search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • 5 ஆயிரத்திற்கு லாபமாக ரூ.6,400 மேலும் பணம் கட்டியுள்ளார்
    • கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. அதில், உள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார்.

    அதன் மூலம் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பணிகளை முடித்து கொடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றார். மேலும் ஆன்லைன் முதலீடு மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய சதீஷ்குமார் முதலில் ரூ.5 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் முதலீடு செய்தார். அதற்கு லாபமாக சதீஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.6,400 வரவு வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக சதீஷ்குமார் ரூ.16.79 லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் அந்த மர்ம நபர் கூறிய படி லாப தொகை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சதீஷ்குமார் தான் செலுத்திய ரூ. 16.79 லட்சத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    அவர் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் அடிப்படையில் நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிக பணியாளர்கள் 137 பேர் என மொத்தமாக 175 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காரமடை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக தூய்மைப்பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர்.

    தற்போது நகராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டன. தினசரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன்னர் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். ஆனால் அவர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த அவர்கள் நகராட்சி குப்பைக்கிடங்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது எனவும், தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு சுமார் 9 மணி வரை தூய்மை பணியாளர்கள் தங்களுடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, காரமடை நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், வார்டு உறுப்பினர் குருபிரசாத், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏற்கனவே பணியில் உள்ள தூய்மைப்பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும்,ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்படி ரூ.557 மட்டுமே கூலியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தாங்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், தங்களுக்கு அரசு நிர்ணயித்த ரூ.606 சம்பளத்தையே வழங்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • மோகன் பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த தகவல் அவரது காதலிக்கு தெரிய வரவே அவர் விஷத்தை குடித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மோகன்பிரசாத் (வயது 26). ஐ.டி. ஊழியர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். மோகன் பிரசாத் தனது தந்தையிடம் காதலியை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் தங்கைக்கு திருமணம் முடிந்த உடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.இதன் காரணமாக மோகன் பிரசாத் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலியுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். காதலியை உடனடியாக திருமணம் செய்ய முடியாத விரக்தியில் இருந்த மோகன் பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தகவல் அவரது காதலிக்கு தெரிய வரவே அவர் விஷத்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது பெற்றோர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மோகன் பிரசாத் இறந்த தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மோகன் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை கத்தியால் குத்தினர்.
    • பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்சல் (19). கஞ்சா வியாபாரி. இவர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உக்கடத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் பாலமுருகன் (24) ஆகியோர் அப்சலிடம் வாக்குவாதம் செய்தனர் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.

    கைதான 2 பேரும் மீதும் கஞ்சா விற்பனை , திருட்டு என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    • சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி காலை 7.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • நாளை பீளமேட்டில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கோவை,

    கோவை பீளமேடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி காலை 7.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நாளை (12-ந் தேதி) பீளமேட்டில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் பொங்கல் விழாவும், 13-ந்தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடும் விழாவும், 14, 15, 16-ந் தேதிகளில் காலை, மாலை இருவேளை பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    16-ந்தேதி இரவு 9 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பும், இரவு கரகங்கள் அலங்கரித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந்தேதி ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து ஆண்கள், பெண்கள் பூவோடு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவில் வந்தடையும். காலை 9.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், காலை 10.30 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை மாவிளக்கு பூஜையும் நடைபெறும்.

    18-ந்தேதி காலை 11 மணிக்கு முத்தாலம்மன் திருவிழாவும், 19-ந்தேதி காலை 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு வசந்த பூஜை விழாவும் நடைபெறும்.  

    • சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.
    • பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (36), சஞ்சய் குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்திய பாண்டி மற்றும் சஞ்சய் ராஜா ஆகியோர் ரவுடி கும்பல் தலைவர்களாக செயல்பட்டு வந்தனர். இந்த 2 ரவுடி கும்பல் தலைவர்களும் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிராக செயல்பட்டு மோதி வந்தனர்.

    பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலரை இவர்கள் தங்களது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு மாணவர்களை இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருந்த பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரை சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

    அவரை கொடிசியா பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்தனர். இனிமேல் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என அவரை மிரட்டி எச்சரித்தனர்.

    இதேபோல பீளமேட்டில் விடுதியில் தங்கி படித்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த ஒரு மாணவரையும் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கடத்தி சென்றதாக தெரிகிறது. இவரையும் காட்டுக்குள் வைத்து ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.43 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சத்திய பாண்டி கொலை செய்யப்பட்ட பின்பு அவர் மீது போலீசார் முக்கிய குற்றவாளி என வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக கோபாலகிருஷ்ணனுக்கு ரூ.150 லாபம் கிடைத்தது.
    • கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் கம்பம் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது23). இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது.

    அதில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் அந்த ஆன்லைன் இணைப்பில் சென்று விவரங்களை பெற்றார். பின்னர் ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக ரூ.150 லாபம் கிடைத்தது. தொடர்ந்து இவர் அந்த லிங் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பி முதலீடு செய்தார். இந்தநிலையில் அதிக லாபம் வரும் என கருதிய அவர் ரூ.10.30 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார்.

    ஆனால் ஆன்லைன் முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை. இது குறித்து கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17.85 லட்சம் பணத்தை கொடுத்தார்.
    • ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விருதாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது56). இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகர் பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை அணுகி வேலைவாய்ப்பு கேட்டு வந்தார்.

    அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஜோஸ்வா (34) என்பவர் கனடா உள்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறினார்.

    பணம் கொடுத்தால் வெளிநாடு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைத்து விடுவோம் என ரவிச்சந்திரனிடம் ஆசை வார்த்தை கூறினார்.இதனை உண்மை என நம்பிய ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17.85 லட்சம் பணத்தை கொடுத்தார்.

    பணத்தை வாங்கிய ஜோஸ்வா வேலை வாங்கி தருவதாக காலத்தை கடத்தி வந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் பலமுறை கேட்டும் பணத்தை திரும்ப கொடுக்காமல் அலைக்கழித்து மறுத்து விட்டார். இது குறித்து ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கீர்த்தி இரவு 8 மணி அளவில் 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.
    • கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு சுப்பேகவுண்டன் புதூரை சேர்ந்த கீர்த்தி (19) என்ற இளம்பெண் வேலைக்கு சேர்ந்தார். இரவு 8 மணி அளவில் அவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.

    இது குறித்து ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கீர்த்தியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் மூலம் வங்கியில் திருடிய நகையை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் பெற்றதாக கூறினார்.

    போலீசார் அவரிடம் இருந்து பணத்தை பெற்று நகையை மீட்டு ஆகாஷிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.
    • ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.

    கோவை,

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு கரும்பு, நெல் முழுமையாக கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயையும் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.

    ஒரு ஏக்கருக்கு 1164 கிலோவாக மாற்றி கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகள் கிடைக்காமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.

    கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை காலியாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களான பெதப்பம்பட்டி, அவினாசி, சேவூர், வடக்கிப்பாளையம் ஆகிய கிடங்கில் வைக்க வழிவகை செய்து கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.

    கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் முழுவதையும் எண்ணையாக மாற்றி ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.

    பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திற்கும் போதுமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அம்பராம்பாளையம் கூட்டுகுடிநீர் திட்டம் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பணிகள் முடிந்த பின்னரும் கிராமங்களுக்கு மோசமான குடிநீர் செல்கிறது. எனவே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வேண்டும்.

    பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அரசு டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சில்லிங் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

    • சிறுமி தனது தாயிடம் சண்டை போட்டு விட்டு வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுகந்தி (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரிடம் அவரது தாய் டீ வைத்து கொடுக்கும் படி கேட்டார்.

    அதற்கு சுகந்தி கோபித்துக்கொண்டு டீ வைத்து கொடுத்தார். தனது தாயிடம் சண்டை போட்டு விட்டு வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓம்சக்தி பங்காரு அடிகளார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு வரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து சுகந்தியின் உடலை மீட்டனர்.

    இதனை தொடந்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அம்பேத்கர் திருமண மண்டபத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் சுயஉதவிக்குழு மற்றும் தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினசரி சேகரிப்படும் குப்பைகளை தரம்பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதன்படி நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் தற்காலி பணியாளர்கள் 137 பேர் என மொத்தம் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் காரமடை நகராட்சி பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர். தற்போது நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு நகராட்சி மூலம் ஒப்பந்தம் விடப்பட்டது.

    இதன்படி காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தினசரி நகர பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர் வேறு தூய்மை பணியாளர்களை எடுத்து விட்டார்களா? என்ற அச்சத்தில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் குப்பைக்கிடங்கு அருகிலுள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்

    இக்கூட்டத்தில் தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் சுயஉதவிக்குழு மற்றும் தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும். ஆள்குறைப்பு செய்ய கூடாது. ஏற்கனவே பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. நகராட்சி ஆணையர் முன்னிலையில் மட்டுமே தனியார் ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ மாவட்ட பொதுச்செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட தலைவர் ராஜாக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×