search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமச்சிவாயம்"

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    மணவெளி தொகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம், எடையார்பாளையம், தவளகுப்பாம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், அபிஷேகப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது. இலவச அரிசி, முதியார் பென்‌ஷன், சென்டாக் உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். மக்கள் மீது அக்கறையும், பரிவும் கொண்ட கூட்டணி காங்கிரஸ் கூட்டணி.

    இந்தியாவை மீண்டும் ஒரு முறை நரேந்திர மோடி ஆட்சி செய்ய அனுமதித்தால் அனைவரும் அடிமையாகி விடுவோம். என்ஆர்.காங்கிரஸ் பயந்துபோய் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை பற்றி எந்த கவலையும்படாத ரங்கசாமி தேர்தல் என்றவுடன் மக்களிடம் வந்துள்ளார்.

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான். எனவே அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கஜா புயலை எதிர் கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் புதுவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #gajacyclone #namachivayam #rain

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலை எதிர் கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. பொதுப்பணி, மின், உள்ளாட்சி, தீயணைப்பு, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.

    புயலால் 11 இடங்களில் மரம் விழுந்ததாக புகார் வந்தது. உடனடியாக அந்த பகுதியில் மரங்களை அப்புறப்படுத்தி உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரியளவில் புதுவையில் சேதம் ஏற்படவில்லை.

    காரைக்காலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு அமைச்சர் கமலக் கண்ணன் முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் காரைக்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக பிரதான சாலைகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    பின்னர் உள்புற சாலைகளில் மரங்களை அகற்றுவோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதை சீரமைக்க புதுவையில் இருந்து 30 பேர் கொண்ட மின்சார குழு காரைக்கால் சென்றுள்ளது. அங்கு கூரை வீடுகள் சேதமடைந்துள்ளது.

    இன்று மாலைக்குள் காரைக்கால் மாவட்டத்தை சகஜநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ஜென ரேட்டர்களை இயக்கி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    புதுவையிலும் ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடர் மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம், தலைமை என்ஜினீயர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் இன்று காலை வில்லியனூர் தொகுதி முழுவதும் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டார். அப்போது எஸ்.எஸ்.நகர், உத்திரவாகினி பேட் ஆகிய பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கழிவு நீர் வாய்க்காலில் தூர் வாரிய மண் அப்பகுதியிலேயே குவிக்கப்பட்டு இருந்ததை கண்ட அமைச்சர் நமச்சிவாயம் அதனையும் அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சர் நமச்சிவாயத்துடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையன் ஆறுமுகம் உடன் சென்றார். #gajacyclone #namachivayam #rain

    கவர்னர் கிரண்பேடி தன்னுடைய முயற்சியால் மின்கட்டண பாக்கி வசூலாகி உள்ளதாக பொய்பிரசாரம் செய்து வருகிறார் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை அரசு எடுத்த நடவடிக்கையாலும் பெரும் முயற்சியாலும் மட்டுமே மின்துறை அதிக அளவில் மின் கட்டண பாக்கி வசூலாகி உள்ளது. ஆனால் கவர்னர் கிரண்பேடி தன்னுடைய முயற்சியால் மின்கட்டண பாக்கி வசூலாகி உள்ளதாக பொய்பிரசாரம் செய்து வருகிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகத்தான் இது உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியாகும்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்.ஆர். காங்கிரசிடம் இருந்து புதுவை தொகுதியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், எங்கள் தொகுதியை ஏன் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும்?

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக் வருகிற 5-ந் தேதி புதுவை வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாநில பிரதிநிதிகள் பட்டியலை அறிவிக்கிறார்.

    உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வட்டார, மாவட்ட தலைவர்கள் பட்டியலுக்கு ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிக்க உள்ளோம். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கோப்பு தற்போது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக உள்ளார்.

    4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதியை நிறைவேற்றாததால் பிரதமர் மோடியை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி

    மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாத வக்கற்ற அரசாக உள்ளது. மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செய்தது என்ன?

    இந்திய நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல ஒரு திட்டத்தையாவது மோடி நிறைவேற்றினாரா? அனைவரது வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னாரே செய்தாரா? வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தாரா? வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தாரா? விவசாயிகளின் குறைகளை தீர்க்க திட்டங்கள் கொண்டுவந்தாரா? வியாபாரிகளின் நலனை காத்தாரா? தனி நபர் வருமானத்தை உயர்த்தினாரா? பெண்கள் நல முன்னேற்றத்தில் அக்கறை காட்டியது உண்டா? மேக் இன் இந்தியாவையும், டிஜிட்டல் இந்தியாவையும் உருவாக்கினாரா? இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பாடுபட்டாரா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் இந்தியா முழுவதும் பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.

    புதிய இந்தியாவை உருவாக்கி சாதனைகள் பலபடைப்பேன் என்று கூறிய பாரத பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டுவந்து அனைத்து தரப்பு மக்களையும் வங்கி வாசல்களில் அலையவிட்டது தான் உங்கள் சாதனையா?,

    ஜி.எஸ்.டி.வரியை அமுல் படுத்தி வியாபாரிகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியது தான் உங்கள் சாதனையா, அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி அன்றாட மக்களை அல்லல் பட வைத்தது தான் சாதனையா?

    கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், பெட் ரோல், கேஸ் சிலிண்டர் விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியது தான் சாதனையா? மகளிர் முன்னேற்றத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை குறைத்தது தான் சாதனையா, நாடெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இரக்க மற்ற அரக்கர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது தான் சாதனையா?

    கவர்னர்களை தங்களுடைய கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஜனநாயக படுகொலைகளை நித்தம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத வாத மத்திய அரசுக்கு மக்கள் சக்தியால் நாம் பாடம் புகட்டவேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளாக இந்திய தேசத்தை பின்னோக்கி அழைத்து சென்று நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் கேள்விக் குறியாக்கி ஒட்டு மொத்த இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ராகுல்காந்தி ஆணைப்படி நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் திரளாக பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட் டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீர் வளத்தையும், நில வளத்தையும் சூறையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தூத்துக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

    கடந்த 100 நாட்களாக ஒட்டுமொத்த மக்களும் மாசு ஏற்படுத்தி உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் அபாயமிக்க ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காணாமல் தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தன போக்கோடு செயல்பட்டு போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேளையில் ஈடுபட்டு உள்ளது.

    இதன் விளைவாக ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல் காவல்துறை மூலமாக கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    மிருக வெறிபிடித்து 13 அப்பாவி மக்களை கொலை வெறியோடு கொன்று குவித்துள்ளனர். இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான மாபாதக செயலை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

    உண்மையாக போராடும் மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மக்கள் விரோத ஆட்சிகள் தூக்கி எறியப்படும் என்பதை தமிழகம் மற்றும் மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் நாளை புதுவையில் நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் ஜனநாயக விரோத போக்கை பா.ஜனதா அரசு கடைபிடிக்கிறது என்று மாநில காங். தலைவர் நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா ஆட்சியமைக்க துணைபோன கவர்னரையும், மத்திய அரசையும் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னரை ஏஜெண்டாக நியமித்து தொல்லை கொடுத்து வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரசும், ஜனதாதளமும் கூட்டணி அமைத்து 116 இடங்களை பெற்றுள்ளனர்.

    ஆனால், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் பெரும்பான்மை எனக் கூறி பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார்.

    பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜனதா குறைந்த இடங்களை பெற்றும் அதிகாரத்தை பயன்படுத்தியும், பணம் கொடுத்தும் மாற்று கட்சியினரை இழுத்து ஆட்சி அமைத்துள்ளனர்.

    மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜனநாயக விரோத போக்கில் ஈடுபடுகின்றனர். தங்கள் விருப்பத்தை ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிக்கொள்கின்றனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக ஆட்சியமைக்கும் பணியை பா.ஜனதா செய்கிறது.

    மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் மத்திய அரசு ஏஜெண்டாக செயல்படும் கவர்னர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×