search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது கணவரான சசி தரூர் எம்.பி.க்குக்கு சம்மன் அனுப்பப்படுமா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ், சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 14-ம் தேதி டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சமர் விஷால் அறிவித்துள்ளார். எனவே, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடுவாரா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது என்று கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். #KVeeramani
    கும்பகோணம்:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட நவீன என்கவுண்டர் ஆகும். என்கவுண்டரில் தனி நபரை ஓட வைத்து சுடுவார்கள். இங்கு கூட்டத்தை கூட்டி அதில் தனி நபரை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உயிருக்கு ரூ.10 லட்சம் தருகிறோம், ரூ.20 லட்சம் தருகிறோம் என்று விலை கூறுகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் அவர் அரசுக்கு சாதகமான கருத்தையே கூறுவார். எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தூத்துக்குடியில் 144 உத்தரவை விசித்திர சட்டமாக்கி விட்டனர்.


    தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மோடி சொல்வதையெல்லாம் கேட்டு செயல்படுகிறார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததால் அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. அதை ஏன் செய்யவில்லை.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். குருகுல கல்வியை விட மோசமான கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது.

    பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் ஓராண்டுக்குள் அந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KVeeramani
    முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்டதால்தான், தன் மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட் ஊழல்’ தொடர்பான வழக்கை, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் குற்றவாளிகள் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    அத்துடன் நவாஸ் ஷெரீப்பை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    அது மட்டுமின்றி, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் சிங் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டது.

    அதன்பேரில் அவர்கள் மீது இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் 3 ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவற்றின்மீது விசாரணை நடந்து வருகிறது.

    3 வழக்குகளில் ஒன்றான லண்டன் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கியது தொடர்பான ‘அவன்பீல்டு’ ஊழல் வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.

    இந்த விசாரணையின்போது, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 342-ன் கீழ் நவாஸ் ஷெரீப்பிடம் நீதிபதி கேள்விகள் எழுப்பி பதில்களை பதிவு செய்தார்.

    அப்போது அவரிடம் நீதிபதி, “அவன்பீல்டு ஊழல் வழக்கு உங்கள் மீது எதற்காக பதிவு செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது நவாஸ் ஷெரீப் கூறியதாவது:-

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என மிரட்டல்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தாமல், அவர் மீது தேசத்துரோக வழக்கு போட்டோம். அதற்கு பழி வாங்கும் விதத்தில்தான் என்மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டு உள்ளன.

    உளவு அமைப்பின் தலைவர் என்னிடம் ஒன்று பதவி விலகுங்கள் அல்லது நீண்ட கால விடுப்பில் செல்லுங்கள் என்று மிரட்டினார். மூன்றாம் உலக நாடுகளில் கூட ஒரு நாட்டின் தலைமை பதவியில் இருப்பவரை கீழ் நிலை அதிகாரி ஒருவர் இப்படி மிரட்டியது கிடையாது.

    எனக்கு எதிராக பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் (இம்ரான்கான் கட்சி), பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியும் சதி செய்தன. முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போடுவதற்கு முன்னர் நான் இம்ரான்கானை சந்தித்து உள்ளேன். அப்போது அவர் நான் பதவி விலகுமாறு கூறவில்லை.

    ஆனால் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்ட உடன், அவர் தஹிருல் காதிரியை (சன்னி முஸ்லிம் தலைவர்) சந்தித்தபின்னர், என் அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்த முடிவு எடுத்தனர்.

    19 ஆண்டுகளுக்கு முன்னர் என்னை கைவிலங்கு போட்டு, ஆயுள் தண்டனை விதித்தனர். அப்போது பனாமா ஊழல் வழக்கு எழுந்தது உண்டா? இல்லை. அப்போதும் நான் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறினேன்.

    நான் இந்த மண்ணின் மைந்தன். தேசப்பற்று குறித்து யாரும் எனக்கு சான்றிதழ் தர அவசியம் இல்லை. எங்கள் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடு வளர்ச்சி கண்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சிலருக்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு அது நல்லது அல்ல. இந்த தீர்ப்புக்கு பின்னர் ஸ்திரமற்ற நிலை உருவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NawazSharif
    சிவில் சர்வீசஸ் தகுதி பட்டியலை கருத்தில் கொள்ளாமல், தகுதியற்ற அளவுகோல்களை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தேர்வுசெய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளில் தகுதியானவர்களை நியமிப்பதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “மாணவர்களே, எழுங்கள். உங்கள் எதிர்காலத்துக்கு ஆபத்து. உங்களுக்கு உரியதை ஆர்.எஸ்.எஸ். பறித்துக்கொள்ள விரும்புகிறது. சிவில் சர்வீசஸ் தகுதி பட்டியலை கருத்தில் கொள்ளாமல், தகுதியற்ற அளவுகோல்களை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தேர்வுசெய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க பிரதமர் திட்டமிட்டிருப்பதை கீழ்க்காணும் கடிதம் காட்டுகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.

    அத்துடன், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் செய்ய உள்ள மாற்றம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தையும் ராகுல் காந்தி இணைத்து உள்ளார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பவுண்டேசன் கோர்ஸ் மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்து, அதன் அடிப்படையில்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பணிகளையும், பணி ஒதுக்கீடுகளையும் செய்ய வேண்டும் என்ற பிரதமர் அலுவலக பரிந்துரையைத்தான் மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் ஏற்று கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   #RahulGandhi #Modi
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல்-டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த 19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன.

    இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை ஆகும்.

    இந்தியாவில் கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும்.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்து எரிபொருட்களின் விலை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபை குற்றம் சாட்டி உள்ளது.
    மதுரை:

    தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் தானமாக நிலங்களை வழங்கியுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தால் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் நிலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுப்பையா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெயர் மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பே கோவில் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் சொத்துக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்கே ஆதரவு அளித்திருப்பதாகவும், பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். . #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை முடிவுகள் வெளியான தொகுதிகளில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டிக்கான வாய்ப்பு மங்கி வரும் நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக மக்கள் எங்களுக்குத்தான் முழு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் கட்சி பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. காங்கிரசின் இந்த செயல்பாட்டை கண்டிக்கிறோம்.

    ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரசின் தோல்விக்கு காரணம். சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துள்ளார்.

    பா.ஜ.க.வின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #Yeddyurappa
    சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி போலீசார் கூறுவதை எதிர்த்து நான் கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
    திருவனந்தபுரம்:

    முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார்.

    2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினார்.

    முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 306 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.

    டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டி உள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான், தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான், கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள யோசனை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான் தங்களின் தீர்ப்பை செயல்படுத்த முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக மேற்பார்வை வாரியம் அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டம் தமிழக நலன்களுக்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணையின் போது தமிழகம் கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். காவிரி மேற்பார்வை வாரியம் தான் இறுதியான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டால், அதைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் எதிர்க்கிறது என்பதை காரணமாக காட்டி, அரசியல் சட்ட அதிகாரம் இல்லாத ஒரு வெற்று மேற்பார்வை குழுவை அமைக்க செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மன்னிக்கவே முடியாத அநீதி.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நிகரான நடுவர் மன்ற தீர்ப்பை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்திடும் வகையில் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி, தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை தட்டிப்பறிக்க நினைப்பதை தமிழக மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித்தீர்ப்பு வெளியாகும், அது நிரந்த தீர்வுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்த தமிழக விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் வருகிற 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக, அது நிரந்த தீர்வாக அமைந்து தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அந்த இறுதி அறிவிப்புக்கு பிறகு உடனே மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட இருக்கும் அமைப்புக்கோ அல்லது குழுவுக்கோ அல்லது ஆணையத்துக்கோ எதுவாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் செயல்திட்டம் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த காவிரி அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் நதிநீர் பங்கீடு எந்த அளவுக்கு உண்மைத்தன்மையுடன் பகிர்ந்தளிக்கப்படும் என்ற சந்தேகம் எழுகிறது. நதிநீர் பங்கீட்டில் நடுநிலையாக செயல்பட்டு முழு அதிகாரம் செலுத்தும் ஆளுமை காவிரி அமைப்புக்கு இல்லாதபட்சத்தில் இந்த செயல்திட்ட வரைவினை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணும் வரை உரிமையை மீட்க போராடும் தமிழர்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் உறுதுணையாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் துரோகம். அந்த வரைவு திட்டத்தின் நகல் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள விவரங்களை விவாதித்து தமிழக அரசின் சார்பில் 16-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. காவிரி பிரச்சினை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து நிலையான கருத்தை இறுதி செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:-

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை முற்றிலும் தமிழக நலனுக்கு எதிரானதும், கர்நாடகாவுக்கு ஆதரவானதும் ஆகும். இதுகுறித்து விவாதிக்க அவசரமாக அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். 
    ×