search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112989"

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பாதுகாப்பான முறையில் இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
    தேவதானப்பட்டி:

    கேரளாவில் இறைச்சிக்காக மாடுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள மாட்டு சந்தைகளில் குவியும் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு மாடுகளை வாங்கி வேன்கள் மற்றும் லாரிகளில் கொண்டு செல்வார்கள்.

    மாநில எல்லையில் விலங்குகள் நல அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் இதுபோன்று மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

    மாடுகள் எங்கிருந்து வாங்கப்பட்டது, அதற்கான சான்றுகள், அதிக அளவிலான மாடுகளை அடைத்து வைத்து செல்லக்கூடாது. லாரிகளில் மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கெடுபிடிகளை சுட்டிகாட்டி மாடுகள் கடத்துவதை தடுத்து வந்தனர்.

    இதனால் தற்போது நூதன முறையில் மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகிறது. மாடுகள் கொண்டு செல்லப்படும் லாரி முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது உள்ளே வேறு ஏதேனும் சரக்குகள் உள்ளது என்றுதான் எண்ணத்தோன்றும்.

    இது குறித்து லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்லும்போது அடிக்கடி அதனை மறித்து பறிமுதல் செய்து விடுகின்றனர்.

    இதனால் வியாபாரிகளுக்கு நாங்கள் பதில்சொல்ல முடியாமல் தவித்து வந்தோம். தற்போது கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க லாரி முழுவதும் கவர் செய்யப்பட்டு கொண்டு செல்கிறோம். இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சோதனைச்சாவடியில் மட்டும் மாடுகளை காட்டினால் போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 6ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 7ஆயிரத்து 28 கனஅடியாக அதிகரித்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 6ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 7ஆயிரத்து 28 கனஅடியாக அதிகரித்தது.

    அணையிலிருந்து நேற்று 1,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு 1,300 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 102.67 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.01 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி 5 ஆயிரத்து 471 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 14 அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 961 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 1000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் நேற்று வரை திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து மொத்தம் 1600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 102.32 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.67 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 4 ஆயிரத்து 33 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 4 ஆயிரத்து 384 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலை முதல் தண்ணீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நேற்று 101.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.79 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரத்து 600 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் முகரம் பண்டிகையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக குளிர்பிரதேசமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பூங்காவில் உள்ள உயரமான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா, நியூ கார்டன், பெரணி இல்லம், இத்தாலியன் பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்டு உள்ள மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவின் பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் எழில்மிகு அழகை ரசித்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. அங்கு மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரியின் போது, பசுமையான மரங்கள், கரையோரத்தில் உள்ள பூங்காவில் உள்ள கடமான்களை கண்டு ரசித்தனர். அங்கு நிலவிய சீதோஷ்ண காலநிலையை அனுபவித்தனர். படகு இல்ல வளாகத்தில் விற்பனை செய்யப்படும் கிவி, மங்குஸ்தான், ரம்பூட்டான் உள்ளிட்ட பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தொலைநோக்கி மூலம் அப்பர்பவானி, ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, குண்டல்பெட், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களை பார்த்தனர். அங்கு காட்சி முனையில் நின்ற படி இயற்கை அழகு மற்றும் அடர்ந்த வனப்பகுதியை கண்டு ரசித்தனர். இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #PetrolDiesel #PetrolDieselPriceHike
    சென்னை:

    சென்னை மாநகர மக்களின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ‘ஷேர்’ ஆட்டோ பயணம். பொது போக்குவரத்து வசதி பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகிறார்கள். சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருப்பதால் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணம் ரூ.5 உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆக இருந்த ஷேர் ஆட்டோ கட்டணம், தற்போது ரூ.15 ஆக உயர்ந்திருக்கிறது.

    அதேசமயம் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் இருமடங்காக உள்ளதே... என்று வேதனைப்பட்டு வந்த பயணிகளுக்கு, இந்த ‘திடீர்’ கட்டண உயர்வு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து ‘ஷேர்’ ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வருமானம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையில், தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை கவலையடையச் செய்துள்ளது. முன்பு தினசரி ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.400 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல்-டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ‘ஷேர்’ ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

    இதற்கிடையில் ‘ஆன்-லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி கட்டணமும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ டிரைவர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில டிரைவர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை இப்படியே உயர்ந்துகொண்டே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.  #PetrolDiesel #PetrolDieselPriceHike
    கோவையில், வார இறுதி நாட்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
    கோவை:

    கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அதிகாலை 1 மணிக்கு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் 50 முதல் 60 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 150 முதல் 160 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை 6 ஆயிரத்து 218 வழக்குகளும், அதே கால கட்டத்தில் நடப்பு ஆண்டில் 14 ஆயிரத்து 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை கோர்ட்டுக்கு சென்று செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வாகன ஓட்டிகளை வலியுறுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதின் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத் தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை 196 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதே கால கட்டத்தில் 111 பேர் இறந்துள்ளனர்.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 96 ஆயிரத்து 761 வழக்குகளும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 180 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நாளொரு ஏற்றமும், பொழுதொரு உயர்வுமாக அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. #Petrolprices #dieselprices
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

    இதனால், கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து சென்னையில் ரூ.81.92 ஆக விற்பனையாகிறது.

    டீசல் விலையும் 36 காசுகள் உயர்ந்து, சென்னையில் ரூ.74.77 ஆகவும் விற்பனையாகிறது.

    இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
     
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் கார், லாரி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். #Petrolprices  #dieselprices
    2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. #Sugarcane #ModiCabinet
    புதுடெல்லி:

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    இதனால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் சந்தை ஆண்டு முதல் விவசாயிகள் அளிக்கும் ஒரு குவிண்டால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் குறைந்த பட்சமாக ரூ.275 வழங்கவேண்டும்.

    சந்தை நிலவரத்தையொட்டி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேர்மையான மற்றும் லாபகரமான விலை கிடைக்கச் செய்யும் விதமாக வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் கரும்புக்கு இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2017-18-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.  #Sugarcane #ModiCabinet #tamilnews

    மகாராஷ்ரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #DevendraFadnavis #Maoist
    மும்பை:

    சமீபத்தில் பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக வந்த தகவலை அடுத்து, நாடு முழுவதும், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, அவர்கள் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பழி வாங்கும் விதமாக, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    2 இ-மெயில்களில் வந்த கொலை மிரட்டலை அடுத்து, முதல்மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில், சிலரை கொலை செய்வதன் மூலம் எங்கள் சிந்தனையை அழிக்க முடியாது. கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு கணக்கு தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரண்டு இ-மெயில்களின் நகலை காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். #DevendraFadnavis #Maoist
    ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 மாதங்களாக இருந்த கட்டாய ராணுவ சேவையின் காலத்தை 16 மாதங்களாக நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. #UAE
    துபாய்:

    ஏமனுடனான போரின் போது ராணுவத்தில் பணியாற்றுவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பள்ளி உயர் கல்வி முடித்த ஆண்கள் அனைவரும் கட்டாயமாக 12 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டம் இயற்றப்பட்டது. உயர்கல்வி முடிக்காத ஆண்கள் 2 ஆண்டுகள் ராணுவ பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதேபோல், பெண்கள் விருப்பப்பட்டால், அவர்களது குடும்பத்தினர் அனுமதித்தால் ராணுவத்தில் பணியாற்றலாம் எனவும் சட்டம் அனுமதித்திருந்தது.

    இந்நிலையில், கட்டாய ராணுவ பணியாற்றுவதற்கான 12 மாத காலத்தை 16 மாதங்களாக அதிகரித்து ராணுவ தலைமை அதிகாரி அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. #UAE
    கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீண்டும் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. #GuatemalaVolcano
    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.



    கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மீட்பு பணியின்போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. #GuatemalaVolcano 
    ×