search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பு"

    நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    வால்பாறை 17 செ.மீ., சின்னகல்லார் 12 செ.மீ., பெரியாறு 11 செ.மீ., தேவலா 10 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., குந்தாபாலம், குழித்துறை தலா 4 செ.மீ, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., மயிலம், ஊட்டி, பூதப்பாண்டி, தக்கலை, கூடலூர், பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், இரணியல், பண்ருட்டி, வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. 
    லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதை கண்டித்து அக்டோபர் 2-ந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்தார். #AnnaHazare #HungerStrike
    ராலேகான் சித்தி:

    நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா கடந்த 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார்.

    ஆனால், இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.

    இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

    இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:-

    ஊழலை தடுக்கும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. லோக்பால் அமைப்பை உருவாக்க ஏற்படும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

    உடனே லோக்பால் அமைப்பை உருவாக்கி, லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறேன். மகாத்மா காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2-ந் தேதி முதல் எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன்.

    ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க எனது போராட்டத்துடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.  #AnnaHazare #HungerStrike #tamilnews
    அமெரிக்காவுடன் தலீபான் பேச்சு வார்த்தை தொடரும் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் கூறியுள்ளார்.
    பெஷாவர்:

    அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின.

    அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதை இப்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் உறுதி செய்து உள்ளார்.

    தற்போது துருக்கியில் உள்ள அவர் இதுபற்றி கூறுகையில், “கத்தார் நாட்டில் தலீபான் அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடி பேச்சு நடத்தினார்கள். இதில் வேறு எந்த தரப்பினரும் பங்கேற்கவில்லை. இப்போது இந்த பேச்சு வார்த்தை அடிமட்ட அளவில் உள்ளது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “பேச்சு வார்த்தை உயர் மட்டத்தில் நடைபெறுகிறபோது, நாங்கள் உடன்பாட்டை எட்ட முடியும். தலீபான்களும், அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்” என்றார்.

    ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்த மறுத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, “தலீபான்களின் போர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது அல்ல. அது அமெரிக்காவுக்கு எதிரானது” என பதில் அளித்தார்.

    இந்த தகவல்களை பாகிஸ்தானின் ‘தி டெய்லி டைம்ஸ்” ஏடு வெளியிட்டு உள்ளது. 
    ஜப்பானில் நிகழும் கடும் வறுத்தெடுக்கும் வெயிலால் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. #Japan #NaturalDisaster #65Dead
    டோக்கியோ:

    ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகி உள்ளன.



    ஆகஸ்டு மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறி உள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி விழுந்து 22 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 1 வாரத்தில் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.

    இதையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. பொதுமக்கள் நிறைய தண்ணீர் பருகுமாறும், குளுகுளு வசதியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.#Japan #NaturalDisaster #Tamilnews 
    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. #KarnatakaBudget
    பெங்களூரு:

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.



    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

    * அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

    * 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

    * கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    * சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

    * பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  #KarnatakaBudget #Tamilnews
    கலவரத்தடுப்புக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    30 வயதிற்கு உட்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். காவல்துறையில் புதிய பதவிகள் ரூ.13.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.



    அதன்படி, ரூ.44.71 லட்சம் செலவில், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக கணினிமயமாக்கல்) பதவி ஒன்று புதியதாக தோற்றுவிக்கப்படும். ரூ.12.02 கோடி ரூபாய் செலவில் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதியதாக 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகள் உருவாக்கப்படும். ரூ.1.04 கோடி ரூபாய் செலவில் உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகளுக்கு அமைச்சுப்பணியாளர்கள் உருவாக்கப்படும்.

    ரூ.119.73 கோடி செலவில் 1,397 புதிய காவல் வாகனங்கள் வாங்கப்படும். அதன்படி, ரூ.2.20 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.1.76 கோடி செலவில், 8 கலவர தடுப்பு வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும்.

    ரூ.6.50 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.3.25 கோடி செலவில் 5 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப் படும்.

    பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலவரங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவுப்பிரிவு மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து அதனை கண்காணிக்கும் விதமாக மென்பொருள் திட்டம் ஒன்று, ரூ.76 லட்சம் செலவில் சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் உருவாக்கப்படும்.

    இத்தொகை முதல் வருடத்திற்கு தொடரா செலவினமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு வருடந்தோறும் ரூ.56 லட்சம் செலவில் செலவினமாக வழங்கப்படும். ரூ.3 கோடி செலவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நெரிசலை ஒழுங்குபடுத்த ரூ.3 கோடியில் 2 ஆயிரம் நகரும் தடுப்புகள் வாங்கப்படும்.

    ரூ.14.25 கோடி செலவில் காவல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க 475 காவல் நிலையங்களுக்கு இளையதளத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவுடன் கூடிய தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.15 கோடியில் 105 காவல் நிலையங்களுக்கு கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.87 கோடியில் புல காவலிற்கான 129 மொபைல் உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும்.

    ரூ.100 கோடி மதிப்பில் கழிவு செய்யப்பட்ட (பழைய) பல வகை வாகனங்களுக்கு பதிலாக 1,340 புதிய வாகனங்கள் வாங்கப்படும். ரூ.6.02 கோடி செலவில் 6 காவல் ஆணையரகங்கள், சென்னை நகரத்தில் உள்ள 4 சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலங்கள் ஆகியவற்றின் உபயோகத்திற்காக 24 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும்.கடலோர பாதுகாப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளரின் தலைமையிடம் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும்.

    ரூ.5.48 கோடி செலவில் திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தை பிரித்து திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும். இந்த காவல் நிலையத்திற்கு ரூ.1 கோடியில் கட்டிடங்கள் கட்டப்படும்.

    ரூ.3.31 கோடி செலவில் அனைத்து மாவட்ட மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளில் காவல் வாத்தியக்குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.4.20 கோடி செலவில் காவலர்களின் பயிற்சிக்காக 19 வகையான சிறப்பு படைகலன்கள் வாங்கப்படும். ரூ.50 லட்சத்தில் நேரியல் அல்லாத சந்தி கண்டுபிடிக்கும் கருவி 5 வாங்கப்படும். ரூ.45 லட்சம் செலவில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் 3 கருவிகள் வாங்கப்படும். ரூ.12 லட்சம் செலவில் ஆழமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 4 கருவிகள் வாங்கப்படும். ரூ.34 லட்சம் செலவில் ஊடுகதிர் மூலம் கண்டறியும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.1.50 லட்சத்தில் கையடக்க வாயிற்படி உலோக கண்டுபிடிப்பிற்கான 3 கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.25 லட்சத்தில் வாயிற்படி உலோக கண்டுப்பிடிப்பிற்கான 5 கருவிகள் வாங்கப்படும். ரூ.45 ஆயிரம் செலவில் 5 நீட்டிப்பு கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ3.15 லட்சம் செலவில் 35 புரோடர் கருவிகள் வழங்கப்படும். 98 ஆயிரம் செலவில் வாகனத்தின் கீழ் தேடும் 14 கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ.4.95 லட்சம் செலவில் 55 தேடுதல் பணிக்கான விளக்குகள் வாங்கப்படும். ரூ.3 லட்சம் செலவில் 2 பகல் நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும். ரூ.15.60 லட்சத்தில் 2 இரவு நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும்.

    ரூ.5.05 கோடி செலவில் பணித்திறன் மேம்பாட்டிற்காக 250 காவல் நிலையங்களுக்கென அடிப்படை சாதனங்கள் வாங்கப்படும். ரூ.12.20 கோடியில் அதிவிரைவு படைக்கு 14 வகையான சாதனங்கள் வாங்கப்படும். ரூ.55 லட்சத்தில் 100 எண்ம முறையிலான 800 மெகா ஹெர்ட்ஸ் கையடக்க சாதனங்கள் வாங்கப்படும். ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு காவல் அகாடமிக்கு அனைத்து வகையான தடய அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
    சென்னை:

    சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06001), மறுநாட்களில் காலை 10.50 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜூலை 8, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06002), மறுநாட்களில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில் (06005), மறுநாட்களில் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 8, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06006), மறுநாட்களில் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    தாம்பரம்-கொல்லம் இடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஜூலை 2-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்.

    இச்சிறப்பு ரெயில் (06027), மறுநாட்களில் காலை 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06028), மறுநாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007), மறுநாட்களில் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜூலை 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06008), மறுநாட்களில் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 4, 11, 18, 25, ஆகஸ்டு 1, 8, 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-சந்திராகாச்சி சிறப்பு கட்டண ரெயில் (06058), மறுநாட்களில் இரவு 7 மணிக்கு சந்திராகாச்சியை சென்றடையும்.

    புதுச்சேரியில் இருந்து ஜூலை 7, 14, 21, 28, ஆகஸ்டு 4, 11, 25, செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் புதுச்சேரி-சந்திராகாச்சி சிறப்பு கட்டண ரெயில் (06010), திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு சந்திராகாச்சியை சென்றடையும்.

    மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #EServiceCenter #MaintenanceService
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

    இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ-சேவை மையங்கள் 18-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EServiceCenter #MaintenanceService 
    சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டின் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை அறிவித்தார். #TNAssembly #TNCM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டின் குறுவை தொகுப்புத் திட்டத்தினை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    அதன்படி, 1. கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியது போல், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

    2. குறுவை பருவத்தில் 79,285 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கேற்ற வகையில், அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை குவிண்டாலுக்கு 1,750/ ரூபாய் மானியம் வீதம் 15,857 குவிண்டால் நெல் விதைகளை மானிய விலையில் விநியோகிப்பதற்கு 2 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    3. வேளாண் இயந்திரங்களைக் கொண்டு நெல் நடவு வயலை குறித்த காலத்தில் திறம்பட தயார் செய்வதற்காக, 870 பவர் டில்லர்களும், 860 ரோட்ட வேட்டர்களும் 50 சதவீத மானியத்தில் விநியோகிப்பதற்காக, 11 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.



    4. டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பயன் படுத்துவதற்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை திரும்பப் பெற முன்வந்தால், 90 சதவீத மானியம் வழங்கப்படும். டெல்டா பகுதிகளில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்கள் நிறுவுவதற்காக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    5. மின் இணைப்பு கிடைக்கப் பெறாத டெல்டா விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2 ஆயிரம் டீசல் இன்ஜின்கள், 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்குவதற்காக, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இத்தகைய வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு, இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ள உழவன் கைபேசி செயலி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறேன்.

    6. நடவு இயந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கருக்கு 4,000 ரூபாய் வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்புக்கு இயந்திர நடவு மேற்கொள்ள, 100 சதவீத மானிய உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு 40 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்யும். நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 40,000 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படும்.

    7. டெல்டா மாவட்டங்களில் துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், 30 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு முழு மானியமாக 600 ரூபாய் வீதம் பின்னேற்பு மானியமாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    8. குறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக லாபம் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களை 12,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 60 சதவீத மானியத்தில் தரமான விதைகள், 50 சதவீத மானியத்தில் திரவ உயிர் உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை மற்றும் இலை வழி டிஏபி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    9. பயறு வகைகளில், சிக்கனமாக பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில், 2000 தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை நிறுவுவதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குவதற்காக ஒரு கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    10. காவேரி டெல்டா மற்றும் கல்லணை பாசனத்தின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில், பசுந்தாள் உர பயிர் சாகுபடி 15,000 ஏக்கரில் மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 1,200/ ரூபாய் மானியத்தில் பசுந்தாளுர பயிர் விதைகள் விநியோகிக்கப்படும்.

    11. டெல்டா மாவட்ட விவசாயிகள், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், 4 அங்குல விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளத்தில் 30 பி.வி.சி. குழாய்கள் கொண்ட அலகு ஒன்றுக்கு 15,000 ரூபாய் வீதம் 1,500 அலகுகளுக்கு மானியம் வழங்குவதற்காக, 2 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    12. டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது, வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதன் முறையாக குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில், வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்க, அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, வாய்க்கால்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு குழி எடுத்து நடவு செய்தல், உரக்குழி அமைத்தல் போன்ற பணிகளுடன், சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் மண் வரப்புகளை அமைத்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளுக்கு டெல்டா பகுதிகளில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

    இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அரசு, 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக, இன்று 115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், குறுவை நெல் மற்றும் பயறு சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிகளை உடனடியாக துவக்குவதற்கு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வேளாண் பெருமக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு குறுவை சாகுபடியினை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த திட்டங்கள் அனைத்தும், வேளாண் பெருமக்கள் உரிய காலத்தில் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை பெறுவதற்கு அம்மாவின் அரசு துரித தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும், விரைவில் காவேரி நீர் மூலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNAssembly #TNCM
    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அரிமளம், செய்யாறு, காஞ்சீபுரத்தில் 6 செ.மீ., ஆலங்குடி, செம்பரம்பாக்கத்தில் தலா 5 செ.மீ., சென்னை, அரியலூர், வந்தவாசி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, சென்னை விமானநிலையம், டி.ஜி.பி. அலுவலகம், திருப்பத்தூர், குமாரபாளையம், திருவாலங்காடு, கடலூர், செய்யூர், காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

    வருகிற 11-ந்தேதி வரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்

    காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சிறிய அளவில் திருத்தம் செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, அதை பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு வழங்கியது. இந்த பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

    அதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுகிறார்கள். தமிழக அரசு தனது பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருக்கிறார். இதற்கான ஆலோசனையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

    இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். முதலில் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம்.

    இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

    கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.



    தமிழக மக்கள் சார்பில் நான் இங்கு வந்து கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தேன். அவரும் கர்நாடக மக்கள் சார்பில் என்னிடம் பேசினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி நீர் பிரச்சினையை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை குறித்து சில முக்கியமான விஷயங்களை கர்நாடக முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறினேன். எனது உணர்வை அவரும் பிரதிபலித்தார். இந்த பேச்சுவார்த்தை உணர்வுப்பூர்வமாக இருந்தது.

    குமாரசாமியின் பேச்சு எனது இதயத்தை நிரப்பிவிட்டது. காவிரி இல்லாமல் இரு மாநில மக்களும் வாழ முடியாது. நான் வக்கீல் கிடையாது. ஆனால் எனது தந்தை வக்கீலாக பணியாற்றியவர். எங்கள் குடும்பத்தில் பலர் வக்கீலாக இருக்கிறார்கள். அவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது தான். இந்த பிரச்சினையில் நமது மனநிலை மாற வேண்டும்.

    எங்களது கட்சி சிறிய கட்சி. நான் இப்போது தான் குழந்தையாக உள்ளேன். இப்போது தான் கட்சியே ஆரம்பித்துள்ளேன். எனக்கு எந்த சுமையும் இல்லை. நான் ‘ஈகோ’ பார்க்கவில்லை. அதனால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அணிலாக, பாலமாக, காலணியாக மாறவும் தயார். குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அரசியலை விட நமக்கு விவசாயிகளின் நலன் முக்கியம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணைய வழிகாட்டுதல்படி இரு மாநிலங்களும் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன். சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சு பெருந்தன்மையாக இருந்தது. இது நீண்ட நட்பின் தொடக்கம் ஆகும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.  #Kamalhaasan #Kumaraswamy #Tamilnews 
    இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, உடனடியாக இணையதள சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #Resignation #TNChiefMinister
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராடுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது, காவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பறித்ததற்கு, தார்மீக பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகுங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்துக் கேட்டு விட்டுத்தான் பேரவைத்தலைவர் கூட்டிய அலுவல் ஆய்வுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்.



    முதல்-அமைச்சர் அறை முன்பு அமர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று மறியல் செய்தேன். ஆனால், அங்கு என்னை நேரில் சந்தித்து விளக்கம் சொல்லாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் ஏதோ அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென்று வெளியேறிவிட்டு, இப்படியொரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அபாண்டமாக கூறியிருக்கிறார்.

    முதல்-அமைச்சரிடம் நேருக்கு நேர், ‘நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’, என்று கூறி விட்டுதான் வெளிநடப்புச் செய்தேன் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்று 3 தினங்கள் கழித்து, நான் இன்றைக்கு அவர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் செய்தபிறகே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, சமூக விரோதிகள் என்று நா கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார் முதல்-அமைச்சர்.

    சொந்த நாட்டு மக்களைப் பார்த்து ‘சமூகவிரோதிகள்’ என்று கூறும் முதல்-அமைச்சருக்கு வேண்டுமானால் இப்படி அபத்தமான குற்றச்சாட்டை சுமத்துவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால், மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

    100 நாட்களுக்கு மேல் மக்கள் போராடி வருகிறார்கள். 14 முறை அரசு அதிகாரிகள் பேசியதாக கூறுகிறார். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோ, முதல்-அமைச்சரோ ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை எத்தனைமுறை அழைத்துப் பேசினார்கள்.

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பங்களைக் கூட நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏன் முதல்-அமைச்சர் போகவில்லை? ஸ்டெர்லைட் ஆலைக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

    ‘அமைதியாக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது’, என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, தாக்க வந்தால் தடுக்கத்தானே செய்வார்கள் என்று ஈவு இரக்கமின்றி பதில் சொல்லும் முதல்-அமைச்சர் அந்தப் பதவியில் இருக்க லாயக்கற்றவர் என்பதால் தான் உடனே பதவி விலகுங்கள் என்று தி.மு.க. மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகமே கேட்கிறது.

    144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் போது, எப்படி ஸ்டாலின் போனார்?, என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் முதல்-அமைச்சர். அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    நூற்றுக்கணக்கான பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை காணவில்லை என்று தூத்துக்குடி மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை மருத்துவமனையில் சென்று சந்திக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறுவது, அவருக்கு இதயத்தில் ஈரமில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

    அரசியல் சட்டத்திற்கு விரோதமாக முதல்-அமைச்சர் பதவியில் உட்கார்ந்து, தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும், என்பது வேடிக்கையானது. நான் குறிப்பிட விரும்புவது, 13 உயிர்களை பறித்துவிட்டு, பலரது மண்டையை உடைத்துவிட்டு, இன்று வரை காவல்துறையை நள்ளிரவில் வீடுகளுக்குள் அனுப்பி பெண்களை அச்சுறுத்தியும், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைக் கூட அடித்து, உதைத்து கைது செய்யவும் உத்தரவிட்டு விட்டு, சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுவற்கு எந்தத் தகுதியும் முதல்-அமைச்சருக்கு இல்லை, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆகவே, ‘நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும், பதவியை விட்டு விலகுங்கள்’, என்று மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகி சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. நீக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் மற்றொரு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே குரலில் காவல்துறையின் அட்டூழியத்தை அராஜகத்தை, சீருடையில்லாமல் சாதாரண உடையில் காவல்துறையினரை வாகனத்தின் மேல் நிறுத்தி குறி வைத்துச்சுட்டு வீழ்த்திய பயங்கரக் கொடுமைகளைக் கதறி அழுது கொட்டித்தீர்த்தது இன்னும் என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

    அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்-அமைச்சரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யா? அல்லது தலைமைச் செயலாளரா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

    ஏதுமறியாத மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து, அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றினார்கள் என்பதற்கு தி.மு.க. ஆட்சி தமிழக மக்களின் பேராதரவோடு அமைந்தவுடன் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்பு கிறேன்.

    ஈழத்தில் கொடுங்கோலன் ராஜபக்சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா? என்பது பற்றி அ.தி.மு.க. அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் அனைத்துமே முடங்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பணிகள் மிகமோசமாக தேக்கமடைந்துள்ளன.

    தங்கள் பெற்றோர், உறவுகள் பத்திரமாக இருக்கிறார்களா? என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் வெளிநாட்டு வாழ் தூத்துக்குடி மக்கள் தவிக்கிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யமுடியாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இணையதள சேவை முடக்கத்தை உடனே மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, உடனடியாக இணையதள சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #EdappadiPalanisamy #Resignation #TNChiefMinister 
    ×