search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111885"

    • இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமாகும்.
    • அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமாகும்.

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசித்தி பெற்ற கோவில்களான வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மது சூதனப்பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ஆகிய கோவில்களில் லட்சார்ச்சனை வழிபாடு நடக்கிறது. இந்த லட்சார்ச்சனை பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கொள்ளலாம். ரூ.200 செலுத்தினால் பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வதுடன், நெய்வேத்திய பிரசாதமாக எவர் சில்வர் பாத்திரத்தில் லட்டு, பழம், வெற்றிலை, பாக்கு, சிறப்பு பிரசாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.

    வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்குதல், கோ பூஜை போன்றவை நடக்கிறது. காலை 10.45 மணி முதல் மதியம் 3 மணி வரை அன்னதானமும், மாலையில் புஷ்பாபிஷேகமும், இரவு அலங்கார தீபாராதனையுடன் கருட சேவையும் நடைபெறும்.

    பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உச்ச தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை, 1 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு கருடசேவை போன்றவை நடக்கிறது.

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் காலை அபிஷேகம், சிறப்புஅன்னதானம், சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு கருட சேவையும், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு அஷ்டாபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.

    இதுபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆசிராமம் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கோவில், தக்கலை பெருமாள் கோவில், தக்கலை பார்த்த சாரதி கோவில், தோவாளை பாலகிருஷ்ண சாமிகோவில், வடசேரி பாலகிருஷ்ணன் கோவில், சுசீந்திரம் இரட்டை தெரு குலசேகர பெருமாள் கோவில், கோட்டார் வாகையடி பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    • சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானதற்கு ஒரு கதை உள்ளது.
    • சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள்.

    புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார். அதிலும், ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.

    சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர் சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விடுவது போல கூறினார்.

    அதைக் கேட்ட சனி பகவான், எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே நாம் செய்வது போலவே! சனி பகவானும் என்னை யார் என்ன செய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைத்தார்.கால் வைத்ததும் அடுத்த நொடி சனி பகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார்.

    திருமலையில் யார் இருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்.

    கோபம் கொண்ட பெருமாள் சனிபகவானிடம் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று கூறினார்.

    பிறகு சனிபகவான் பெருமாளிடம், மகாபிரபு! எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று கேட்டார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும்! என்ற வரத்தை கேட்டார்.

    பெருமாளும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார். அதனால் தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.

    சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனிக்கிழமை. சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக ஆனது.

    • புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம்.
    • பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    நாளை புரட்டாசி 4-வது சனிக்கிழமை. அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1-வது,5-வது சனிக்கிழமையில் போடுவாங்க. ஆனால் இந்த வருடம் 4 புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட்டுமே வருகிறது. அதனால் கடைசி சனிக்கிழமையான நாளை விரதம் இருந்து பெருமாளுக்கு தளியல் போடுவது சிறப்பானதாகும். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

    ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

    கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

    • மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது.
    • நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் சித்திக்கும்.

    சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி. திருமணமாகாத பெண்கள், இந்தப் புரட்டாசி மாத நாட்களில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து கல்யாண வரம் பெறுவார்கள் என்பது உறுதி.

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து, பூஜை அறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, பூ வைத்து, பெருமாளின் திருஉருவத்துக்குப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து மாவெடுத்து, அத்துடன் வெல்லம் கலந்துப் பிடித்துவைக்க வேண்டும். இதில் திரி-நெய் இட்டு விளக்கேற்றி, மலர், துளசி, அட்சதை கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரின் திருநாமங்களை மனதாரச் சொல்லி வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் அந்த இடத்தில் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.

    ஆண்டின் எல்லா நாட்களிலும் திருப்பதியில் இப்படி ஒரு வழிபாட்டினை, பல பெண்கள் கோவிலின் பல இடங்களில் செய்வதைப் பார்க்கலாம். திருமண வரம் பெற இது அற்புதமான வழிபாடு என்று பெரியோர்கள் கூறுவார்கள். புரட்டாசி மாதத்தில் காலை நேரத்தில், வீடுகளில் திருவிளக்கு மாவு கொண்டு பெருமாளை வழிபட்டுவிட்டு, மாலையில் கோவிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புரட்டாசி சனிக் கிழமைகளில், நரசிம்மர் திருவீதி உலா நடை பெறுவது விசேஷம். அவ்வேளையில் மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமன்றி, எல்லா சனிக்கிழமைகளிலும் வெல்லம் கலந்த அரிசி மாவில் நெய்விளக்கிட்டு, நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் சித்திக்கும், வளங்கள் பெருகும்.

    • புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவது உயர்ந்த பலன்களைப் பெற்றுத் தரும்.
    • அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம் மரபு.

    புரட்டாசி என்றதுமே நம் நினைவுக்கு வருவது விஷ்ணு பகவானுக்கான ஆராதனைதான். சூரியன், எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம் மரபு. ஒவ்வொரு ராசிக்கும் - மாதத்துக்கும் உரிய அதிதேவதையை - தெய்வங்களை நமது சமயம் சுட்டி காட்டுகிறது.

    குறிப்பிட்ட அந்த தேவதையை முறைப்படி வழிபடுவதால், நம் வாழ்வுக்கு தேவையான வளங்களையும் மோட்சம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த பலனையும் ஒரு சேர அடையலாம்.

    அந்த வகையில், புத்திக்கு அதிபதியான புதன் பகவானின் மிதுனம், கன்னி எனும் இரு வீடுகளில், புதன் உச்சம் அடைந்து இருக்கும் கன்னி ராசியில், சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் அதிதேவதையான மகாவிஷ்ணுவை வழிபடுவது உயர்ந்த பலன்களைப் பெற்றுத் தரும்.

    • புரட்டாசி மாதத்தில் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
    • அரங்கன் ஆண்டாளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.

    அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?

    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.

    இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உற்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.

    அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    • இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.
    • துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப்படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

    துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    • பூஜைக்கு வந்துதவிய அனைவருக்கும் விருந்தளிப்பது நல்லது.
    • வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

    புரட்டாசி மாதம் சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர்.

    இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அனைவருக்கும் விருந்தளிப்பது நல்லது.

    அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

    • பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.
    • வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    • இப்பூஜையை தம்பதிகளாக செய்வது நல்லது.
    • அசூன்ய சயன விரத நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அசூன்ய சயன விரதம் மேற்கொள்ள வேண்டிய தினமாகும். 'அசூன்யம்' என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். 'சயனம்' என்றால் படுக்கையில் படுத்தல்.

    இந்த விரதம் கடைப்பிடிப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும் கிடைக்கும். அசூன்ய சயன விரத நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை சாலச் சிறந்தது. இன்று மாலை பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணர்-ராதை அல்லது மகாவிஷ்ணு- மகாலட்சுமி படத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

    இப்பூஜையை தம்பதிகளாக செய்வது நல்லது. ரங்கநாத அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்குமப்பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

    புதிதாக வாங்கப்பட்ட பஞ்சு மெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில், கிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் தகுதி உடையோருக்குப் போர்வையுடன் கூடிய படுக்கை தானம் செய்ய வேண்டும். இதனால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

    • பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா நடந்தது
    • அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு வரதராஜ கம்பபெருமாள் கோவிலில் திருவீதி உலா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருக்கல்யாணம் நடந்தது.
    • மாப்பிள்ளை வீட்டாராக அர்ச்சகர் சீத்தாராமன் என்ற ஸ்ரீபதியும், பெண்வீட்டாராக அர்ச்சகர்கள் கிருஷ்ணஹரி என்ற பரதன், ரகுராமனும் செயல்பட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவ விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    3-ம் சனிக்கிழமை நாளில் சீனிவாசபெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவியர்களின் திருக்கல்யாண உற்சவம், பஜனை மண்டபத்தில் நடந்தது. இதில் மாப்பிள்ளை வீட்டாராக அர்ச்சகர் சீத்தாராமன் என்ற ஸ்ரீபதியும், பெண்வீட்டாராக அர்ச்சகர்கள் கிருஷ்ணஹரி என்ற பரதன், ரகுராமனும் செயல்பட்டனர். மாலை மாற்றுதல் நிகழ்ச்சியுடன் ஸ்ரீதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கபட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. அலங்கரிக்கபட்ட ஊஞ்சலில் சீனிவாசபெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவியார்கள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    பக்தர்களுக்கு, பூ, துளசி, மஞ்சள், குங்குமம் மாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதா, பணியாளர்கள் முரளிதரன், விக்னேஷ் ஆகிேயார் செய்திருந்தனர்.

    ×