search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்கப்பூர்"

    சிங்கப்பூரில் தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், காதலியை தாக்கிய இந்தியருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர்வாழ் இந்தியர் முகமது முஸ்தபா அலி (வயது 24). இவருக்கும், சாகிக்கா நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல். ஆனால் நதியா, முன்பு இன்னொருவரை காதலித்து உள்ளார்.

    இந்த நிலையில் நதியாவின் முதல் காதல் தொடர்பாக அவருக்கும், முகமது முஸ்தபா அலிக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முகமது முஸ்தபா அலி, கர்ப்பமாக இருந்த தனது காதலியை முதுகிலும், தொடையிலும் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தினார்.

    இது தொடர்பான புகாரின்பேரில் முகமது முஸ்தபா அலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த வழக்கை சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி மேத்யூ ஜோசப் விசாரித்தார். விசாரணை முடிவில், முகமது முஸ்தபா அலி குற்றவாளி என கண்டார். தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், அவரை முகமது முஸ்தபா அலி தாக்கியது மிக மோசமான செயல் என விமர்சித்த நீதிபதி அவருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 
    இந்தியா - சிங்கப்பூர் முதல் ஹாக்கத்தான் போட்டியில் 6 குழுக்களை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு இன்று பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். #PMModi #Hackathon
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படும் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு உலக அளவிலான பங்கேற்புடன் ஹாக்கத்தான் போட்டியை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.  

    உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கத்தான்களின் ஒன்றாக கருதப்படும் மூவ் ஹாக் 10 குறிக்கோள்களை முன்வைத்துள்ளது.  இது மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.  ஒன்று இணையத்தில் பதிவு செய்வது, இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் முதலாவது போட்டி, புதுடெல்லியில் இறுதிப் போட்டி என்பது இந்தப்படி நிலைகளாகும்.

    ஹாக்கத்தான் விருது பெற அங்கீகரிக்கப்படும் 10 வெற்றியாளர்கள் உள்ளிட்டோருக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படும்.

    முதல்முறையாக இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற குழுக்களில் இந்தியாவை சேர்ந்த 3 குழுக்களும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுக்களும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் சிங்கப்பூரில் தொடந்து 36 மணிநேரம் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியாவை சேர்ந்த 3 குழுவினரும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுவினரும் வெற்றியாளர்களாக இறுதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதலிடம் பெற்ற குழுவினருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும், இரண்டாவது இடத்தை பிடித்த  குழுவினருக்கு 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்,  மூன்றாவது இடத்தை பிடித்த குழுவினருக்கு 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
        
    இந்நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற வெற்றியாளர்களை இன்று சந்தித்து பரிசுகளை வழங்கியதுடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.



    இந்தியா - சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தேசிய சாரண இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாற்று நாடுகளை கண்டுவரும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ள சாரண இயக்கத்தினரையும் மோடி சந்தித்து உரையாடினார்.

    மேலும், இன்று காலை சிற்றுண்டி விருந்தின்போது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் மோடி சந்தித்தார். அவர்களுடன் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.  #PMModi #Hackathon 
    முன்னணி 8 வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்குகிறது. #WTAFinal2018 #Wozniacki #Kvitova #Osaka
    சிங்கப்பூர்:

    ஆண்டின் இறுதியில், தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு நிகராக கருதப்படுவதால் இந்த போட்டி மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படும்.

    இதன்படி 48-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 28-ந்தேதிவரை சிங்கப்பூரில் நடக்கிறது. முதல் வீராங்கனையாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) காயம் காரணமாக விலகி விட்டார். அவருக்கு பதிலாக வளரும் நட்சத்திர வீராங்கனை நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் சேர்க்கப்பட்டார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனை நாயகி செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இந்த முறை தகுதி பெறவில்லை.



    இதில் களம் காணும் வீராங்கனைகள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘ரெட்’ பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), நவோமி ஒசாகா (ஜப்பான்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), பெட்ரா கிவிடோவா, கரோலினா பிளிஸ்கோவா (இருவரும் செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.51 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.13½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். இறுதி சுற்றில் தோல்வி அடையும் வீராங்கனைக்கு ரூ.5 கோடி கிடைக்கும். இது தவிர லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.1 கோடியே 12 லட்சம் வீதம் வழங்கப்படும். அத்துடன் போட்டியில் பங்கேற்பதற்கு கட்டணமாக ரூ.1.10 கோடி தனியாக கொடுக்கப்படும்.

    சமீபத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி அமெரிக்க ஓபனை கைப்பற்றி வரலாறு படைத்த ஜப்பானின் ஒசாகா இங்கு பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒசாகா கூறுகையில், ‘எங்களது பிரிவில் உள்ள அனைவரும் சிறந்த வீராங்கனைகள். அவர்களுக்கு எதிராக மோதுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.

    தொடக்க நாளில் கிவிடோவா-ஸ்விடோலினா (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) வோஸ்னியாக்கி-பிளிஸ்கோவா (மாலை 5 மணி) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 
    பார்முலா1 கார்பந்தயத்தில் சிங்கப்பூர் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். #LewisHamilton #SingaporeGrandPrix
    சிங்கப்பூர்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா பே ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. மின்னொளியின் கீழ் 308.706 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

    முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 51 நிமிடம் 11.611 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் ஹாமில்டனின் 7-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் ருசித்த 69-வது வெற்றியாகும்.



    அவரை விட 8.961 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு போர்ஸ் இந்தியா அணி வீரர் பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகானின் கார் விபத்தில் சிக்கியதால் பாதியிலேயே விலகினார்.

    இதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    அடுத்த சுற்று போட்டி வருகிற 30-ந்தேதி ரஷியாவில் நடக்கிறது.  #LewisHamilton
    சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய டாக்டரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜெகதீப் சிங் அரோரா (வயது 46). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தன் மனைவி மற்றும் 11 வயதான மகளுடன் சிங்கப்பூருக்கு சென்றார். பிரபல சுற்றுலா தலம் ஒன்றில் உள்ள ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி நா பெங் ஹாங் உத்தரவிட்டார்.

    குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரோராவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது எல்லாம் சேர்த்து தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தான் பெரிய தவறு செய்து விட்டதாக கோர்ட்டில் அரோரா தெரிவித்தார்.

    சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி வழக்கறிஞரான டேடர் சிங் கில் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் டேடர் சிங் கில். இவர் கடந்த 30 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். 59 வயதான டேடர் சிங் கில்லை, சிங்கப்பூர் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையராக அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் நியமித்துள்ளார்.

    2 ஆண்டுகள் நீதித்துறை ஆணையராக பொறுப்பு வகிக்க உள்ள டேடர் சிங், ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர், ஆசிய காப்புரிமை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என்பதும், காப்புரிமை ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. #Singapore #TrumpKimSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சிங்கப்பூரின் டிரம்ப் - கிம் சந்திப்புக்காக 81.50 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது 12 மில்லியன் அமெரிக்க டாலராகும். முதலில் கணிக்கப்பட்ட தொகையை விட சற்று குறைவாகும் என தெரிவித்துள்ளது. #Singapore #TrumpKimSummit
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது உடல் நிலையை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக விசே‌ஷ கழிவறை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத்தான் கிம் பயன்படுத்தினார். #KimJongUn
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம்ஜாங்கும் சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சந்தித்து வரலாற்று சிறப்புமிக்க பேச்சு நடத்தினார்கள்.

    இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான போர் பதட்டம் தணிந்தது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் டிரம்பை விட உலக மக்களால் வடகொரிய அதிபர் கிம்தான் அதிகம் ஈர்க்கப்பட்டார். ஏனெனில் கிம் பற்றி உலகம் அறியாத ரகசியங்கள் சில வெளியாகி உள்ளது.

    டிரம்ப்பை விட கிம்முக்குத்தான் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவர் யாரிடம் எங்கு, எந்த அறையில் பேச வேண்டும் எனபன முன்பே துல்லியமாக திட்டமிடப்பட்டன.


    அவருக்கு 2 விமானங்கள் மற்றும் கப்பலில் விசே‌ஷ உடைகளும், கொரிய உணவு வகைகளும் கொண்டு செல்லப்பட்டன. தனது உடல் நிலையை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக விசே‌ஷ கழிவறையும் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத்தான் கிம் பயன்படுத்தினார்.

    மேலும் இந்த சந்திப்புக்கு முன்பு தான் கொல்லப்படலாம் என்ற அச்சமும் கிம்மிடம் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KimJongUn #TrumpKimSummit
    உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.



    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    ‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.

    டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள டிரம்ப், இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றே சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.


    இந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார். #Singaporesummit #DonaldTrump
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    பியாங்யோங்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

    சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.

    இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயி்றன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.

    மேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர் வெளியுறவு துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக நாளை வடகொரியா செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்துள்ளது. #TrumpKimSummit
    சிங்கப்பூர் :

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

    திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் இருக்கும் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் - கிம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை நேற்று உறுதி செய்தது.

    இந்நிலையில், கிம் - டிரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் நாளை இரண்டு நாள் பயணமாக வட கொரியா தலைநகர் பியோன்ங்யாங் செல்ல உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுடன் விவியன் பாலகிருஷ்ணன் கலந்தாலோசிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ×