search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்"

    மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்று திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #nanjilsampath #parliamentelection

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

    தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார்பேட்டை ஆகிய பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார்.

    கட்சி அரசியலில் இருந்து விலகி கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்தேன். தற்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன்.

    ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மோடி ஊழல் செய்துள்ளார். மோடி இந்தியாவின் பன்முகத் தன்மையை பாழ்படுத்தி விட்டார். இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டது. மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்.

     


    புதுவையில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருகிறார்.

    இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்தார்.

    பிரச்சாரத்தை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 2-ம் இடத்தையும், எடப்பாடியின் அதிமுக 3-ம் இடத்தையும் பெறும். நான் மட்டுமே கொள்கையுள்ள அரசியல் வாதி. நான் 32 ஆண்டுகளாக ஒரே கொள்கையை பேசி வருகிறேன். இடம் மாறினாலும், தடம் மாறாமல் பயணிக்கின்ற ஒரே நபர் நான்.

    காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி இயல்பான கூட்டணி, இயற்கையான கூட்டணி, ரத்தமும் சதையுமான கூட்டணி. பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி எண்ணையும் தண்ணீரும் போன்றது. காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

    நான் பேசும் பொருள் எப்போதும் கொள்கை சார்ந்ததுதான். நான் பெரியார், அண்ணாவின் கொள்கைகளை மட்டுமே பேசுவேன். நான் இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன். கருத்துக்கணிப்பில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பது மாய பிரசாரம். மோடிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்துவிடக்கூடாது என ஊடகத்தை எச்சரிக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.

    பா.ஜனதா கோட்டை தோற்கடிக்கப்பட்டது என்பதை கடந்த சில தேர்தல்கள் தெரிவித்துள்ளது. பா.ஜனதாவின் அத்தியாயம் முடியப்போகின்றது என்பதையே 3 மாநில தேர்தல் அறிவித்துள்ளன. தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவார். மோடி நாட்டைவிட்டு தப்ப பார்ப்பார். அவரை தப்ப விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #parliamentelection

    ×