search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடஒதுக்கீடு"

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு புதிய வாக்குறுதிகள் வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 20 பேர் கொண்ட குழுவை பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அமைத்தனர்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முக்கிய இடம் பிடித்திருந்தனர்.

    நாட்டின் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 15 துணைக் குழுக்கள் அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த மாதமே பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவு பெற்றது.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப் பத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.

    தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது:-

    ஏழை-எளியவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து கொடுத்தது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, ஏழைகளின் அரசாக திகழ்ந்தது. சுமார் 50 கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த 50 முக்கிய முடிவுகளும் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதாக அமைந்துள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் மிகப்பெரிய பலன்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பணியாற்ற 6 கோடி பேரிடம் யோசனை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இதையடுத்து மதியம் 12 மணி அளவில் 45 பக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்தியா விரைவில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதால், பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.

    * 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.

    * விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.

    * இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.

    * விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.

    * அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.

    * சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.

    * உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.

    * ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.

    * கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

    * காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

    * 2022-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் 2 மடங்காக உயர்த்தப்படும்.


    * முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்கு முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

    * நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.

    * நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

    * பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.

    * 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.

    * பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

    * மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.

    * மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.

    * பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.

    * தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.

    * குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.

    * அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.

    * 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.

    * 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.

    * ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.

    * நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.

    * நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.

    * மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.

    * நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.

    * அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

    * பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015 வரை சில மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    அதில் ‘தமிழக அரசு கடைபிடிக்கும் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக செய்து வருவது போல மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றி அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி அடிப்படையில் உரிய மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். பின்னர் விரிவான இறுதி விசாரணைக்காக வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremeCourt
    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக் கீட்டை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன் நேற்று(நேற்றுமுன்தினம்) விசாரணைக்கு வந்தன.

    அப்போது, வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “இடஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதம் என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விகளுக்கு மார்ச் 14-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    தமிழக அரசு இந்த வினாக்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கத்தை அளித்தால் மட்டுமே 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். தமிழக அரசிடம் இப்போது உள்ள புள்ளிவிவரம் என்பது 1931-ம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய அறிவுரையின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss
    ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவர்கள் மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #Rajasthangovt #5pcquota #Gujjarsquotabill
    ஜெய்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
     
    இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

    இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும்  ரெயில்  மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  ரெயில்கள் செல்லும் தண்டவாளங்களின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் கடந்த 6 நாட்களாக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும்போது எங்களுக்கு ஏன் 5 சதவீதம் வழங்க கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


    பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மறியல் செய்தும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த போராட்டம் மாநிலம் தழுவிய வன்முறையாக மாறும் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தற்போது அம்மாநிலத்தில் 21 சதவீதமாக இருக்கும் இட ஒதுக்கீட்டு அளவை 26 சதவீதமாக உயர்த்தும் இந்த சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் எரிசக்தித்துறை மந்திரி பி.டி.கல்லா தாக்கல் செய்தார்.  #Rajasthangovt #5pcquota  #Gujjarsquotabill
    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். #Gujjar #Protest #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்-மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் ரெயில் மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ரெயில் மறியல், தர்ணா போன்ற போராட்டங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.



    டெல்லி-மும்பை, டெல்லி-ஜெய்ப்பூர் ரெயில் பாதைகளிலும் போராட்டம் நடந்ததால் அந்த வழியாக செல்லும் 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போராட்டம் குறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மறியலை கைவிடவேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி பிரதமரிடம் எடுத்துச்செல்வேன்’ என்றும் கூறினார்.

    போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல முதல்வரும், நல்ல பிரதமரும் கிடைத்து உள்ளார்கள். பிரதமரின் கவனத்துக்கு எங்கள் கோரிக்கையை கொண்டுசெல்லவே போராடுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ள நிலையில் நாங்கள் 5 சதவீத இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்’ என்றார். 
    பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. #SupremeCourt #10pcreservation #economicalweakersection
    டெல்லி:

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சமத்துவத்துக்கான இளைஞன் (Youth for Equality) என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #10pcreservation #economicalweakersection 
    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #RajyaSabha #10pcquota
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் நேற்று தாக்கல் செய்தார்.

    இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டது.

    நேற்று மாலை 6 மணியில் இருந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் மேலாக நடைபெற்ற இந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட சிலர் இரவு 10 மணியளவில் மக்களவைக்கு வருகை தந்தனர். இறுதியில், இந்த மசோதாவை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



    இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்தார்.
       
    இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்த புதிய சட்டத்தின் மூலம் சாதி ஏற்றத்தாழ்வுகளை கடந்த வகையில் ஒவ்வொரு ஏழையும் சமவாய்ப்புகளை பெற்று கண்ணியமான வாழ்க்கையை அடைய முடியும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதைத்தொடர்ந்து, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக நேற்றுடன் முடிவடைய இருந்த மாநிலங்களவை கூட்டம் இன்றுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும். தேவைப்பட்டால் வாக்கெடுப்பும் நடத்தப்படலாம்.

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறுமா? அல்லது, ஏற்கனவே இங்கு முடங்கி கிடக்கும் முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களைப்போல் இதுவும் முடங்கி விடுமா? என்ற கேள்வி அரசியல் நோக்கர்களை ஆட்கொண்டுள்ளது.

    244 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 74 ஆக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 50 எம்.பி.க்களும் இதர கட்சிகளுக்கு 120 எம்.பி.க்களும் உள்ளனர்.

    வழக்கம்போல் இந்த மசோதாவையும் காங்கிரஸ் மாநிலங்களவையில் எதிர்த்தால் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அக்கட்சி மக்களின் பகையை சம்பாதிக்க நேரிடும். இதனால், அவர்கள் வாயை மூடிக்கொண்டு இந்த மசோதாவை ஆதரித்தே தீர வேண்டும் என பா.ஜ.க. மனக்கணக்கு போடுகிறது.

    அப்படி, ஒருவேளை காங்கிரஸ் இதை ஆதரித்தாலும் மற்ற சிறிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மை ஆதரவை பெறாவிட்டால் இந்த மசோதா வெற்றிபெறாது என்றும் கருதப்படுகிறது.

    குறிப்பாக, தேர்தல் ஆதாயத்துக்காக மோடி அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். எனினும், இந்த மசோதாவை ஆதரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோல், வேறுசில மாநில கட்சிகளின் மனநிலையும் வெவ்வேறு விதமாக இருப்பதால் நீட்டிக்கப்பட்ட இன்றைய மாநிலங்களவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. #RajyaSabha #10pcquota #economicallybackward
    உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #AnbumaniRamadoss #PMK
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; இதற்காக இடஒதுக்கீட்டு உச்சவரம்பு இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 60 சதவீதம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் என மொத்தம் 49.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    இப்போது இந்த பிரிவினருடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதென பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மிகக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீடு வழங்க வசதியாக அதை 60 சதவீதமாக உயர்த்தவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

    எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ம.க எதிர்க்கவில்லை. மாறாக, அதற்காக கடை பிடிக்கப்படும் வழிமுறைகளைத்தான் எதிர்க்கிறது.

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழியில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (4)-வது பிரிவில், ‘‘சமூக நீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தடை இல்லை’’ என்று தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையை வேண்டுமானால் மாற்றியமைக்கலாம். ஆனால், சமூகப் படிநிலையை மாற்ற முடியாது.

    இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கைத்தூக்கி விடுவது தான். இந்தியாவில் காலங்காலமாக சமூகப் படிநிலையின் அடிப்படையில் தான் மக்களுக்கு கொடுமைகளும், இழிவும் இழைக்கப்பட்டு வந்ததே தவிர, பொருளாதார அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு செய்யப்படும் பரிகாரம் தான் இட ஒதுக்கீடு. இது அப்பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, உரிமை ஆகும்.

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற தத்துவத்தை உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை. 1991ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.

    ஆனால், அத்தகைய ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்து 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பல மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும் அவற்றை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

    சமூக நீதி தழைத்தோங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்தகைய இட ஒதுக்கீடு மக்கள் மன்றத்திலும் செல்லுபடியாகவில்லை. 1980ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், குடும்ப ஆண்டு வருமானம் 9000 ரூபாய்க்கு குறைவாக உள்ள அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அதற்கு சாதி தடையாக இருக்காது என்று ஆணையிட்டார். ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனால், உடனடியாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, பழைய முறையை மீண்டும் கொண்டு வந்தார்.

    மத்திய அரசு செய்யவுள்ள திருத்தத்தின்படி, ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிரீமிலேயர் என்ற பெயரில் ரூ.8 லட்சத்துக்கு கூடுதலான வருமானம் கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறாக இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படைத் தகுதியை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், உயர்சாதியினருக்கும் ஒரே அளவில் தீர்மானிப்பது எந்த வகையான சமூக நீதி? இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், மற்ற பிரிவினருக்கும் காட்டப்படும் பெரும் பாகுபாடு ஆகும்.

    உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    மாறாக, 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள் தொகைக்கேற்ப 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #PMK

    தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar
    சென்னை:

    சட்டசபையில் இன்று அமைச்சர் டி.ஜெயக்குமார் 10 சதவீத இடஒதுக்கீடு குறுத்து பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பற்றிய செய்தியை நாங்களும் படித்தோம். அதைப்பற்றிய சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    1921-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சமுதாய இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. 50 சதவீத இட ஒதுக்கீடு முன்பு இருந்தது. பின்னர் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

    அம்மா முதல்வராக இருந்தபோது டெல்லி சென்று அன்றைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தார். அப்போது நான் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தேன்.

    சமூகநீதி காத்த புரட்சித் தலைவியின் நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் பாராட்டின. திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சமூகநீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினார்.

    புரட்சித்தலைவி அமல்படுத்திய 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராமல் தமிழக அரசு பாதுகாக்கும். மத்திய அரசின் கொள்கை முடிவு பற்றி அரசு ரீதியான எந்த தகவலும் வரவில்லை. அதை அறிந்த பிறகு எங்கள் கருத்தை தெளிவுபடுத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterJayakumar
    அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #SportspersonsQuota #EdappadiPalaniswami
    சென்னை:

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    இதையடுத்து தமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசும்போது, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடானது 3 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

    ‘தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர அரசு அனைத்து உதவிகளையும் செய்யும், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களின் பலத்தை மதிப்பீடு செய்து திட்டமிட வேண்டும். இந்த அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு  நிதி உதவி வழங்கி வருகிறது.

    சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்திற்கு விளையாட்டு மைதானம், உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.’ எனவும் முதல்வர் பேசினார்.

    விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். #SportspersonsQuota #EdappadiPalaniswami
    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று 15-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலை மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா இன்று சந்தித்தார். #HardikPatel #fastforquota
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்த நிலையில் நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்று பதினைந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் மந்திரியுமான ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர். #HardikPatel #fastforquota
    ×