search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைபிடிப்பு"

    சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்த அந்நாட்டு ராணுவம், அவரை சிறைபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. #Sudanesepresident #OmaralBashir
    கர்ட்டோம்: 

    சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   

    போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

    இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையிலான மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.  அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுக்குள் வைக்க தவறியதாக அதிபர் ஒமர் அல் பஷீருக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இந்நிலையில், சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்து சிறைபிடித்துள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக சூடான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி அவாட் இப்னூ கூறுகையில், அதிபர் பதவியில் இருந்து ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை சிறைபிடித்துள்ள நாங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

    சூடான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் பதவி வகித்தவர் ஒமர் அல் பஷிர் என்பது குறிப்பிடத்தக்கது. #Sudanesepresident #OmaralBashir
    நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை சிறைபிடித்து சென்றனர். #FishermenArrested
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 3-ந்தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்மணி, செல்வமணி, தங்கமணி, மகேந்திரன், வீரப்பன், ரவிக்குமார், ரத்தினம் ஆகிய 7 பேர் ஒரு படகிலும், அரசமணி, மனோகரன், சந்திரன், கதிரேசன், சுபாஷ் ஆகிய 5 பேர் மற்றொரு படகிலும், அருணகிரி, மோகன், சேகர், தமிழ்மணி, முருகன், சாந்தன், ஆகிய 6 பேர் இன்னொரு படகிலும் என மொத்தம் 3 பைபர் படகுகளில் 18 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலை எல்லை தாண்டிச்சென்று இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 18 மீனவர்களையும் சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் 3 பைபர் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல் அறிந்த காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தார் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரனுடன் சென்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, மீன்வளத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். #FishermenArrested

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 180 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 விசைப்படகில் சென்ற அதே ஊரை சேர்ந்த பிரசாந்த் (வயது 25), கலைமணி (39), சக்தி (45), விஜயசுந்தர் (25), பிரேம்குமார் (25), தினேஷ் (26), பன்னீர்செல்வம் (27), முத்து (50), சந்திரன் (40), கணேசன் (48), முருகன் (32) ஆகிய 11 மீனவர்களும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது 3 விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 11 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நம் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போதே அவர்கள் (இலங்கை) எல்லையில் மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை கைது செய்கின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது கைது செய்த 11 மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
    கச்சத்தீவு அருகே நாட்டு படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. #FishermenArrested
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல டோக்கன் வழங்கப்படவில்லை. அதே நேரம் நாட்டு படகு மீனவர்களுக்கு டோக்கன் தேவையில்லை என்பதால் அவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர்.

    நேற்று பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் தனது நாட்டுப்படகில் மில்டன், அந்தோணி, ஸ்டீபன்ராஜ் உள்பட 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.

    வழக்கமாக கரையோர பகுதிகளில் மீன்பிடிக்கும் இவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.

    அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #FishermenArrested

    கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 13 நாட்களாகியும் மின் இணைப்பு வழங்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    வடமதுரை:

    தமிழகத்தை புரட்டிபோட்ட கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடை க்கானல், வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம் பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வடமதுரை அருகில் உள்ள சுக்காம்பட்டி, குரும்பபட்டியில் கஜாபுயல் தாக்குதலின்போது ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துவிழுந்தன. அவை 10 நாட்களுக்கு பிறகு அப்புறப் படுத்தப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டது.

    ஆனால் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் இன்னும் மின்வினியோகம் தரப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து பூசாரிபட்டி நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் மின்வினியோகம் கொடுத்து வருகின்றனர். புயல் பாதித்து 13 நாட்களாகியும் இன்னும் இருளில் தவித்து வருகிறோம். எனவே அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    சம்பவ இடத்திற்கு வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு 2 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்வினியோகம் தரப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    அதிகாலையில் பஸ்மறியல் போராட்டம் நடைபெற்றதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். #GajaCyclone
    எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். மேலும் படகை மூழ்கடித்து மீனவர்களை விரட்டியடித்தனர். #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    உடனே இங்கிருந்து செல்லுங்கள் என கூறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் வேர்க்கோட்டைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் படகில் வந்த ராமு (வயது45), காட்டு ராஜா (50), தங்கவேல் (42), முருகன் (30) ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர்.

    தொடர்ந்து வேலாயுதம் படகை ரோந்து கப்பலால் மோதச்செய்து சேதப்படுத்தினர். இதில் படகில் தண்ணீர் புகுந்து மூழ்கியது.



    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே தூத்துக்குடியை சேர்ந்த 8 பேரும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் என 16 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RameswaramFishermen

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதே நேரம் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறி விட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

    இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஐயப்ப பக்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.  #TruptiDesai #Sabarimala

    பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்தனர். #IndianFishermen #Pakistan
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் 16 மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். #IndianFishermen #Pakistan 
    ஆப்கானிஸ்தானில் அதிபர் அறிவித்த போர்நிறுத்தத்துக்கு இடையில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

    நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்தார். 

    இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், அந்நாட்டின் குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை சென்ற மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து மடக்கினர். அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சுமார் 170 பேரை கடத்திச் சென்றனர். 

    பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர்? என்பது தெரியாத நிலையில் அவர்களை மீட்க குன்டுஸ் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த வேட்டையில் பிணைகைதிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் தலிபான்களின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் 7 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை மீட்பதற்காக அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மற்ற பஸ்களை பயணிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க மாநில தலைவருமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சேலம் மாவட்டத்தில் நேற்று சில அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த காரணங்களால் மாலையில் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பஸ்களுக்காக காத்திருந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டு சென்ற மற்ற பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பஸ் டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசாருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பேரில் மேட்டூருக்கு 3 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    ×