search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினைப்பை நீர்க்கட்டி"

    • இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலே வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை.
    • கிளைக்கோஜன் சேமிப்பிலும் பிரச்சினைகள் வரும்.

    சினைப்பை நீர்க்கட்டி என்கிற பிரச்சனை பற்றி இப்போது பெண்கள் எல்லோருமே ஓரளவு அறிந்திருக்கிறார்கள். இது பெண்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான ஹார்மோன் பிரச்சனையாகும். இதை பொதுவாக பி.சி.ஓ.எஸ். என்று அழைப்பார்கள். இதன் விரிவாக்கம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதாகும்.

    இதுபற்றி நோயாளிகள் முக்கியமாக கேட்கும் விஷயம், டாக்டர் எனக்கு நீர்க்கட்டியா? கட்டி இருக்கிறதா என்பார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்லுகின்ற முதல் பதில்... இது கட்டிகள் அல்ல, இது நாளமில்லா சுரப்பிகளில் இருந்து வருகின்ற ஹார்மோன்களால் உருவாகக்கூடிய ஒரு பிரச்சனையாகும்.

    சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது?

    சினைப்பை நீர்க்கட்டி ஹார்மோன் பிரச்சினை எதனால் வருகிறது என்று பல ஆய்வுகளும் தெளிவுபடுத்துகின்றன. சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (இன்சுலின் எதிர்ப்பு) என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

    இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாவதால் இந்த பெண்களுக்கு பொதுவாக பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்களுக்கு உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் அளவு அதிகமாக இருந்தாலே சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனைகளை உருவாக்கும்.

    அதேபோல் கிளைக்கோஜன் சேமிப்பிலும் பிரச்சனைகள் வரும். இந்த இன்சுலின் அதிகரிப்பால் பல நேரங்களில் கல்லீரலில் ஸ்டீராய்டின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டு, ஆண்களுக்கான ஹார்மோன் பெண்களுக்கு சுரப்பது அதிகரிக்கிறது.

    இது தவிர இந்த இன்சுலின் அதிகமாக இருப்பதால் பல நேரங்களில் கொழுப்பின் வளர்சிதை மாற்றங்களால் கொழுப்பு அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் தான் சினைப்பை நீர்க்கட்டியின் அடிப்படையாகும்.

    சினைப்பை நீர்க்கட்டி பாதிப்புள்ள பெண்களுக்கு கொழுப்பு அதிகரிப்பதால் உடல் பருமனாக இருப்பார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு இருப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும்.

    ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாக சுரப்பதால் ஆண்களை போன்ற சில தன்மைகளும் அவர்களுக்கு உருவாகும். உதாரணமாக இந்த பெண்களுக்கு மீசை, தாடி, கைகால்களில் முடி ஆகிய மாற்றங்கள் உருவாகும். ஆண்களை போல் சில நேரங்களில் குரல் கூட மாறலாம்.

    மேலும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் அது சினைப்பையில் இருக்கிற கருமுட்டைகளின் முதிர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கிறது.


    கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதன் மூலம் பி.சி.ஓ.எஸ்.மாற்றங்கள் சினைப்பையில் வரும்.

    மேலும் இந்த இன்சுலின் சினைப்பையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. உடலில் எல்லா பகுதிகளையும் பாதிக்கிறது. இதனால் சதைகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவற்றில் வளர்சிதை மாற்றங்களும், அதனால் பலவிதமான சிக்கல்களும் ஏற்படுகின்றன.

    உதாரணமாக கொழுப்பு அதிகமானால் இருதயத்துக்கு போகும் ரத்த ஓட்டம் தடைபட்டு இருதய பிரச்சனை ஏற்படலாம். குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தால் சர்க்கரை அதிகமாகி நீரிழிவு பாதிப்பு வரலாம்.

    கொழுப்பு அதிகமாகும் போது உடல் பருமன் ஏற்படலாம். இவை அனைத்துக்கும் அடிப்படை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஆகும்.

    இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏன் ஏற்படுகிறது? யாருக்கு வருகிறது?

    உடல் பருமன் அதிகமாக இருக்கிற எந்த ஒரு நபருக்கும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாக இருக்கும். இந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகமாவது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது.

    அதனால் தான் இளம் பருவத்தில் திடீரென்று உடல் எடை கூடும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினைகளும் வரும்.

    ஒரு இளம்பெண் நன்றாக வேலை செய்து கொண்டிருப்பார், உடல் ஒல்லியாக இருப்பார். திடீரென்று அவருக்கு உடல் எடை அதிகரிக்கும். இதனால் அவருக்கு பி.சி.ஓ.எஸ். மாற்றம் வர ஆரம்பித்து விடும்.

    உடல் பருமன் தான் இதனுடைய முக்கிய அடிப்படை காரணமாகும். இது தவிர மேலும் பல காரணங்களும் உள்ளன. மரபு ரீதியான காரணங்களும் இருக்கிறது. மன அழுத்தமும் இதற்கு காரணமாக அமைகிறது. இவை எல்லாம் இருந்தால் கூட உடல் பருமன் தான் முக்கியமான காரணம் ஆகும்.

    இந்த இன்சுலின் ரெசிஸ்டன்சை குறைப்பதற்கு, உடல் எடையை குறைப்பது தான் முக்கியமான தீர்வாகும். சில நேரங்களில் மரபு வழியிலான பிரச்சனையை மாற்ற முடியாது. ஆனால் உடல் பருமனால் உருவாகின்ற இந்த பிரச்சினையை உங்களால் கண்டிப்பாக சரி செய்ய முடியும்.

    அந்த வகையில் உடல் பருமன் குறைப்பு தான், இதற்கு முக்கியமான சிகிச்சை முறையாகும்.

    சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

    சினைப்பை நீர்க்கட்டியால் ஏற்படும் பாதிப்பால் பெண்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதனை தடுப்பதற்கு முதல் வழிமுறையே வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை கொண்டு வருவது தான்.

    இதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டியை சரிப்படுத்த முடியும். இதை முழுமையாக குணப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தாலும் கூட இதன் பாதிப்புகளில் இருந்து முழுமையாக தங்களை பாதுகாக்க முடியும்.

    சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்னென்ன உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை முறையை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    இதில் எல்லோருமே மருத்துவர்களிடம் கேட்கின்ற விஷயம், டாக்டர்... உடல் எடையை குறைப்பதற்கு மாத்திரை கொடுப்பீர்களா என்பார்கள். நான் கடந்த 30 வருடங்களாக சினைப்பை நீர்க்கட்டி பாதித்த ஏராளமான பெண்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே இதுதான்.

    உடல் பருமனை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கியமான விஷயம். அதில் முதல் முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. சரி... எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

    என்னிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண், 'டாக்டர் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செல்கிறேன், ஆனால் உடல் பருமன் குறையவில்லை' என்றார்.

    அரை மணி நேரம் நடைபயிற்சி சென்றால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது. அதற்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    வாரத்துக்கு 3,500 கலோரி குறைப்பு அவசியம்:

    இன்று எல்லோருடைய கையிலும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், எவ்வளவு கலோரி செலவு செய்கிறீர்கள் என்பதை அறிய நிறைய செயலிகள் இருக்கிறது.

    உடல் எடையை குறைப்பதற்கு ஒரு வாரத்தில் 3,500 கலோரிகள் குறைக்க வேண்டும் என்று நீங்கள் இலக்கு நிர்ணயம் செய்யுங்கள்.

    அப்படியென்றால் தினமும் நீங்கள் குறைந்தபட்சம் 500 கலோரிகளை குறைக்க வேண்டும். இதனை நீங்கள் குறைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    ஒரு மணி நேரத்தில் 5 முதல் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் தான், 300 முதல் 400 கலோரிகளை உங்கள் உடல் செலவு செய்யும். இந்த கலோரி கணக்கீடு ரொம்ப ரொம்ப முக்கியம்.

    இதைப்பற்றி பலர் சரியாக தெரிந்து கொள்வதில்லை. தினமும் நடைபயிற்சி செல்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்வார்கள்.

    ஆனால் எவ்வளவு நேரம் என்று கேட்டால் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்வார்கள். அரைமணி நேரம் நடைபயிற்சி செல்வார்கள். இது போதாது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு வாரத்துக்கு 3500 கலோரிகளை குறைக்க வேண்டும்.

    ஆனால் 500 கலோரிகளை குறைத்து 1,000 கலோரி அளவு உணவை சாப்பிட்டால் அது தவறு. நமது உடல் உழைப்பு, அன்றாட செல்களின் இயக்கம் ஆகியவற்றுக்காக நமது உடலுக்கு தினந்தோறும் 900 கலோரிகள் தான் தேவை.

    இந்த 900 கலோரிகளை கொண்ட உணவுகளை மட்டும் தினமும் சாப்பிட்டு, தினமும் 500 கலோரிகளை குறைக்க உடற்பயிற்சி செய்தால் தான், தேவையில்லாத கலோரி குறையும். இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

    உடற்பயிற்சி செய்வார்கள், ஆனால் நன்றாக சாப்பிடுவார்கள், இது தவறு. கலோரி கணக்கீட்டை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி அதிகம் செய்யுங்கள், உணவை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், இதற்காக அன்றாட உணவு பட்டியலை சரியாக பராமரியுங்கள். உங்கள் உணவு வகைகளில் கலோரிகளை குறைப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

    ×