search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிபியா"

    லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 21 பேர் பலியாகினர். #LibyaConflict
    திரிபோலி:

    வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011-ம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.

    அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு, கடத்தி கொலை செய்யப்பட்டார். அத்துடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது.

    எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது. இதனால் அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டது.

    இது ஒருபுறம் இருக்க ஐ.எஸ். உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் லிபியாவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சிகர லிபிய ராணுவத்தின் தளபதி காலிபா ஹிப்தர் தனது படைகளை தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறும்படி கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படை வீரர்கள் திரிபோலியில் குவிந்தனர். எனினும் புரட்சிகர லிபிய ராணுவத்தினர் அங்கு விரைந்தனர்.

    கடந்த சில தினங்களாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அதே சமயம் இருதரப்பு மோதலில் 14 வீரர்களை இழந்துவிட்டதாக புரட்சிகர லிபிய ராணுவம் கூறுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருதரப்பினர் இடையிலான கடுமையான மோதல் காரணமாக தலைநகர் திரிபோலியில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.

    இதற்கிடையில், திரிபோலியின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ தளத்தை புரட்சிகர லிபிய ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து ராணுவ தளத்தை மீட்கும் முயற்சியில் அரசு படைகள் ஈடுபட்டுள்ளன.
    லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். #ISMilitants #Libya
    திரிபோலி:

    லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை கடந்த ஆண்டு ராணுவம் கைப்பற்றியது. ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த பகுதியில் அவ்வப்போது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.



    இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு ராணுவ வீரர்களை கொன்றதாகவும், சிலர் கடத்திச் சென்றதாகவும் ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதனை மாவட்ட அதிகாரி உறுதி செய்தார்.

    ஐஎஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் ராணுவத்திடம் உள்ள பயங்கரவாதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்தார். #ISMilitants #Libya
    லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 174 பேர் தாங்களாக முன்வந்து சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பி உள்ளனர். #MigrantsDeported #Libya
    திரிபோலி:

    வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகளில் பயணிக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். அவர்களை லிபிய பாதுகாப்பு படையினர் மீட்டு தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

    அதேபோல் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்கள் நிரம்பி வழிந்தன.



    இதையடுத்து, லிபியாவில் சிக்கித் தவிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) செய்தது. இதன்மூலம் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

    அவ்வகையில் நேற்று நைஜிரியாவைச் சேர்ந்த 174 பேர் லிபியாவில் இருந்து தாயகம் திரும்பியதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 32 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றிய அறக்கட்டளை நிதி உதவி பெற்று தங்கள் நாடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் ஐஓஎம் கூறியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்கு ஐஓஎம் திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MigrantsDeported #Libya

    லிபியா தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Libya #RocketAttack #TripoliAirport
    திரிபோலி:

    லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற ஒரே விமான நிலையமான மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவற்றில் ஒரு ராக்கெட் மத்திய தரைக்கடலில் போய் விழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த ராக்கெட் வீச்சை நடத்தியது யார் என உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என மட்டிகா விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

    இந்த ராக்கெட் தாக்குதல் எதிரொலியாக, எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து திரிபோலிக்கு வந்து கொண்டிருந்த லிபிய விமானம் மிஸ்ரட்டா நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நகரம் திரிபோலியில் இருந்து 190 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.  #Libya #RocketAttack #TripoliAirport 
    லிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். #Libya #BoatAccident
    கெய்ரோ:

    லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக பலி ஆகினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.  #Libya #BoatAccident
    லிபியாவில் தீவிரவாதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்த 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். #Libya
    திரிபோலி:

    லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் சர்வாதிகாரி கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தினர். அதில் கடாபி கொல்லப்பட்டு அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தீவிரவாத குழுக்களின் கை ஓங்கியது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்து 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

    தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக் காவலர்கள் அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடக்கவில்லை. தப்பி ஓடிய கைதிகளை தடுத்து நிறுத்தவில்லை.

    சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆதரவாளர்கள் ஆவர்.

    கடந்த ஒருவாரமாக லிபியா தலைநகரான திரிபோலியில் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது. #Libya
    லிபியா படகு விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. சபை ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. #Libyaboattragedy #Boatsink
    திரிபோலி:

    ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29-ந் தேதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்றபோது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.

    இந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்ததும், கடல் சீற்றமும்தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    இந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

    படகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா? அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா? என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார். #Libyaboattragedy #Boatsink #tamilnews 
    ×