search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா"

    கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். #Canada #Church #Shooting
    ஒட்டாவா:

    கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது, தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 78 வயதான முதியவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் தேவாலயத்தில் இருந்த அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

    இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  #Canada #Church #Shooting 
    கனடாவில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் இந்தியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianManArrested
    ஒட்டாவா:

    கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பஸ் நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த டிரக், பஸ்சின் மீது  வேகமாக மோதியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து தொடர்பாக டிரக் ஒட்டுனர் ஜஸ்கிரத் சிங் சித்து (இந்தியர்) மீது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும், அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி இனிஸ் கார்டினல் நேற்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த வழக்கின் முக்கிய ஆவணமான, விபத்து நடந்த பகுதியின் தடயவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களில், எவ்வித இயற்கை காரணிகளும் இவ்விபத்துக்கு காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.  சித்து நெடுஞ்சாலையின் குறியீடுகளை சரியாக பின்பற்றவில்லை.



    இவ்விபத்தை சித்துவால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமலும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமலும் அலட்சியமாக வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் இந்த கோரச்சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விபத்துக்கு காரணமான சித்துவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #IndianManArrested

     
    கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #CanadaParliament #JagmeetSingh
    ஒட்டாவா:

    கனடாவில் கடந்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் (வயது 40) வெற்றிபெற்றார்.

    இதையடுத்து அவருக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் கனடா நாடாளு மன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை பெற்று, கனடா அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    தலையில் ‘டர்பன்’ அணிந்து நாடாளுமன்றத்திற்குள் ஜக்மீத் சிங் நுழைந்தபோது, அவை உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  #CanadaParliament #JagmeetSingh 
    எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் போயிங் விமானங்களுக்கு தடை விதித்து வரும் நிலையில், கனடாவும் தங்களது வான்எல்லையில் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. #Boeing737MAX8
    ஓட்டாவா:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், பிரிட்டன், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்தன.



    இந்த நிலையில், கனடாவும் போயிங் விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து கனடாவின் போக்குவரத்துத்துறை மந்திரி மார்க் கர்னோவ் கூறும்போது, பாதுகாப்பு கருதி வணிக ரீதியிலான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #CanadaBansBoeing737MAX8

    சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். #China #CanadaAmbassador #JohnMcCallum
    ஒட்டாவா:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த மாதம் 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் டிரிடியு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜஸ்டின் டிரிடியு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “நான் ஜான் மெக்கலமை பதவி விலகும்படி கேட்டு கொண்டேன். அவரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஹூவாய் நிறுவன தலைமை அதிகாரி மெங்வான்ஜவ் கைது விவகாரம் தவறானது என்று விமர்சித்த ஜான் மெக்கலம், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாக கூறியதோடு, தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது. 
    வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். இதனை அமெரிக்கா அங்கீரித்துள்ளது. #VenezuelaActingPresident #JuanGuaido #Trump
    கராகஸ்:

    வெனிசுலாவில் கடந்த சில வருடங்களாகவே அதிபர் மதுராவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான கிளர்ச்சி ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் நிகோலஸ் மதுரோ 67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக்கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன் 21.2% சதவீத வாக்குகளே பெற்றார்.

    மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியது. மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேசமயம், பாராளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும், கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றுக்கொண்டார்.


     
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் பாராளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ(வயது 35), தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார். ஒரு கட்டத்தில் அவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஜூவான் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மதுரோவுக்கு எதிராக போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், தலைநகர் கராகசில் எதிர்க்கட்சி சார்பில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், சபாநாயகர் தனது அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இதனால் அதிபர் மதுரோ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த அரசியல் மாற்றம் வெனிசுலாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே வெனிசுலாவின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ தன்னைத்தானே அறிவித்ததை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அங்கீகரித்து ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதேபோல் மற்ற நாடுகளும் ஜூவான் கெய்டோவை ஆதரிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். அதிபர் நிகோலஸ் மதுரோ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூவான் கெய்டோ தலைமையிலான தேசிய சபை தான் சட்டப்பூர்வமானது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #VenezuelaActingPresident #JuanGuaido #Trump
    கனடாவில் விமானத்தின் கதவு பனியால் உறைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் 16 மணி நேரம் குளிரில் தவித்தனர். #Canada #UnitedAirlines
    மாண்ட்ரியல்:

    அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.

    விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் திறக்க முடியவில்லை. எனவே பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். #Canada #UnitedAirlines 
    கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Canada #Ottawa #BusCrash
    ஒட்டாவா:

    கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மாடி பஸ் வெஸ்ட்போரோ பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதியது.



    இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆவர். ஒருவர் பஸ்சில் பயணம் செய்தவர்.

    மேலும் இந்த விபத்தில் 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Canada #Ottawa #BusCrash 
    சவுதி அரேபியாவில் இஸ்லாம் மதத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறி, தாய்லாந்தில் தவித்து வந்த இளம்பெண்ணுக்கு கனடா பிரதமர் அடைக்கலம் அளித்துள்ளார். #RahafMohammedalQunun #Saudiasylumseeker #Canadaasylum
    ஒட்டாவா:

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முஹம்மது அல்-குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்ததுடன் பெற்றோருக்கு தெரியாமல் துபாயில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

    அவரது இந்த நடத்தைக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் பலரின் கவனத்தை கவர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் தனது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அஞ்சிய ரஹாஃப், வழியில் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் வந்து சேர்ந்தார்.

    பாங்காக் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் கேட்டு மனு அளித்தார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர், தனது கைபேசி மூலம் அவசரமாக டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். டுவிட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய நிலையை உலக மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஒரு வாரத்தில் அவருக்கு டுவிட்டரில் சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் குவிந்தனர். 

    அகதியாக வந்த தன்னை தாய்லாந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து அகதிகள் முகாமில் அடைக்கலாம். சிறைக்கும் அனுப்பலாம் என்று கருதிய அந்த இளம்பெண், அவர் தங்கியிருந்த அறையின் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தனது டுவிட்டர் பிரசாரத்தை நடத்தி வந்தார்.

    அதேவேளையில், அவருக்கு டுவிட்டர் மூலம் ஏகப்பட்ட கொலை மிரட்டல்களும் வந்ததால் திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தை அவர் முடக்கினார். எனினும், #SaveRahaf என்ற ஹேஷ்டாக் மூலம் அவருக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை பலர் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் #SaveRahaf வைரலானது. 

    இதற்கிடையில், அவருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை அளிக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் பாங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளும் வலியுறுத்தினர். இந்த பிரச்சனை சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்துக்கு சென்றது.

    உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு எந்த நாடாவது அடைக்கலம் அளிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் தாய்லாந்துக்கு புறப்பட்டனர்.



    இந்நிலையில், அவரது நிலைமையை கண்டு மனமிரங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு,  ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தார். இதையடுத்து, மனித உரிமை அமைப்பு அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து போலீசார், குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் ரஹாஃப் டொரான்ட்டோ நகருக்கு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். 

    சர்வதேச மனித உரிமை அமைப்பின் கோரிக்கையை ஏற்று கனடா அரசு இந்த முடிவுக்கு வந்ததாக டுருடேயு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை ஏற்கனவே பூசலில் இருக்கும் சவுதி-கனடா உறவில் மேலும் விரிசலையும், பகையையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்திவரும் சவுதி அரேபியாவில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி நாட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் கனடா அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனடாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் சவுதி துண்டித்து விட்டது. ரியாத்தில் இருந்த கனடா தலைமை தூதரும் திருப்பி அனுப்பப்பட்டார். 

    சவுதி அரசுக்கு எதிராக வலைத்தளங்களில் (பிளாக்) கருத்து வெளியிட்ட பலரை அந்நாட்டு அரசு கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்களில் கனடா நாட்டின் கியூபெக் நகரில் வசிக்கும் ரைஃப் படாவி என்ற பெண்ணின் சகோதரரான சமர் படாவி என்பவரும் ஒருவராவார். 

    சமர் படாவி உள்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தற்போது கனடா அரசு மிக தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

    இத்தனை விவகாரங்களுக்கு இடையில் சவுதி பெண்ணுக்கு கனடா தஞ்சமளித்துள்ள சம்பவம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆத்திரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது. #RahafMohammedalQunun  #Saudiasylumseeker #Canadaasylum #JustinTrudeau #SaveRahaf
    நெதர்லாந்து - கனடா அணிகள் நாளை மோத உள்ள நிலையில் நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் கால் இறுதி ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவுடன் மோத வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    புவனேஷ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். கடைசி இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்படும்.

    மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கோல்கள் அடிப்படையில் இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதேபோல அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மீதியுள்ள 4 அணிகள் 2-வது சுற்று மூலம் நுழையும்.

    கிராஸ் ஓவர் என்று அழைக்கப்படும் 2-வது சுற்றில் பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து- நியூசிலாந்து. பிரான்ஸ், சீனா அணிகளும், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான், நெதர்லாந்து, - கனடா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து- கனடா மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 13-ந்தேதி நடக்கிறது.

    நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணி வெற்றி பெறலாம். இதனால் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோத அதிகமான வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    ஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. #ChinaTelecom #Huawei #MengWanzhou #Canada
    பீஜிங்:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி.

    கடந்த 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டது. வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை, ஹூவாய் நிறுவனம் மீறியதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.

    மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டிருப்பது மனித உரிமை மீறல் என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வான்கூவர் கோர்ட்டில் மெங்வான்ஜவ், கடந்த வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    மெங்வான்ஜவ் சார்பில் தாக்கலான ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்த 2 விவகாரங்களிலும் திங்கட்கிழமை (இன்று) தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவித்தார்.



    இந்த நிலையில் மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று கனடாவை சீனா நிர்ப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த நாட்டுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று பீஜிங்கில் உள்ள கனடா தூதருக்கு வெளியுறவு துறை துணை மந்திரி லீ யுசெங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு அவர் வரவழைக்கப்பட்டுள்ளார்” என கூறிப்பட்டுள்ளது.

    மேலும், “மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்” எனவும் கனடாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், “ அமெரிக்கா சொன்னதற்காக, மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டது, அவரது சட்டப்பூர்வ உரிமைகளை மீறிய நடவடிக்கை ஆகும். இது சட்டத்தை புறக்கணித்த செயல். அர்த்தமற்றது. கைது செய்யப்பட்டுள்ளவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரது சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளுக்கு கனடா பொறுப்பேற்க வேண்டியது வரும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “ சீனாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது” என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார். #ChinaTelecom #Huawei #MengWanzhou #Canada
    உலககோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா, கனடாவுடன் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #worldcuphockey2018
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

    16 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தனது முதல் ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது.

    இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் கனடாவுடன் நாளை மோதுகிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ‘பி’ பிரிவில் இந்தியா, பெல்ஜியம் தலா 4 புள்ளிகளுடனும், கனடா, தென்ஆப்பிரிக்கா தலா 1 புள்ளியுடனும் உள்ளன.

    கோல் வித்தியாசத்தில் இந்தியா +5 என்ற விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. பெல்ஜியம் கோல் வித்தியாசத்தில்+1 என்ற நிலையில் உள்ளது. இதனால் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கால்இறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெல்ஜியம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்து இந்தியா விளையாடும் சூழ்நிலை இருப்பதால் அது சாதகமாக இருக்கும்.

    ஒரு வேளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெல்ஜியம் அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதற்கு ஏற்ப இந்தியா விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாறாக 2-வது அல்லது 3-வது இடத்தை இந்தியா பிடித்தால் 2-வது சுற்றான கிராஸ் ஓவர் முறையில் விளையாட வேண்டும்.

    கோல் வித்தியாசத்தில் இந்தியா வலுவாக இருப்பதால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #worldcuphockey2018
    ×