search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஜயலட்சுமி மனவேதனை அடைந்தார்.
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி.

    இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். இதனால் அவர் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று விஜயலட்சுமியின் தாய் தனது மகனுடன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வீட்டில் விஜயலட்சுமி மட்டும் இருந்தார்.

    அவர் செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    பின்னர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி தனது மகளுக்கு செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை.

    உடனடியாக அவர் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். அவர் சென்று பார்த்த போது விஜயலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார்.
    • இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் சசிகுமார்(வயது50). இவர் கோவை அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்சில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது சூலூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார்.சிறிது தூரம் சென்ற பின்னர் இருவரும் ரூ.20 கொடுத்து டிக்கெட் வாங்கினர்.

    இதையடுத்து அந்த வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார். அதற்கு சசிகுமார் சிறிது நேரம் கழித்து மீதி தொகையை தருவதாக அந்த வாலிபரிடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சசிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது முகத்தில் அடித்தார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சசிகுமார் அரசு பஸ் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறினார். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் சிக்னலில் மெதுவாக சென்றிருந்த போது அந்த வாலிபரும் அவருடன் வந்த இளம்பெண்ணும் பஸ்சில் இருந்து தப்பித்து சென்றனர். இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
    • 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.

    கோவை, மே.22-

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், தலைமை பொருளாளர் அப்துல் சமது ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனிடைய கோவை மாநகராட்சியால் பொது ஏலத்தில் விடப்படும் கடைகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.

    காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற வியாபாரங்கள் செய்து வருகிறோம். இதில் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

    இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.

    எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பா ளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
    • மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    கோவை,மே.22-

    எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளி யானது. இதனையடுத்து இன்று முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

    கோவையில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று காலை முதலே மாணவ, மாண விகள் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் பள்ளியில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவினை தேர்வு செய்து கொண்டனர். 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    அப்படி குழப்பமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் எந்த பிரிவை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலுமே மாணவர் சேர்க்கையானது விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • சஜீத் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    கோவை

    கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் சஜீத் (வயது40). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான பாலக்காட்டிற்கு சென்றார். இதனால் வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சஜீத்தின் வீட்டிற்கு அவரது தந்தை சென்றார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரது மகன் சஜீத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜித், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி 2 பேரும் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை உக்கடம் அருகே எஸ்.எச் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது47).

    இவரது மனைவி லதா (41). கணவன்-மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.

    பரமசிவத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பரமசிவம் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போ து மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து கரைத்துக்  குடித்தார். சிறிது நேரத்தில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் கள்ளத்த–னமாக மதுவிற்பனை நடக்கிறது.
    • கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவினர் தனிதீர்மானம் கொண்டு வருவோம்.

    கோவை,

    கோவை கரடிமடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

    அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் பொது–மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி–யுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடக்கிறது.

    குறிப்பாக கோவை கரடிமடையில் அ.தி.மு.கவை சேர்ந்த செல்வராஜ் என்பவர், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டுள்ளார்.

    இதற்காக அவரை அந்த டாஸ்மாக்கை நடத்தும் தி.மு.க.வை சேர்ந்த ராகுல், கோகுல் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவர் பலியாகி விட்டார். இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளனர்.

    இந்த கொலை சம்பவத்தில் கொலை–யாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவினர் தனிதீர்மானம் கொண்டு வருவோம். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அ.தி.மு.கவினர் போராடுவோம்.

    கோவையில் கள்ளத்த–னமாக மதுவிற்பனை நடக்கிறது. இதனை தடுக்காத போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார்.
    • படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் முனியப்பன்(வயது 39).

    இவர் காரமடை காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனியப்பனுக்கு மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளன.

    இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே முனியப்பன் தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், காரமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2022ல் 4599 டிரிப்கள் 348 சிறப்பு ரெயில்கள் மூலம் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    • 380 சிறப்பு ரெயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன.

    கோவை,

    இந்தியன் ரெயில்வேயில் நாடு முழுவதும் 380 கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு கோடை சீசனில், ரெயில்வே பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரெயில்வே 380 சிறப்பு ரெயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளது.

    2022ல் 4599 டிரிப்கள் 348 சிறப்பு ரெயில்கள் மூலம் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரெயில்வே இந்த ஆண்டு கூடுதலாக 1770 டிரிப்களை இயக்குகிறது.

    கடந்த கோடையில் சராசரியாக ஒரு ரெயிலுக்கு 13.2 டிரிப்புகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு சிறப்பு ரெயிலுக்கு 16.8 டிரிப்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த வருடம் பாட்னா-செகந்திராபாத், பாட்னா-யஸ்வந்த்பூர், பரௌனி-முசாபர்பூர், டெல்லி-பாட்னா, புது தில்லி-கத்ரா, சண்டிகர்-கோரக்பூர், ஆனந்த் விஹார்- பாட்னா, விசாகப்பட்டினம்-புரி-ஹவுரா, மும்பை-பாட்னா, மும்பை-கோரக்பூர் டிரிப்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்த 380 சிறப்பு ரெயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன. ஜெனரல் கோச்களில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது, அதே சமயம் ஸ்லீப்பர் கோச்களில் 72 பேர் பயணிக்க முடியும். கோடை கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரெயில்வே சிறப்பு பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன.

    இந்த சிறப்பு ரெயில்கள் மூலம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது.

    தேவையின் அடிப்படையில், ரெயில்களின் எண்ணிக்கை மற்றும் டிரிப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.
    • 3 பெண்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ரோகினி (வயது32).

    சம்பவத்தன்று இவரும் இவரது கணவரும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பெண்கள் 3 பேர் ரோகினி கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதனை பார்த்த ரோகினி சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுமதி என்ற லட்சுமி (22), செல்வி (25), மஞ்சு(28) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் காரமடையை சேர்ந்த சுஜிதா (36) என்ற பெண்ணிடம் ரூ.26 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 3 பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சாந்தி காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார்.
    • இது குறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது50).

    இவரது மகன் விக்னேஷ் (26). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி அவரது வீட்டில் அலமாரியில் தங்க நகைகள் வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அவர் காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகையை அவரது மகன் விக்னேஷ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
    • 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது48).

    இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    பஸ் கலிக்கநாயக்கன்பாளையம் அருகே வளைவில் சென்ற போது 3 பேர் மது போதையில் சத்தம் போட்டபடி நடுரோட்டில் வந்ததனர்.

    இதனை பார்த்த டிரைவர் விஜயகுமார் ஹாரன் அடித்தார். ஆனால் அவர்கள் ரோட்டை விட்டு விலகாமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் டிரைவர் மற்றும் கண்டெக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    காயம் அடைந்த டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோர் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×