search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை"

    சிறுமலை ரேசன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் தாழக்கடை, பழையூர், புதூர், அண்ணாநகர், ஊரடி ஆகிய பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாழக்கடையில் உள்ள ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போல 20 கிலோ வழங்க வேண்டிய பயனாளிகளுக்கு அதை விட குறைவாக வழங்கி வந்துள்ளனர்.

    மேலும் புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பல முறை கடை விற்பனையாளர்களிடம் விபரம் கேட்டும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.

    இதனால் ஆவேசமடைந்த வேலாம்பண்ணை பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கடையில் இருந்த எடை தராசு கல்லையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் விற்பனையாளர் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த ரேசன் கடையை முறையாக திறப்பது கிடையாது. மக்கள் வரும் நேரத்தில் பொருட்கள் வழங்குவது கிடையாது. கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் நாங்கள் வேலைக்கு சென்ற பிறகு கடையை திறந்து சிறிது நேரத்திலேயே பூட்டி விடுகின்றனர். மண்எண்ணை வினியோகமும் முறையாக இல்லை. வேலாம்பண்ணையில் இருந்து 7 கி.மீ தூரம் நடந்து வந்தாலும் பொருட்கள் இல்லை என கூறி விடுகின்றனர்.

    எனவே சிறுமலையில் செயல்படும் ரேசன் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    புதுவை தேங்காய்த் திட்டில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த் திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் அடிக்கடி அடைப்பு ஏற்படும். இதனால் படகுகளில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் மணல் மேடிட்டு அடைத்தது. இதனால் கடந்த 10-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    அதோடு துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக தூர்வார வேண்டும். கடல்பகுதியின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    சில நாட்களுக்கு முன்பு விசைப்படகு, கன்னா படகு, எப்.ஆர்.பி. ஆகியவற்றில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு மீனவர்கள் ஒன்று கூடினர். அங்கு வாசலில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் கவி, பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மீனவர்கள் போலீசார் தடையை மீறி உள்ளே புகுந்து மீன்வளத்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போராட்டம், 18 மீனவ கிராமங்களை இணைத்து பந்த் போரட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    புதுவை நகர பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    பாதாள சாக்கடையை வீடுகளுக்கு இணைப்பதற்கு நகராட்சிகள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொகுதிக்கு தொகுதி தெருவுக்கு தெரு வேறுவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

    இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து புதுவை நகர பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு புதுவை நகர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். நகர மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், ரவி அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் துணை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிககள் ஜெயக்குமார், கார்த்திகேயன், கீர்த்திவாசன், சிவராஜ் பிரான்சிஸ், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #BJP
    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா, தூத்துக்குடி சுரேஷ், சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதன்பிறகு மாணவர் தரப்பினரிடம் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
    ஆதம்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சாலை நடுவில் போடப்பட்ட பந்தலை அகற்றியது தொடர்பாக புகார் அளித்த பேராசிரியர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் தெருவில் விநாயகர் கோவில் உள்ளது. வருகிற 13-ந்தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவில் அருகே பந்தல் போடப்பட்டு இருந்தது. இதற்காக சாலை நடுவே கம்பு நட்டு இருந்தனர்.

    இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் என்பவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து பந்தலை அகற்றினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். பின்னர் சாலை நடுவே இருந்த பந்தல் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பந்தல் அமைக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே புகார் கொடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சுரேஷ் வீட்டை ஏராளமானோர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிப்பதால் சுரேஷ் வீட்டு முன்பும், கோவில் அருகேயும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். #tamilnews
    கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி கீரனூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    பின்னர் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மதுபானகடையை இடம் மாற்றுவதாக உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்கட்சியின்மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் தலைமையில் குன்றாண்டார் கோவில் ஒன்றிய செயலா ளர் சண்முகம், துணை செயலாளர் ஏழுமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு வந்து கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். #tamilnews
    நங்கவள்ளி:

    சேலம் அருகே நங்கவள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தில் ரூ.5 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கடன் சங்கத்தின் போர்டு கலைக்கப்பட்டது.

    தற்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட 73 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அவர்களுடைய வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் திடீரென திரண்டு வந்து கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். மேலும் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

    கடன் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கணக்கில் 12 கோடி ரூபாயிக்கு மேல் டெபாசிட் செய்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ஊழல் நடந்ததால் போர்டு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊழல் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன? உத்தரவாதம் இருக்கிறது. ஆகவே டெபாசிட் தொகையை கொடுத்து விட்டு தேர்தல் நடத்துங்கள். இல்லையென்றால் தேர்தலை நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    கொடுமுடி அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்தில் அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று இரவு 9.30 மணிக்கு சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் (51) எழுத்தர் வைத்தி(45) இருவரும் சங்கத்தின் ‌ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

    அப்போது அங்கு அருகில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து இரவு நேரத்தில் சங்கத்தை திறப்பதன் அவசியம் என்ன என்று சங்கத்தை முற்றுகை இட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் விரைந்து வந்து சங்க செயலாளாளர் பரமேஸ்வரனிடம் விசாரனை நடத்தினர்.

    ஈரோடு கூட்டுறவு துணைப்பதிவாளர் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்திட சில ஆவணங்களை உடனடியாக கொண்டு வரச் சொல்லி உள்ளார் அதற்காக தான் வந்தோம் என்று கூறியதை உறுதி செய்த பிறகு சங்க உறுப்பினர்களிடம் கூறி ஆவணங்களை எடுத்துக் செல்ல அனுமதித்தனர்.

    இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 18 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனவே தான் இந்த நிலையில் இரவு நேரத்தில சங்கம் திறக்கப்பட்டதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது அதனால் தான் அனைவரும் ஒன்று திரண்டோம் என கூறினார்கள்.

    இதனால் அந்தப் பகுதியில் கமர் 3 மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. #tamilnews
    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் வீடுகளை முற்றுகையிட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். #ministersellurraju #ministerudayakumar

    மதுரை:

    சீர்மரபினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கள்ளர் சீரமைப்பு சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை கள்ளர் சீரமைப்பு சங்க மாவட்ட நிர்வாகி சகாதேவன் தலைமையில் 7 பெண்கள் உள்பட 20 பேர், அண்ணாநகர் செண்பக தோட்டம் பகுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டை முற்றுகையிட புறப்பட்டனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று நடுவழியிலேயே அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் மதுரை செல்லூரில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட சென்ற 30 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். #ministersellurraju #ministerudayakumar

    அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை அண்ணாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகள் இடிக்கப்பட்டது.

    இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.

    இதையடுத்து அவர்கள் அப்போது அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்த சசிகலா நாகலிங்கத்திடம் முறையிட்டனர்.

    அவர், குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இது பற்றி பணத்தை இழந்தவர்கள் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

    இதன் மீது நடவடிக்கை எடுக்க காசிமேடுமீன்பிடி துறைமுக போலீசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடிதுறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதி தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கையால் மலம் அள்ளும் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அனைத்து சலுகைகள் வழங்க வேண்டும். கேரளாவில் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை நீக்க பயன்படுத்தும் முறையை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

    அரசு வேலை வாய்ப்புகளில் துப்புரவு பணிகளை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.
    கடை வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கடைக்கும் ஆண்டுக்கு ரூ.3500 வரியாக நகராட்சி வசூலித்து வந்தது. இந்த நிலையில் வரி கட்டணத்தை ரூ.46.300 ஆக நகராட்சி உயர்த்தியது. இதை கட்டாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடை வரி பல மடங்கு உயத்தப்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விக்கிரமராஜா கூறியதாவது, தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரியை 110 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், முதல்வரை சந்தித்தும் முறையிடுவோம் என்றார்.

    வரி உயர்வை குறைக்க கோரி கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர்.
    ×