search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிசாஸ்திரி"

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார். #RaviShastri #WorldCup
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர் (பேட்டிங் பயிற்சியாளர்), பரத் அருண் (பந்துவீச்சு), ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். 2017-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்புக்கு வந்த இவர்களின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிவடைகிறது.

    முன்னாள் ஆல்-ரவுண்டரான ரவிசாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு பிடித்தமானவராக இருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. உலக கோப்பை போட்டிக்கு பிறகும் கூட அவர் தான் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பெரும்பாலான வீரர்கள் விரும்புவார்கள். ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டதில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பங்களிப்பு முக்கியமானது என்று இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி சொல்வார்.

    ஆனால் பதவி காலம் முடிந்ததும் அவரை அந்த பணியில் நீட்டிக்க வைப்பதோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதோ முடியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. உலக கோப்பையை இந்திய அணி வென்றாலும் கூட அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது. ஏனெனில் அந்த வகையிலான பிரிவுகள் எதுவும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    எனவே தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர ரவிசாஸ்திரி விரும்பினால் அவரும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நேரடியாக இறுதிக்கட்ட பட்டியலில் இடம் பெற அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சச்சின் தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்துவார்கள்.

    உலக கோப்பை போட்டி ஜூலை 14-ந்தேதி நிறைவடைகிறது. அந்த மாதத்தின் இறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதாவது 14 நாட்களில் அந்த தொடர் தொடங்குகிறது. எனவே பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறை அதற்குள் முடிவடையாவிட்டால் இடைக்கால பயிற்சியாளர் இந்திய அணியுடன் அனுப்பி வைக்கப்படுவார். #RaviShastri #WorldCup
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய டோனியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளார். #AUSvIND #dhoni #RaviShastri

    லண்டன்:

    இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:-

    டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள்.

    ஆகவே தான் டோனி ஆடும் வரை அவரது ஆட்டத்தை ரசியுங்கள் என்று நான் இந்தியர்களிடம் சொல்கிறேன். அவர் இல்லையென்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.

    ரிசப்பன்ட் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் விளையாட்டுக்கு ஒரு தூதராக நீண்டகாலம் இருப்பது போல் இன்னொருவர் உருவாவது கடினம்.

    ரிசப்பன்டின் ஹீரோ டோனி தான். ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறார். டெஸ்ட் தொடரின் போது அவர் டோனியிடம் நிறைய பேசியுள்ளார் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட பரஸ்பர மரியாதை மிகப்பெரிய வி‌ஷயமாகும்.


    இதேபோல வீராட் கோலி- டோனி இடையேயான பரஸ்பர மரியாதை நம்ப முடியாத ஒன்றாகும். இதனால் ஓய்வு அறையில் எனது பணி எளிதாகிறது.

    வீரர்களின் ஆட்டத்தில் நான் அதிகம் தலையீடுவது இல்லை. தேவைப்பட்டால் சில வேளைகளில் ஆலோசனை வழங்குவேன்.

    ஒரு வீரர் எதை பார்த்து பயப்படுகிறார் என்றால் நான் தலையில் தட்டி சரி செய்வேன். இந்த வி‌ஷயத்தில் நான் மோசமானவன். இல்லையென்றால் நான் பயிற்சியாளராக இருக்க முடியாது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார். #AUSvIND #dhoni #RaviShastri

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை நியமித்ததில் விதிமீறல் நடந்ததாக முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி கூறியுள்ளார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்திய 20 ஓவர் போட்டி பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு இ-மெயில் அனுப்பினர். அதே சமயம் 20 ஓவர் உலக கோப்பை தொடரின் அரைஇறுதியில் தன்னை வேண்டுமென்றே ரமேஷ் பவார் ஓரங்கட்டியதாகவும், பலமுறை அவர் தன்னை அவமதித்ததாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.



    ரமேஷ் பவார் சர்ச்சையில் சிக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ்ஷா உள்ளிட்டோர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மறுபடியும் விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இவர்களிடம் கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

    இதற்கிடையே இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு நியாயம், பெண்கள் அணியின் கேப்டனுக்கு ஒரு நியாயமா? என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்கள் அணிக்கான முந்தைய பயிற்சியாளர் கும்பிளேவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்ட போது நடந்த விஷயங்களை இப்போது கசியவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக டயானா எடுல்ஜி கூறியதாவது:-

    கும்பிளேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு அவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தார். கும்பிளேவின் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு அவரையே தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க செய்ய தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி விரும்பியது. ஆனால், கோலியிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரவிசாஸ்திரி பயிற்சியாளராக வர வேண்டும் என்பதே கோலியின் ஆசை. காலக்கெடுவுக்குள் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. அவருக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது முற்றிலும் விதிமீறல் என்று அப்போது எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். கும்பிளே ஒரு ஜாம்பவான். இந்த விவகாரத்தில் அவர் அவமதிக்கப்பட்டார். வில்லன் போல் அவரை சித்தரித்தனர். ஆனாலும் பெருந்தன்மையுடன் எதை பற்றியும் பேசாமல் அவர் ராஜினாமா செய்தார். எது எப்படி என்றாலும் ரவிசாஸ்திரி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதே உண்மை.

    கும்பிளே வேண்டாம் என்று கோலி கூறிய போது செவி சாய்த்தீர்கள். இதே போல் பெண்கள் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது. அணியின் முக்கிய வீராங்கனைகளான அவர்களின் கருத்தை நாம் புறக்கணிக்க கூடாது. பயிற்சியாளர் குறித்து அவர்கள் இ-மெயில் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. அணியின் நலனுக்காக வெளிப்படை தன்மையுடன் உண்மையாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி அல்ல. கும்பிளேவை நீக்கும்படி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு தொடர்ச்சியாக தகவல்கள் அனுப்பி மறைமுக நெருக்கடி கொடுத்தார்.

    இவ்வாறு கூறியுள்ள எடுல்ஜி, ரமேஷ் பவாருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளார். பயிற்சியாளரை வீராங்கனைகளின் ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது என்று ஏற்கனவே கைவிரித்து விட்ட வினோத் ராய், கும்பிளேவுக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதன் தொடர்ச்சியாகவே அவர் விலகினார் என்றும் குறிப்பிட்டார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். #IndianTeam #RaviShastri
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.

    அங்கு நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘தென்ஆப்பிரிக்கா (1-2) மற்றும் இங்கிலாந்தில் (1-4) டெஸ்ட் தொடரை தாரைவார்த்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியமானது’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது சற்று கோபித்துக் கொண்டார்.

    “வெளிநாட்டு தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள். சமீப காலமாக நடந்த வெளிநாட்டு தொடர்களை உற்று பார்த்தால், பெரும்பாலான அணிகள் வெளிநாட்டில் சோபிக்கவில்லை என்பது தெரியும். 1990-களில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 2000-ம் ஆண்டு வரை அந்த அணி வெளிநாட்டிலும் வெற்றிகளை குவித்தது. அதே போல் தென்ஆப்பிரிக்காவும் சில ஆண்டுகள் அசத்தியது. இவ்விரு அணிகளையும் தவிர்த்து கடந்த 5-6 ஆண்டுகளில் எந்த அணி வெளிநாட்டில் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு இந்தியாவை மட்டுமே ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள்?” என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி கூறுகையில் ‘வெளிநாட்டு போட்டி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான தருணத்தில் கோட்டை விட்டோம். அது குறித்து அணி கூட்டத்தில் விரிவாக விவாதித்து இருக்கிறோம். இவ்விரு தொடரின் முடிவுகளும் உண்மையான தாக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்றே சொல்வேன். ஏனெனில் உண்மையிலேயே சில போட்டிகள் நீயா-நானா? என்று கடும் நெருக்கமாக நகர்ந்தது. சில முக்கிய கட்டத்தில் தடுமாறியதால் தொடரை இழக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.

    ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி விட்டதா? என்ற இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த சாஸ்திரி, ‘நான் அப்படி நினைக்கவில்லை. உள்ளூரில் எந்த அணியும் வலு குறைந்தது கிடையாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வரும் போது 3-4 வீரர்கள் விளையாட முடியாமல் போவது உண்டு. ஆனாலும் யாரும் இந்தியா பலவீனமான அணி என்று சொன்னது இல்லை. மற்றவர்களின் கருத்து குறித்து எனக்கு கவலை இல்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்றாக செயல்பட்டால், எந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல’ என்றார்.

    இந்திய பந்து வீச்சு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, ‘கடந்த காலங்களில் நாங்கள் பார்த்தது போலவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பவுலிங் செய்வார்கள். ஒரு அணியாக அனைவரும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (காயத்தால் அவதிப்படுகிறார்) இல்லாதது உண்மையிலேயே பின்னடைவு தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்ள முடியும். இப்போது இரண்டு விதமாக யோசிக்க வேண்டி உள்ளது. அவர் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று நம்புகிறேன். அதே சமயம் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலித்தால், ஹர்திக் பாண்ட்யா இல்லாத குறை பெரிய அளவில் தெரியாது.’ என்றார்.
    அறிமுக போட்டியில் பிரித்விஷா பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளதால் அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். #ravishastri

    மும்பையை சேர்ந்த பிரித்விஷா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். குறைந்த வயதில் அறிமுக போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    பிரித்விஷா பயமின்றியும், பதற்றமின்றியும் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டத்தை தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

    பிரித்விஷாவை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பிரித்வி ஷா அருமையாக விளையாடினார். அவர் அறிமுக போட்டியில் பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்றார்.


    பிரித்விஷாவுக்கு இது தனி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்திருக்க வேண்டும். அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை, துலிப் டிராபி ஆகியவற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சர்வதேச போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஆனால் அவரை ஷேவாக்குடன் ஒப்பிடக் கூடாது.

    பிரித்விஷாவை அவரது உலகத்தை பார்க்க விட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்க மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் ஷோவாக்குடன் ஒப்பிட கூடாது என்றார்.

    சுரேஷ் ரெய்னா கூறும் போது, பிரித்விஷா கடினமாக உழைக்கும் வீரர். அவரது பேட்டிங் எனக்கு ஷேவாக்கை ஞாபகப்படுத்துகிறது. அவரது ஷாட்டுகள் உயர்தரமானது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. #PrithviShaw #ravishastri #sachin #sehwag 

    விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. படிப்பதும் இல்லை. எனக்கு தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். #India #RaviShastri
    துபாய்:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்த பிறகு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    நான் இப்போது நன்றாக தூங்குகிறேன். ஒரு சில நாளேடுகளில் உங்களை பற்றி அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி விமர்சித்து இருக்கிறார் என்று கேட்கிறீர்கள். இது போன்ற செய்திகளை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. படிப்பதும் இல்லை. எனக்கு தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. தேவைப்படும் போது டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் எனது கருத்துகளை பதிவிடுகிறேன். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் 100 சதவீதம் நமது வேலையை சரியாக செய்தால் போதும். இது போன்ற விமர்சனங்களால் கலங்கினால், அதன் பிறகு குழப்பத்திற்கு தான் உள்ளாக நேரிடும்.

    அதனால் தான் இவற்றை நான் தவிர்த்து விடுகிறேன்.ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளித்தது குறித்து கேட்கிறீர்கள். அவர் களம் இறங்கினால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தெரியும். ஆனால் அவருக்கு மனரீதியாக ஓய்வு அவசியமாக பட்டது. அதனால் தான் ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த ஓய்வுக்கு பிறகு அவர் புத்துணர்ச்சியுடன் வருவார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #INDvENG #RaviShastri
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 5 டெஸ்டில் ஆடியது. இதில் 20 ஓவர் தொடரை மட்டும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடியும் பலன் இல்லாமல் போனது.

    இந்திய அணி 3-வது டெஸ்டில் மட்டும் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும், 5-வது டெஸ்டில் 118 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று இருந்தது.


    இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. குறிப்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அணி நிர்வாகம் நேரில் ஆஜராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) நிர்வாகிக்கும் குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு அறிக்கை ஒன்றையும் சமர்பித்தார்.

    வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

    ‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது.

    ஆஸ்திரேலிய பயணத்தில் அதிகமான பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி அப்போது கேட்டுக் கொண்டார்.

    அணி நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து நிர்வாக குழு ஆலோசித்தது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார். #INDvENG #RaviShastri
    ரவி ஷாஸ்திரி சிறந்த வர்ணனையாளர், ஆஸ்திரேலியா தொடருக்கு முன் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என சேத்தன் சவுகான் வலியுறுத்தியுள்ளார். #RaviShastri
    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இந்தத் தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசியில் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர் என்ற விமர்சனமும் விராட் கோலி, ரஹானே, புஜாரா, ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    ஆனால், இதற்குப் பதில் அளித்துப் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கடந்த 15 ஆண்டுகளில் இப்போது விராட் கோலி தலைமையில் இருக்கும் இந்திய அணியே வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்ததில் சிறந்த அணி, குறைந்த காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இந்த கருத்து மீதும் பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வைத்தனர்.

    இந்நிலையில் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுகான் ஆஸ்திரேலியா தொடருக்குள் ரவி ஷாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேத்தன் சவுகான் கூறுகையில் ‘‘இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி ஷாஸ்திரியை ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக நீக்கிவிட வேண்டும். ரவி ஷாஸ்திரி நல்ல கிரிக்கெட் வர்ணனையாளர். அவர் அந்த பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். இங்கிலாந்து தொடரில் இரு அணிகளுமே சமபலம் கொண்டதாக இருந்ததாகவே காணமுடிந்தது. ஆனால், இந்திய அணி டெய்ல்-எண்டர்ஸ்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டது.

    இப்போதுள்ள இந்திய அணியை கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதைநான் ஏற்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை கடந்த 1980-களில் இருந்த இந்திய அணிதான் சிறப்பான அணி’’ என்றார்.
    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். #RaviShastri #indvseng

    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் கேள்வி கணைகள் பாய்ந்து வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ரவிசாஸ்திரி பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் அதுபோன்ற ஆட்டம் முதல் டெஸ்டில் ஏன் இருக்கவில்லை என்பதை நினைக்க வேண்டும்.

    பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்கள் இருந்தாலும் அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அதுவும் போட்டிதான். ஆனால் போட்டி அட்டவணை கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் முடித்த பிறகு டெஸ்ட் போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெறுவது எங்கள் கையில் இல்லை.

    அணி நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இந்திய அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஓரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. #RaviShastri #indvseng 

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக கிரிக்கெட் வாரியம் வழங்கி உள்ளது. #RaviShastri

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.

    கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.

    இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri

    கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணி தான் குறுகிய காலகட்டத்தில் வெளிநாட்டில் நிறைய சாதித்துள்ளது என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார். #RaviShastri
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே நேற்றைய பயிற்சிக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘எதிரணிக்கு கடும் போட்டி கொடுத்து வெற்றி பெற முயற்சிப்பதே எங்களது நோக்கம். முந்தைய டெஸ்டில் நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் எங்களை விட சிறப்பாக ஆடியதை மறுக்க முடியாது.

    விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் 9 டெஸ்டுகளில் வெற்றி மற்றும் 3 தொடர்களை (வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரண்டு முறை இலங்கை மண்ணில்) கைப்பற்றி உள்ளது. இப்படியொரு குறுகிய காலக்கட்டத்தில் வேறு எந்த இந்திய அணியும் கடந்த 15-20 ஆண்டுகளில் இது போன்று சாதித்ததில்லை’ என்றார். #RaviShastri 
    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியதால் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #ENGvIND
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய வீரர்கள் ‘சரண்டர்’ ஆனதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

    முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது கடுமையாக பாய்ந்தனர். இதேபோல ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    மோசமான தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.


    இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் முன்பு ரவிசாஸ்திரியும், கோலியும் “எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம். தயக்கம் இல்லை” என்று தெரிவித்து இருந்தனர்.

    தற்போது ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்க வேண்டாம். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

    ஆனால் இதுவரை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எந்தவிதமான விளக்கம் அளிக்கவில்லை.

    இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டு மொத்த தோல்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பேற்று காரணத்தை தெரிவிக்க வேண்டும். முன்பு வார்த்தைகளை கொட்டினீர்கள். இப்போது வாய்திறங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல டுவிட்டரில் ரசிகர்கள் தங்கள் ஆதரங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.


    துருவ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும். அவர் இடத்தில் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற இயலாது. அதிகமான பயிற்சி ஆட்டம் அல்லது கவுண்டி போட்டியில் விளையாட வேண்டும். தவான், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர், கருண்நாயரை அணிக்கு கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமித் என்பவர் கூறும்போது, எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிக்கு ராகுல் டிராவிட்டை கிரிக்கெட் வாரியம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    அனுராக் என்ற ரசிகர், “இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ரவிசாஸ்திரிக்கு தெரியவில்லை. இதனால் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    மற்றொரு ரசிகர், “ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்கு பேரழிவு. இதனால் அவரை நீக்கிவிட்டு டிராவிட்டை நியமிக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

    ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், “ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்க இதுவே சரியான நேரம். டிராவிட்டை பேட்டிங் பயிற்சியளாராகவும், ஜாகீர்கானை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல ரவிசாஸ்திரிக்கு எதிராக ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  #ENGvIND #RahulDravid #RaviShastri #HeadCoach #TeamIndia #BCCI
    ×