search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
    • 4-ந் தேதி மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

    விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தக்காலிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மங்கள வாத்தியங்கள் முழங்க நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருள பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • மே 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • மே 4-ந்தேதி இரவு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, அன்று மாலை 4 மணி முதல் மாலை 5.25 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மூகூர்த்தம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 25-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு சுவாமிக்கு மண்டகபடி, வீதிஉலா நடை பெறும்.

    விழாவின் நிறைவாக, மே 4-ந்தேதி காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடக்கிறது.

    மேலும் அன்று நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சமீப நாட்களாக தினமும் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.17 மணியளவில் தொடங்கி நேற்று காலை 10.57 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரையில் பக்தர்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத வகையில் தரைக்கடைகள், டீக்கடைகள், இளநீர் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சில டீக்கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளில் தங்கள் கடை முன்பு இருக்கைகளை போட்டு வைத்து இருந்தனர். இதனால் சாலையில் கூட்டத்துடன் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் பக்தர்கள் நடைபாதையிலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் ஈசான்ய மைதானத்தில் இருந்து ஈசான்ய லிங்கம் கோவில் வரை நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத வகையில் வரிசையாக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று பக்தர்கள் வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை வெயில் தொடங்கிய காரணத்தினால் வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசன வழி மட்டுமின்றி கோவிலுக்கு வெளியிலும் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வர போக்குவரத்து துறையின் மூலம் பஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் திடீரென பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரெயில் வந்ததும் பக்தர்கள் ஒருவரை, ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

    இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பவுர்ணமி இன்று காலை 10.57 மணி வரை இருக்கிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை சுமார் 10.17 மணியளவில் தொடங்கியது. பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்தவாறே இருந்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பக்தர்கள் தரை சூட்டினால் ஓட்டமும், நடையுமாக சென்றனர்.

    கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனிடையே மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) காலை 10.57 மணி வரை இருந்ததால் இன்று காலை வரை விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.56 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8-ந்தேதி ஹோமம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சாமி சன்னதியில் சாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு 8 மணி அளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

    இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருகின்றனர்.

    அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 7-ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி காலை ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    9-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக்குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    • பவுர்ணமி இன்று இரவு 7.14 மணி வரை உள்ளது.
    • போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 5.39 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.14 மணி வரை இருந்ததால் இன்று காலை வரை விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    மேலும் போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • பவுர்ணமி இன்று காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது.
    • 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை 6-ந்தேதி காலை 5.08 மணிக்கு தொடங்கி 7-ந்தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 6-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதோடு, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 6-ந்தேதி (நாளை) மாசி மகத்தை முன்னிட்டு பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமி நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இன்று மாலை ஈசான்ய மைதானத்தில் தொடங்குகிறது.
    • இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலகபிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். அதன்படி கோவிலில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும்.

    மகா சிவராத்திரி விழாவை அனைத்து சிவன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு முதல் முறையாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு ஓதுவார்கள் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களின் திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    7.30 மணிக்கு புதுவை சுரேஷ் குழுவினரின் கயிலாய வாத்திய நிகழ்ச்சியும், 8 மணிக்கு ஜெகத்லயா குழுவினர் மற்றும் சகானா அகாடமி குழுவினர், தில்லை ஸ்ரீசிவகாமி மாதங்கி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 9 மணிக்கு கலைமாமணி துறையூர் முத்துக்குமார் குழுவினரின் சாமியாட்டமும், 9.25 மணிக்கு சிவனடியார்கள் பெரிதும் சிந்தை மகிழ்வது மக்கள் தொண்டிலா, மகேசன் தொண்டிலா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு செம்பருத்தி கலைக்குழு, பரமசிவம் குழுவினரின் நையாண்டி மேள நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு பினேஷ் மகாதேவன் குழுவினரின் நாட்டிய நாடகமும், அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல் மின்னல் மூர்த்தி குழுவினர் வழங்கும் தப்பாட்டம் நிகழ்ச்சியும், 2 மணிக்கு சக்தி குழுவினரின் நாத சங்கமம் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் அபிலாஷ், அனிருத், ரேஷ்மா, ஷியாம், தன்யஸ்ரீ ஆகியோர் வழங்கும் இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கார் பதிவு எண்ணை கைப்பற்றி விடிய, விடிய சோதனை
    • ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது.இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா? போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய் யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 10.41 மணி அளவில் தொடங்கியது.
    • இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 10.41 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று இரவு 9 மணி வரை சிலர் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பா தையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 வரை இருப்பதால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    ×