search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகர்கோவில்"

    கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்தத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும் அதைத்தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். இதற்கிடையே வருகிற ஏப்ரல் மாதம் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.

    மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பிரசித்திபெற்றதுமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று காலை கள்ளழகர் கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடந்தது.

    அப்போது கோவிலில் சப்பர முகூர்த்த விழா மேளதாளம் முழங்க தொடங்கியது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது. தொடர்ந்து பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன், கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் பட்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரையை மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் பிரமாண்டமாக ஆயிரம் பொன் செலவில் 3 மாதங்கள் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் செய்யப்பட்ட சப்பரத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். ஆயிரம் பொன் செலவில் செய்யப்படுவதால் இதற்கு ‘ஆயிரம் பொன் சப்பரம்’ என்ற பெயர் வந்தது. ஆனால் தற்போது கள்ளழகர் வைகை ஆற்றில் சப்பரம் இல்லாமல் தங்க குதிரை வாகனத்திலேயே எழுந்தருள்கிறார். இருப்பினும் சம்பிரதாயமாக இன்றளவும் ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் சப்பர முகூர்த்தத்துடன் திருவிழா தொடங்குகிறது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    அழகர்கோவிலில் நடந்த திருபவுத்திர திருவிழாவில் 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தால் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.

    அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுரகங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலை, பூக்கள், மாலைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.

    அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது:- உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    அழகர்கோவில் ஆடிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்மம், அன்னம், அனுமார், சே‌ஷ, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று (27-ந் தேதி) நடந்தது. அதிகாலையில் பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்ற கோ‌ஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., கோவில் தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, ஜமீன்தார் சண்முக ராஜபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்களை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 8. 55 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. அமைச்சர், கலெக்டர் இறுதி வரை தேரை இழுத்தனர்.

    இன்று மாலை பூப்பல்லக்கு நடக்கிறது. சந்திர கிரகணத்தையொட்டி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையன்று கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
    அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நேற்று காலை தொடங்கியது. அங்குள்ள தங்க கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனையும் நடந்தது. அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடைபெறும். நாளை (சனிக்கிழமை) காலையில் வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந் தேதி இரவு தங்க கருட வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    23-ந் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.30-மணிக்குள் மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப்பெருமாள் புறப்பட்டு சென்று திரும்புகிறார். இரவு சேஷ வாகனத்திலும், 24-ந் தேதி இரவு யானை வாகனத்திலும் 25-ந் தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 26-ந் தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந் தேதி ஆடி பவுர்ணமியன்று நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்வார். பின்னர் காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படும். 28-ந் தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந் தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி, கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரையை அடுத்துள்ளது திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர்கோவில். இங்குள்ள கள்ளழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆண்டு தோறும் ஆடி மாதம் வரும் ஆடிப்பெருந்திருவிழா. இந்த வருடத்திற்கான விழா கோவிலில் வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு அன்னவாகனத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் 20-ந்தேதி காலை தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை வழக்கமான நிகழ்ச்சிகளும், இரவு அனுமார் வாகனத்திலும், 22-ந்தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    23-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுந்தரராஜப் பெருமாள் அழகர்கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 24-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26-ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தாயார்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்பு காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேரின் வடம் பிடிக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள்.

    28-ந்தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29-ந்தேதி உற்சவ சாந்தியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த (ஆகஸ்டு) மாதம் 11-ந்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    மதுரையை அடுத்துள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் முப்பழ உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பம்சம் பொருந்தியதும், திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து பெருமை படைத்ததுமானது அழகர்கோவில். இங்கு வற்றாத புனித தீர்த்தமான நூபுரகங்கையுடன் அருள்பாலித்து வருவது கள்ளழகர் கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொருவிதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழாவும் ஒன்று. இந்தாண்டுக்கான முப்பழ உற்சவ விழா நேற்று கள்ளழகர் கோவிலில் நடந்தது. அதில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடந்தது. கோவில்களில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக முப்பழங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செயதிருந்தனர்.

    ×