search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு"

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் 2 சோதனை சாவடிகள் உள்ளன.

    வன சோதனை சாவடியும் அருகேயே வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியும் உள்ளது.

    இன்று காலை 6 மணியளவில் ஈரோட்டிலிருந்து 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.

    அவர்கள் பண்ணாரி வன சோதனை சாவடி அருகே உள்ள வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடிக்குள் புகுந்தனர். உள்ளே நுழைந்து கேட்டை அடைத்து கொண்டனர். உள்ளே இருந்த ஊழியர்களை வெளியே விடவில்லை. அவர்களிடம் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    நாள் ஒன்றுக்கு இந்த வழியாக எத்தனை வாகனங்கள் செல்கிறது? சரக்கு லாரிகள் எத்தனை செல்கிறது? அவர்களிடம் எந்த முறையில் சோதனை மேற்கொள்கிறீர்கள்? என்று கிடுக்கி பிடி கேள்விகள் கேட்டனர்.

    மேலும் சோதனை சாவடியில் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்தை அங்கு உள்ள மேஜையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்து எண்ணினர். இதில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது. “சோதனை நடத்தி கொண்டிருக்கிறோம். பிறகு சொல்கிறோம்” என்று கூறினர்.

    பண்ணாரி வாகன போக்குவரத்து சோதனை சாவடியில் இன்று காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 13 லட்சம் லாரிகள் ஓடாத நிலை ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. போராட்டக்காரர்களை அழைத்து பேச வேண்டும்.


    அவர்கள் கோரிக்கையை கேட்டு தீர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நன்மை தரவில்லை. தற்போது சட்ட ரீதியாக காவிரி மேலாண்மை வாரியம் என்கிற ஒரு வடிவம் கிடைத்துள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் ஒரு கோட்பாட்டை தந்துள்ளது. காவிரி நதி நீரை பயன்படுத்தும் 4 மாநிலங்களும் அந்த கோட்பாட்டை சரியாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் கர்நாடக அரசு ஆணைய உறுப்பினரை இன்னும் நியமிக்கவில்லை.

    மீண்டும் கர்நாடக அரசின் சட்டத்துக்கு சவால்விடும் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. மத்திய அரசு இதை வேடிக்கை பார்க்காமல் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    பசுமை வழிச்சாலை அமைப்பில் உள்ள உடனடி பாதகங்கள் என்ன? என்பதை மக்களுக்கு புரிய வைத்து மக்கள் விரும்பினால் மட்டுமே அமைக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு அநீதியான திட்டங்கள் திணிக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும். வாக்களித்த மக்களை அலட்சியப்படுத்த எந்த உரிமையும் அரசுக்கு கிடையாது.

    இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
    கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60).

    இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார்.

    தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் கணவனும், மனைவியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டனர். இதையொட்டி அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் பருவாச்சியில் உள்ள கொல்லப்பட்டறைக்கு சென்றனர். பட்டறை மாடிக்கு சென்ற அவர்கள் தாங்கள் வாங்கி வந்த வி‌ஷத்தை குடித்தனர்.

    முன்னதாக கோவிந்த ராஜ் தனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர், ‘‘நான் உயிரோடு இருக்கமாட்டேன். நானும் என் மனைவியும் வி‌ஷம் குடித்துவிட்டோம்’’ என்று கூறினார்.

    அண்ணன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பட்டறைக்கு வந்து பார்த்தார்.

    பட்டறையின் மாடிக்கு சென்று பார்த்தபோது இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டார்.

    உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.

    நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரது மனைவி மாதேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று அதிகாலை 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    மழை காலமாக இருப்பதால் மலைப்பாங்கான இடங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள், பொருட்சேதத்தை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் கூறினார்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பட்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ் எஸ். சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். த.மா.க வின் மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், துணை தலைவர் ஆறுமுகம் பொது குழு உறுப்பினர் எஸ்.பி.சந்திரசேகர் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    தற்போது மழை காலமாக இருப்பதால் மலைப்பாங்கான இடங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் மற்றும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும். 27 மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் காவிரி குடி நீர் ஆதாரம் டெல்டா பகுதிகளுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டும் கர்நாடக அரசு ஏன் இன்னும் உறுப்பினர்களை நியமனம் செய்யவில்லை? இது விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையாகும் தமிழக அரசு வலுவான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.

    நீதி மன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசு மீது மத்திய அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் சத்தியமங்கலத்தில் இருந்து அம்மாபேட்டை வரையிலும் பவானியில் இருந்து தொப்பூர் வரையிலும் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேன்டும்

    ஒரே கோப்பில் கையெழுத்து போட்டு மதுவை ஒழிக்க முடியாது படிப்படியாக குறைக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் டாஸ்மார்க் விசயத்தில் அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

    மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நோக்கமாகும். அதற்காக ஒரு கோடி கையெழுத்து பெற்று கவர்னரிடம் கொடுத்த கட்சி த.மா.க மட்டுமே. த.மா.க.தனித்துவம் வாய்ந்தது. தனித்தே செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan
    ஈரோடு மூலப்பாளையத்தில் நடந்துசென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஓ. காலனி வீதியில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 2 பவுன் செயினை திடீரென பறித்து கொண்டு மின்னலாய் மறைந்தான்.

    அந்த பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த ஆசாமி மாயமாகிவிட்டான். அவனுக்கு 20 வயதிலிருந்து 25 வயதுதான் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சம்பவம் நடந்த இடம் அருகே ரோட்டோரம் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. அந்த கடையின் வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் வழிப்பறி ஆசாமியின் உருவம் பதிவாகி இருக்கும் அதை பார்த்து குற்றவாளியை பிடித்து விடலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சி தானந்தம் தலைமை தாங்குகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வருகின்ற தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.

    இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணை தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, வடக்கு மாவட்ட துணை தலைவர் எ.சே துவெங்கட்ராமன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் மோகன்கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த தகவலை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தெரிவித்து உள்ளார். #Tamilnews

    அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க எனவும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேளுங்கள் என்றும் ஈரோட்டில் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    நம்பியூர்:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நம்பியூர் அடுத்த திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜையிலும் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இந்த 2 நிகழ்ச்சியின் போதும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் தனது கல்விதுறை சம்பந்தமானவற்றையே கூறினார்.

    பேட்டியின்போது அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூற மறுத்தார்.

    “அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க... அதற்கென்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார். அவரிடம் அரசியல் கேள்விகளை கேளுங்க...” என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய- மாநில அரசுகள் துணையுடன் நம்பியூர் அருகே  உள்ள கொளப்பலூரில் டெக்ஸ்டைல் பார்க் என சொல்லக் கூடிய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

    இங்கு 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.

    மத்திய அரசு கொண்டு வரும் எந்தபொது தேர்வு ஆனாலும் அதை தமிழக மாணவர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய அளவில் தற்போதைய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் சரளமாக பேச, லண்டன், ஜெர்மனி நாடுகளில் இருந்து 600 சிறப்பு ஆசிரியர்கள் தமிழகம் வந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு 6  வார காலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிகள் யாவும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக ஈரோடு கனிம வள கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட கனிம தனி வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அதிகாரி குரு மூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஈரோடு கனிராவுத்தர்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் தடுத்து சோதனையிட்டனர். அப்போது அந்த லாரி எடப்பாடி அருகே உள்ள சேவூரில் இருந்து வருவது தெரியவந்தது.

    அந்த லாரியில் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது. ஆனால் அந்த மணலை கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் டிரைவரிடம் இல்லை. எனவே மணலுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த லாரி ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ஆர்.டி.ஓ. இது தொடர்பாக விசாரணை நடத்தி அபராதம் விதிப்பார் என்று தெரிகிறது.

    நீதிமன்ற உத்தரவுபடி ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமான விவசாய நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈமு கோழி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் நிதி திரட்டியது.

    இதனை நம்பிய ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்து பங்குதாரர்களாக சேர்ந்தனர்.

    அந்த டெபாசிட் முதிர்வு அடைந்ததும் நிறுவனத்தை அணுகியபோது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத்தொகை திருப்பித் கொடுக்கப்படாமல் இழுக்கப்பட்டது.

    இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் நிறுவனங்களை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். இது குறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    ஈமு கோழி நிறுவன சொத்துக்களை முடக்கி அந்த தொகையை இழப்பீடாக பங்குதாரர்கள் பிரித்து கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தாளவாடி அடுத்த திகினாரையில் ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமான 13.5 ஏக்கர் நிலத்தை பக்கத்து தோட்டத்துக்காரருக்கு ஈமு கோழி நிறுவனம் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து தாளவாடி வருவாய் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி, நில வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அவர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அதில் இந்த இடம் ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமானது. யாரும் இதை வாங்கவோ விற்கவோ கூடாது. அதையும் மீறிவாங்கினால் செல்லாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. #Tamilnews

    கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    இந்த சந்திப்புக்கு பிறகு காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கமல்ஹாசன் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

    காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லி விட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதே போல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சனைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சனையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

    எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews
    ஈரோட்டில் மூடப்பட்ட 19 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
    ஈரோடு:

    தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், முறையான அறிவிப்பு வெளியிடாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 49 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் 125 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு மாநகர் பகுதியில் 19 இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, ஈரோடு பிரகாசம் வீதி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் வீரபத்திரா வீதி, நாராயணவலசு விவேகானந்தர்சாலை, பஸ் நிலையம் அருகில் சேலம் மெயின்ரோடு, ஈரோடு மேட்டூர்ரோடு அபிராமி திரையரங்கம் ரோட்டில் 2 கடைகள், மூலப்பட்டறை வ.உ.சி. பூங்கா எதிரில், திண்டல், சம்பத்நகர், நேதாஜிரோடு, சம்பத்நகர் அண்ணா திரையரங்கம் ரோடு, ஈரோடு பெருந்துறை ரோடு, பவானி ரோடு, வீரப்பம்பாளையம், ஈரோடு பஸ் நிலையம், அகில்மேடு வீதி, சூளை சத்திரோடு, மரப்பாலம் நேதாஜி ரோடு, வில்லரசம்பட்டி நசியனூர் ரோடு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. 
    ×