search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
    • இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 9-ம் நாளான நேற்று மதியம் 12 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் சிகரமாக மகா தீபம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக கோவிலில் மகா தீபத்தையொட்டி கரும்பு மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் நேற்று கோவிலில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உள்பட போலீசார் உடனிருந்தனர்.

    • இன்று 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    • திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர். அவர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால் அந்த பஸ்களும் நிரம்பியவாறு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

    இதனையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் நகராட்சித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறையால் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிரிவலப்பாதை அடிக்கடி தூய்மை பணியாளர்களால் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 இணைப்பு சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து உரிய சோதனைக்கு பின்னரே வாகனங்களை போலீசார் நகருக்குள் அனுமதித்த வருகின்றனர்.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது.

    திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டுகளில் இருந்தது போன்று தீபத் திருவிழாவின் போது பொதுமக்களுக்கு இடையூறாக போலீஸ் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என்று தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தின் போது காவல் துறையினருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் போலீசாரின் வாகனங்களே அணிவகுத்து சென்றன. ஒவ்வொரு உயர் அதிகாரிகளின் வாகனங்களின் பின்புறமும் அதிரடிப்படையினர் வாகனங்களும் அதிகவேத்தில் சென்றன. இன்று டிசம்பர் 6-ந் தேதி என்பதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மகா தீபத்திற்கு முந்தைய நாளிலேயே திருவண்ணாமலை நகர சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். கிரிவலப்பாதையிலும் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • கிரிவல வழிபாட்டைப் பவுர்ணமி அன்று மட்டும்தான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
    • திருவண்ணாமலையை வலம் வருதல் நலம் பயக்கும்.

    சந்திரனின் அதிர்வுகள், காந்த சக்தி நம் மேல் விழுந்தால் நம் இயல்பான சக்தி வளமடையும். இதனால்தான் பவுர்ணமி அன்று கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. நிலவின் கதிர்கள் மலைமீதுள்ள மூலிகைகள், பாறைகள், மரங்கள் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் போது வருகிற அரிய சக்தி நம்முடைய உடல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது.

    கிரிவல வழிபாட்டைப் பவுர்ணமி அன்று மட்டும்தான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விசேஷ தினங்கள், சிவனுக்கு உகந்த சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் சூரிய கிரகணம், அமாவாசை, புதுவருடப்பிறப்பு, ஜூன் 21 மற்றும் டிசம்பர் 21-ந்தேதிகளில் திருவண்ணாமலையை வலம் வருதல் நலம் பயக்கும். குறிப்பாக ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் மிகவும் விசேஷமானவை.

    பவுர்ணமி அன்று வலம் வருவது பொருளையும், அமாவாசை வலம் அருளையும் தரும். கிரிவலம் வருவதற்கு மிகவும் உகந்த நேரம் விடியற்காலை தான். காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான வேளைக்குப் பிரம்ம முகூர்த்தம் என்றுபெயர். இந்த வேளைக்குத் திதி, வார, நட்சத்திர, யோக, தோஷங்கள் கிடையாது. இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டை நிறைவேற்றி நமது வேலைகளைச் செய்யத் தொடங்கினால் அது அதிக பலன்களைத் தரும்.

    திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.

    மலை உச்சியைப் பார்! என்று ரமணர் உட்பட, பல மகான்களும் சொல்கின்ற பொழுது, மலை உச்சியில் மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப் பார், என்பதே அதன் பொருளாகும். எனவே, திருவண்ணாமலையை நோக்கியவாறே கிரிவலம் வருகின்ற பொழுது சர்வேஸ்வரனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிர்கின்ற ஜோதி சக்தியின் அணுவுள் அணுவாய், அணுவின் பிரிவாய் ஒளிர்கின்ற அந்த ஜோதியை உள்ளூர ஆத்ம ஜோதியாகத் தரிசிக்கின்றோம் என்பது இதன் பொருளாகும். இதுவே ஸ்ரீஅகஸ்திய பெருமான் அளிக்கின்ற ஜோதி தரிசன கிரிவல முறைகளுள் ஒன்றாகும்.

    ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு வழிவகுக்கின்ற உத்தமமான ஜோதி யோக முத்ரா கிரிவல முறை இது. ஆனால், இதற்கு தினம்தோறும் இல்லத்தில் விளக்கு தீப ஜோதியைத் தியானித்து தரிசிக்கின்ற வழக்கத்தைக் கொண்டால்தான் சூட்சும ஜோதியை ஓரளவேனும் உணர முடியும்.

    நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றோமே எங்களால் திருவண்ணாமலை கிரிவலம் வர முடியாதே என்று பலர் நினைக்கக்கூடும். உங்கள் ஊர் ஆலயத்தில் பெரும்பாலும் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக லிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார் அல்லவா. தினந்தோறும் ஸ்ரீலிங்கோத்பவ சன்னதியில் மூன்று அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி அதனைத் தியானித்து தரிசித்து வாருங்கள்.

    எங்கெல்லாம் ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாரோ அங்கெல்லாம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியின் சக்தி விரவி உள்ளது என்பதை உணருங்கள்.

    மேலும், பவுர்ணமியின் போது நாமெல்லாம் செய்கின்ற இறைப்பணி போல அதே நேரத்தில் சந்திர பகவானும் ஓர் அரிய இறைத்திருப்பணியைச் செய்து வருகின்றார். ஒவ்வொரு பவுர்ணமியிலும் தம்முடைய முழுமையான 16 கலை கிரணங்களால் திருவண்ணாமலையில் ஜோதி சக்தியைப் பொழிந்து ஆராதிக்கிறார்.

    • கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதில் பல்வேறு ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
    • திருவண்ணாமலை தலத்தில் இரு தீபங்களும் எப்படி ஏற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் உலகப்புகழ் பெற்றது. உலகத்திற்கு ஒளிகொடுக்கும் தீபமாக இந்த கார்த்திகை தீபம் கருதப்படுகிறது. கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதில் பல்வேறு ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    பரணி தீபம் என்பது நமக்கு பொன்பொருள், ஆஸ்தி அந்தஸ்து உள்பட அனைத்து வகை செல்வங்களையும் தரக்கூடியது. இந்த பிறவிக்கு தேவையான அனைத்து வகை செல்வங்களையும் பரணி தீபம் தரும்.

    ஆனால் மகாதீபம் என்பது மோட்சத்தை தரக்கூடியது. பிறவி பிணி நீங்கி வீடுபேறு பெற வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரும் மகாதீபத்தை நேரில் கண்டு வழிபடவேண்டும். இத்தகைய சிறப்பான இந்த இரு தீபங்களும் திருவண்ணாமலை தலத்தில் எப்படி ஏற்றப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 3 மணிக்கெல்லாம் நடை திறந்துவிடுவார்கள். முதலில் கருவறை அண்ணாமலையார் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். பிறகு கருவறை முன்புள்ள பிரதோச மண்டபத்தில் பரணி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

    பரணி நட்சத்திர நேரத்தில் இந்த தீபம் ஏற்றப்படுவதால் இதற்கு பரணி தீபம் என்று பெயர். இதற்காக அந்த மண்டபத்தில் ஹோமம் வளர்க்கப்படும். அதில் இருந்து ஒரு தீபம் ஏற்றப்படும். பிறகு அந்த தீபத்தில் இருந்து ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவார்கள்.

    சிவபெருமான் ஐந்து தொழில்களை செய்பவர் என்பதை குறிக்கும் வகையில் ஐந்துமுகங்கள் கொண்டவர் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஐந்து மடக்கு தீபங்கள் இருக்கும். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மூழங்க இந்த தீபம் ஏற்றப்படும்.

    அதன்பிறகு கருவறை லிங்கத்திற்கு நிறைய கற்பூரங்கள் வைத்து தீபம் காட்டப்படும். அந்த தீபத்தை பிரதோஷ மண்டபத்திற்கு கொண்டு வருவார்கள். ஐந்து மடக்குகளில் உள்ள தீபத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

    பிறகு அந்த பஞ்சமூக தீபத்தை அப்படி பிரகாரம் வழி யாக எடுத்து வந்து உண்ணாமலையம்மன் சன்னதிக்கு செல்லும் வாசல் வழியாக வந்து மலையை நோக்கி காண்பிப்பார்கள். இதைதொடர்ந்து பஞ்சமூக தீபங்களில் ஒரு தீபம் உண்ணாமலையம்மன் சன்னதியில் வைக்கப்படும். அந்த தீபத்தில் இருந்து சாந்திகலா, சாந்ததீத கலா, வித்தியாகலா, பிரதிஷ்டா கலா, நிவர்த்திகலா என்ற ஐந்து மூக தீபங்கள் ஏற்றப்படும். அதன்பிறகு விநாயகர் முதல் சொர்ணபைரவர் சன்னதி வரை தீபங்கள் வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் அன்று பகல் தீர்த்தவாரி நடைபெறும். 11 மணி அளவில் பருவத ராஜக்குலத்தை சேர்ந்தவர்கள் ஆலயத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு ஆலய அலுவலகத்தில் மாலை அணிவித்து சிறப்புகள் செய்யப்படும்.

    இதற்கிடையே ஏற்கனவே வைத்த தீபங்கள் ஒன்றாக சேர்க்கப்படும். அதை எடுத்து வந்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள்.

    அந்த தீபம் பருவத ராஜக்குல பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அதை அவர்கள் மலைக்கு எடுத்து செல்வார்கள். சுமார் 3 மணி நேர நடைபயணத்திற்கு பின் அவர்கள் மலை உச்சிக்கு சென்று அடைவார்கள். மலை உச்சியில் ஏற்கனவே பிரம்மாண்ட தீப கொப்பரை தயார் நிலையில் இருக்கும்.

    நெய் ஊற்றி கடாதுணி சுற்றிவைக்கப்பட்டு தீபம் ஏற்று வதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று பருவத ராஜக்குல பிரதிநிதிகள் தீபம் ஏற்றும் பணிகளை தொடங்குவார்கள். 5 மணிக்கெல்லாம் அவர்கள் தீபம் ஏற்றுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயாராக இருப்பார்கள்.

    இந்தநிலையில் அண்ணாமலையார் ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கும். ஐந்து மணிக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் ஒவ்வொருவராக ஆலயத்திற்குள் இருந்து வெளியில் வரதொடங்குவார்கள். அதாவது திருவண்ணாமலை ஆலயத்தில் 2-வது பிரகாரத்தில் இருந்து 3-வது பிரகாரத்திற்கு வருவார்கள். 3-வது பிரகாரம் நல்ல விசாலமானது.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த பிரகாரத்தில் அமர முடியும். அந்த பிரகாரத்தில் சுற்றுச்சுவர்களின் மேல் நூற்றுக்கணக்கானவர்கள் அமரக்கூடிய வசதி உடையது. அந்த பிரகாரத்தின் மையப்பகுதியில் மங்கையர்கரசி மண்டபம் உள்ளது. மங்கையர்கரசி கட்டியதால் அந்த மண்டபத்திற்கு அந்த பெயர் வந்துள்ளது. இந்த மண்டபத்தை தீபத்தரிசன மண்டபம் என்று சொல்வார்கள்.

    இந்த மண்டபத்தில் இருந்து பார்த்தால் மலை உச்சி நல்ல தெளிவாக தெரியும். இந்த மண்டபத்திற்கு தான் பஞ்ச மூர்த்திகளும் அணிவகுத்து வருவார்கள். பஞ்ச மூர்த்தி என்பவர்கள் விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேர்களை குறிக்கும்.

    முதலில் தங்க வாகனத்தில் விநாயகர் வருவார். அவரை தொடர்ந்து தங்க வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்து அருள்வார். அதன்பிறகு அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்பாளும் வருவார்கள். இறுதியில் வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வருகை தருவார்கள். பஞ்ச மூர்த்திகள் ஐந்து பேரும் மலையை பார்க்கும் வகையில் அந்த மண்டபத்தில் வரிசையாக அமர வைக்கப்படுவார்கள். சுமார் 5.58 மணிக்கு 2-ம் பிரகாரத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் துள்ளாட்டம் போட்டபடி வெளியில் வருவார். ஆண்டுக்கு ஒரு தடவை தீபத்தினத்தன்று மட்டுமே இவர் வெளியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் வெளியில் வரும்போதே மலையை பார்த்தப்படி வருவார். பிறகு பஞ்ச மூர்த்திகளுக்கும் காட்சிக்கொடுப்பார். 2 நிமிடம் தான் அவர் வெளியில் இருப்பார். பிறகு அவர் உள்ளே சென்றுவிடுவார். சிவனும்-சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்திவிட்டு சென்றதும் அகண்ட தீபத்தில் இருந்து தீபம் ஏற்றி மலை உச்சியை நோக்கி காட்டுவார்கள்.

    எலாய் என்ற தீபம் மூலம் மலை உச்சிக்கு சிக்னல் காட்டப்படும். எலாய் என்பது வட்ட வடிவில் இருக்கும் தீபமாகும். சுமார் 11 எலாய் தீபம் தயாராக வைத்து இருப்பார்கள். அந்த எலாய் தீபங்களை அப்படியும், இப்படியுமாக அசைத்து காட்டுவார்கள்.

    ஆலயத்திற்குள் இருந்து சிக்னல் காட்டப்பட்டதும் மலை உச்சியில் சரியாக 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். பருவத ராஜக்குலத்தை சேர்ந்தவர்கள் அந்த மகா தீபத்தை ஏற்றுவார்கள். இதற்காக திருண்ணாமலையில் பருவத ராஜக்குலத்தை சேர்ந்த குடும்பத்தினர் உள்ளனர்.

    அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மகாதீபத்தை ஏற்றுவது குறிப்பிடத்தக்கது. மகாதீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலையில் திரண்டு இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... உண்ணாமலைஅம்மனுக்கு அரோகரா... என்று விண்அதிர கோஷம் எழுப்புவார்கள். அந்த சமயத்தில் ஆலயத்தின் ஒரு பகுதியில் வாண வேடிக்கைகள் நடத்தப்படும். ஆலயம் முழுவதும் மின்சார அலங்கார விளக்கு எரிய தொடங்கும்.

    ஆலயத்தில் உள்ள 9 கோபுரங்கள் கணக்கில் அடங்காத சன்னதிகள், மண்டபங்கள், 30 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர்கள் என திரும்பிய திசையெல்லாம் மின்சார அலங்கார விளக்குகள் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்.

    அந்த புத்துணர்ச்சியுடன் மலை உச்சியில் எரியும் மகாதீபத்தை கண்டு பக்தர்கள் வழிபடுவார்கள். அதோடு திருவண்ணாமலை முழுக்க ஆங்காங்கே தெருக்களிலும், சாலையோரங்களிலும் பக்தர்கள் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தை மேற்கொள்வார்கள். மகாதீபத்தை பார்த்து கும்பிட்டு கொண்டே கிரிவலம் வருவது தனி சுகம். அந்த சுகத்தை திருவண்ணாமலை தலத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்.

    • நாளை காலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
    • 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 27-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப விழா தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சபூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர். விழாவில் 7-ம் நாளான கடந்த 3-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தமிழ்நாடு உட்பட 4 மாநில கவர்னர்கள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் வருகை தர உள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
    • மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீப திருவிழா கோவிலின் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். அதன்பின்னரே ஏற்றுவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    இவை இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

    பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
    • இத்தீபம் 11 நாட்கள் எரியும்.

    திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படும். அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும்.

    ஒருவனே அனைத்தும் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியின் ஈசான மூலையில் இருந்து தீபம் ஏற்றப்படும். மடக்கில் நெய்தீபம் ஏற்றப்படும், இந்த தீபத்திலிருந்து உலக தோற்றத்திற்கு காரணமான பஞ்ச பூத தத்துவத்தை விளக்கும் விதமாக 5 தீபங்கள் ஏற்றப்படும்.

    அந்த 5 தீபங்களும் ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பின்னர் இந்த தீபங்கள் ஒரே தீபத்தில் சேர்க்கப்படும். இறைவன் அனைத்தும் நிறைந்தவன் என்ற தத்துவத்தை இது விளக்குகிறது. உயிர்களின் தோற்றத்திற்கு காரணமான பஞ்ச பூதங்களிலும், இறைவன் கலந்து இருப்பதை விளக்குகிறது. இது பரணி தீபமாகும்.

    அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

    மாலை 6 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

    ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

    தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்து விடுவார்கள்.

    ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

    லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது.
    • இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் தேர்த்திருவிழா நடைபெற்றது முதலில் விநாயகர் தேர் காலை 6 45க்கும் தொடங்கி 10 20க்கு நிலைக்கு வந்தன.

    அதனைத் தொடர்ந்து முருகர் 10.35க்கும் தொடங்கி 2.50 மணிக்கு நிலைக்கு வந்த சேர்ந்தன. தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய தேர் மாலை 3. 47 க்கு தொடங்கியது பெரிய தேர் தொடங்கியது.

    அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் மிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.

    மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது. பின்பு இரவு 11 42 மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தன இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும். இது தேர் மாட வீதியை உலா வந்து விடியற்காலை 4 மணிக்கு வந்து நிலைக்கு சேர்ந்தன. இதனுடன் சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.

    • 6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    தீப தரிசன நாளான டிசம்பர் 6-ந் தேதி காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக 6-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் காலை 6 மணி முதல் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். முதலில் வரும் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். மலை ஏற அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்களர் அடையாள அட்டை மற்றும் பிற இதர அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.

    மலை ஏறும் பக்தர்கள் பே கோபுரம் அருகில் உள்ள வழியாக மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலையேற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

    6-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலையேறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

    இந்த நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
    • பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    • 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
    • ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    திருவசண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணையதளம் வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.

    கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.

    கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மதியம் 2.30 முதல் 3.30 வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த 2 தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இணையதளம் வழியாக கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக 1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுலாம். கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடு பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை இணையதளம் மூலம் செலுத்தலாம். மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டண சீட்டுகள் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×