search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110335"

    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று காலை பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 108 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை 7 மணியளவில் படிபூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முதல்படியில் வேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு படியிலும் வாழை இலையில் தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிடட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கரூர் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையொட்டி பாலமுருகனுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உளளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணியர், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி, நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடை பெற்றது. 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன் ,சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிர மணியன் செய்தார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், கணபதி, மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை குழுவினர் செய்தனர்.

    • அகத்தியர் சிலைக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர்.

    தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    இந்த நிலையில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தாமிரபரணி நதியின் உப நதியான கடனா ஆறு, மணிமுத்தாறு, பச்சையாறு, சிற்றாறு உள்பட ஆறுகளும் வறண்டு விட்டன.

    இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி வறண்டு போனால் மே மாதம், பொதிகை மலையில் அகத்தியருக்கு பூஜை செய்வது வழக்கம். எனவே இந்த வருடமும் அதுபோன்ற பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இதற்காக செய்துங்க நல்லூரில் இருந்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன், உச்சிமகாளி சுவாமி உள்பட 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 26-ந்தேதி மாலை கிளம்பினர்.

    இவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தாமிரபரணி ஆர்வலர்கள் வழி அனுப்பி வைத்தனர். இவர்களை போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பொதிகைமலை யாத்திரைக்கு வருகை தந்தனர். கேரள வனத்துறைக்கு உட்பட்ட விதுரா வழியாக கானித்தலம் வந்து, அங்குள்ள சோதனை சாவடியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போனக்காடு என்ற பகுதிக்கு வந்தனர்.

    அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கரடு முரடான பயணத்தினை தொடங்கினர். அவர்கள் தங்கர் பச்சான் கோவில், லாத்தி மோட்டா, கருமேனியாறு, வாலை பிந்தியாறு, அட்டையாறு, புல்வெளி, ஏழுமடங்கு, ஏ.சி. காடு வழியாக அத்திரிமலை பங்களா வந்து அடைந்தனர்.

    அங்கு இரவு ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலை மீண்டும் பயணத்தினை தொடங்கினர். அவர்கள் மதிமயக்கும் சோலை, தாமரைக்குளம், பொங்கலா பாறை, சங்குமுத்திரை, வழுக்கு பாறை, இடுக்கு பாறை ஆகிய மூன்று இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்து ஏறி பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.

    அங்கு அகத்தியர் சிலைக்கு பால், நெய், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் நடந்தது. பின்னர் தாமிரபரணி நதி வற்றாமல் இருக்கவும், பருவ காலங்களில் மழை பெய்யவும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அங்கு வந்த பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர். அவர்கள் வேண்டுதல் நடத்தும் போதே மழை பொழிந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்து கீழே இறங்கியவுடன் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி அத்திரி பங்களாவில் இரவு தங்கி விட்டு, 3-வது நாள் கீழே இறங்கி வந்தனர். பொதிகை மலை உச்சியில் கடந்த 1996-க்கு பிறகு தமிழ்நாடு வனத்துறை பாதை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரள வனத்துறை சார்பில் அனுமதி பெற்று அகத்தியரை தரிசனம் செய்ய மக்கள் செல்கிறார்கள். இவர்கள் வேண்டுதல் நிறைவேறி மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற பக்தர்கள் நம்பிக்கை நிறைவேறட்டும்.

    • விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது
    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.கவுள்பாளையத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு வளாகத்தில் 504 வீடுகள் உள்ளது. இங்கு பொதுமக்கள், மாணவ,மாணவிகள் பொழுதுபோக்கிற்காக பூங்காவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி விளையாட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.பூஜை விழா நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் உத்திரக்குமார் தலைவர் வகித்தார். செயலாளர் முருகேசன், பொருளாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் கலந்து கொண்டார். இதில் துணைத் தலைவர் செங்கமலை, துணை செயலாளர்முருகையா மற்றும் உதிரம் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்துவிட்டு அதன் தோலை விளக்காக்கி, அதில் நெய் விட்டு, ராகுகால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
    • இரும்பு நல்ல எண்ணெய், எள், கருப்புத்துணி இவையாவும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

    திருவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆகும்.

    சத்யோஜாதம்

    வாமதேவம்

    தத்புருஷம்

    அகோரம்

    ஈசானம்

    ஆகியவற்றை குறிக்கின்றன என ஆகமங்கள் கூறுகின்றன!

    எலுமிச்சை விளக்கு!

    எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்துவிட்டு அதன் தோலை விளக்காக்கி, அதில் நெய் விட்டு, ராகுகால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

    குரு பரிகார விளக்கு

    கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆலங்குடி குரு தலத்தில் குருபகவானுக்கு இருப்பது நான்கு அகல் விளக்குகளை ஏற்றி இருபத்து நான்கு முறை வலம் வந்து வழிபடுவது குருதோஷ பரிகாரமாக கருதப்படுகிறது.

    சனீஸ்வர பகவான் பரிகார விளக்கு

    இரும்பு விளக்கில் நல்லெண்ணெயை ஊற்றி அதிலே கருப்புத் துணியால் மூட்டை போல் கட்டிய எள்ளை வைத்து அந்தத் துணியின் முனையையே திரியாக கொண்டு சனிக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றி வழிபட சனி பகவானின் அருள் கிடைக்கும். இரும்பு நல்ல எண்ணெய், எள், கருப்புத்துணி இவையாவும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

    ஆலயங்களில் விளக்குப்பூஜை

    விளக்குப்பூஜையை ஆலயங்களில் செய்வதே சிறப்புத் தரும் அதிலும் குறிப்பாக அம்மன் ஆலயங்கள் அதிக அருளைத்தரும். திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு அம்மன் ஆலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் ஆகியவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

    அதிசய நவக்கிர விளக்கு

    திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சலி என்ற திருத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது! அதற்கு பதிலாக ஒன்பது குழிகளே உள்ளன.

    அவற்றில் நெய் வார்த்து, திரியிட்டு, விளக்கேற்றி அந்த ஒன்பது சுடர்களை வணங்க வேண்டும். இதை நவக்கிரக தீப வழிபாடு என்கிறார்கள்.

    • ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.
    • சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும்.

    வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்குப் மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம். வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது. அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது. காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

    ஏகமுக தீபம்

    ஏகமுக தீபத்தை, பகவதி தீபம் என்றும், ஸ்ரீதுர்கா தீபம் என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள். சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. எனவேதான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏகமுக தீபத்தில் ஸ்ரீதுர்க்கா தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

    மாங்கல்ய பலம் பெருகும்

    சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை செய்ய, செய்ய வீட்டில் அஷ்டலட்சுமி வாசம் செய்வதோடு, மாங்கல்யம் பலம் பெற முடியும். இதனால் குடும்பத்தினர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வசதியாக வாழ்வார்கள்.

    நிம்ப தீபம்

    நிம்பதீபம் என்பது இலுப்பை எண்ணை ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புதுஅகண்டம், அகல் இவைகளில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம்.

    பஞ்ச தீப எண்ணை

    தேங்காய் எண்ணை, விளக்கு எண்ணை, வேப்ப எண்ணை, இலுப்ப எண்ணை மற்றும் பசு நெய் கலந்த எண்ணையே பஞ்ச தீப எண்ணை எனப்படும். பஞ்ச தீப எண்ணையால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    இதை ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வெண்குஷ்டம் முதலிய தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுவோர் தங்கள் உபாதைகள் நீங்கிச் சுகம் பெறுவார்கள். நரம்புத் தளர்ச்சி நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த கண் கண்ட மருந்தாகும். தேவி உபாசகர்கள், தங்கள் தேவியை மகிழ்விக்க, பஞ்சமி திதியில் மேற்கண்ட பஞ்ச தீப எண்ணை ஊற்றி, பஞ்ச தீபம்(5-சுடர்) ஏற்றி வழிபட்டு வந்தால் அம்பிகையின் பூரண அருள்கிட்டும்.

    மங்களகவுரீ தீப பூஜை

    ஆவணி மாதம், செவ்வாய்க்கிழமை அம்பிகை அவதரித்த நாள். அன்று ஒளிமயமானதேவியை தீபத்தில் பூஜிப்பது மிகவும் நல்லது. ஆவணி மாதம் எல்லா செவ்வாய்க்கிழமைகளில் தேவியை தீபத்தில் பூஜிக்க வேண்டும். கன்னியாக இருக்கும் போது தந்தை வீட்டில் ஒரு வருஷமும், கணவர் வீட்டில் நான்கு வருஷங்களும் இந்த பூஜையை விரதமாக ஏற்று முடிக்க வேண்டும். இதற்கு சிரவண மங்கள விரதம் என்று பெயர். தீர்க்க சுமங்கலியாக இருப்பதே இதன் முக்கிய பலன்.

    விளக்கொளி பெருமாள்

    சிவபெருமான் ஜோதியாக விளங்கியது போல மகாவிஷ்ணுவும் ஜோதியாக விளங்கியிருக்கிறார். இதை உணர்த்த காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் என்ற பெயருடன் ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள பெருமாளை விளக்கொளி பெருமாள் என்று அழைக்கிறார்கள். தீப பூஜையில் மகாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்யும்போது இந்தப்பெருமாளை தியானிப்பது மிகவும் விசேஷம். இத்தலத்திற்குத் திருத்தண்கா, தூப்புல் என்ற பெயர் வழங்குகிறது.

    தீப பிரசட்சணம்

    தீபத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தை பிரதசட்ணம் வருவதில் பெரும் புண்ணியம் உண்டு. கன்னிப்பெண்கள் இப்படி தீபத்துடன் பிரதட்சணம் செய்தால் அவர்களுக்கு சீக்கிரமே திருமணம் கைகூடும்.

    திருக்கோவிலூர், தபோவனம் ஸ்ரீஞான ஆனந்த சுவாமிகள் மடத்தில் இந்த வழக்கம் தினமும் பின்பற்றப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பு ஒரு கன்னிப்பெண் 5 முகம் ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திவர அவர்களுடன் எல்லோரும் சேர்ந்து, தீபஜோதியே வருவாய் என்று பாடிக்கொண்டு ஆஸ்ரமத்தை வலம் வருவார்கள்.

    திருவிளக்கு தந்த அரச பிறவிஷ

    வேதாரண்யம், வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் விளக்கு சற்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தபொழுது விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யை உண்ணுவதற்காக சென்ற எலி தன முக்கினால் திரியை அப்பால் நகர்த்திவிட தீபம் சுடர்விட்டு எரிந்ததாம். எலியின் செயல் எப்படியிருந்தபோதும், தீபம் சுடர்விட்டு எரியச் செய்த கைங்கரியத்திற்காக அந்த எலியை இறைவன் அடுத்த பிறவியில் மகாபலி சக்கவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்று அப்பர் சுவாமிகள் தனது திருக்குறுகை பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் எழுதியுள்ளார்.

    முதலை உணர்த்திய விளக்குத் தத்துவம்

    முற்காலத்தில் சாப்பிடும்போது விளக்கு அணைந்தால் அத்துடன் எழுந்து விடுவது வழக்கம். இதற்கு எடுத்துக்காட்டா ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

    ஆதிசங்கரர் சிறுவனாக இருந்த போது ஆற்றுக்குச் சென்றார். அப்போது இரவுக் காலம். அவருடைய காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. அப்போது என் தாயாரிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு சங்கரர் அன்னையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.

    சங்கரர் ஆற்றிற்குத் திரும்பியபோது அவர் அன்னை ஒரு எரிகிற விளக்கை மரக்காலுக்குள் மறைத்துக்கொண்டு வந்தாள். முதலை சங்கரரின் காலைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. பின்னால் நின்ற அன்னை மூடியிருந்த விளக்கை திடீரென்று வெளியே காட்டி உடனே அணைத்து விட்டார். தீய சகுணம் ஏற்பட்டு விட்டதால் முதலை அவரை உண்ணாமல் விட்டது. சங்கரர் உயிர் தப்பினார்.

    அகண்ட தீபம்

    அகண்ட தீபம் என்பது எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் நிரம்ப விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதைக் குறிக்கும். இந்தச் சிறப்பு வழிபாடு திருநெல்வேலி, நெல்லையப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

    கோடி தீபம்

    ஆலயங்களில் உலக நன்மைகாக குறிப்பிட்ட காலத்திற்குள் கோடி தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டு, வரும் பக்தர்களைக் கொண்டு கோடிதீப ஏற்றுவதுண்டு. இதுபோன்று கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனுக்கு உலக நன்மைக்காக கோடி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    • திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணை கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம்.
    • புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம்.

    ஞாயிறு:-

    ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

    திங்கள் :-

    திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணை கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத்தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.

    செவ்வாய்:-

    செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.

    புதன்:-

    புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணை தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.

    வியாழன்:-

    வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணை கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

    வெள்ளி:-

    வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.

    சனி:-

    சனிக்கிழமைகளில் நல்லஎண்ணை கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீப பித்ரு சாபங்கள் நீங்கும். மேற்கண்ட வாரதீப பூஜையை திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராசுவாமிகள் தெரிவித்துள்ளார்கள்.

    மாத தீப பூஜை

    ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசையன்றும், பவுர்ணமி அன்றும் திருவிளக்கு ஏற்றி அதை மகாலட்சுமியாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் பலன்கள் விவரம் வருமாறு:-

    சித்திரை பவுர்ணமி -அமாவாசை: தான்யம் உண்டாகும்.

    வைகாசி பவுர்ணமி-அமாவாசை: செல்வம் உண்டாகும்.

    ஆனி பவுர்ணமி-அமாவாசை: திருமணம் நடைபெறும்.

    ஆடி பவுர்ணமி-அமாவாசை: ஆயுள் விருத்தி உண்டாகும்.

    ஆவணி பவுர்ணமி-அமாவாசை: புத்திரப்பேறு உண்டாகும்.

    புரட்டாசி பவுர்ணமி-அமாவாசை: பசுக்கள் விருத்தி உண்டாகும்

    ஐப்பசி பவுர்ணமி-அமாவாசை: பசிப்பிணி அகலும்.

    கார்த்திகை பவுர்ணமி-அமாவாசை: நற்கதி உண்டாகும்.

    மார்கழி பவுர்ணமி-அமாவாசை: ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.

    தை பவுர்ணமி-அமாவாசை: வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்

    மாசி பவுர்ணமி-அமாவாசை: துன்பம் அகலும்.

    பங்குனி பவுர்ணமி-அமாவாசை: தர்ம சிந்தனையை ஏற்படுத்தும்.

    • வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.
    • இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரிகள் சகலபாக்கியங்களையும் தரும்.

    அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும்.

    இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம்.

    உடலும் தீபமும்

    விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி! கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.

    தொடர்பு ஏற்படுத்தும் தீபம்

    ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மாவாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன! விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் இறையருள் ஒளியாக உள்ளது.

    எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவை.

    அதைப் போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது.

    இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

    குத்துவிளக்கில் பெண்மை!

    குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன. அவை, அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியனவாகும்.

    விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்!

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தைச் செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும்.

    வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்!

    பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.

    மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வமாடத்தில் ஏற்றலாம்.

    ஆனால் எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது.

    தீபங்களும் திரிகளும்!

    பருத்தி பஞ்சினால் ஆன திரிகள் நல்லவை அனைத்தும் செய்யும்.

    இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரிகள் சகலபாக்கியங்களையும் தரும்.

    தாமரைத்தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது. முன் வினைப் பாவத்தை போக்கும். செல்வம் நிலைத்து இருக்கும்.

    வாழைத் தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால், குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம், குடும்ப சாபம் முதலியவை நீங்கி அமைதி உண்டாகும். குல தெய்வ குறைபாடு நீங்கும்.

    வெள்ளை எருக்கம் பட்டையில் திரித்த திரியால், பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லைகள் நீங்கும். பிள்ளையார் அருள் கிட்டும்.

    புதுமஞ்சள் சேலை திரி:

    அம்மன் அருள் கிட்டும், வியாதிகள் குணமாகும், காற்று, கருப்பு சேட்டைகள் நீங்கும்.

    சிகப்பு நிற சேலைத் திரி:

    திருமணத் தடை நீங்கும், மலட்டுத்தன்மை செய்வினை தோஷங்கள் முதலானவை விலகும்.

    பன்னீர் விட்டு காய வைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஆகாத எண்ணை!

    கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.

    இறைவனுக்கு உகந்த எண்ணை விபரம் வருமாறு:-

    மகாலட்சுமிக்கு- நெய்

    திருமால், சர்வதேவதைகளுக்கு- நல்லெண்ணை

    விநாயகருக்கு- தேங்காய் எண்ணெய்

    சிவபெருமானுக்கு- இலுப்பை எண்ணெய்

    அம்பாளுக்கு- நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஏற்ற எண்ணை

    பசு நெய்: லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

    நல்லெண்ணை: பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

    தேங்காய் எண்ணெய்: லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.

    இலுப்பை எண்ணை: எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.

    விளக்கெண்ணை: தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.

    வேப்ப எண்ணை: குலதெய்வ அருள் கிடைக்கும்.

    மூவகை எண்ணை: நெய், வேப்பஎண்ணெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

    தீபம் ஏற்றுவதின் பலன்கள்

    ஒருமுக தீபம்: சாதாரணமாக வீடுகளில், குத்து விளக்கில் ஒற்றைத் திரியுள்ள தீபம் ஏற்றக்கூடாது.

    இருமுக தீபம்: பிரிந்தவர் கூடுவர், குடும்ப ஒற்றுமை வளரும்.

    மூன்றுமுக தீபம்: புத்திர சுகம் ஏற்படும். குழந்தைகளுக்கு படிப்பில் ஏற்படும் மறதி குறையும்.

    நான்முக தீபம்: பால்பாக்கியம் கிட்டும், பூமியின் அருள் கூடி நிலம் கிடைக்கும்.

    ஐந்துமுக தீபம்: அனைத்து நலன்களுடன் அம்பிகையின் பூரண அருளும் கிட்டும்.

    தீபம் ஏற்ற வேண்டிய திசைகள்!

    கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்ற, துன்பங்கள் நீங்கும்.

    மேற்கு திசை நோக்கி விளக்கேற்ற கடன் தொல்லை நீங்கும், பகை நீங்கும்.

    வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கும். திரவியம் கிட்டும். சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

    தீபம் ஏற்றக் கூடாத திசை!

    தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.

    விளக்கிற்கு பொட்டு இடுதல்!

    விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பொட்டிட்டு வழிபட வேண்டும்.

    விளக்கிற்கு ஏற்ற ஆசனம்!

    விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

    விளக்கை அலங்கரிக்கும் முறை!

    ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.

    குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும். நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.

    உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.

    இவ்வாறு திருவிளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    தீபம் ஏற்றும் நேரம்!

    தினமும் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்ற சர்வமங்கல யோகத்தை தரும்.

    காலையில் வாசலில் சாணம் தெளித்து, கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

    மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை தேடி வரும்.

    மாலையில், விளக்கேற்றும் போது வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

    காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லப்புறக்கதவை சாத்திவிட வேண்டும். கொல்லைப்புற கதவு இல்லாதவர்கள் பின்பக்கமுள்ள சன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கேற்றும் போது விளக்கிற்குப் பால், கல்கண்டு நிவேதம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    விளக்குப் பாடல்!

    வீட்டில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட பாடலை ஆறு முறை கூறி, ஒவ்வொரு முறையும் விளக்கிற்கு பூ போட்டு, பூமியைத் தொட்டு வணங்கி வழிபட எல்லா சுகங்களும் கிட்டும்!

    தீப ஜோதியானவளே நமஸ்காரம்

    திருவாகி வந்தவளே நமஸ்காரம்

    ஆபத்பாந்தவியே நமஸ்காரம்

    அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்

    • சபரிமலை கோவிலுக்கு சென்ற நாராயணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர்.
    • திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திற்கு துணை போனதாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பின்னர் இதுதொடர்பாக அரசு மற்றும் தேவசம்போர்ட்டு நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக உற்சவ திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    இதனை முன்னிட்டு கோவிலூர் கோவிலில் இருந்து சுவாமி எடுத்து வரும் நிகழ்ச்சியும், விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    இந்நிலையில், நேற்று அம்மனுக்கு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை வெள்ளக்குளம் கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,

    வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னார், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், மாவிளக்கு போடுதல், முடி இறக்குதல் ஆகியவை நடந்தது.

    இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    • ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    கோவில் நிர்வாகிகள் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 3 கிலோ எடையுள்ள தங்க சரிகை புடவை கொண்டு அலங்காரம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து 3 கிலோ தங்கத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க புடவை தயார் செய்யப்பட்டது. நேற்று கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

    இதை அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அங்கு நடந்த பூஜையில் அம்மனை தரிசித்து சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டப்பேரவை துணைத்தலைவர் கொலகட்லா வீரபத்ரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    • பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.
    • பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது.

    சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடைபெறும்போது, மலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

    இந்த வனபகுதி வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவர் பொன்னம்பலமேடு காட்டுப்பகுதிக்குள் சென்று பூஜைகள் செய்தார்.

    இந்த காட்சிகளை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலானதை தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜைகள் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல கேரள வனத்துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் இடுக்கியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். அவரிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×