார். இதை நம்பி மாணவி அவருடன் காரில் சென்றார்.

    காரில் சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதிஷ்(28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார்(24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) ஆகியோர் இருந்தனர். தாராபுரம் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சபரிராஜன் மாணவியின் சுடிதாரை விலக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட, அதை சதிஷ் செல்போனில் வீடியோவில் படம் பிடித்தார்.

    அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் ஆவேசமடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்துக் கொண்டு, மாணவியை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர்.

    இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சபரிராஜன் உள்பட 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இக்கும்பல் சமீபத்தில் வெளியான ‘அடங்க மறு’ சினிமா போன்று அழகான இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்து பழக்கம் ஏற்படுத்தி, தனியாக வரவழைத்து ‘குரூப்’பாக சேர்ந்தும், தனித்தனியாகவும் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

    பேஸ்புக்கில் பழக்கமாகும் மாணவிகள், இளம் பெண்களின் செல்போன் நம்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை திருநாவுக்கரசு செய்து வந்துள்ளார். அந்த நம்பரில் சபரிராஜன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் பேசி பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.

    இவர்களிடம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் சிக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.

    முதல்முறையாக மாணவி புகார் கொடுத்ததால் இந்த கும்பல் சிக்கி உள்ளது. புகார் கொடுத்த மாணவிக்கு போதிய பாதுகாப்பு செய்து கொடுத்த போலீசார், இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
    போச்சம்பள்ளி அருகே சரியாக பாடம் சொல்லி தராத ஆசிரியரை மாற்றக்கோரி குடும்பத்தினருடன் சேர்ந்து வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்ம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி அடுத்துள்ள பழனம்பாடி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (30). இவருடை குழந்தைகள் பழனம்பாடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பயின்று வருகிறார்கள். 

    பள்ளியில் உதவி ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சுமார் 19 ஆண்டுகளாக இப் பள்ளியில் பணியாற்றி வரும் இவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி தருவதில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நாள்வரை செந்தில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதி நேற்று மாலை பள்ளியின் முன்பு தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக செந்தில் ஆசிரியரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பாரூர் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட திருப்பதியை சமாதானம் செய்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
    ஈரோடு அருகே மாணவர் விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 மாணவிகள் அதிரடி வெளியேற்றப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). இவர் அந்த பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் 4 மாணவிகள் உள்பட 21 பேர் தங்கி படித்து வந்தனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பால்ராஜ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் பால்ராஜ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் செயல்பட்டு வந்த விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்க அனுமதி பெறப்பட்டு இருந்ததாகவும் மாணவிகள் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த விடுதியில் தங்கி இருந்த 4 மாணவிகள் ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஈரோடு பழைய பாளையத்தில் செயல்பட்டு வந்த விடுதியில் புகார் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதி பெறப்பட்டிருந்தது. 4 மாணவிகள் அங்கு சட்டவிரோதமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவிகள் பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதே போன்று வேறு எங்கேனும் அனுமதி இல்லாமல் விடுதிகள் செயல்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் செயல்படும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிண்டல் செய்ததால் வகுப்புகளை மாணவிகள் புறக்கணித்தனர்.
    பேரையூர்:

    பேரையூர் அருகேயுள்ளது ஏ.பாறைப்பட்டி, உசிலம்பட்டி. இந்த கிராமங்களைச சேர்ந்த மாணவ, மாணவிகள் 50 பேர் சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் சுப்புலாபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கூடம் இருக்கும் இடத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.

    பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தபோது அவர் வெளியே நடக்கும் பிரச்சினைக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது.

    மாணவிகள் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர். பள்ளிக்குள் செல்லாமல் பள்ளியின் அருகே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எங்களை கேலி செய்யும் வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை பள்ளியை புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். #tamilnews
    இளம் வயதில் நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் தான் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு புதிய இளநிலை பாடப்பிரிவுகள்  தொடக்க விழா மற்றும் புதிய மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் சீனி வாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் புதிய இளநிலைப் பாடப் பிரிவுகளான  பாரன்சிக் சயின்ஸ், சைக்காலஜி,  புட் டெக்னாலஜி மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல், பி.பி.ஏ. ஏவியேஷன் மேனேஜ் மெண்ட் ஆகிய துறைகளை சார்ந்த முதலாம் ஆண்டு வகுப்புகளை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- 

    பாரன்சிக் சயின்ஸ் துறைக்கான களங்கள் மருத்துவ கல்லூரியில் மட்டுமே இருக்கும். ஆனால் முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரன்சிக் சயின்ஸ் பிரிவை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் வளர்ந்த நூலகங்கள் இணைய தளங்கள் இயங்கி வருகின்றன. அதனைப் பயன்படுத்தி பயனுள்ள கல்வியை  பெற வேண்டும். இளம் வயதில் நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் தான் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். நடந்த கொலையை கண்டுபிடிக்க இயலாத நிலையில் அந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பது பாரன்சிக் சயின்ஸ் துறை தான் எனவும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

    கவுரவ விருந்தினராக எஸ்.பி. திஷாமித்தல் கலந்துகொண்டு பேசு கையில், குற்றவியல் பிரிவு, சட்டப்பிரிவு, ராணுவப்பிரிவு போன்ற பல துறைகளுக்கு பாரன்சிக் சயின்ஸ் துறை பயன்படுகிறது. இதைப் போலவே சைக்காலஜி துறையும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவிகள் தினந்தோறும் வரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவதொரு புதிய தகவல்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த பெண்கள் சாதனைப்படைக்க வேண்டும்  என்றார்.

    இந்திய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் பேரவையை சேர்ந்த குற்றவியல் ஆய்வாளர் பெயின் பேபி, கல்லூரி முதல்வர் செந்தில்நாதன் உட்பட பலர் பேசினர். இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை முதல்வர் அப்ரோஸ் வரவேற்றார். முடிவில் மாணவி நிமிஷா நன்றி கூறினார்.
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? என்ற தகவல் சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வாயிலாக தற்போது வெளியாகியுள்ளது. #Nirmaladevi #NirmaladeviLuredGirls #DevangarCollege
    சென்னை:

    கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    சிறையில் இருந்த நிர்மலா தேவியை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை நிர்மலா தேவி நீண்ட நெடிய வாக்குமூலமாக அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

    எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

    அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.

    நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

    நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

    அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

    இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

    அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

    2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

    தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

    2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.



    நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

    அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

    இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

    அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

    மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

    அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

    முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது, நாளை(புதன்கிழமை) வெளியாகும். #Nirmaladevi
    #NirmaladeviLuredGirls #DevangarCollege
    அரக்கோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல் கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,342 மாணவ, மாண விகள் படித்து வருன்றனர்.

    கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வேலூர் கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு, பேராசிரியர் மீதான பாலியல் புகார் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

    மேலும், பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது. பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூ ரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள சேந்தமங்கலம் ரெயில்வே கேட்அருகில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

    தகவலறிந்துவந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் மாணவ, மாணவிகளை கலைந்து கல்லூரிக்கு செல்லுமாறு எச்சரித்தனர்.

    போராட்டத்தை கைவிட மறுத்தால், கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரித்தனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், மாணவிகளுக்கு ஆதரவாக திரண்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டுவதில் அர்த்தமில்லை. உங்கள் வீட்டு பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினை என்றால் ‘சும்மா விட்டு விடுவீர்களா’ என்று கேள்வி எழுப்பிய பெண்கள், புகார் சம்பந்தமாக பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×