search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து"

    பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகினர். மேலும், 34 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். #CyclonePabuk #Thailand
    பாங்காங்:

    தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

    இந்நிலையில், பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டின் பத்தானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல், தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் இறந்தனர். இதன்மூலம் பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த புயலால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பத்தானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.

    புயல் தாக்கத்தை தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CyclonePabuk #Thailand
    தாய்லாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ள நிலையில், பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு விதித்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கியது. #Thailand #ElectionCommission #MilitaryGovernment
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது.

    கடந்த ஆண்டு புதிய அரசியல் சாசனத்தை ராணுவ அரசு இயற்றியது. அதன்மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்கள் புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.

    இந்த நிலையில் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ளது. அங்கு பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அந்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கி விட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கு தேர்தல் மூலம் ஜனநாயகம் மலருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால், புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்ற பின்னரும் ராணுவம் செல்வாக்குடன் திகழ முடியும். செனட் சபை நியமனங்களை ராணுவம் செய்ய முடியும். இதன் மூலம் பிரதமர் யார் என்பதை ராணுவம் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும்.

    இப்போது பிரசார தடை நீக்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வழி பிறந்துள்ளது.

    தாய்லாந்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யிங்லக் ஷினவத்ராவுக்கு முன்பாக பிரதமராக இருந்த தக்‌ஷின் ஷினவத்ராவும் அரசியல் செல்வாக்குடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் தாய்லாந்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் மலைப் பாம்புடன் விளையாடினார். #KajalAggarwal
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் மட்டுமே உள்ளது. 

    இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நடித்து முடித்துவிட்ட காஜல் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்குள்ள வனஉயிரியல் பூங்காவிற்கு சென்ற காஜல் அங்குள்ள விலங்குகளுடன் விளையாடினார். அப்போது மலைபாம்பு ஒன்றை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்ட காஜல், அந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாம்பு இருப்பதை உங்களால் உணர முடிகிறதா? என்று ஒருவர் கேட்க, காஜல் கூறியதாவது,

    `ஆமாம் என்னால் உணர முடிகிறது. இந்த உணர்வு அற்புதமாக இருக்கிறது. பாம்பின் தசைகள் அசைவதை என்னால் தெளிவாக உணர முடிகிறது. பாம்பின் மெல்லிய சத்தமும் எனக்கு கேட்கிறது. இது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்'. என்று கூறினார். #KajalAggarwal

    புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #puducherryAirport

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் விமான நிறுவனங்களுக்கு 50 சதவீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    புதுவையில் தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கியது. புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கும், புதுவையில் இருந்து பெங்களூருக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 விமானங்களும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பெங்களூருவுக்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விமான சேவையை விரிவு படுத்தும் வகையில் புதுவையில் இருந்து சென்னை, சேலம், கோவை, கொச்சின் நகரங்களுக்கு விமான சேவை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக சென்னை, சேலம் நகரங்களுக்கு கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் விமானங்களை இயக்க ஏர் ஒடிசா நிறுவனம் அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது. ஆனால், திடீரென இந்த விமான சேவை கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் ஐதராபாத்துக்கு செல்லும் விமான சேவையை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவை விமான நிலையத்தின் ஓடு தளம் விஸ்தாரமாக இல்லாததால் நேரடியாக வெளி நாடுகளுக்கு விமானத்தை இயக்க முடியாது.


    இதனால் புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.

    இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி உள்ளது. காலை 11.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் ஐதராபாத் விமானம் அங்கு பேங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பேங்காங் சென்று அடையும்.

    அதே போல் இரவு 10.40 மணிக்கு பேங்காங்கில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து, அங்கிருந்து மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுவை வந்தடையும். உணவில்லா பயணத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500-ம், உணவுடன் கூடிய பயணத்துக்கு ரூ.13 ஆயிரத்து 200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #PrayutChanocha #Thailand
    பாங்காக்:

    அரசுமுறை பயணமாக நேற்று தாய்லாந்து நாட்டுக்கு சென்ற இந்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி ரவுங்ரோஜனா சும்ராஸ்ரோம்ருன் அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

    அதைத்தொடர்ந்து, இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தாய்லாந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #PrayutChanocha #Thailand
    ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்தியா அணி இன்று தாய்லாந்தை எதிர் கொள்கிறது. இந்திய அணி 4-வது வெற்றியை பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. #AsianGames2018
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவையும், 2-வது ஆட்டத்தில் 21-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், 3-வது போட்டியில் 4-1 என்ற கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தியது. இதன்மூலம் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்தை இன்று சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. கோல் மழை பொழிவதால் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் ஏற்கனவே தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்தோனேசியாவை 17-0 என்ற கணக்கிலும், ஆங்காங்கை 26-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 8-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 5-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கையை நாளை சந்திக்கிறது. 5-வது வெற்றி வாய்ப்பு இந்தியா அணிக்கு இருக்கிறது. #AsianGames2018
    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். #ThaiCaveBoys
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #ThaiCaveBoys
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். #PVSindhu
    பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று  நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை வீழ்த்தி பி.வி சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவை எதிர்க்கொண்டார். மிகவும் கடுமையாக போராடிய பி.வி சிந்து 15-21, 18-21 என்ற செட் கணக்கில் தனது வெற்றி வாய்ப்பை ஜப்பான் வீரரிடம் பறிகொடுத்தார். #PVSindhu
    தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

    கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.


    இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue #Thailandcave #ThailandCaveKids #ThaiNavySEAL
    தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் 3 பேரை மீட்க எலான் மஸ்க் சிறியரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியுள்ளார்.



    தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அங்கு பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

    எனவே கடந்த மாதம் 23-ந் தேதி முதல் குகைக்குள் சிக்கி தவித்த இவர்கள் 16 நாட்களாக வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்தனர். இந்தநிலையில் உள்நாட்டு குழுவுடன் இங்கிலாந்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மாயமாகி 9 நாட்களுக்கு பின் அவர்கள் உயிருடன் இருப்பதை 2 இங்கிலாந்து வீரர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் மீட்பு நடவடிக்கை தொடங்கியது. 18 நீர்மூழ்கி வீரர்கள் (டைவர்கள்) நியமிக்கப்பட்டனர். இதுவரை குகைக்களுள் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு விட்ட நிலையில் 3 பேர் மட்டுமே குகைக்குள் உள்ளனர். 

    அவர்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குகைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை ‘பம்ப்’ மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.



    இந்நிலையில் குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரை மீட்க சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி உதவுவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தாய்லாந்து சென்றடைந்தது. 

    "சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயார் நிலையில் இருக்கிறது. ராக்கெட் பாகங்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது தேவைப்படும் என்பதால் இதனை இங்கேயே விட்டுச் செல்கிறேன். தாய்லாந்து மிகவும் அழகிய நாடு." என எலான் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
    தாய்லாந்து நாட்டின் பிரபல சுற்றுலா தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 21 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #Thaiboatdisaster
    பாங்காக்:

    தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று மாலை 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.



    மீட்புப்பணிகளில் தாய்லாந்து கடற்படை வீரர்களும்  பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Thaiboatdisaster
    உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
    பாங்காக்:

    உலகின் மிக பிரபலமான சர்வதேச நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டது.

    அந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான 10 சுற்றுலா தலங்கள் குறித்தும் அதிக எண்ணிக்கையிலான பயண காப்பீடு கோரும் நாடுகள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.

    அதில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இங்குள்ள கடற்கரைகள், கோவில்கள், சுவை மிகுந்த உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் உள்ளன. இருந்தாலும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் மிக மிக அதிகம்.

    கடந்த ஓராண்டில் மட்டும் 23 சதவிகித சுற்றுலா பயணிகள் பயண காப்பீடு கோரியுள்ளனர். இங்கு செல்ல விரும்புவோர் முன்னதாக அங்குள்ள சுற்றுலா தளங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பயணத்துக்கு ஆயத்தமாவது பாதுகாப்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    தாய்லாந்துக்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, சிலி, நேபாளம், பெரு, பகாமாஸ், மற்றும் பிரேசில் நாடுகளம் இந்த பட்டியலில் உள்ளன. #tamilnews
    ×