search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110454"

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மாயனூரில் தடுப்பணை இருந்த போதிலும் எங்கள் பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆழ்குழாய் கிணறு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அப்பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும் குடிநீர் தட்டுப்பாட்டால் மாணவர்கள் அவதியடைவது குறிப்பிடத்தக்கது.

    எங்கள் பகுதியில் 6 ஆண்டுகளாக சாக்கடை தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பரவுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. எனவே சாக்கடையை தூர்வாரி வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மாயனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சேதமடைந்திருக்கும் உயர்கோபுர மின்விளக்கினை சீர் செய்து தர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். முன்னதாக மாயனூர் பொதுமக்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேனரை ஏந்தி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். இதனை கண்காணித்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி 5 பேரை மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுப்பினர்.

    இதேபோல் மணவாசி கிராம மக்கள் கொடுத்த மனுவில், கீழமாயனூர் காவிரி ஆற்றில் போடப்பட்ட உறை கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் பிரச்சினையை எங்கள் பகுதியில் தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள கால்வாயில் கடந்த மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மாரியம்மன்கோவில் தெரு, செல்லாண்டிஅம்மன் நகர், ஜூப்லி நகர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. மழைநீர் செல்வதற்கான வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அந்த பகுதியில் கட்டப்படும் பாலத்தினை விரிவுபடுத்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாந்தோன்றி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் தனது குடும்பத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், தாந்தோன்றியிலுள்ள எனது தோட்டத்திற்கு செல்ல வழியில்லாமல் செய்யும் வகையில் ஒரு அரசு அலுவலகம் கட்ட ஏற்பாடு நடக்கிறது. எனவே எனக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புன்னம் குளத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் கல்உடைக்கும் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு, நிலம் கிடையாது. இதனால் நாங்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி அருகேயுள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த கல்கண்டு வியாபாரி முத்துசாமி(வயது 47), 10 ரூபாய் நாணயங்களை கையில் ஏந்தியபடியே சென்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் கல்கண்டு வியாபாரம் செய்வதற்காக அடிக்கடி கரூர் வருகிறேன். கரூர்- சின்னதாராபுரம் இடையே செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட சில பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சில சமயங்களில் பாதிவழியில் கூட இறக்கி விடுகின்றனர். எனவே அரசு- தனியார் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்பதை தெளிவுபடுத்தி, மாவட்ட நிர்வாகம் அதனை புழக்கத்தில் இருக்கும்படி செய்ய வேண்டும். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்ரமணியம், ஆதிதிராவிட நல அதிகாரி ஜெ.பாலசுப்ரமணியம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் 
    பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக தள்ளுபடி செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi
    விருதுநகர்:

    மாணவிகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நிர்மலாதேவி சார்பில் சாத்தூர் கோர்ட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறையும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


    இந்த நிலையில் 4-வது முறையாக ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நேற்று இதே நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #Nirmaladevi
    நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NEETissue #upperagelimit
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் நீட் தேர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையில் நாடு முழுவதும் மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர்.

    நீட் தேர்வில் அதிகமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் சிரமத்தை சந்தித்தனர். மேலும், தேர்வறைக்கு செல்லும் போது நடைபெறும் பலகட்ட சோதனைகளும் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.

    நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசோ அதனை கண்டுகொள்ளாமல் வருடந்தோறும் தேர்வை தவறாமல் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே இன்று வெளியிடப்பட்டது.

    இதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதனை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஎஸ்சியின் அறிவிப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பலர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. மேலும், இதுதொடர்பாக ஜூலை 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NEETissue #upperagelimit
    தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. #SterliteProtest #InternetBlocked
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தடியடி கண்ணீர் புகை குண்டு போன்ற வழிகளில் போலீசார் முயற்சித்தனர். இறுதியாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், போராட்டம் மீண்டும் தொடர்வதை தவிர்க்க, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து, இன்று வழக்கறிஞர் சூரியபிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் காயம் பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டின் போது பொதுமக்களை சுட்டவர்களை அடையாளம் காட்ட மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

    இந்த வழக்கு இன்று பிற்பகல் அவசர வழக்காக நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest #InternetBlocked
    கேரள மாநிலத்தில் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருநங்கை நர்சு திருச்சூர் கலெக்டரிடம் மனு அளித்தார். #transgender
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸிஜி (வயது 51). திருநங்கை. இவர் கடந்த 1989-ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. நர்சிங் முடித்தார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றினார். அங்கு அதிக சம்பளம் மற்றும் நவீன வசதிகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் விசாவை புதுப்பிக்காததால் சவுதி அரசு ஸிஜியை நாட்டை விட்டு வெளியேற்றியது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருநல்லாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

    இங்கிருந்து பல ஆஸ்பத்திரிகளில் நர்சிங் வேலை கேட்டார். ஆனால் எந்த ஆஸ்பத்திரியும் ஸிஜிக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து வருமானம் இல்லாமல் இருந்தார். இதனால் குடும்பத்தினர் ஸிஜியை வெறுத்தனர்.

    குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பாத அவர் தலைக்காட்டு என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறினார். அங்கு அவர் உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்தார்.

    சவுதி அரேபியாவில் வருமானம் மற்றும் மரியாதையோடு வாழ்ந்த ஸிஜிக்கு இந்த வாழ்க்கை கொடுமையாக இருந்தது.

    இதனால் நேற்று திருச்சூர் கலெக்டர் கவுசிகனை சந்தித்து மனு அளித்தார். அதில் நான் இங்கு கவுரவமாக வாழ விரும்புகிறேன். ஆனால் அதற்கான நிலைமை இங்கு இல்லை. அதனால் கவுரவமாக சாக விரும்புகிறேன். கருணையோடு நான் தற்கொலை செய்வதை அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தார். இதை அறிந்த கலெக்டர் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் 4 நாட்கள் கழித்து பதில் கூறுகிறேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

    திருநங்கை தற்கொலைக்கு மனு அளித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து கொல்லம் காயபுரம் அசரியம் என்ற ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் ஸிஜியை தொடர்பு கொண்டு கவுரவமாக வாழ வழி செய்வதாக உறுதியளித்தனர். ஸிஜியும் இல்ல நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டார். #transgender
    அடிப்படை வசதிகள் கேட்டு புதுவளசல் கிராமமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோவில்பட்டி பகுதியில் நகராட்சியின் பராமரிப்பில் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இருந்து வந்தது. இதில் தற்போது மயான கொட்டகையை காணவில்லை. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் மனு அளித்து இருந்தோம். ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இனியாவது எங்களுக்கு புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கறம்பக்குடி தாலுகா புதுவளசல் கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் தேவைக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும். பஸ் நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலைக்கடை அமைத்துத்தர வேண்டும். புதுவளசல் ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். மேலும் குறைந்த மின்அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், காயம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இருந்து காலை 10 மணிக்கு மேல் எந்த பஸ்சும் இயக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் புதுக்கோட்டைக்கு வர வேண்டுமானால் காயம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவரங்குளத்திற்கு நடந்தே சென்று, பின்னர் பஸ் ஏறி புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கூறியிருந்தனர். 
    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கவர்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
    விருதுநகர்:

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கவர்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமிதரிசனத்தை முடித்து விட்டு விருதுநகருக்கு காலை 11 மணிக்கு வந்தார். இங்கு பராசக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்த பின்பு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே கவர்னரிடம் மனுக்களை கொடுக்க விரும்பியவர்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் 260 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர்.

    பகல் 12¼ மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற தொடங்கினார். அவருடன் கவர்னரின் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால், கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்கள் தரும் மனுக்களை கவர்னரின் செயலாளர் பெற்று, மாநில அளவிலான பிரச்சினை குறித்த மனுக்களை கவர்னரிடமும், மாவட்ட அளவிலான பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நிகழ்ச்சியில் மனுக்கள் கொடுக்க பெயர்கள் பதிவு செய்தவர்களை வரிசையாக அனுப்பாமல், பின்னால் வந்தவர்களை முதலிலும், ஏற்கனவே காத்திருந்தவர்களை தாமதமாகவும் அனுப்பியதால் அங்கு கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் மனுக்கள் கொடுப்பது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து போலீசார் முன்பதிவு செய்தவர்களை வரிசையாக மனுக்கள் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன்பின்பு கவர்னரிடம் மனுக்கள் கொடுப்பது தொடர்ந்தது. சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து மனுக்களை பெற்ற கவர்னர் மதியம் 2¼ மணி அளவில் வெளியில் வந்தார். அப்போது அங்கு காத்திருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராமச்சந்திரராஜா தனது மனுவில், கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரைஆலை கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க நடவடிக்கை கோரி இருந்தார். ஆனால் அந்த மனு கலெக்டரிடமே கொடுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விவசாய சங்க செயலாளர் முத்தையா கொடுத்த மனுவில், 1970-ம் ஆண்டு ரூ.800 கோடியில் அழகர் அணை கட்டும் திட்டத்திற்கு 8-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய கேரள முதல்வர் அந்தோணியும், நீர் பாசன அமைச்சர் ஜேக்கப்பும் ஒப்புதல் அளித்தும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியிருந்தார்.

    இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் காரியாபட்டி ஒன்றியத்தில் நாசர்புலியங்குளம் பகுதியில் கண்மாய்களில் சவடு மண் அள்ள தடைவிதிக்க கோரியும், இதுகுறித்து புகார் கொடுப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது.

    மதுரை கோட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் சங்கரபாண்டி, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி எனஅறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் ரூ.50 கோடியில் நினைவிடம் கட்டவும், ரூ.20 கோடியில் வேதா நிலையத்தை புதுப்பிக்கவும் அனுமதி வழங்ககூடாது என்றும், அவர்கள் விருப்பப்பட்டால் அ.தி.மு.க. கட்சியில் இருந்து செலவு செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.

    சிவகாசி டான்பாமா சங்கதலைவர் ஆசைத்தம்பி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாசு படுத்தும் விதியில் இருந்து முழு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கோரி மனு கொடுத்தனர். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த தொழிலாளி வேல்முருகன் என்பவரின் மனைவி மலர் தனது கணவர் இறந்ததற்கான உடல் பரிசோதனை சான்றிதழை வழங்க கோரியும், தனது குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண உதவி கேட்டும் மனு கொடுத்தார்.

    விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத்தையும் புதிய பஸ்நிலையத்தையும் உடனே செயல்படுத்திட வேண்டும். விருதுநகரில் விவசாய கல்லூரி தொடங்கவும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரிக்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். தாம்பரம்-நெல்லை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை-விருதுநகர் இடையே இருவழி ரெயில்பாதை திட்டத்தை விரைவுபடுத்தவும், செங்கோட்டை-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயிலை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    விருதுநகரில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க விருதுநகர் விழுதுகள் என்ற அமைப்பின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், கிராம முன்னேற்றதிட்டம், விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெருக்கும் திட்டம் போன்ற திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த திட்டங்களுக்கான மதிப்பீடுகள் குறித்து மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

    கவுண்டம்பட்டி கிராமமக்கள் சார்பில் தங்கள் கிராமப்பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் தந்திமரத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையாக செயல்பட உரிய நடவடிக்கை கோரி அந்த பகுதி மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் யூனியன் துலுக்கப்பட்டி பகுதியில் இலவச கழிப்பறை கட்டிடம் மிகவும் தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து முறையாக கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது. 
    அரசு தங்களுக்கு வழங்கிய நிலத்தை முறையாக அளந்து கொடுக்க வேண்டும் என்று நரிக்குறவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
    ராமநாதபுரம்:

    திருவாடானை சமத்துவபுரம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான நரிக்குறவர்கள் தலைவர் செல்வம் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். எங்களில் 152 பேருக்கு கடந்த 2015-ம் ஆண்டு அரசால் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

    இந்த நிலத்தை முறையாக அளந்து பிரித்து வழங்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து கேட்டபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக எங்களுக்கு நிலத்தை அளந்து பிரித்து வழங்கி இருந்தால் நாங்கள் அந்த இடத்தில் குடிசை போட்டு வாழத்தொடங்கி இருப்போம்.

    தற்போது அரசு வழங்கிய நிலத்தை எங்கள் கண் எதிரேயே ஆக்கிரமித்து அபகரிக்கும் செயல் நடந்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக அதிகாரிகள் எங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை முறையாக பிரித்து அளந்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வேறுவழியின்றி சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
    மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் நாளை மறுநாள் (12-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க, பெங்களூரு நகருக்கென தனித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

    இந்நிலையில், ராஷ்டிரிய இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, மதம் ரீதியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது எனவும், இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, தேசிய கட்சிகளின் பட்டியலிலிருந்து காங்கிரசை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தேர்தல் பணிகள் துவங்கிய பின்னர், நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. எனினும் தேர்தல் நடைமுறைகள் முடிந்தபிறகு, முத்தலிக் சட்டரீதியாக நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். #karnatakaelection2018 #SCdismisses #pleaagainstCongress
    ×