search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • இன்று தேரோட்டம் நடக்கிறது.
    • காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியில் செல்ல தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் வீதி உலா வந்தனர்.

    பின்னர் விநாயகரும், சந்திரசேகரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 2 வருடங்களாக தீபத் திருவிழாவின் போது 63 நாயன்மார்கள் உற்சவ வீதிஉலா நடைபெறவில்லை.2 ஆண்டுகளுக்கு பிறகு நாயன்மார்களை மாணவர்கள் சுமந்து செல்லும் காட்சியை காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி தேரையொட்டி திருவண்ணாமலை நகரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் திருவண்ணாமலை நகர மற்றும் மாட வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட உள்ளனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • நாளை தேரோட்டம் நடக்கிறது.
    • அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    முன்னதாக சாமி வீதியுலா சென்ற வாகனங்கள் மற்றும் மாட வீதியில் போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர்.

    இரவு 11 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நாயன்மார்கள் வீதியுலா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு நாயன்மார்கள் வீதியுலா நடைபெற உள்ளதால் சாமியை மாணவர்கள் வரிசையாக சுமந்து வரும் காட்சியை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது. இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேரான (சாமி தேர்) மகா ரதம் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளின் தேர்களில் பொருத்தப்படும் கலசங்களுக்கு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலில் இருந்து தேரடி வீதிக்கு கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடைபெறும் வரிசை முறைப்படி முதலில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களில் பொருத்தும் பணி நடைபெற்றது.

    கடந்த 2 வருடங்களாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றதால் இந்த ஆண்டு மாட வீதியில் நடைபெற உள்ள தேரோட்டத்தை காண மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. 3-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் முருகரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 4-ம் நாளான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர், பல்லக்கு வாகனத்திலும் சந்திரசேகரர், நாக வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னே நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி கற்பக விருட்சம், காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மகா தீபத்திற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய், ஆவினில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    மகா தீபத்திற்கு தேவையான நெய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் நேரடியாக நெய் விற்பனை தொடங்கப்படும். இதற்காக கோவிலின் ராஜகோபுரத்தின் அருகில் நேரடி நெய் விற்பனைக்கான கவுண்டர் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பக்தர்கள் மகா தீப நெய் காணிக்கைக்கான ரசீது பெற்று நேரடியாக நெய் விற்பனை கவுண்டரில் வழங்கி செலுத்தினர்.

    கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். தீபத் திருவிழா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற வேண்டி மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் உள்ள சாமி பாதத்திற்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வழிபட்டனர்.

    • பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும்.
    • பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவிலில் நேற்று 1,008 சங்காபிஷேகமும், சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு யாக சாலை பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

    • இன்று விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • வருகிற 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம் போல் மாட வீதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு சாதம், காய்கறிகள், வடை, பாயாசம் படைத்து பூஜை நடைபெறும்.
    • இன்று பிடாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவிற்கு முன்பு காவல் தெய்வ வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் வலம் வந்தார். அப்போது அம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    அப்போது அம்மனுக்கு சாதம், காய்கறிகள், வடை, பாயாசம் படைத்து பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வருவார்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்ற சாமி உலா இந்த ஆண்டு மாடவீதியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • நாளை துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.
    • 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீப தரிசனம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

    தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும். அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம்.
    • கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் உள்ள 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நேற்று குபேர கிரிவலம் நடைபெற்றது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர்.

    மாலை 6 மணியளவில் குபேர லிங்க கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவிலும் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    குபேர கிரிவலத்தை யொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 27-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.
    • ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஈசான்யா மைதானம், காந்திநகர் பைபாஸ் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

    மேலும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.

    இதையொட்டி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழா நாட்களில் சாமி வீதி உலா செல்லும் வெள்ளி வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, 'பாலீஷ்' போடும் பணியும், கோவிலை சுற்றி வண்ண விளக்குகள் பொறுத்தும் பணியும் நடந்து வருகின்றது.

    மேலும் மதுரையை சேர்ந்த சிவனடியார்கள் உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரம், பலி பீடம் மற்றும் விளக்குகளை சுத்தம் செய்தனர்.

    • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
    • 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில்,பங்கேற்கசெல்லும் பக்தர்களுக்குபல்வேறு அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள் சார்பில்அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த சேவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் பத்மாவதிபுரத்தில் இயங்கி வரும் திருவண்ணாமலை டிரஸ்ட் மூலம்இரு மண்டபங்களில் 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 40வது ஆண்டாக, இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டுஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதற்காக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஏற்பாட்டில், வசூலிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாயை,டிரஸ்ட் செயலாளர் சண்முகசுந்தரத்திடம், எம்.எல்.ஏ., வழங்கினார். டிரஸ்ட் நிர்வாகிகள்விவேகானந்தம், மோகனசுந்தரம், முருகேசன்,சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கார்த்திகை தீப திருவிழா 27-ந் தேதி தொடங்க உள்ளது.
    • டிசம்பர் 6-ந்தேதி மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 27-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி அதிகாலை கோவிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    கடந்த கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாடவீதியில் சாமி உலா நடைபெறாமல் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனால் பல்வேறு சாமி வீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் முடிவடைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    சாமி மற்றும் அம்பாள், திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலை மாலை என இரு வேளைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம், தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    அதன்படி சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 7-ம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும்.
    • தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-

    திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

    மேலும் 7 டிரோன்கள் மூலமும், 57 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. மலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மலை மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ×