search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராய்"

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI



    இந்திய டெலிகாம் சந்தையில் பிப்ரவரி 2019 மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 29.72 கோடியாக இருந்தது. இது ஜனவரியில் இருந்ததை விட 77.93 லட்சம் அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 8.99 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.62 கோடியாக இருக்கிறது.



    சமீபத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 118.36 கோடியாக இருக்கிறது. பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா பயனர் எண்ணிக்கை தற்சமயம் 40.93 கோடியாகும்.

    இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனமும் 49,896 வாடிக்கையாளர்களை இழந்து, பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 34.03 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இணைந்திருக்கின்றனர். #RelianceJio



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியா முழுக்க வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக இருக்கிறது.

    டிசம்பர் 2018 வரை வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 117.6 கோடியில் இருந்து ஜனவரி 2019 இல் 118.19 கோடியாக அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்தில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 0.51 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருப்பதாக டிராய் தெரிவித்திருக்கிறது.



    மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் 102.25 கோடி பேர் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதாக டிராய் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஜனவரியில் 9.83 லட்சம் புதிய இணைப்புகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.53 கோடியாக அதிகரித்துள்ளது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.03 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜனவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.04 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவன சேவையை 41.52 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக டிராய் அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்திருக்கிறது. மற்ற முன்னணி நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதே காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.

    ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 85.6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 

    ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. மற்றும் எல்.டி.இ. என மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பர் மாத இறுதியில் 117.17 கோடியில் இருந்து டிசம்பர் மாத இறுதியில் 117.6  கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 0.36 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.87 கோடியாக இருக்கிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.03 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

    பகுதிவாரியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாடு முழுக்க தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக டிராய் அறிவித்திருக்கிறது. வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தது. டிசம்பர் 2018 இல் மட்டும் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் என டிராய் தெரிவித்துள்ளது.
    விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டிவி சேவை, திட்டமிட்டபடி நாளை அமலுக்கு வருகிறது. டிடிஹெச்சில் நீண்ட கால சேவைக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்கள் நிலை குறித்து டிராய் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.#TRAI #Channel
    புதுடெல்லி:

    டி.டி.ஹெச். சேவையிலும், கேபிள் டி.வி. சேவையிலும் நாம் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து, அதற்கு மட்டும் பணம் செலுத்தும் புதிய முறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்தது.

    கடந்த மாத இறுதியிலேயே இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், பார்வையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இத்திட்டம் பிப்ரவரி 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த புதிய நடைமுறை, நாளை (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி அமலுக்கு வருகிறது. இத்தகவலை ‘டிராய்’ அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா நேற்று தெரிவித்தார்.

    டி.டி.ஹெச். நிறுவனங்களில் 6 மாதம், ஒரு வருடம் என நீண்ட கால ‘பேக்’குகள் உள்ளன. அவற்றுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களின் நிலை என்ன ஆகும் என்பது பற்றியும் ஆர்.எஸ்.சர்மா விளக்கம் அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    புதிய நடைமுறை, திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ந் தேதி அமலுக்கு வரும். அதில் மாற்றம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு எவ்வித அசவுகரியமும் இல்லாமல், சுமுகமாக இந்த நடைமுறை மாற்றம் நடந்தேறும் என்று நம்புகிறேன்.

    டி.டி.ஹெச். சேவையில் நீண்ட கால ‘பேக்’குகளை தேர்வு செய்து முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களுக்கு அவர்களது பணத்துக்கான உத்தரவாதத்தை டி.டி.ஹெச். நிறுவனங்கள் மதித்து நடக்க வேண்டும்.

    அவர்கள் பழைய முறையிலேயே நீடிக்க விரும்பினால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள், விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் பார்க்க விரும்பினால், அதற்குரிய பணத்தை மட்டும் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து முறையாக கழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TRAI #Channel
    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை வெளியிட்டுள்ளது. #TRAI #Channel



    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. புதிய செயலியை கொண்டு பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து, அவற்றுக்கான கட்டணத்தை அறிந்துகொள்ள முடியும்.

    டிராய் உருவாக்கி இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் ஐந்து வழிமுறைகளை கடந்து, அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும். 

    புதிய வலைதளத்தில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பும் சேனல் வகை அதன் பின் திரையில் சேனல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். 



    விரும்பிய சேனல்களை தேர்வு செய்த பின் அதற்கான கட்டணத்தில் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள், கட்டண சேனல்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம், ஜி.எஸ்.டி. வரி மற்றும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய நெட்வொர்க் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே பட்டியலிடப்பட்டிருக்கும். 

    இவற்றின் கீழ் மொத்தமாக மாதாந்திர அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இடம்பெற்றிருக்கும். புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேனல் செலக்டர் வலைதளத்தில் ஹெச்.டி. மற்றும் எஸ்.டி. சேனல்களை, சேனல் வகைகள், ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் மொழி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம்.

    புதிய விதிமுறைகளின் படி இலவச சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ மொத்த வருவாய் ரூ.831 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன் படி இந்த காலாண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது.

    முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12.4 சதவிகிதம் அதிகம். வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும். இது காலாண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் சேவை வருவாய் மட்டும் 12.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,252 கோடி ஈட்டியிருக்கிறது. டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டு வரை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.23 கோடியாக இருந்தது.



    - ரிலையன்ஸ் ஜியோ ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் - மாதம் ரூ.130

    - ஜியோ வாடிக்கையாளர்களின் மொத்த வயர்லெஸ் டேட்டா - 864 கோடி ஜி.பி.

    - ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் பயன்பாடு - தினமும் 63,406 கோடி நிமிடங்கள், மாதம் ஒரு வாடிக்கையாளர் 794 நிமிடங்கள்

    - ஜியோ வாடிக்கையாளர்களின் வீடியோ பயன்பாடு - மாதம் 460 கோடி மணி நேரம்

    - ஜியோ வாடிக்கையாளர்களின் மாதாந்திர டேட்டா பயன்பாடு - 10.8 ஜி.பி. சராசரி

    ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுக்க சுமார் 1400 நகரங்களில் இருந்து ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.

    புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.

    டிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.



    புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். 

    இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர் விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள் 999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
    கால் டிராப் விவகாரம் தொடர்பாக டெலிகாம் நிறுவனங்கள் ரூ.56 லட்சம் அபராதம் செலுத்த மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கால் டிராப் பிரச்சனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட கால் டிராப் அளவுகளை ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் கடந்துவிட்டன.

    அந்த வகையில் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் அபராதமாக செலுத்த டிராய் இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று சேவை தரத்தை மேம்படுத்தாத காரணத்தால் டெலினார் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது. 

    அக்டோபர் 1, 2017 முதல் அமலாக்கப்பட்ட டிராய் விதிமுறை கடுமையாக்கப்பட்டு வருவதன் காரணமாக டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கால் டிராப் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. என டெலிகாம் மந்திரி மனோஜ் சின்கா தெரிவித்தார்.

    ஜூலை 2015 முதல் டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கூடுதாலக 9.74 லட்சம் மொபைல் சைட்களை 2ஜி, 3ஜி, 4ஜி எல்.டி.இ. சைட்களை நிறுவியிருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 20.07 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
    ஐபோன் மாடல்களில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் செயலியை அனுமதிக்க ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. #Apple #TRAI



    டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

    ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

    அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. 

    எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

    ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது. #Apple #TRAI
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. #TRAI



    இந்தியாவில் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் போதுமான பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றாலும் அவர்களது இணைப்பினை துண்டிக்கக்கூடாது என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் போதிய பேலன்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகள் துண்டிக்கப்படும் என குறுந்தகவல் அனுப்பி வந்தன. இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகமாக அனுப்பப்பட்டன.

    குற்றச்சாட்டுகளில், பல வாடிக்கையாளர்கள் தாங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருந்தாலும், டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவு குறுந்தகவல்களை அனுப்பி ரீசார்ஜ் செய்யக் கோருவதாக தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் டிராய் புதிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.



    அதன்படி டெலிகாம் நிறுவனங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகளை துண்டிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. 

    இதேபோன்று வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் வைத்திருக்கும் சரியான பேலென்ஸ் தொகை, அதன் சரியான வேலிடிட்டி தேதி உள்ளிட்டவற்றை தெளிவாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இதனுடன் குறுந்தபட்ச ரீசார்ஜ் தொகையை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அனைத்து விவரங்களும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் 72 மணி நேரத்திற்குள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை தங்களது பிரீபெயிட் அக்கவுன்ட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்றும் டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவிலேயே முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. #Jio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ கே.கே.டி.ஐ. நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் கே.கே.டி.ஐ. நிறுவனம் தனது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் வோல்ட்இ சேவையை வழங்கும் முதல் ஜப்பான் நிறுவனமாக இருக்கிறது.

    இதன் மூலம் வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையை வழங்கும் உலகின் நான்கு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜியோ சேவையை பல்வேறு நாடுகளுக்கும் வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக புதிய சேவையை வழங்கி இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. 

    வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் மூலம் சர்வதேச பயணர்கள் ஜியோவின் உலகத்தரம் வாய்ந்த அனைத்து IP நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என தெரிவித்துள்ளது.



    கடந்த 20 மாதங்களாக ஜியோவின் அதிவேக நெட்வொர்க் என்றும், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.06 எம்.பி. ஆக இருக்கிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோவின் டவுன்லோடு வேகம் ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்திய பயனர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்லும் அனைத்து பயனர்களுக்கும் அதிவேக டேட்டா மற்றும் வாய்ஸ் அனுபவத்தை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கே.கே.டி.ஐ. வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க்கிற்கு வரவேற்கிறோம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் முதலிடம் பிடித்து இருக்கிறது. #Airtel



    இந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7.53 எம்.பி. ஆக இருக்கிறது. ஏர்டெலை தொடர்ந்து மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை முறையே நொடிக்கு 5.47 எம்பி, 5.20 எம்.பி., 4.92 எம்.பி. மற்றும் 2.70 எம்.பி. வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கின்றன.

    இந்த தகவல் ஓபன் சிக்னல் எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்டு 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் டேட்டா டவுன்லோட் வேகத்தில் 25 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதன் சராசரி டேட்டா வேகம் நொடிக்கு 9.96 எம்.பி. ஆக பதிவாகி இருக்கிறது. 

    இதேபோன்று இந்தியா முழுக்க 16 டெலிகாம் வட்டாரங்களில் ஏர்டெல் அதிவேக டேட்டா வழங்கி இருக்கிறது. 4ஜி டேட்டா அப்லோடு வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. ஐடியா 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 3.93 எம்.பி. அப்லோடு வேகம் வழங்கி இருக்கிறது.

    ஐடியா நிறுவனம் பஞ்சாப், டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட வட்டாரங்களில் அதிவேக அப்லோட் வேகம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அப்லோட் வேகத்தை பொறுத்த வரை எந்த நிறுவனமும் 4 எம்.பி. வேகத்தை எட்டவில்லை.
    ×