search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிவுக்கரசி"

    பிரபல நடிகை வடிவுக்கரசி தங்கியிருக்கும் தி.நகர் வீட்டில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். #Vadivukkarasi
    பிரபல நடிகை வடிவுக்கரசி. கன்னிப் பருவத்திலேயே படத்தில் அறிமுகமான அவர் முதல் மரியாதை, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

    இவரது வீடு இருக்கும் அதே பகுதியில் மகள் வீடும் உள்ளது. கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.



    நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் விமர்சனம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin
    அப்பா பூ ராமு, பாட்டி வடிவுக்கரசியின் வளர்ப்பில் வளரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பேச்சை தட்டுவதில்லை. விவசாயம் செய்வதற்கான படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.

    அதேபோல் கஷ்டப்படும் தனது ஊர் மக்களுக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்து, அவர்களால் அதை அடைக்க முடியாவிட்டால் தானே முன்வந்து அதனை அடைக்கிறார். இந்த நிலையில், அந்த ஊரிருக்கு வங்கி அதிகாரியாக வரும் தமன்னா, ஒரே நபர் ஊரில் உள்ள  பலருக்கும் கடன் வாங்கி கொடுத்திருப்பதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.


    உதயநிதி ஸ்டாலினுக்கு இது கோபத்தை உண்டுபண்ண, உதயநிதி தமன்னா இடையே சிறிய மோதல் ஏற்படுகிறது. பிறகு இவர்களுக்கிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. பின்னர் தங்களது விருப்பத்தை வீட்டில் தெரிவிக்கின்றனர். வடிவுக்கரசிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் போக, இருவரையும் சந்திக்கவோ, பேசவோ விடாதபடி செய்கிறார். 

    கடைசியில், உதயநிதி - தமன்னாவின் காதல் என்னவானது? இருவரும் இணைந்தார்களா? இவர்களது திருமணத்திற்கு வடிவுக்கரசி சம்மதித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    விவசாயியாக வரும் உதயநிதி படம் முழுக்க கமலக்கண்ணன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் தனது மவுனத்தின் மூலமே தனக்கு உண்டான வலியை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். விவசாயிகள் கடன், நீட் பற்றி தைரியமாக பேசியிருக்கிறார். நிமிர் படத்திற்கு பிறகு உதயநிதியிக்கு முக்கிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது குடும்பத்தை வழிநடத்தும் தைரியமான பெண்ணாக தமன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். பண்பானவராக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் தமன்னாவுக்கு பாராட்டுக்கள்.



    கோபம், காமெடி என வடிவுக்கரசி வித்தியாசமான பாட்டி வேடத்தில் வந்து கவர்ந்து செல்கிறார். பூ ராமுவுக்கு வசனங்கள் அதிகமாக இல்லை என்றாலும், பார்வையாலேயே நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சில வசனங்களே பேசினாலும் அதில் பொதிந்து இருக்கும் உண்மைகள் நிதர்சனமானவை என்பதை உணர்த்திச் செல்கிறார். மற்றபடி வசுந்தரா, சரவணன் சக்தி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன், ஷாஜி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப போதுமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வடிவுக்கரசிக்கு தகவல் கொடுக்கும் கதாபாத்திரமும் கவரும்படியாக இருக்கிறது. 



    ஒரு சாதாரண கதையில் பாசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சீனு ராமசாமி. கண்ணுக்குள் புதைந்திருக்கும் ஈரத்தை தன்னுடைய காட்சிகள் மூலம் கண்ணீராக வரவைப்பதில் சீனு ராமசாமி கைதேர்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஈர்த்துவிடுகிறார். கதாபாத்திரங்களிடம் எதார்த்தமான நடிப்பை வரவைப்பதில் சீனு ராமசாமி வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். மூ. காசி விஸ்வநாதனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

    விவசாயிகளின் வலி, நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் மண் சார்ந்த கதையை உருவாக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள். மிகைப்படுத்தாத வசனங்கள் இயல்பானதாக படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.



    யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக கலங்க வைக்கின்றன. ஜலேந்தர் வாசனின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக இருக்கிறது. அருமை.

    மொத்தத்தில் `கண்ணே கலைமானே' அன்பான படம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin #Tamannaah

    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் முன்னோட்டம். #KanneKalaimaane #UdhayanidhiStalin #Tamannaah
    ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கண்ணே கலைமானே'.

    உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், பூ ராமு, வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப், விடிவி கணேஷ், வெற்றிக்குமாரன், அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, ஒளிப்பதிவு - ஜலந்தர் வாசன், படத்தொகுப்பு - மூ.காசிவிஸ்வநாதன், கலை இயக்குநர் - விஜய் தென்னரசு, ஒலி வடிவமைப்பு - டி.உதய்குமார், இணை தயாரிப்பு - எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, தயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின், எழுத்து, இயக்கம் - சீனு ராமசாமி.



    படம் பற்றி தமன்னா பேசும் போது,

    இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள் என்றார்.

    படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah

    கண்ணே கலைமானே டிரைலர்:

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    ×