search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விராட்கோலி"

    டோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். #ViratKohli #Dhoni

    புதுடெல்லி:

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடியவர் டோனி. முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர், ஸ்டம்புக்கு பின்னால் டோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.

    அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் டோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த விரும்புவேன்.

    டெத் ஓவர்களில் எல்லை கோட்டில் இருந்து பீல்டிங் செய்ய விரும்புவேன். அதன் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற் கொள்ள வேண்டும்.

    30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் எல்லை கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்ய சென்று விடுவேன் என்று டோனிக்கு தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.

    ஆரம்ப கட்டத்தில் எனக்கு டோனியிடம் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். டோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்.

    இவ்வாறு கோலி கூறினார். #ViratKohli #Dhoni

    வெற்றிகரமான சேசிங்கில் 5 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கேப்டன் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli


    நியூசிலாந்துக்கு எதிரான நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 60 ரன் எடுத்தார்.

    இதன்மூலம் அவர் வெற்றிகரமான சேசிங்கில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். 80 இன்னிங்சில் அவர் 5004 ரன்னை எடுத்தார். சராசரி 96.23 ஆகும். இதில் 21 சதமும், 20 அரைசதமும் அடங்கும்.

    இந்த ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். தெண்டுல்கர் 5490 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கோலி கேப்டன் பதவியில் வெற்றிகரமாக ரன் சேசிங்கில் 2050 ரன் (27 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.

    வெற்றிகரமான ரன் சேசிங்கில் அதிக ரன் எடுத்த ‘டாப் 5’ வீரர்கள் வருமாறு:-

    1. தெண்டுல்கர் (இந்தியா) 5490 ரன் (124 இன்னிங்ஸ்)- சராசரி 55.45.

    2. விராட் கோலி (இந்தியா) 5004 ரன் (80 இன்னிங்ஸ்)- சராசரி 96.23.

    3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 4186 ரன் (104 இன்னிங்ஸ்) -சராசரி 57.34.

    4. காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3950 ரன் (100 இன்னிங்ஸ்)- சராசரி 56.42.

    5. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 3750 ரன் (90 இன்னிங்ஸ்)- சராசரி 46.87. #ViratKohli

    விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார். #AUSvIND #Hazelwood #ViratKohli
    அடிலெய்டு:

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அடிலெய்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் சிறந்த பேட்டிங் வரிசையாக உள்ளதாக நான் பார்க்கிறேன். விராட்கோலி மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ரன்கள் திரட்டுகிறார் என்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். எனவே அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். கடைசியாக ஆஸ்திரேலியாவில் எங்களுடன் ஆடிய பிறகு இந்திய அணி அதிகம் உள்நாட்டில் தான் விளையாடி இருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கெல்லாம் விராட்கோலி தான் ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் குறிப்பிடத்தக்க ரன் சேர்க்கவில்லை.

    விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்த வாய்ப்புகள் குறித்து கலந்து பேசி களத்தில் அமல்படுத்துவோம். விராட்கோலிக்கு எதிராக வசைபாடுதல் (சிலெட்ஜிங்) திட்டம் எதுவும் இல்லை. அப்படி செய்தால் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியும். எதிரணியினருக்கு எரிச்சல் ஏற்படுத்துவது என்பது தனிப்பட்ட வீரர்களை பொருத்த விஷயமாகும். என்னை பொறுத்தமட்டில் நான் பந்து வீசுகையில் அமைதியை கடைப்பிடிப்பவன்.

    முதல் டெஸ்ட் போட்டியில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமானதாகும். முதல் இன்னிங்ஸ் எப்பொழுதும் முக்கியமானதாகும். தொடக்கத்தில் எதிரணியை ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்து விட்டால் அதனை தொடர முடியும். எங்கள் அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாவிட்டாலும், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமவிகிதத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். இந்திய அணி நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளங்குகிறது. அதேநேரத்தில் நாங்கள் உள்ளூரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எனவே இந்த ஆட்டத்தில் போட்டி நெருக்கமானதாகவே இருக்கும்.

    எங்களது பந்து வீச்சு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஆஷஸ் தொடரில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதனை உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவுக்கு எதிராகவும் பிரதிபலிப்போம். அடிலெய்டு மற்றும் பெர்த் ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு எடுபடாது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிக ஓவர்கள் பந்து வீசக்கூடியவர். அவரது கட்டுக்கோப்பான பந்து வீச்சு, எங்களுக்கு (வேகப்பந்து வீச்சாளர்களுக்கு) முக்கியமானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #Hazelwood #ViratKohli
    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #AUSvIND #RohitSharma #souravganguly
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    20 ஓவர் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடியெல்டுவில் தொடங்குகிறது.

    70 ஆண்டுகளில் இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது இல்லை.

    2003-04-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்ததே ஆஸ்திரேலியாவில் சிறந்த நிலையாகும்.

    இந்த சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா கடைசி டெஸ்டில் சிறப்பாக வெற்றி பெற்றது. பிரிஸ்பேரில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    அடிலெய்டுவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. மெல்போர்ன் டெஸ்டை வென்று ஆஸ்திரேலியா சமன் செய்தது.

    தற்போது ஆஸ்திரேலியா செல்லும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நமது பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால் வேகப்பந்து வீரர்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த இயலும். வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும்.

    11 பேர் கொண்ட அணியில் 3 வேகப்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

    வார்னர், சுமித் இல்லாதது இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாகும்.



    என்னை பொறுத்தவரை ரோகித்சர்மாவை 11 பேர் கொண்ட அணியில் சேர்க்க வேண்டும். தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கும் அவர் 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர். மற்றொரு வாய்ப்புக்கு அவர் தகுதியானவர்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.  #AUSvIND #RohitSharma #souravganguly
    உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் பெண் தோழியை உடன் அழைத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று வீராட்கோலி தெரிவித்துள்ளார். #ViratKohli #WorldCup2019 #IndianCricketTeam
    மும்பை:

    12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து கேப்டன் விராட்கோலி, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து இருக்கிறார்.



    தற்போது அந்த விவரம் வெளியாகி இருக்கிறது. உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் பெண் தோழியை உடன் அழைத்து சென்று தங்களுடன் தங்க வைத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உலக கோப்பை போட்டியில் விளையாட செல்லும் போது இந்திய வீரர்கள் அங்குள்ள நகரங்களுக்கு ரெயிலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்போது வீரர்கள் பாதுகாப்பாக செல்ல தனி ரெயில் பெட்டியை முன்பதிவு செய்து தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். குறிப்பாக வெளிநாட்டு பயணத்தின் போது வீரர்களுக்கு அங்கு கிடைக்கும் பழம் மற்றும் உணவுகள் வழங்கப்படுவது வாடிக்கையாகும். அப்படி இல்லாமல் இந்திய வீரர்கள் சாப்பிடும் உணவு மற்றும் பழங்களை வழங்க வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக வாழைப்பழம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழைப்பழம் உடனடியாக ஊட்டத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியதாகும் என்றும் விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.
    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். #RaviShastri #indvseng

    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் கேள்வி கணைகள் பாய்ந்து வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ரவிசாஸ்திரி பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் அதுபோன்ற ஆட்டம் முதல் டெஸ்டில் ஏன் இருக்கவில்லை என்பதை நினைக்க வேண்டும்.

    பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்கள் இருந்தாலும் அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அதுவும் போட்டிதான். ஆனால் போட்டி அட்டவணை கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் முடித்த பிறகு டெஸ்ட் போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெறுவது எங்கள் கையில் இல்லை.

    அணி நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இந்திய அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஓரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. #RaviShastri #indvseng 

    இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் விராட்கோலிக்கு கங்குலி அறிவுரை கூறி உள்ளார். #SouravGanguly #ViratKohli
    கொல்கத்தா:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் விராட்கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டன் விராட்கோலிக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எந்தவொரு அணியும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் இங்கிலாந்து போட்டி தொடரில் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் 10 மடங்கு சிறந்ததாக இருந்தது.

    இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ரிஷாப் பான்ட் ஆட்டத்தை குறிப்பிடலாம். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொணர வேண்டியது கேப்டனின் முக்கிய பொறுப்பாகும். கேப்டன் வீரர்களின் தோளில் கை போட்டு அரவணைத்து பேசினால் அணி தானாகவே முன்னேற்றம் காணும்’ என்று தெரிவித்தார்.  #SouravGanguly #ViratKohli
    இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டதாக இந்திய கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். #ViratKohli #ENGvIND

    லண்டன்:

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன் எடுத்தது. இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 396 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 289 ரன் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ரன்னுக்குள் சுருண்டது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட்கோலி  கூறியதாவது:-

    நாங்கள் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம்.

    நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது தோல்விக்கு நாங்கள் தகுதியான அணி தான். நாம் விளையாடி கொண்டிருக்கும் போது வானிலை பற்றி சிந்தித்து கொண்டிருக்க முடியாது.

    வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தையும், வானிலையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எங்களை ரன் எடுக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டனர். அணியில் வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    எனது முதுகுவலி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் குணமடைந்து விடுவேன் என்றார்.

    நம்பர்-ஒன் அணியான இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முற்றிலும் திணறிவிட்டனர்.

    மேலும் வீரர்கள் தேர்விலும் தவறு செய்துவிட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினர்.

    குல்தீப் யாதவுக்கு பதிலாக இன்னும் ஒரு வேகப் பந்து வீச்சாளருடன் களம் இறங்கி இருக்கலாம். இந்த போட்டியில் குல்தீப் யாதவ் வெறும் 1 ஓவர் மட்டுமே வீசி இருந்தார்.

    முதல் டெஸ்ட்டில் இந்தியா போராடியே தோற்றது. ஆனால் 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

    லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் மற்றும் டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #ViratKohli #KapilDev #ENGvIND

    லார்ட்ஸ்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றின.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) தொடங்குகிறது.

    புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ், டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றி கிடைத்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் டேவிட் கோவா தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது.

    அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்த மைதானத்தில் வெற்றி கிடைத்தது. அந்த அணி 95 ரன் வித்தியாசத்தில் குக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 17 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 11 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

    1932-ம் ஆண்டு சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி தனது டெஸ்டை லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியது. 11-வது டெஸ்டில் விளையாடிய போது தான் கபில்தேவ் தலைமையில் முதல் வெற்றி கிடைத்தது. அதன்பிறகு டோனி அந்த பெருமையை பெற்றார்.

    இவர்கள் வரிசையில் இணையும் ஆர்வத்தில் விராட்கோலி இருக்கிறார்.

    ×