என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 116343"
- நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பௌர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
சாரதா நவராத்திரி
ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு . சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.
கன்னியர்கள் வழிபாடு
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
கொலுவைத்து கொண்டாட்டம்
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே. ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.
நவசக்திகளுக்கான வழிபாடு
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.
வீரம் தரும் துர்க்கை
துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. கொற்றவைஎன்றும் காளி என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
செல்வம் தரும் லட்சுமி
இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.
சகல வித்தை தரும் சரஸ்வதி
சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர். சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.
விஜயதசமி
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை. வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐயதசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.
- “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார்.
- இதனால் சிவபெருமானின் நடனத்தை, நந்தி தேவரால் காண முடியாமல் போய்விட்டது.
செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது.
ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, "சிங்கி" என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு மிருதங்கம் வாசிப்பதில் லயித்துப் போனார்.
இதனால் சிவபெருமானின் நடனத்தை, நந்தி தேவரால் காண முடியாமல் போய்விட்டது. தான் மெய்மறந்து மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருந்த காரணத்தால், சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து கவலையுற்றார். பின்னர் சிவபெருமானிடம், தன்னல் அவரது நடனத்தை காணமுடியாது போனது பற்றி எடுத்துரைத்து மீண்டும் தனக்கு ஆனந்த நடனத்தை காட்டியருளும்படி வேண்டி விண்ணப்பித்தார்.
நந்தியிடம், அவரது தொழில் பக்தியை வெகுவாக பாராட்டிய சிவபெருமான், "பூலோகத்தில் அவளூர் என்ற இடத்தில் உள்ள தலத்திற்கு சென்று வணங்கி வா! அங்கு யாம் வந்து உனக்கு ஆனந்த நடனத்தை புரிந்து அருள்புரிவோம்" என்று கூறினார். இதனை கேட்டதும் சற்றும் தாமதிக்காத நந்தி தேவர் உடனடியாக அவளூர் சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்ய தொடங்கினார். அவரது இடைவிடாத பூஜையின் காரணமாக அகமகிழ்ந்த ஈசன், தனது அன்பரின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக அந்த தலத்திற்கு வந்து நந்தி தேவருக்காக மட்டும் மீண்டும் தனது நடனத்தை ஆடிக்காட்டினார்.
"சிங்கி" என்ற நந்தியார் வணங்கிய தலம் என்பதால் இங்குள்ள இறைவன் சிங்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் இறைவியாக காமாட்சி என்ற நாமத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறார். நந்தியின் வேண்டுதலை நிறைவேற்றியது போல் நம்முடைய வேண்டுதலையும் நிச்சயம் சிங்கீஸ்வரர் நிறைவேற்றுவார்.
- சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம்.
- இன்று உபவாசம் இருந்து சிவபெருமானை மனதார வழிபட வேண்டும்.
குருவிற்கு உகந்த நாளான வியாழக் கிழமையில் வருகிற பிரதோஷம் என்பதால் குருவார பிரதோஷம் என்று கூறப்படுகிறது. சிறந்த பலன்களைப் பெற சிவபெருமானை வழிபட வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். இந்த நாளில் இறைவனை வழிபாடு செய்ய சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். "அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று" என்கிறார் மாணிக்கவாசகர். அதில் வைகாசியில் வருகிற, இந்த குருவார பிரதோஷத்தில் இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றியை அடைவீர்கள். திருமண தடை ஏற்படுபவர்கள் குருவார பிரதோஷமான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
மகா பிரதோஷ வமர்ச்சயத என்றபடி திரயோதசி மாலையில் நிகழும் மகா பிரதோஷ காலத்தில் ஒவ்வொருவரும் சிவனை தரிசித்து மந்திரம் சொல்லி வணங்க வேண்டும்.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவபெருமானை மனதார வழிபட வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்களை சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம்.
இன்று மாலை வீட்டில் அம்பிகையுடன் கூடிய பரமேஸ்வரசாம்ப பரமேஸ்வரராக முறையாக பூஜை செய்து பஞ்சாட்சர மந்திரம் சொல்லி சிவாலயம் சென்று தம்பதிகளாக சிவனை தரிசனம் செய்ய வேண்டும். இதனால் தேவையான சமயத்தில் தேவையான எண்ணங்கள், தீர்வுகள் மனதில் தோன்றி நல்லவை நடக்கும்.
இன்று கவாமயன துவாதசி
வைகாசி மாத சுக்லபட்ச துவாதசி அன்று காலையில் திரி விக்ரம் மூர்த்தியான ஸ்ரீ மகாவிஷ்ணுவை துளசி, மல்லிகை பூ ஆகியவற்றால் சகஸ்ர நாமார்ச்சனை செய்து மாம்பழம் நிவேதனம் செய்து பூஜை செய்து ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். திரிவிக்ரம் மூர்த்தியை வணங்குவதால் யாகங்களில் சிறந்த தான கவாமயனம் என்னும் யாகம் செய்த பலன் சுலபமாக கிடைக்கும். அத்துடன் அனைத்து சுகமும் கிடைக்கும்.
- மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
- ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்.
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆன்ம ரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
- சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன.
- ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
இந்து புராணங்களின்படி சிவபெருமானே மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகிறார். இவருடைய நெற்றிக்கண் உலகில் உள்ள தீமைகளை அழிக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.
சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன. உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் சிவபெருமான், ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
சிவனருள் பெற விரும்புவோர் எட்டு விதமான விரதங்களை மேற்கொண்டு நன்மை பெறலாம்.
1. சோமவார விரதம் – வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இருப்பது
2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியன்று (திருக்கார்த்திகை) இருப்பது
3. திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது
4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வருவது
5. கல்யாண விரதம் – பங்குனி உத்திர நாளில் கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் – தைப்பூசத்தன்று மேற்கொள்ளும் விரதம்
7. அஷ்டமி விரதம் – வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று அனுஷ்டிப்பது.
8. கேதாரகவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி அல்லது அதன் மறுநாள்) இருப்பது...
- வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம்"ரிஷப விரதம்" ஆகும்.
- இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.
சிவபெருமானை வணங்கும் "ரிஷப விரதம்" குறித்தும், அவ்விரதத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
ரிஷப விரதம் என்பது சிவபெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் அணுக்க தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும்.
வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது. ரிஷப விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்ததும் மனதிற்குள் நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும். பின்பு குளித்து முடித்ததும், உணவு ஏதும் உண்ணாமல் உங்களிடம் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷபாரூடர் விக்ரகம் இருந்தால், உங்கள் பூஜையறையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, சிவனுக்கு பிடித்த அரிசி கொண்டு செய்யபட்ட அன்னங்கள் மற்றும் பாயசத்தை நைவேத்தியமாக வைத்து சிவமந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்.
வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும்.
இந்த விரதம் கடைப்பிடித்தால் வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
இந்த விரதத்தினால் வாகனயோகம் அடையலாம். புதிய வாகனம் வாங்குவோர் அல்லது பதிவு செய்வோர்க்கு நற்பலன் உண்டு. ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது.
இத்தினத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டாகும். பின்பு உங்களால் முடிந்த அளவிற்கு அக்கோயில்களில் சிவனடியார்களுக்கும், இன்ன பிற பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து அந்த பக்தர்களுடன் சேர்ந்து நீங்களும் பிரசாதங்களை சாப்பிட வேண்டும். பிறகு சிவ சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பி, சிவனை வழிபட்டு இரவு உணவாக பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ரிஷப விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும், அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும், சிவயோகி ஆகவும் கூடும். அஷ்டதிக் பாலகர்கள், கருட பகவான் போன்றோர்கள் இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டித்து சிவனிடம் பல வரங்களை பெற்றனர்.
- கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர்.
- கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும்.
கணவன்- மனைவி இடையே அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்க செய்யும் விரதம் இது. கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்சி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் க்ருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும்.
முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம். கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும்.
எப்போதும் குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவனுக்கு செய்த அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இந்த விரதத்தை கடை பிடிக்க ஒரு கலசத்தில் கேதாரேஸ்வரரை அழைக்க செய்ய வேண்டும்.
அத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்க வேண்டும். பிறகு பூஜை செய்த 21 முடிச்சு உள்ள சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு 21 சுமங்கலி பெண்களுக்கு 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்குதல் வேண்டும். அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவ பார்வதி அருள் கிட்டும் என்கிறது கந்த புராணம்.
- தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை.
- சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
நரக உபாதைகளிலிருந்தும் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது பாத்ம புராணம்.
இதன்படி தீபாவளிப் பண்டிகை தினத்தன்று அதிகாலை (சுமார் 4.30 மணிக்கு முன்பாக) அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். காலை எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு, சாமி சன்னதியில் கோலம் போட்ட ஆஸனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, பாட்டி, தாயார், மாமியார், அக்கா முதலிய வயதான சுமங்கலிப் பெண்கள் மூலம் தலையில் நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைக்கச் சொல்லி, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நாயுருவிக் கொடியால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்துவிட்டு, இலைகள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை வணங்கி புதிய ஆடைகள் (ஆடைகள்) பெற்றுக் கொண்டு, அவற்றை உடுத்திக்கொண்டு, விபூதி குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிதளவு பட்டாசு கொளுத்த வேண்டும்.
இடையிடையே இனிப்புகள் சாப்பிட்டு, உறவினர்களின் ஆசிபெற்று அனைவருடனும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்தல் வேண்டும். நாளை நேரம் கிடைக்கும்போது ஆலயம் சென்று வர வேண்டும். மதியம் சாப்பிட்டு விட்டு மாலையில் மகாலட்சுமி பூஜை செய்து, தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்தல் வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை. இதை சாஸ்திரப்படி அனுஷ்டித்தால் இந்த சந்தோஷம் வருஷம் முழுவதும் நீடிக்கும்.
தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் தரித்ரத்தைப் போக்கடிக்கும் நாள் என்று பெயர். அதாவது சாஸ்திரத்தில் நாயுருவிக்கொடிக்கு ஏழ்மையைப் போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கும் சக்தியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நாயுருவிக் கொடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை, நீராடல் செய்யும்போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும். இதனால் நரக பயமும், நரகத்துக்கு நிகரான துக்கமும், நம்மை விட்டு விலகும்.
யம தர்ப்பணம்
தீபாவளியன்று யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று காலை புனித நீராடல் செய்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஆஸ்வயுஜ கிருஷ்ண சதுர்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி மஞ்சள் கலந்த அட்சதையால் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருதர்ப்பணம் போல் எள்ளு சேர்த்தல், தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்.
மாலை தீபம் ஏற்றுங்கள்
தீபாவளியன்று மாலை உங்கள் வீட்டிலும் அருகிலுள்ள சிவன், விஷ்ணு அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆகவே பாவங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் வராது. எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
மகாலட்சுமி பூஜை
சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கணக்கு எழுதப்பயன்படுத்தப்படும் பேனா பென்சில் முதலியவற்றையும் ஓர் தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும், அத்துடன் கணக்குகள் எழுதப்பயன்படுத்தப்படும் நோட்டுகளில் சரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து இந்திரனையும், குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.
- அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம்.
- சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும்.
தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம்.
இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார்.
சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.
இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.
சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை) யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்.
- இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
- “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.
திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.
இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.
மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.
ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.
இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
ஆகாயம் - சிதம்பரம் கோவில்
நீர் - திருவானைக்காவல் கோவில்
நெருப்பு - திருவண்ணாமலை கோவில்
"மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
"ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.
இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.
இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.
கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
ஓம் நம சிவாய!...
- காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன.
- வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது.
திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற்றொன்று சிவப்பிரகாசரும் அவரது தம்பியும் சேர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் சீகாளத்தி புராணம் என்னும் பெயரில் இயற்றியது
இது பாயிரமும் 33 அத்தியாயங்களும் கொண்ட பெரிய நூல். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில:
தேவாரம் பாடிய மூவர், திருவாதவூர் அடிகள், நூலாசிரியரின் குரு சத்திய ஞானி, திருப்பணி செய்த யாதவ வேந்தன், வடநூலைத் தனக்கு மொழிபெயர்த்து உதவிய சங்கரநாராயணன் என்னும் வாரைவாழ் புராணிகர் முதலானோருக்குப் பாயிரப் பகுதியில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.
சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆடி உத்திரம், ஆவணி ஓணம், புரட்டாசி புரட்டை, ஐப்பசி அச்சுவதி, கார்த்திகைக் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் காளத்திநாதரை வழிபடுவதற்கு உரிய நன்னாள்கள் எனக் கூறப்பட்டுள்ளன.
1 போற்றிப் பாடல்
நீயே வினைமுதல் நீயே கரணமும்
நீயே கரணம், நீயே காரியம்
நீயே தருபவன், நீயே சான்று உரு
நீயே இவையுள் நீங்கினை சயசய
2 நல்லொழுக்கம் கூறும் பாடல்
ஓதனத்துக்கு உரியது ஒருபொருள்
யாது உண்டு என்னதை இத்துணை நாளைக்கும்
போதும் ஈது என்று உவந்து பொறுத்துத்
தீது இல் தானியம் ஓம்புக சீர் பெற.
- தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.
- பல்லவர் காலத்தில் இருந்த கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர்.
திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோவிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.
வரலாறு
இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோவிலான காளஹஸ்தி கோவில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப்பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோவிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோவிலுக்கு அளித்துள்ளனர்.
பல்லவர் காலத்தில் இருந்த இக்கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோவில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கி.பி. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக்கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்