search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை"

    பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கு
    இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 
     
    அப்போது கலைந்துசென்ற நபர்கள் திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் செல்வகுமாரை அங்கிருந்து வரவழைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். #PonnamaravathiViolence

    புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதி:

    தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ ‘வாட்ஸ்-அப்’ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

    இந்த ஆடியோ நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த அந்த சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன.

    இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேலும், கல்வீச்சில் போலீசாரின் 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச்சொல்லி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லெட்சுமி, லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கருப்புக்குடிப்பட்டியில் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரை அழைத்து கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே பொன்னமராவதி நகரை அமைதிப்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

    வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே புதுக்கோட்டையை அடுத்த கவிநாடு கண்மாய் முக்கம் அருகே குடுமியான்மலை மற்றும் இலுப்பூர் செல்லும் சாலையில் எந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த பகுதியில் நின்ற அரசு பஸ்கள் மீது கற்களை வீசினார்கள்.

    இதில் 3 அரசு பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அடுத்து உள்ள புதுக்குளத்தின் அருகே நேற்று மாலை பொது மக்கள் நடந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு வாலிபரின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தது புதுக்கோட்டை காமராஜபுரம் 14-ம் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (22) என்றும், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் காதல் விவகாரத்தில் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.

    அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமி‌ஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.

    இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls

    திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    குளித்தலை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையத்தில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அதில் வெளிநாட்டு பணம் 36 யூரோ நோட்டுகள் இருந்தது (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 832) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதால் காரில் வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரில் வந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலஞ்சோ (வயது 35) என்பதும், இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் அலஞ்சோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

    வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கு உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் அவற்றை திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி குழுமணி சாலை லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படையை சேர்ந்த தாசில்தார் வசந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏகிரிமங்கலம் என்ற இடத்தில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் ரூ.1 லட்சம் வைத்து இருந்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைத்தனர்.

    சுந்தர்ராஜ்-பிரசன்னகுமாரி தம்பதி, அதிகாரிகளிடம் தங்களுடைய மகளுக்கு வருகிற 31-ந்தேதி காதணி விழா நடத்த இருப்பதால் துணிமணிகள் எடுப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினர். காதணி விழா அழைப்பிதழையும் அதிகாரிகளிடம் காட்டினர். ஆனாலும் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அந்த தம்பதியினர் காதணி விழாவுக்காக வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டார்களே? என்ற வேதனையுடன் புலம்பியபடி சென்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்து இருக்க வேண்டும். அப்படி வைத்து இருந்தால் தான் பணம் பறிமுதல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கூழையன்விடுதியில் பறக்கும் படையை சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு காரில் இருந்த ஒரு பொருளை, லாரிக்கு மாற்றினர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். லாரியில் சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல் வியாபார பணத்தை வைத்திருந்ததாக லாரி டிரைவர் தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #ParliamentElection


    புதுக்கோட்டை மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன் என புதிதாக பொறுப்பெற்று கொண்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, புதுக்கோட்டை கலெக்டராக பணியாற்றி வந்த கணேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு உள்ள மாவட்டம் புதுக்கோட்டை. அரசின் திட்டங்கள் யாவும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், பின்தங்கி உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன்.

    இதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு, புயல் நிவாரணம் கிடைக்கவும், புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளை அரசிடம் கேட்டு பெறுவதோடு, மக்களின் மறுவாழ்விற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தாய், 2 குழந்தைகள் பலியாகினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேலு, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னுமணி (வயது 28).

    இவர்களது மகன் சஞ்சீவி மலை (3), மகள் சங்கவி (2). கடந்த 17-ந்தேதி மாலை பொன்னுமணி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் வீட்டிற்குள் விளையாடினர்.

    அப்போது திடீரென கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீடு முழுவதும் பரவி வீடுகளில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களில் பற்றி எரிந்தது. பொன்னுமணி, 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை.

    இதனால் 3 பேர் மீதும் தீப்பற்றியதில் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் தாய் மற்றும் குழந்தைகளை மீட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தீப்பற்றியதில் 3 பேரும் பலத்த காயமடைந்திருந்தனர்.

    உடனே அவர்களை பொதுமக்கள் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பொன்னுமணி, சஞ்ஜீவி மலை, சங்கவி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கியாஸ் சிலிண்டர் கசிவால் தாய்-2 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. 

    கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது. காளைகள் முட்டியதில் பார்வையாளர்களில் ராமு (25), சதீஷ்குமார் (43) ஆகியோர் உயிரிழந்தனர். மாடுபிடி வீரர்கள் உட்பட 41 பேர் காயம் அடைந்தனர். 

    இந்நிலையில், 21 காளைகளை பிடித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடம் பிடித்தார். திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி என்பவர் 16 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார்.

    விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர். #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
    கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் தமிழக அரசு அனுமதியுடன் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. #Jallikattu #Thatchankurichi
    கந்தர்வக்கோட்டை:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீக்கப்பட்டதால் பட்டி தொட்டியெங்கும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கோமாபுரம், மருதன்கோன் விடுதி, ஆதனக்கோட்டை, இலுப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டு கலந்து கொண்டன. 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உரிய உடற்தகுதி தேர்வு நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டோம், விதிமுறைகளை சரியாக கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.

    முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் சில ஆக்ரோ‌ஷமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. தொடர்ந்து அந்த காளைகள் களத்தில் நின்று விளையாடி தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டியடித்தது.

    இருப்பினும் களத்தில் வீரத்துடன் நின்றிருந்த மாடு பிடிவீரர்கள் தன்னை விரட்டிய காளையை விடாப்பிடியாக நின்று அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கி வெற்றிக்கொடி நாட்டிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    குறிப்பாக பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பீரோ, சேர், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. களத்தில் வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாக இறக்கி விடப்பட்டனர். முதல் கட்டமாக 168 பேர் களம் இறங்கினர்.

    ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் கண்காணித்தனர்.

    இதே போல் ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக தயார் நிலையில் இருந்து மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.  #Jallikattu  #Thatchankurichi

    புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை , மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Storm

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.

    இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.

    அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #PudukkottaiAccident
    புதுக்கோட்டை:

    ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோயில் வழிபாட்டுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிரிவு சாலையில் இன்று மதியம் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கடுப்பாட்டை இழந்து வேன் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் இறந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு திருமயம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்தார். #PudukkottaiAccident
    ×