search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிள்ளையார்பட்டி"

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென்தமிழக குடவரை கோவிலில்களில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பான விகாரி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மூலவர் சன்னதி அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். காலை 10 மணியளவில் வெள்ளி பல்லக்கில் கோவிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க அங்குச தேவரும் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள குள படித்துறைக்கு வந்தனர். அங்கு அங்குச தேவருக்கும் அஸ்திரதேவருக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்று பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கோவில் குளத்தில் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அன்னதானமும் நடந்தது.

    நேற்று பகல் முழுவதும் கோவில் நடை சாத்தப்படாமல் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மாலை விநாயகர், சந்திரசேகரர், கவுரியம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் கோவில் பிரகார வலம் வந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி புத்தாண்டு பஞ்சாங்கமும் வாசிக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அமராவதிபுதூர் ராம.அண்ணாமலைச் செட்டியார், தேவகோட்டை எம்.நாகப்பன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். பொதுவாக கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.

    இதனால் பக்தர்களின் வசதிக்காக கற்பக விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். அதன்படி இந்த ஆண்டும் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

    தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை இந்த நடை திறப்பு நீடிக்கும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு பி.அருணாசலம் செட்டியார், அரிமளம் என்.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினந்தோறும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மாலை கஜமுஹாசுர சம்ஹாரமும், 12-ந்தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் அன்று மாலை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலை 10 மணிக்கு உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் திருக்குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு 3 முறை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவையொட்டி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ×