search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112912"

    பள்ளிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தாலுகா மாநாடு சங்க தாலுகா தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மாநிலக்குழு ராமசாமி, மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் மாநாடு குறித்து விளக்கி பேசினர். ஒன்றிய செயலாளர்கள் வீராச்சாமி, முத்துமாரி, கணேச மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    எஸ்.ராமலிங்காபுரத்தில் இருந்து நல்லம நாயக்கர்பட்டிக்கு பள்ளிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ் இயக்க வேண்டும், மருத்துவ துணி தயாரிப்பு தொழிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், சமுசிகாபுரம் முதல் முதுகுடி வரையிலான சாலையை அகலப்படுத்தி இரு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    ஒடிசா மாநிலத்தில் 8 வயது பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Odisha #POCSOact
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 8 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு ராயகடா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறுவனின் வாக்குமூலத்தையும் தாண்டி 21 பேரை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின் படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    மேலும், 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம், ஒருவேளை அபராதம் கட்ட முடியாமல் போனால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. #Odisha #POCSOact
    கரூர் அருகே அமராவதி ஆற்றில் சிக்கிய பிளஸ்-2 மாணவரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    கரூர்:

    கரூர் திருமாநிலையூரை அடுத்த செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செல்வி, அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஹரி (வயது 17). பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்காக தயாராகி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் ஹரி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது ஆற்றின் மையபகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டு அப்பகுதி பொதுமக்களை அழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்களில் சிலர், ஆற்றில் குதித்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இது குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இதனிடையே ஓடும் நீரில் மாணவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாமா? என சந்தேகமடைந்த தீயணைப்பு வீரர்கள் திருமாநிலையூர் புதிய அமராவதி பாலம் மற்றும் கரூர் ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களிலும் தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் எங்கு தேடியும் ஹரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். ஹரியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, ஹரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) கணேசன் மற்றும் நிலைய அலுவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் அதிகாலை முதலே தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து ஹரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மித வைகள் மூலமும் சென்று தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஹரியின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை.

    அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் ஹரி, எங்காவது கரையோரத்தில் ஒதுங்கியிருக்கலாமா? அல்லது ஏதாவது இடத்தில் சிக்கியிருக்கலாமா? என்று தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரம் மகன் ராஜகுமாரன் (24). இவர் கரூரில் டெய்லராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் மரவாபாளையம் சென்ற அவர், அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி மறு கரையில் உள்ள அக்கரை கருப்பம்பாளையத்திற்கு செல்ல முயன்றார். அப்போது தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார்.

    இந்தநிலையில் கட்டிப்பாளையம் காவிரி ஆற்றில் டி.என்.பி.எல். பம்ப் ஹவுஸ் அருகே அவரது உடல் கரை ஒதுங்கி கிடந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #Tamilnews
    ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற மாணவர், ஆசிரியர்கள் குரல் கேட்டு உயிர் பிழைத்த மாணவர் நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 17). கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாலை, நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டார்.

    அப்போது, மூச்சடைத்து மயங்கி விழுந்த அருண் பாண்டியன், அதே ஊரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நாடித்துடிப்பு மிகக்குறைவாக இருந்ததால், டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதற்கிடையே, தகவல் அறிந்த அருண் பாண்டியனின் பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், சோமசுந்தரம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அருண் பாண்டியனை கண்டு கலங்கிய இருவரும், அவரது காது அருகே சென்று “தம்பி விழித்து பார்யா... யார் வந்திருக்கிறது என்று” என அடுத்தடுத்து பேச்சு கொடுத்தனர்.

    இதனால் அதுவரை அசைவற்று கிடந்த அருண் பாண்டியன் கண்கள் லேசாக உருள தொடங்கியது. ஆசிரியர்கள் பேசப்பேச அவர் கண் விழித்தார். கை, கால்களை அசைத்தார். அடுத்த 7 நிமிடங்களில் சுயநினைவு திரும்பி, “சார் நீங்க எப்ப வந்தீங்க” என்று கேட்டார். ஆசிரியர்களின் பெயரையும் சரியாக கூறினார். அதைப் பார்த்த டாக்டர்களும், செவிலியர்களும் 10 சதவீதம் கூட உணர்வு இல்லாமல் இருந்த அருண் பாண்டியன் உயிர் பிழைத்ததை நினைத்து ஆனந்தம் அடைந்தனர். 
    கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #CentralHomeMinistry
    புதுடெல்லி:

    கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது பரிதாபமாக லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். பேரிடர் கால ஒத்திகை தொடர்பான பயிற்சியின் போது நடந்த இந்த விபத்து நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும், வருத்தமளிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும், கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CentralHomeMinistry
    2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து வக்கீல் எம்.புருஷோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள், 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்பது உள்பட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்களை பல பள்ளிகள் கொடுக்கின்றன என்று நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, 1 மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு மத்திய மனித வளம் மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்று கூறி, அந்த சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.

    சி.பி.எஸ்.இ. சார்பில் வக்கீல் நாகராஜன் ஆஜராகி, எங்களுக்கு இன்னும் அந்த சுற்றறிக்கை வரவில்லை என்று கூறினார். இதையடுத்து, அவருக்கு நகல் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார். 
    ஊத்துக்குளி அருகே பாரப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    ஊத்துக்குளி அருகே பாரப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இது மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்யப்பட்ட புது யுக்தி என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில மோகம் காரணமாக, பெற்றோர் தங்களது குழந்தைகளை மெட்ரிக்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். அரசுபள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி கொண்டு வந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. எனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத்தில் உள்ள பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புது யுக்தியை கையாண்டுள்ளனர். அந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் 247 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமையாசிரியையாக அகிலா பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் பாரப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் நீண்ட தூரம் நடந்து வந்து படித்து வருகிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவ-மாணவிகளின் சிரமங்களை குறைக்கவும் இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஊத்துக்குளி வட்டார கல்வி அதிகாரி வசந்தி, தலைமையாசிரியை அகிலா மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியை அகிலா கூறியதாவது:-

    எங்கள் பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து மட்டும் 70 மாணவ-மாணவிகள் இங்கு வந்து படித்து வருகிறார்கள். இவர்கள் வீட்டிலிருந்து தினசரி காலை 8 மணிக்கே கிளம்பி, புத்தகப்பையை தோளில் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடந்து வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்து வரும் இவர்கள் பள்ளிக்கு வந்து சேரும் போது மிகவும் சோர்வடைந்து விடுகிறார்கள்.

    இதனால் இவர்களின் சிரமத்தை போக்க பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைகுழு, தன்னார்வலர்கள், அன்னையர்குழு, தலைமையாசிரியர், கல்வியாளர்கள், முகநூல் நண்பர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரின் பங்களிப்புடன் குளத்துப்பாளையத்தில் இருந்து பாரப்பாளையத்தில் உள்ள பள்ளி வரை செல்ல வேன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். காலையில் இந்த வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்படும் மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்தவுடன் அதே இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடப்படுவார்கள். இதற்கான வாடகை கட்டணத்தை அந்த குழுவினரே செலுத்திவிடுவார்கள். இந்த ஆண்டு 80 மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ள நிலையில் இதனால் மாணவர் சேர்க்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக உலக அளவில் நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற இந்திய மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் பணி வழங்கியுள்ளது. #Google
    பெங்களூரு:

    கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் இயங்கி வருகிறது.  இதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.

    இதற்காக இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் 50 பேர் தேர்வாகி உள்ளனர்.

    இந்தியாவில் நடைபெற்ற நேர்முக தேர்வில், பெங்களூருவைச் சேர்ந்த ஆதித்யா பாலிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டிற்கு 1 கோடியே 20 லட்சம் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர், ஜூலை 16-ம் தேதி பணியில் சேர உள்ளார்.

    கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் கலந்து கொண்ட 6 ஆயிரம் பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஆதித்யா பாலிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Google
    இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மாணவர்களின் பாச போராட்டத்தால் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு, தனது பணியை தொடங்கினார். #TeacherBhagawan
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவலில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுவிப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.



    இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர்ந்து 10 நாட்கள் பணியாற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். மாணவர்கள் ஆசிரியர் பகவானை வழிமறித்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் அமைதிபடுத்த பகவானுக்கு வழங்கிய பணி விடுவிப்பு கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்து எறிந்தார்

    இதையடுத்து மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அமைதியாகி கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணி விடுவிப்பு கடிதம் வழங்கப்பட்டு அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டார்.



    இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுபணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கட்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார்.  #TeacherBhagawan  #tamilnews  
    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிரேயரில் ‘கொட்டாவி’ விட்டதற்காக மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    குழந்தைகள் தங்களது பெற்றோர்களையும் தாண்டி அதிக நேரம் பள்ளி ஆசிரியர்களுடனே இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களது குழந்தை தன்மையை இழந்தால் மட்டுமே பள்ளிகளில் படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை தற்போதைய தனியார் பள்ளிகள் உருவாக்கி விட்டன.

    அந்த நிலை தான் சரியானது எனும் மாய பிம்பைத்தை பெற்றோர்களிடமும் ஏற்படுத்திவிட்டன. குழந்தைகளை அவர்களின் இயல்பான குணங்களை விடுத்து, புத்தகம் கற்கும் கணினிகளாக பள்ளிகள் வளர்க்கின்றன. அதனை மீறும் குழந்தைகள் கடுமையாக தாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.

    அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் காலை பிரேயரின் போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கொட்டாவி விட்டதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை அடித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் தண்டனை அளிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை, நயாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    போடியில் சாலையில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியையை வாலிபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பஸ்நிலையம் அருகே வசிப்பவர் சங்கரநாராயணன். இவரது மனைவி மாலதி(வயது42). திருமலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இன்று காலை மாலதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வாலிபர் ஒருவர் மாலதியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி மாலதி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாலதியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    வலி தாங்கமுடியாமல் மாலதி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். வாலிபர் கையில் ரத்தக்கறையுடன் கத்தியை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றனர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த மாலதியை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியையை கத்தியால் குத்தியவர் மாணவரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக மர்மநபர் கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதியில் நீட் தேர்வில் தோல்விடைந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதி கொர்லகுண்டா பகுதியில் வசித்து வரும் சுப்ரமணியம், வனஜாகுமாரி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சுப்ரமணியம் இறந்த பின் அவரது மூத்த மகன் தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இளைய மகன் பாலாஜி (வயது 20) பிளஸ்2 வகுப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை எழுதினார்.

    ஆனால், தொடர் தோல்வியையே சந்தித்தார். இதனால் மன வருத்தமடைந்த அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×