search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
    அறந்தாங்கி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங் களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்பட்டது. இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் வெயில் அடித்து வருகிறது. இதேபோல் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ங்களிலும் இன்று காலை முதல் வெயில் அடித்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பகல் வரை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை. இந்தநிலையில் இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். மழை அதிகம் பெய்யும் நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் இன்று மழை பெய்த போதிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.


    புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம்காலனி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொசு மருந்து அடிக்கும் பணி, தூய்மை பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தொடர்ந்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் லார்வா கண்டறியும் பணியினை மேற்கொண்டு டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்பட நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.
    தஞ்சை-மதுரை நான்கு வழிச்சாலைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விவசாய நிலங்களில் கற்கள் நடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Farmers #Opposition
    திருவரங்குளம்:

    தமிழகத்தில் தஞ்சை- மதுரை, சென்னை-சேலம், கரூர்-கோவை உள்ளிட்ட 9 பசுமை வழிச்சாலை திட் டங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற் காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்தந்த பகுதிகளில் நடந்து வருகிறது.

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால் பணியை தொடர ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இந்தநிலையில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை-மதுரை இடையேயான 200 கிலோ மீட்டர் தொலைவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணிக்காக 6 குழுக்களில் 50 பேர் இடம் பெற்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியில் உள்ள நிலங்களில் அளவீடு செய்து கற்களை ஊன்றி அதில் மஞ்சள் வர்ணத்தை பூசி வருகின்றனர். இதையறிந்ததும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலங்களின் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    திருவரங்குளம், பெரிய நாயகிபுரம், தோப்புக் கொல்லை கிராமங்களில் உள்ள விவசாயிகள் பம்பு செட் பாசனம் மூலம் வெண்டை, கத்திரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இவர்களுடைய நிலங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில், தற்போது புழக்கத்தில் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு போதுமான இடவசதி உள்ளது. அதை தவிர்த்து விட்டு வேண்டுமென்றே விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது அவர்கள் நிலத்தையும் இழந்துவிட்டால் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு நியாயமான நீதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Farmers #Opposition


    புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் இன்று திமுக மற்றும் அதிமுக போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK
    புதுக்கோட்டை:

    அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிரட்டல் விடுத்ததாக திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று விராலிமலையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் திமுகவின் போராட்டத்திற்கு எதிராக அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இரண்டு கட்சிகள் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போராட்டம் நடத்துவதற்கு இரு தரப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #DMK #ADMK
    தமிழக சுகாதார துறை அமைச்சர் கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். #VijayaBaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காரும்  மினி வேனும் மோதி விபத்து ஏற்பட்டது.
    இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
     
    அந்த சமயத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு காரில் சென்றார். அவர் கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டார்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்சை வரவழைத்து தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன், அவர்களை ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.
    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி நிதியில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்விக் அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    புதுக்கோட்டை அருகே மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரை சேர்ந்தவர் சேகர் (வயது 50), விவசாயி. இவருக்கு மணிகண்டன், அருண் (27) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இதில் அருண் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு திரிந்துள்ளார். தந்தை சேகரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பல முறை கண்டித்த சேகர் குடிப்பழக்கத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி வந்தார். ஆனால் அருண் அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருண் தந்தை சேகரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேகர் பணம் இல்லை என கூறி திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண் அருகில் கிடந்த அரிவாளால் தந்தை என்றும் பாராமல் சேகரை பலமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிசிக்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேகரின் மூத்த மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீசார், தந்தையை வெட்டிக்கொன்ற அருணை கைது செய்தனர். தொடந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    புதுக்கோட்டை பஸ் நிலையம் எதிரே குடிபோதையில் சாக்கடையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே சாந்த நாதபுரம் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பாரும் உள்ளதால் மது அருந்தும் குடிமகன்கள் பலர் அங்கிருந்து செல்ல முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பது வழக்கமான ஒன்று.

    இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதை அதிகமானதால் அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் பக்கம் சென்ற அவர் அதில் தவறி விழுந்துள்ளார்.

    இதனை யாரும் கவனிக்காததால் சிறிது நேரத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மீள முடியாமல் சாக்கடைக்குள்ளேயே பிணமானார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புதுக்கோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சாக்கடைக்குள் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். கைலி மற்றும் நீல நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்த அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. மேலும் அந்த வாலிபர் தனது மார்பில் சத்யா, கார்த்தி என்று பச்சை குத்தியிருந்தார்.

    பிணமாக மீட்கப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டையில் மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 45). இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ஜாபர் அலி, வீட்டில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததால், அது பற்றி ஜாபர் அலியின் மகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர்அலியை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    புதுக்கோட்டையில் வாகன உதிரி பாக விற்பனை நிறுவனத்தில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியை சேர்ந்தவர் மைதீன். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் கடையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து நிறுவன உரிமையாளர் மைதீனுக்கும், வடகாடு, கீரமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மோட்டார் உதிரி பாக பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை அருகே பல்வேறு பரிசுகளை வென்று மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்து வந்த ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் கிராமத்தையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்து தற்போது வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    தமிழகத்திலேயே அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். அரசின் சட்ட விதிகளின்படி நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரமிகு, பயிற்சி பெற்ற ஏராளமான காளைகள் பங்கேற்று வருகின்றன. அதே போல் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பழனியாண்டி என்பவரின் காளை பங்கேற்று பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது. குறிப்பாக விராலிமலை, ராப்பூசல், திருநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பிடிபடாமல் சைக்கிள், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் என பல பரிசுகளை பெற்றது.

    இந்த காளையை வாடி வாசலில் அவிழ்த்து விடும் போது பல வீரர்கள் தங்களால் இந்த காளை அடக்க முடியுமா? என்ற கேள்விதான் முன்னோக்கி நிற்கும். அந்த அளவிற்கு காளையின் திமில்கள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த காளைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளர் தேவையான மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காளை இறந்தது.

    உடல்நலக்குறைவால் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

    இதையடுத்து கிராமத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் திரண்டனர். மேலும் பெண்கள் சுற்றி நின்று ஒப்பாரி வைத்து அழுதனர். இதனை பார்த்தவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

    அனைவரும் மாலையுடன் வந்து இறந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். காளையின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மனித உயிர்களுக்கு இணையாக கருதப்பட்ட காளை இறந்தது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. #Jallikattu
    ×