search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110448"

    தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுவோருக்கு தினக்கூலியாக ரூ.380 தரப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்திற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் வீரய்யா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் உமாநாத், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாநில செயலாளர் கோகுலவர்மன், சி.ஐ.டி.யூ மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, கணேசன், மோகனசுந்தரம், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (சத்துணவுப்பிரிவு) காலியாக உள்ள கணிணி அறிவுள்ள உதவியாளர் ஒரு பணியிடம் தகுதி உள்ள நபர் மூலம் பகுதி நேர தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளது.

    விண்ணப்பதாரர்கள் smart sivagangaiapp (கைபேசி செயலி) மூலம் 20.6.2018 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. #Tamilnews

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், அருணகிரி, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    முடிவில் நகர தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.
    சிவகங்கையில் மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.224 வழங்க வேண்டும், கிராமசபை கூட்டம் நடத்தி வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகளை தேர்வு செய்ய வேண்டும், ஊதியம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை நீக்க வேண்டும், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை தேர்வு செய்ய வேண்டும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், ஏற்கனவே அரசு வழங்கி வந்த உதவித்தொகைகளை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாத்தையா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் தங்கமணி, நிர்வாகிகள் ஆறுமுகம், சுந்தர்ராசு, மாதவன், ராமச்சந்திரன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஆறுமுகம் (வயது35). எலக்ட்ரீசியனான இவர், சேந்தல்பெரியாணைச் சேர்ந்த போஸ் (43) என்பவருடன் அருகில் உள்ள திருமணவயல் கிராமத்திற்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆறுமுகம் முன்னே செல்ல போஸ் பின்தொடர்ந்து சென்றார். திருமணவயல் கண்மாய் அருகே சென்றபோது திடீரென்று போஸ் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஆறுமுகம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த போஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாபிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் இறந்துபோனார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கணேசன்(வயது 40), மாரிமுத்து(45), அழகர்சாமி(48), ராஜேந்திரன்(45), சுரேஷ்கண்ணன்(46), பால முருகன்(40), தங்கவேல்(50) ஆகிய 7 பேரை சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் கைது செய்துள்ளார்.

    இதேபோன்று காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கல்யாணகுமார், முத்துமாணிக்கம் ஆகிய 2 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு போலீசார் கைதுசெய்தனர். 
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 2 தனியார் பஸ்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கருதாவூரணி. இங்கு தனியார் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    இன்று மதியம் இங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 தனியார் பஸ்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் 2 ஆம்னி பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பஸ்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
    சிவகங்கை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    சிவகங்கை நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நகர் பகுதியில் அ.தி.மு.க. நகர பொருளாளர் முஸ்தபா தனக்கு சொந்தமான டீக்கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன் உள்பட சிலர் கடையை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தப்பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் மாவட்டத்தின் பிற பகுதிகளான காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, கல்லல் ஆகிய பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மானாமதுரையில் புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, சுந்தரபுரம் கடை வீதி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன.#tamilnews
    சிவகங்கை அருகே மினி லாரி-மொபட் மோதல் - பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    மதுரை மாவட்டம் தேவன்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி சித்ரா தேவி (வயது30). இவர் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று அதிகாலை சித்ராதேவி மொபட்டில் வெளியே புறப்பட்டார். மலம்பட்டி-கீழப்பூங்குடி ரோட்டில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சித்ராதேவி படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து மினி லாரியை ஓட்டி வந்த திருப்பத்தூர் திருமணப்பட்டியை சேர்ந்த கார்த்திகைசாமி என்பவரை கைது செய்தார்.

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள கோவானூர் பகுதியில் உள்ள உப்பூர் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அதிகாரி புகழேந்திக்கு தகவல் கிடைத்தது.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஆற்றில் மணல் கடத்திக் கொண்டிருந்த ரமேஷ் (வயது 38), கூத்தாண்டன் (34), பாலா (22), ரமேஷ் கண்ணா (39), நாகராஜ் (32) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

    சிவகங்கையில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை கமலா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஏலம்மாள் (வயது 45). இவர், சிவகங்கையில் இருந்து வாடகை காரில் மதுரைக்கு சென்றார்.

    அதற்கான வாடகையை ஏலம்மாள் கொடுக்கவில்லை. இதனால் டிரைவர் கிருஷ்ணன் (33) வந்து கேட்டார். அப்போது ஏலம்மாளுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கிருஷ்ணன் தன்னை தாக்கியதாக சிவகங்கை டவுன் போலீசில் ஏலம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காரைக்குடி அருகே உள்ள காளவாய் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காளியம்மாள் (60), காரைக்குடியைச் சேர்ந்த முத்து (55) என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து முத்து தனது சகோதரி முருகேஸ்வரியுடன் வந்து காளியம்மாளிடம் பணம் கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் தாக்கப்பட்டதாக காரைக்குடி தெற்கு போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து சகோதரிகள் முத்து, முருகேசுவரியை கைது செய்தார். #Tamilnews
    சிவகங்கையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இதில் வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலை நாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

    அதன் அடிப்படையில் வருகிற 18-ந் தேதி காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பணி நாடுர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    பயிற்சியின் போது உதவித் தொகை மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ராமநாதன் தெரிவித்துள்ளார்.

    ×