search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னமராவதி"

    பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence

    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதை கண்டித்தும் அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பு குடிப்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்துநடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உறுதி அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பிறகு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர்.

    பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கைது நடவடிக்கை மேற்கொள்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிரவில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்த 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

     


    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறைப்பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை, நமண சமுத்திரம் உள்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி, ஐ.ஜி.வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லட்சுமி (திருச்சி), லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்ட எஸ்.பி.க்கள் செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ், 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

    அதில், ஏப்ரல்19-ந்தேதி முதல் 21-ந்தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்மூலம் ஒரே இடத்தில் 4பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     


    இதற்கிடையே கலவரம் தொடர்பாக பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் யாரென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு பரப்பியவர்கள் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னமராவதி பகுதியில் நேற்று பல இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி பொன்னமராவதியில் இன்று பஸ்கள் ஓடவில்லை.

    புதுக்கோட்டையிலும் பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஆலங்குடியிலும் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    144 தடை உத்தரவால் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆலங்குடி பகுதிக்கு வந்திருந்த பொது மக்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் ஆலங்குடி பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி, சிவகங்கை, திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு டவுன் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இன்று இரவுக்குள் பஸ்களை இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே நேற்றிரவு பொன்னமராவதி கட்டியா வயலில் 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். #PonnamaravathiViolence

    புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதி:

    தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ ‘வாட்ஸ்-அப்’ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

    இந்த ஆடியோ நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த அந்த சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன.

    இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேலும், கல்வீச்சில் போலீசாரின் 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச்சொல்லி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லெட்சுமி, லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கருப்புக்குடிப்பட்டியில் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரை அழைத்து கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே பொன்னமராவதி நகரை அமைதிப்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

    வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே புதுக்கோட்டையை அடுத்த கவிநாடு கண்மாய் முக்கம் அருகே குடுமியான்மலை மற்றும் இலுப்பூர் செல்லும் சாலையில் எந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த பகுதியில் நின்ற அரசு பஸ்கள் மீது கற்களை வீசினார்கள்.

    இதில் 3 அரசு பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கிடையே இன்று கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கலைந்துசென்ற நபர்கள், திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி  தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். போலீசாரின் 3 வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

    இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #PonnamaravathiViolence
     
    பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி தலைமை போஸ்ட் ஆபீஸ் முன்பு கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்தக்கோரி  கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமபுற அஞ்சல் ஊழியர்களின் 7வது  ஊதியக்குழுவை அமுல் படுத்தக்கோரி  கடந்த 22ம்தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது. 

    4வது நாளாக  பொன்னமராவதி போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத்தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஹரிராமகிருஷ்ணன், கோட்டச்செயலாளர்கள் ராமச்சந்திரன், பாண்டித்துரை ஆகியோர் போராட்டத்தை விளக்கிப்பேசினர்.

    இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    பொன்னமராவதி:

    திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் பணியாற்றும் சடையம்பட்டி அரசு  மேல் நிலைப்பள்ளி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டத்தில் வி.ஏ.ஓ.க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னமராவதியில் தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார், செயலர் ஹேமலதா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியன், கோட்டச் செயலர் விஜயா, பொருளாளர் சண்முகம் துணைத்தலைவர் சரவணன், துணைச் செயலர் ரெங்கராஜ், அமைப்புச் செயலர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காளையார் கோயில்,இளையான்குடி தாலுகாக்களில் முறைகேடுகள் நடந்ததாக வி.ஏ.ஓ க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×