search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் கோவில் கொடிமரத்தின் முன்புறம் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    பின்னர் உற்சவரும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். இரவு 11.30 மணி அளவில் கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு மேல் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டபகபடி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    விழா நிறைவாக 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி அளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், குமரக்கோவிலில் மண்டகப்படியும் நடக்கிறது. மேலும் அன்றிரவு அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.
    பங்குனி உத்திரம் அன்று பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம்.
    அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரம்மம் சிவபெருமானே. பிரணவத்தின் ரூபமாகவும், தேஜோமயமாகவும், பிரம்ம, விஷ்ணு மூர்த்திகளே காண இல்லாத மூர்த்தியான அண்ணாமலையார், நமக்கு கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் தினமே பங்குனி உத்திர தினமாகும்.

    இப்படி பெருமைமிக்க திருவண்ணாமலையில் ‘பங்குனி உத்தரம்’ திருக்கல்யாண உற்சவ வைபவம் பெரும் சிறப்புடையது. அன்றையதினம் உச்சிக்காலத்தில் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்காரம் செய்விக்கப்படும். அதன்பின் எங்குமே காணாத வண்ணம் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான அருணாசலேஸ்வரர் போகசக்தி தாயாருக்கும் அதனை தொடர்ந்து உபசாரம் நடைபெறும். பின்னர் மாலை பொழுதில் உண்ணாமலை அம்மன் குமரக்கோவிலில் இருந்து மணப்பெண்ணாக சீர்வரிசையுடன் திருமணக்கோலம் கொண்டு திருக்கோவிலுக்குள் அழைத்து வரப்படுவார்.

    அங்கே மாப்பிள்ளையாக அலங்கார ரூபமாக அண்ணாமலையார் மேளதாளம் முழக்க தன் யதஸ்தானம் விட்டு வெளியே வருவார். அக்காட்சி காண நமக்கு நூறு கண்கள் வேண்டும். பின் சுவாமி கொடிமரம் அருகில் உற்சவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
    அதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்து அருளுவார்கள். பின்னர் பூஜைகள் முடிவுற்று மூலஸ்தானம் முழுக்கு, வேதகாம மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘அரகர’ கோஷம் விண்ணை பிளக்க திருமாங்கல்ய தாரனம் என்னும் திருதாலி கட்டப்படும். பின்பு உபசாரங்கள், சைவாகமங்கள், திருமுறைகள் பாராயணம் செய்து அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் சமர்ப்பணம் செய்யப்படும். பின் தர்மத்தின் வடிவான ரிஷப வாகனம் மீது (தங்க ரிஷபம்) பவனி வருதல் நடைபெறும்.

    மறுநாள் கீழ்நாத்தூர் சென்று மருவுண்ணலும், அதனை தொடர்ந்து நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். இக்காலத்தில் காலையில் ஹோமமும், இரவு பொழுதில் ஊஞ்சல் சேவையும் காணலாம். பின்பு மறுநாள் உச்சிக்காலம் முடிவு பெற்று பாலிகை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு தேவியரும், ஈசணாரும் தாமரை குளத்திற்கு செல்வார்கள். அங்கு நிகழ்ச்சி நிறைவு பெற்று தாமரைகுளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும், மாலை குமரகோவிலில் மண்டகப்படி, காமாட்சியம்மன் கோவிலில் மண்டகப்படி ஏற்று திருவீதி உலா வந்து திருக்கோவில் அடைவர்.

    இப்படி மிக, மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா பங்குனி உத்திர விழா. மேலும் அந்த தினத்தில் அனேக கோவில்களில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். இந்த பெருமைமிக்க வைபவத்தில் இருக்க கூடிய விரதத்தின் பலன் ஏராளம். முன்பொரு சமயம் பிரும்மதேவர், சரஸ்வதி தேவியையும், தேவேந்திரன் இந்திரராணியையும் தங்கள் மனைவிகளாக அடைந்தார்கள். சந்திரன் இந்த விரத மகிமையால் அசுவினி முதலான இருப்பத்தியேழு நட்சத்திரங்களை தம் மனைவிகளாக அடைந்தான்.

    அகஸ்திய முனிவரும் பூர்வத்தில் இந்த சிறந்த விரதத்தை, அனுஷ்டித்து, அதன் பயனாக லோபாமுத்திரையை தம் மனைவியாக அடைந்தார். இந்த விரத மகிமையாலேயே மன்மதன் ரதிதேவியை தன் மனைவியாக அடைந்தான்.

    பங்குனி விரதத்தை முறைப்படி குறைவில்லாது அனுஷ்டித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல பெண்ணும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். தம்பதிகள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் புத்திரச் செல்வங்களையும் விரும்பிய பொருட்களையும் பெற்று மகிழ்வார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இந்த நன்நாளில் பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம். இத்தகைய சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திரம் விழாவை கண்டு வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற எல்லாம் வல்ல உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.
    அண்ணாமலையார் மீது உண்ணாமுலை அம்மன் ஒரு தடவை கோபம் கொண்டு ஊடலை தழுவினார். பிறகு அவர் சமரசம் ஆனார். இந்த நிகழ்வு திருவண்ணாமலை தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய விழாவாக நடத்தப்படுகிறது.
    குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொல்வார்கள். அதிலும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையை வீட்டுக்கு வீடு வாசல்படி என்று கூறுவது உண்டு. கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ சண்டை போடும்போது அது ஒரு எல்லைக்குள், அளவுக்குள் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லை மீறும்போது அது சர்ச்சைக்கு வழி வகுத்து விடுகிறது.

    கணவன்-மனைவி இடையே சாடலும், மோதலும் அதிகரித் தால் அது தீராத சண்டைக்கு வழிவகுத்து விடும். ஆனால் கணவன்-மனைவி இடையே சாடலுக்கு பதில் ஊடல் இருந்தால் அது இன்பத்தை பெருக்குவதாக அமையும். சாடல் சண்டையை தரும். ஊடல் இன்பத்தை தரும். சரி.... ஊடல் என்றால் என்ன? “செல்ல கோபம்” என்று சொல்வார்களே அதுதான் ஊடல். அதாவது கணவன் மீது மனைவி ஊடல் கொண்டால் அந்த கணவன் மீது அவளுக்கு வெறுப்போ ஆத்திரமோ வரவே வராது. கணவனை பிரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே செய்யாது.

    என்றாலும் கணவன் மீது சின்ன வருத்தத்தில் இருப்பார்கள். அல்லது வேண்டுமென்றே முகத்தை திருப்பி வைத்துக் கொள்வார்கள். ஊடல் தணிந்த பிறகும் கூட கணவன் முதலில் வந்து பேசட்டும் என்று பெண்கள் செல்ல கோபத்துடன் இருப்பார்கள். கணவன் வெட்கத்தை விட்டு ஊடலை போக்கும் வகையில் ஒரே ஒரு வார்த்தை பேசி விட்டால்போதும் பெண்கள் சரண் அடைந்து விடுவார்கள். கணவன் பேசும் அந்த ஒரு சமரச வார்த்தையை தொடர்ந்து பெண்கள் 2 மடங்கு அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    இந்த நிகழ்வானது சாதாரண ஏழை-எளியவர்கள் முதல் பணக்கார கோடீசுவரர்கள் வீடு வரை அனைத்து இடங்களிலும் இருக்கும். திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.

    அண்ணாமலையார் மீது உண்ணாமுலை அம்மன் ஒரு தடவை கோபம் கொண்டு ஊடலை தழுவினார். பிறகு அவர் சமரசம் ஆனார். இந்த நிகழ்வு திருவண்ணாமலை தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு “திருவூடல் விழா” என்று பெயர்.
    தை மாதம் பொங்கல் திருவிழாவுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு தெருவில் இந்த விழா அரங்கேறுகிறது. அதனால் அந்த தெருவுக்கே திருவூடல் வீதி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

    குடும்பத்தில் கணவன்-மனைவி எப்படி ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த திருவூடல் திருவிழா அமைந்து உள்ளது. இந்த விழாவின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது. சிவபக்தர்கள் ஒவ்வொருவரும் அதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் பிருங்கி என்று ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமான் மீது மிகுந்த பற்றுக்கொண்ட தீவிர சிவபக்தர். சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டார். சிவபெருமானின் மனைவி பார்வதிதேவியை கூட அவர் வழிபடுவதில்லை. அந்த அளவுக்கு தீவிர சிவபக்தர். ஒரு தடவை அவர் சிவனை வழிபடுவதற்கு கைலாய மலைக்கு சென்றார். அப்போது ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதிதேவியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர்.

    அம்மையும் அப்பனுமாக இருந்த அவர்களை முனிவர்கள், ரிஷிகள் சுற்றி வந்து வழிபட்டு சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்த பிருங்கி முனிவருக்கு சிவபெருமானை மட்டும் எப்படி சுற்றி வந்து வழிபடுவது என்று யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதன்படி அவர் தன்னை வண்டாக உருமாற்றினார். வண்டாக பறந்து சென்ற அவர் சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். மூன்று முறை வண்டாக வந்து சிவபெருமானை சுற்றி விட்டு நகர்ந்தார். வண்டு உருவில் வந்து இருப்பது பிருங்கி முனிவர்தான் என்பதை பார்வதி தேவி தெரிந்து கொண்டார்.

    தன்னை வணங்காமல் வேண்டுமென்றே சிவபெருமானை மட்டும் வணங்கி விட்டு சென்ற பிருங்கி முனிவர் மீது பார்வதி தேவிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக பார்வதிதேவி கருதினார். உடனடியாக அவர் பிருங்கி முனிவரிடம், “என்னை வழிபடாத உனக்கு தண்டனை உண்டு. எனது சக்தி உன்னிடம் இருந்து இப்போதே அகன்று விடும். அந்த சக்தியை எனக்கே திருப்பி கொடுத்து விடு” என்று பார்வதிதேவி உத்தரவிட்டாள்.

    பிருங்கி முனிவரும் அதை கேட்டு கவலைப்படவில்லை. சிவன் மட்டுமே தலைவன் என்று சொல்லி விட்டு சக்தியை கொடுத்து விட்டார். இதனால் சக்தி இழந்த அவர் நிற்க கூட உடம்பில் தெம்பு இல்லாமல் கீழே விழ போனார். இதை கண்டு பதறிய சிவபெருமான் ஓடோடி வந்து கை கொடுத்து பிருங்கி முனிவரை தாங்கி பிடித்தார். பிறகு பிருங்கி முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு பிருங்கி முனிவர், “மோட்சம் வேண்டும்” என்று கேட்டார். சிவபெருமானும் அவர் கேட்ட வரத்தை வழங்க தயாரானார். அப்போது பார்வதிதேவி அதை தடுத்தார். என்றாலும் தன் பக்தனுக்கு கேட்கும் வரத்தை கொடுக்க வேண்டும் என சிவபெருமான் உறுதியாக இருந்தார். இதனால் சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் மோதல் ஏற்பட்டது. சிவபெருமான் மீது பார்வதிக்கு ஊடல் ஏற்பட்டது. சிவபெருமானை பிரிந்து ஆலயத்துக்கு வந்து பார்வதிதேவி கதவை பூட்டிக் கொண்டார்.

    பார்வதிதேவியின் ஊடலை தணிக்க நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயன்மாரை சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் இருதலைகொள்ளி எறும்பாக தவித்தார். பக்தனுக்காக பார்ப்பதா? இல்லையென்றால் தாலி கட்டிய மனைவிக்காக பார்ப்பதா? என்று யோசித்தார். இருவருமே வேண்டும் என்று தீர்மானித்த அவர் அன்று இரவு தனியாக இருக்கிறார். மறுநாள் பக்தனுக்கு அருள்பாலித்து விட்டு ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார். இதனால் அவர்களது ஊடல் நிறைவுபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை காட்டப்படும்.

    இதற்கிடையே அன்று மாட்டு பொங்கல் என்பதால் திருவண்ணாமலை தலத்தில் உள்ள நந்திகள் அனைத்துக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். குறிப்பாக அண்ணாமலையாரை நோக்கி அமர்ந்து இருக்கும் 5 நந்திகளுக்கும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கும். பெரிய நந்திக்கு பழ வகைகள், காய்கறிகள், வடை, அதிரசம், முறுக்கு போன்றவற்றால் மாலைகள் செய்து அலங்காரம் செய்வார்கள்.

    இந்த நந்திகளுக்கு அன்று அதிகாலையில் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாசல் வழியாக வெளிவருவார்கள். அப்போது சூரிய பகவானுக்கும் காட்சி கொடுப்பார்கள். இதையடுத்து மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.

    அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்பாள் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோபத்துடன் புறப்பட்டு சென்று விடுவார். அவர் கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னதி கதவுகளை மூடிக்கொள்வார். இதைத் தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டு செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது ஆகும். ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் இந்த கிரிவலமும் ஒன்றாகும்.

    அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள். கிரிவல பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள் புரிவார். அன்று மாலை அண்ணாமுலையார் ஆலயம் திரும்புவார்.

    அப்போது உண்ணாமலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் கோபம் தீர்ந்து விடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே இந்த திருவூடல் திருவிழா நடத்தப்படுகிறது.

    திருவூடல் திருவிழாவை ஆரம்பம் முதல் மறுவூடல் வரை பார்ப்பவர்களுக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும் என்பார்கள். அதனால்தான் “திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை” என்ற சொல் உருவானது.

    கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இதுபோன்ற சிறப்பான திருவிழா தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடப்பது இல்லை. திருவண்ணாமலையில் மட்டுமே இது நடக்கிறது. எனவே பொங்கலுக்கு மறுநாள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கி திருவூடலை கண்டு பலன்கள் பெறுங்கள்.
    திருவண்ணாமலையில் கடந்த 2000-ம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரத்தில், குற்றவாளிகள் 5 பேருக்கு மாவட்ட கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000ம் ஆண்டில், விஷம் கலந்த சாராயத்தை குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயபால், முருகன், காளியப்பன், தில்லைக்கண்ணு, குமார் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டது. 

    மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கும் தலா, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தண்டனையை எதித்து குற்றவாளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் 5 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்தனர். 
    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஆலங்காயம், குடியாத்தம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டையில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் வேரோடு மரம் சாய்ந்தது. வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு ஆலங்காயம், காவலூர், நாயக்கனூர், பீமகுளம் ஆகிய பகுதிகளிலும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    வாணியம்பாடி, ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே வெட்டி அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மேலும், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி வீரான் வட்டத்தில் பெய்த பலத்த மழையால் சீகை என்ற 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பெரிய மரம் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மாற்று வழியில் சுற்றிச் சென்றனர்.

    ஆற்காடு பகுதியில் பெய்த பலத்த மழையால் வளையாத்தூர் மதுரா, பல்லவராயன் குளம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்றும், ஏழுமலை என்பவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்றும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும், ஆரணி, போளூர், வந்தவாசி, செங்கம் பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கம் அருகே உள்ள கரிமலைப்பாடியை சேர்ந்தவர் கோமதி (13). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் பக்கத்தில் ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அப்பகுதியில் பெய்த மழையினால் ஓட்டு வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்தது. கோமதி வீட்டில் இருந்து வெளியே வந்த போது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து கோமதியின் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார்.

    செங்கம் அடுத்த ஆலப்புத்தூரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் தனசு (வயது 15), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அங்கு பெய்த கன மழை காரணமாக தனசு வீட்டின் அருகே இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது.

    வீட்டின் அருகே முறிந்து கிடந்த மரக்கிளையை அகற்றும் பணியில் தனசு ஈடுபட்டான். அப்போது அறுந்துகிடந்த மின்கம்பியை தனசு மிதித்துள்ளான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறினர்.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்- 0.7

    ஆம்பூர் - 7.2

    வாணியம்பாடி- 9.0

    ஆலங்காயம்- 34.8

    அரக்கோணம்- 25.6

    காவேரிப்பாக்கம்- 9.2

    சோளிங்கர்- 15.6

    ஆற்காடு- 21.4

    மேல்ஆலத்தூர் - 34.5 .

    ×