search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ"

    குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் காங் எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். #Congress
    குழித்துறை:

    குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் இருப்பதாகவும், அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை வலியுறுத்தி இன்று காலை களியக்காவிளையை அடுத்த கோழிவிளை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோழிவிளை- மங்காடு சாலை, கணபதியான்கடவு- பொன்னப்பர் நகர் சாலை, கோளஞ்சேரி- நடைகாவு சாலை குறுகியதாக உள்ளது. இதனை விரிவுபடுத்த வேண்டும். பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து கொண்டார்.

    இவர்களுடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ஸ்டுவர்ட் உள்பட ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    காங்கிரசாரின் திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. #Congress
    செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. #Highcourt #DMK #Election

    சென்னை:

    செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன்.

    இவரது வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி வரலட்சுமி மதுசூதனன் மனுதாக்கல் செய்தார்.

     


    மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, இந்த வழக்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தார். #Highcourt #DMK #Election

    சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் இன்று திறந்து வைத்தார். #MLA #MP #HighCourt #SpecialCourt
    சென்னை:

    எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார். இந்த விழாவில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MLA #MP #HighCourt #SpecialCourt
    இந்தியாவில் எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. #MLA #AverageIncome
    கொல்கத்தா:

    இந்தியாவில் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு வருமானம் தொடர்பாக ‘தேசிய தேர்தல் கண்காணிப்பு’ மற்றும் ‘ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ ஆகியவை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. இந்த எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மொத்தம் உள்ள 4086 எம்.எல்.ஏ.க்களில் 3145 பேர் இந்த பிரமாண பத்திரங்களை வழங்கி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக, இந்த எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை அந்த அமைப்புகள் வெளியிட்டு உள்ளன.

    அதன்படி, இந்த எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக தென் பிராந்தியத்தை சேர்ந்த 711 எம்.எல்.ஏ.க்களின் சராசரி வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த 614 எம்.எல்.ஏ.க்களின் வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் இருக்கிறது.

    மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கர்நாடகாவின் 203 எம்.எல்.ஏ.க்கள் சராசரியாக ரூ.1.11 கோடி சம்பாதிக்கின்றனர். குறைந்தபட்சமாக சத்தீஷ்காரின் 63 எம்.எல்.ஏ.க்கள் ரூ.5.4 லட்சம் பெறுகிறார்கள்.

    இந்த எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 1052 (33 சதவீதம்) பேர் 5 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதியை கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.31.03 லட்சமாக உள்ளது. பட்டதாரி மற்றும் கூடுதல் தகுதியை பெற்றிருக்கும் 1997 (63 சதவீதம்) எம்.எல்.ஏ.க்கள், ரூ.20.87 லட்சம் பெறுகின்றனர்.

    வெறும் 8-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள 139 எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.89.88 லட்சம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது. #MLA #AverageIncome
    இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ பிரேமலதா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சிபிஎஸ்சி மாணவி 12 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மிகவும் மோசமான இந்த நிகழ்வு குறித்து பலதரப்பட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அரியானா மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி அளித்தனர். அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சில பா.ஜ.க.வினர் பேசும் கருத்துக்கள் சர்ச்சைக்கு பெயர் போனவை என்றாலும், பெண் வன்கொடுமை குறித்து ஒரு பெண் எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்து தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. #Rewari #RewariRapeCase #BJP #MLAPremlata
    குஜராத் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஷாம்ஜி சவுகான் மற்றும் முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகிய இருவரும் இன்று காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். #Gujarat #BJP #Congress
    அகமதாபாத்:

    குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநில தலைவர் அமித் சத்வா, மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராஜிவ் சடவ் ஆகியோர் முன்னிலையில், பாஜக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஷாம்ஜி சவுகான், மற்றும் முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசியபோது, மத்தியில் ஆளும் மோடி அரசு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், பாஜக அரசின் இந்த அநீதியை எதிர்த்து போராடவே தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது பாஜகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gujarat #BJP #Congress
    இந்தியாவில் வாழும் வங்காள தேசம், ரோஹிங்கியா அகதிகள் தாமாக நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், சுட்டு கொலை செய்யவேண்டும் என தெலுங்கு தேச பா.ஜ.க எம்.பி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh
    ஐதராபாத்:

    அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து சுமார் 40 லட்சம் இந்தியர்கள் விடுபட்டுபோனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இதற்கான கண்டனம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தெலுங்கானா மாநில  பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், தனது கருத்தை சமூக வலைதளங்களில் காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் அத்துமீறி குடியேறிய வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியாவைச் சேர்ந்த அகதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் எனவும், அவ்வாறு அவர்கள் வெளியேறாவிட்டால் சுட்டுக் கொலை செய்வது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.

    மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவினை சிதைக்க சதி செய்வதாகவும், அவர்களை வெளியேற்றுவதே அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனது மற்றொரு பதிவில், இந்தியாவில் சட்டவிரோதமாக வாழும் அனைத்து முஸ்லிம்களும் அவர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் அவர்கள் போக மறுத்தால், துப்பாக்கி முனையில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் இந்த சர்ச்சை கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #AssamNRC #RajaSinghLodh
    பள்ளியில் புதிய வகுப்பறையை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனத்தின் நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறைகள் ரூ.22 லட்சம் மதிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

    இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தெய்வநாயகம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர். செந்தில்ராஜன், டி.எஸ்.ஆர். ராஜ்கிரண், ஜீவா ரவி, பொன்.சேர்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மேட்டூர் ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்டப்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கருங்கல்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
    ராஜபாளையம் அருகே உள்ள களங்கா பேரிபுதூரில் குடிநீர் குழாயில் சரி செய்ய ஏற்பாடு செய்த எம்எல்ஏவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள களங்கா பேரிபுதூரில் மாதம் நடைபெற்ற நெடுஞ்சாலை பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

    அதனை அடுத்து நேற்று சாலைமறியலில் ஈடுபட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.இது குறித்து தகவல் கிடைத்தவுடன் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் களங்கா பேரிபுதூருக்கு நேரில் சென்று அந்த ஊர் மக்களை சமாதானப்படுத்தி சாலைமறியலை கைவிடச் செய்தார்.

    மேலும் மறுநிமிடமே ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமியை போன்மூலம் தொடர்பு கொண்டு அவரையும் அங்கு வரவழைத்து மக்களுடன் மக்களாக அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். #tamilnews
    ஜெயங்கொண்டத்தில் ரூ.72 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். #Bridge

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கழுவந் தோண்டி, தேவாமங்கலம் பெரிய வளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த பாலத்தை அப்பகுதி பொது மக்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் இடிந்த பாலத்தை சீரமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய பாலம் கட்டும் பணி தற்பொழுது 71.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மூன்று கிராமங்களை இணைக்கும்வகையிலும் தார் சாலைகளும் அமைக்கப்படுகிறது. பாலம் கட்டும் பணி விரைவாக நடக்கின்றதா? உறுதியான முறையில் பாலம் கட்டப்படுகிறதா? என்பதை எம்எல்ஏ. ராமஜெயலிங்கம் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணியினை விரைவாகவும், பாலத்தினை உறுதியாகவும் இருக்க வேண்டும் எனவும், மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பாலம் கட்டும் பணியை முடித்து விட வேண்டும் என அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பொதுப் பணித்துறை பொறியாளர் விஜயன் மற்றும் ஒப்பந்தகாரர் மற்றும் நகர செயலாளர் செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் மாவட்ட அம்மா பேரவை மனோகரன், அண்ணா தொழிற் சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயசங்கர் முன்னாள் கவுன்சிலர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் ஜமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கனடா நாட்டுக்கு சென்ற ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். #Canada #AamAadmiParty
    ஒட்டாவா:

    ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தர் சிங் சந்த்வான், அமர்ஜித் சிங் சண்டோ ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் சொந்த காரணங்களுக்காக கனடா சென்றுள்ளனர். அப்போது, டொரோண்டோ விமான நிலையத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், கனடா வந்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகளின் கேள்விக்கு குல்தர் சிங் மற்றும் அமர்ஜித் சிங் முறையாக பதிலளிக்காததால், கனடாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, விமானம் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தியை கனடாவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார்.

    திருப்பி அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்களில் அமர்ஜித் சிங் மீது பாலியல் புகார் நிலுவையில் இருப்பதால், அதன் காரணமாக கனட சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. #Canada #AamAadmiParty
    தனது மகளின் திருமண அழைப்பிதழில் படித்தவுடன் புதைத்துவிடுங்கள் என்ற வாசகத்தை அச்சிட்டுள்ள கேரள எம்.எல்.ஏ, அதற்கான காரணத்தை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ அப்துரஹ்மான். இவர் தனது மகளான ரிஷ்வானாவின் திருமணத்திற்கு  வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சடித்த்துள்ளார்.

    தங்க நிறத்தில், அழகான எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் மணமக்களின் பெயர், இடம், நேரம் மட்டுமன்றி, அழைப்பிதழை படித்துவுடன் புதைத்துவிடுங்கள் என அச்சிட்டுள்ளார்.

    இதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அப்துரஹ்மானின் பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது:-

    ‘திருமண அழைப்பிதழ் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான தாளில்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழை சுற்றிலும் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல தாவரங்களின் விதைகள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே தான் அழைப்பிதழை படித்த பின்பு அதனை புதைத்து விடுங்கள் என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளேன்.  

    இதனால் அழைப்பிதழில் ஒட்டுப்பட்டுள்ள விதைகள் நாளடைவில் வளரும். சுற்றுச்சூழல் காக்கப்படும். தனது நண்பர் ஒருவர் மூலமாகத்தான் இந்த சிந்தனை எனக்கு தோன்றியது.  

    தங்களால் செடிகளை வளர்க்க முடியாவிட்டாலும் கூட அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கு அவர்கள் வழங்கலாம். விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து தோட்டமாக மாறும்போது மக்கள் தன் மகளின் இனிய திருமணத்தை நினைவுகூர்ந்து கொள்வார்கள்’ என எம்.எல்.ஏ புன்னகையுடன் கூறினார்.

    தனது மகளின் திருமண அழைப்பிதழில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுடன் கேரள எம்.எல்.ஏ அப்துரஹ்மானின் இந்த திட்டம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. #Kerala
    ×