search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளியங்கிரி"

    சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு மலை மீது உள்ள 7-வது மலைக்கு சென்றால் அங்கு சுயம்புலிங்கமாக வீற்றிருக்கும் கிரிமலை ஆண்டவரை தரிசனம் செய்யலாம். இங்கு அடர்ந்த வனப்பகுதி வழியாகதான் செல்ல வேண்டும். அத்துடன் அடிக்கடி காலநிலை மாற்றமும் ஏற்படும்.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பிப்ரவரி மாத கடைசியில் இருந்து மே மாதம் வரை மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அத்துடன் சித்ரா பவுர்ணமி விழாவில் மலை மீது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது உண்டு.

    அதன்படி சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று காலை 6 மணிக்கு, கோவில் அடிவாரத்தில் உள்ள மனோன்மணி அம்பாள் சமேத வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்த பின்னர் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏற தொடங்கினார்கள். மலைமீது பிளாஸ்டிக் பொருட் கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் கொண்டு சென்ற பைகளை மலையடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை செய்தனர்.

    சோதனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூங்கில் கம்பு உதவியுடன் மலையேறினார்கள். அவர்கள் 6-வது மலையில் உள்ள ஆண்டி சுனையில் நீராடி விட்டு 7-வது மலையில் சுயம்புவாக வீற்றிருந்த கிரிமலை ஆண்டவரை தரிசனம் செய்தனர்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் குவிந்தனர். அங்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் மருத்துவ வசதிக்காக கோவில் அடிவாரத்தில் உள்ள அலுவலகம் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் அவசர கால உதவியாக கோவில் எதிரே 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. 
    ×