search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெக்ஸிட்"

    பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. #Brexit #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது.

    ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.

    இதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் தெரசா மே கோரிக்கை வைத்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

    சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இறுதியில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.  #Brexit #TheresaMay  
    பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட பாதிக்கும் குறைவான வேகத்தில் வாகனங்களை மெதுவாக இயக்கி டிரைவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். #BrexitDeal #TheresaMay #GoSlow
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கார் மற்றும் லாரி டிரைவர்களில் ஒருபிரிவினர் ‘கோ ஸ்லோ’ என்ற நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதாவது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட பாதிக்கும் குறைவான வேகத்தில் வாகனங்களை மெதுவாக இயக்கி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



    இதன் மூலம் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தேவையற்ற குழப்பங்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறும் போலீசார், வாகனங்களை மெதுவாக இயக்கும் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.

    அத்துடன், சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் மெதுவாக செல்வதால் பால், இறைச்சி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தில் பாதிப்பு உண்டாகும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.  #BrexitDeal #TheresaMay #GoSlow
    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. #BrexitDeal #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.

    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக் ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் நடந்து வரும் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தெரசா மே, மாநாட்டுக்கு மத்தியில், ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பிரெக்ஸிட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க டொனால்டு டஸ்க் ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்து இந்த 2 வாய்ப்புகளையும் தவறவிடும் பட்சத்தில் மே மாதம் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் அந்நாடு பங்கேற்க வேண்டிய கட்டாயமான சூழல் உருவாகும்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஓட்டெடுப்பு வெற்றிகரமாக நடந்து முடியாத பட்சத்தில் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிப்பது என்பது தாமாகவே சாத்தியமற்றது ஆகும்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள மற்ற 27 நாடுகளும் ஒருமனதாக இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்” என கூறினார்.

    இதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு முன்வைத்த 2 வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரசா மே அறிவித்தார். இது குறித்து அவர், “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்த 3 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போடுங்கள் என கூறுவது தவறானது என உறுதியாக நம்புகிறேன்” என் றார்.

    இதன் மூலம் தெரசா மே, அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்துவார் என தெரிகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #BrexitDeal #TheresaMay #JohnBercow
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.

    ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

    அதேபோல், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.



    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

    அதனை தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.

    அதேசமயம், பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ், அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது” என்றார்.

    மேலும் அவர், “எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஓட்டுபோடும்படி அவர்களை கேட்க முடியாது” என கூறினார்.

    சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

    இதற்கிடையில், சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்திரி சபையை கூட்டி தெரசா மே அவசர ஆலோசனை நடத்தினார். #BrexitDeal #TheresaMay #JohnBercow 
    இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். #Brexit #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தியது. பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்தார். ஆனால் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏனென்றால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்றம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ, பிரெக்ஸிட்டுக்காக ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தமே இறுதியானது என்றும், இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்றும் கூறிவிட்டது. இது தெரசா மேவுக்கு மேலும் தலைவலியாக அமைந்துள்ளது.

    இதற்கிடையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பமாக 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சென்றுள்ள தெரசா மே, அங்கிருந்தபடி தனது கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்து விட்டு பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    அந்த கடிதத்தில் தெரசா மே கூறியிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எம்.பி.க்களின் நிலைப்பாட்டை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நமது நாட்டிற்கு எது சிறந்ததோ அதை செய்யவேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. அதை செய்ய நமக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றாலும், அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறினால் எந்த காரணத்துக்காக மக்கள் நம்மை அவர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அது தோல்வியில் முடியும். மக்களின் பிரகாசமான எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட்டை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். #Brexit #TheresaMay
    பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து 2016-ல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

    இப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

    அவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14-ந் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது.

    இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தக் கருத்துக்கணிப்பை பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு நடத்தியது.
    ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். #TheresaMay #Brexit #UKLeader
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவு அளித்தனர்.

    முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார். ஆனால் இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தெரசா மேவுக்கு சவாலாக உள்ளது.

    ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எப்படி எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

    அதாவது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை என எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பான ஒப்பந்தத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நிகழ்ந்தாக வேண்டும்.

    இதற்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலையும் பெற்றார். ஆனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தினர்.

    இதனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இது தெரசா மேவுக்கு தலைவலியாக அமைந்தது. இதையடுத்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என தெரசா மே வலியுறுத்தினார். ஆனால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் தெரசா மேவின் முடிவை நிராகரித்தனர்.

    மாறாக ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் மறுபேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும்படி எம்.பி.க்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ காலக்கெடு விரைவில் முடிய இருப்பதால் தெரசா மே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்.

    இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தெரசா மே நேற்று பெல்ஜியம் சென்றார். அங்கு அவர் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளாட் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களை தெரசா மே வலியுறுத்துவார் என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் உள்ள சிக்கலுக்கு தீர்வுகாண்பதே இங்கிலாந்தின் நோக்கமாக உள்ளது. இதற்காக பிரதமர் பல்வேறு வழிகளை திறந்து வைத்துள்ளார். அதே சமயம் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவருவது அல்லது புதிதாக ஒரு அம்சத்தை சேர்ப்பது என எதுவாகினும் அது சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TheresaMay #Brexit #UKLeader
    பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எம்.பி.க் களுக்கான அடுத்த மாத விடுமுறையை ரத்து செய்ய தெரசா மே அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BrexitLaw #UKGovernment #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற (பிரெக்ஸிட்) முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலை பெற்றார். இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.

    மார்ச் 29-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக தனிச்சட்டம் உருவாக்கி ஒப்புதல் பெற வேண்டும். எனவே ‘பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிக நேரத்தை செலவிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

    ‘பிரெக்ஸிட்’ தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு எம்.பி.க் களுக்கான அடுத்த மாத விடுமுறையை ரத்து செய்யவும் தெரசா மே அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BrexitLaw #UKGovernment #TheresaMay
    ×