search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசம்"

    தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

    பாதயாத்திரைக்கு பிரசித்திப்பெற்ற இவ்விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முருகப்பக்தர்கள் விரதம் இருந்து பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக பல நூறு மைல்கள் கடந்து பழனிக்கு வருகிறார்கள்.

    இந்த விழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இவ்விழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏராளாமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப்பயணத்திறக்கு ரெயில் பயணம் செய்வதே வசதியாக உள்ளது.

    தற்போது பழனி வழியாக பாலக்காடு- சென்னை அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில், மதுரை - கோவை பயணிகள் ரெயில் என 3 ரெயில்கள் மட்டுமே பழனி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெயில்கள் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான ரெயில்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    கடந்த மாதத்திலிருந்தே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போதுமான ரெயில்கள் இயக்கப்படவில்லை, இதன் காரணமாக ரெயில்களில் பயணிகள் இருக்க இடமின்றி பார்சல் வேன்களிலும் நின்று சென்றனர். கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    நாளை (20- ந்தேதி) அன்று காலை 8.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் பயணிகள் ரெயில் காலை 11.15 மணிக்கு பழனிக்கு வந்து சேருகிறது. அதே ரெயில் இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. 21- ந்தேதியும் இதே போல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே மதுரை கோட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

    வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த் தொலியும் ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை, வியாக்கிர பாதமுனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரம் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜப் பெருமானை, ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது தைப்பூசப்புண்ணிய தினத்தன்று தான்.

    அதன் காரணமாகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
    தைப்பூச தினத்தன்று உமாதேவி நடனக் காட்சி அருளினாள். அந்த நடனத்தை திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் கண்டனர். இதையடுத்து தைப்பூசம் அம்பிக்கைக்கு உரிய நாளானது.
    தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகன் அருள் பெற தைப்பூசம் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் தான் உலகம் முழுக்க வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் காவடி, சிங்கப்பூர் தமிழர்கள் பால்குடம் எடுத்து பாத யாத்திரையாக சென்று முருகனை வழிபடுவதை பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    பழனியில் தைப்பூச திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா 21-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. உண்மையில் தைப்பூசம் பார்வதிக்காக ஏற்பட்ட விழாவாகும். மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று சிதம்பரத்தில் சிவபெருமான் நாட்டியம் ஆடியதை உமையாள் அருகில் இருந்து பார்த்து ரசித்தாள். அவளுக்கு சிவன்போல தாண்டவமாட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

    தைப்பூச தினத்தன்று உமாதேவி நடனக் காட்சி அருளினாள். அந்த நடனத்தை திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் கண்டனர். இதையடுத்து தைப்பூசம் அம்பிக்கைக்கு உரிய நாளானது. இது எப்படி முருகனுக்குரிய விழாவாக மாறியது தெரியுமா? பழனி பெரியநாயகி கோவிலில் கைலாசநாதருடன் அம்பிகை உள்ளார். அவர்கள் சன்னதிக்கு நடுவில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது.

    இதன்காரணமாககோவிலின் பிரதான நுழைவு வாயிலும், கொடி மரமும் இயற்கையாகவே முருகன் சன்னதி எதிரில் அமைந்துவிட்டது. பெரியநாயகி கோவிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். தைப்பூசத்துக்காக கொடி ஏற்றப்பட்டபோது, அது முருகன் விழாவுக்கு என்ற கருத்து பரவியது.

    காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடப்படுவதாக மாறிவிட்டது. பழனியில் தற்போதும் தைப்பூச விழா பெரியநாயகி கோவிலில் தான் நடக்கிறது. அந்த கோவிலில் தான் தைப்பூச கொடி ஏற்றப்படும்.
    தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.
    “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி”

    தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு வருகிற 21, 22-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5.30, 10, மதியம் 1 மணி, இரவு 7,10 மணிக்கு திரை விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு எப்படி தோன்றியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதை தோற்றுவித்த வள்ளலார் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கடலூருக்கு அருகே உள்ள மருதூர் எனும் சிற்றூரில் இராமையா, சின்னம்மை இணையருக்கு 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐந்தாவது ஆண் குழந்தையாக இராமலிங்கம் பிறந்தார். தந்தை காலமான பின்பு அவரது தாய் தனது குழந்தைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் இராமலிங்கம் கல்வி பயிலத் தொடங்கினார். அடிக்கடி இராமலிங்கம் கந்தகோட்டத்துக் கந்தசாமி கோயிலுக்குச் செல்வார். இளம் அகவையிலேயே இறைவன் மீது மிகுதியான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

    பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோவிலே கதி என்றிருந்த இராமலிங்கத்தை அவரது அண்ணன் கண்டித்துத் தனது மனைவியிடம் இராமலிங்கத்துக்கு சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமலிங்கம் வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

    அவர்களது வீட்டில் இராமலிங்கத்துக்கு மாடியறை ஒதுக்கப்பட்டது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் முனைப்பாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் திருத்தணி முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பேரின்பமுற்றுப் பாடல்கள் பாடினார்.

    அவரது பன்னிரண்டாம் வயதில் நாள்தோறும் ஏழுகிணறு பகுதியிலிருந்து நடந்தே திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரத் தொடங்கினார் இராமலிங்கம், பலரது வற்புறுத்தலுக்கு இணங்கத் தன் இருபத்தேழாவது அகவையில், அவரது தமக்கையின் மகள் தனக்கோடியைத் திருமணம் புரிந்து கொண்டார். எனினும், இராமலிங்கம் அவர்கள் அமைதியை நாடினார். கடவுள் என்றால் என்ன? என்று அறிய விரும்பி, 1858-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களைப் பார்வையிட்டுச் சிதம்பரத்தை வந்தடைந்தார்.

    அங்கே கருங்குழி ஊரின் மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் இராமலிங்கத்தைச் சந்தித்து தனது இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு ண்டிக் கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவரது இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார் இராமலிங்கம். அவர் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்தவர், பின்னர் அதைத் தூய்மையாக்கி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார். கலயத்தில் நீர் அப்படியே இருந்தது.

    அன்றிரவு, இராமலிங்கம் வெகுநேரம் வரையில் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும்பொதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று நினைத்து விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு ஒளிவிட்டுத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.

    கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு இராமலிங்கம் ‘சமரச வேத சன்மார்க்கச் சங்கம்‘ என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் அதைச் “சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கம்‘ என்று மாற்றியமைத்தார். அதில் மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள் பலவற்றை அறிவித்தார். உயிர்க்கருணை (‘ஜீவ காருண்ய’) ஒழுக்கத்தை‘ கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த அவர், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.



    கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு, மே மாதம் 23-ஆம் நாளன்று அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருக்கிறது.

    தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள் பயன்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். அந்த இடத்துக்குச் ‘சித்தி வளாகத் திருமாளிகை‘ என்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி ‘பிரமதண்டிகா யோகம்‘ செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து ‘தியானத்தில்‘ இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் உடலை வெப்ப உடலாக ஆக்கி வந்தார்.

    இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.

    25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே ‘பேருபதேசம்‘ என்று சொல்லப்படுகிறது.

    தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கை சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார். மக்களிடம், தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொன்னவர், தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்‘ என்று உறுதி அளித்தார்.

    1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

    அன்று முதல் வள்ளலார் இராமலிங்கம் அடிகளார், உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

    ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் ” அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி” கண்ணாடியில் கண்டதும் நம் உள்ளே கண்டிப்பாக அதிர்வு ஏற்படும்.

    அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கிறது. அந்தத் தீபத்தின் எதிரொலியே ‘ ஒளி‘ ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு 21-ந்தேதி (திங்கட்கிழமை) லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் காத்திருப்பார்கள். இறைக்காட்சியோடு, தங்களையே தாங்கள் காணும் உணர்வு இந்தப் பொழுதில் கிடைத்து விடுவதாக மரபு. இந்த ஜோதி தரிசன வழிபாட்டை காண தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபையைப் பார்க்க வேண்டும். அது உங்களை ஞானம் உள்ள பக்குவப்பட்ட மனிதனாக மாற்றும். 
    தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
    1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

    2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

    3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

    4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

    5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

    6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

    7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

    9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.

    10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

    11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

    13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

    14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.

    15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.

    16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

    19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

    20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.



    21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

    22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

    23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

    24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

    25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.

    26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

    27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

    28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

    29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

    32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

    33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

    34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

    36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

    37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.

    38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.

    39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

    40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.
    முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
    முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
    வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளலார். பின்னர் இவர் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார்.

    மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

    இதைத்தொடர்ந்து மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 148-வது தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. பின்னர் 23-ந்தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விழா நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சென்னை, கும்பகோணம், தஞ்சை போன்ற பிற மாவட்டங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. முருகனின் அருளைப்பெற தைப்பூசம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
    21-1-2019 தைப்பூச விழா

    முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. தை மாதம் பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி திதி கூடி வரும் நாளை தைப்பூசம் என்று நாம் கொண்டாடுகிறோம்.

    முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். சிவபெருமான் சிதம்பரம் திருத்தலத்தில், வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்களுக்கு ஆகியோருக்கு ஆனந்த தரிசனத்தைக் காட்டி அருளிய தினம் தைப்பூசம் என்பதால் சிவனுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா உண்டு. அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், தைப்பூசம் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இதன் 7-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். அப்போது முருகன், வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் ரத வீதிகளில் தேரில் பவனி வருவார். 10-ம் நாள் தெப்போற்சவம் நடைபெறும். பக்தர்கள் பல பகுதிகளில் இருந்து முரு கனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடனாக காவடி எடுத்து வருவார்கள். தைப்பூசத் திருவிழா தான் காவடி, அலகு குத்துதல் போன்றவற்றுக்கு சிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பால்காவடி, பறவைக் காவடி, தீர்த்தக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்க்கரை காவடி எடுத்து வருவார்கள்.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூசம் 11 நாள் விழாவாக கொண்டாடப்படும். சிவபெருமான் திருவிளையாடல்களில் ‘புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை’யும் ஒன்றாகும். இதை நினைவு கூரும் விதத்தில் தைப்பூசத்தன்று பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு உவரி கடற்கரையில் இருந்து சிறிய பெட்டியில் மணலை அள்ளி, அதை தலையில் வைத்து சுமந்து கொண்டு கோவில் அருகில் கொட்டுவார்கள். இவ்வாறு செய்யும் பக்தர்களின் கோரிக்கையை சுவாமி நிறைவேற்றுவதாக ஐதீகம்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். அந்த நாளில் கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப் பூசத்தன்று அதிகாலை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக் குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர். கடல் கடந்த நாடுகளிலும் தைப்பூசம் திருவிழாவை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலைக்கு அதிகாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து செல்வர். இதற்கு எட்டுமணி நேரம் பிடிக்கும். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் செல்வர். சுங்கைபத்து ஆற்றில் நீராடிவிட்டு மலைக்கோவிலுக்கு படியேறி செல்வர்.

    மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலையிலும் விழா கொண்டாடப்படும். சிங்கப்பூரில் முருகன்கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். அன்று தேரோட்டம் நடைபெறும். திரளான பக்தர்கள் அலகுகுத்தி, நேர்த்திக்கடன் செலுத்துவர். தண்ணீர்மலை கோவிலில் தைப்பூச விழா 3 நாட்கள் நடைபெறும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் விமரிசையாக கொண்டாடுவர்.

    விரதம் இருப்பது எப்படி?

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து உத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும்.

    அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.

    தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் வரும்.

    கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும்.

    தொழில் மேன்மை உண்டாகும். தைப் பூசம் அன்று குழந்தை களுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்
    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை வழிபடுகிறார்கள்.
    தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக்கடங்காத பாத யாத்திரை கூட்டம்.

    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை வழிபடுகிறார்கள். பெயர் தான் தைப்பூசமே தவிர... மார்கழி தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் சாரை, சாரையாக பழனிக்கு வரத் தொடங்கி விடுகிறார் கள்.

    உலகம் புகழும் இந்த பாத யாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆகும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைபிடித்தனர்.

    பாதயாத்திரை வரும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள். நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. பாத யாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

    முருகனிடம் இடும்பன் வரம் கேட்ட போது, “நான் மலைகளை காவடி ஏந்தியது போல காவடி ஏந்தி வரும் பாத யாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும்” என்றான். அதை ஏற்று காவடி ஏந்தி பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

    நோய் தீர வேண்டும். நல்ல வரன் கிடைக்க வேண்டும். வியாபாரம் செழிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டு தோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள். சமீப காலமாக சென்னையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    தைப்பூசம் சீசனில் தங்கள் பூர்வீக ஊரில் இருந்து பழனிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வருவதை தமிழர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த சிறப்பால் அறுபடை வீடுகளில் பழனி திருத்தலம் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளாக திருச்செந்தூர் முருகன் தலத்துக்கும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை, நாகர்கோவில், திசையன்விளை, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகிறார்கள்.
    தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.
    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

    கருணைக்கடலாம் சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப் பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டிக் கோலத் தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீயசக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    தை மாதம் பூச நட்சத்திரமன்று, உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் ஓம் என்ற பிரணவத்தின் பொருளைப் போதித்த முருகப் பெருமானை வழிபட்டால், சேமிப்பு உயரும், செல்வாக்கு அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேற வேண்டு மானால், பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழி பாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையை அறிந்து, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும், ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம்.

    அந்த அடிப்படையில் தைப்பூசம் திருநாளில் முருகப்பெருமானை கொண்டாட வேண்டும். அன்று காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். “வேலை வணங்குவதே வேலை” எனக்கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். பூசத்தன்று கந்தப்பெரு மானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.

    நடந்து செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். பூசத்தன்று பழனிக்கு சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் சண்முகநாதப் பெருமானை கோடானு கோடி பேர் தரிசித்து வருகின்றனர். குன்றக்குடி, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற ஆலயங்களுக்கும், அறுபடை வீடுகளின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கும் பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வந்தால் இன்னல்கள் விலகி அமைதியான, வளமான வாழ்க்கை அமையும்.

    தைப்பூசத்திருநாளில் எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மூன்றுவகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

    நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள். அந்த நாள் தைப்பூசம். எனவே இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படும் விழாவாகவும் தைப்பூசத் திருநாள் அமைந்துள்ளது.

    பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுநாளும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    தைப்பூச விரத முறை :

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
    பழனியாண்டவர் கோவிலில் முதல் காவடியை தற்போதும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் அந்த காவடி வைக்கப்பட்டுள்ளது.
    பழனியாண்டவர் கோவிலில் முதல் காவடியை தற்போதும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் அந்த காவடி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பக்தர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவடியை சுமந்து வந்தார். மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர். மிகுந்த எடை உள்ள இந்த காவடி பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.

    சிறப்புமிக்க இந்த காவடியை செலுத்திய எழபெத்த வீடு குடும்பத்தினர் ஆண்டுதோறும் பழனிக்கு காவடி எடுத்து முருகனுக்கு செலுத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரியமாக இந்த பழக்கம் இருந்தது. தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பழனிக்கு வரும் போது மறக்காமல் அந்த “முதல்காவடி”க்கு பூஜைகள் செய்துவிட்டு செல்கின்றனர்.

    எழபெத்தவீடு குடும்பத்தினரைத் தொடர்ந்து பழனியாண்டவருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நாளடைவில் தமிழர்களும், அதிக அளவில் பழனிக்கு காவடி எடுத்தனர். தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பழனிக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் காவடி ஏந்தி செல்கின்றனர். பங்குனி உத்திரம் நாளில் பழனிக்கு வரும் காவடிகளின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தை தாண்டுகிறது.
    இடும்பனை வணங்கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும். அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இது தான் பழனி படைவீட்டின் தலவரலாறாகவும் உள்ளது.
    இடும்பாயுதனே இடும்பா போற்றி என்ற வரியை கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது நீங்கள் படித்திருக்கலாம். இந்த இடும்பன் தான் பழனி படைவீடு தோன்ற காரணமாக இருந்தான்.

    எனவே தான் என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்குவோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும் என்று முருகனே கூறி உள்ளார். ஆனால் பழனி செல்பவர்களில் பலர் இடும்பனை கண்டு கொள்வதில்லை.

    இடும்பனை வணங்கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும். அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இது தான் பழனி படைவீட்டின் தலவரலாறாகவும் உள்ளது.

    முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில் ஆசிரியனாகத் திகழ்ந்தவர் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். அகத்தியர் தனது பூஜைக்காக சிவசக்தி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் சக்தி மலை ஆகியவற்றை முருகப்பெருமானிடம் கேட்டார். முருகப்பெருமானும் அவற்றை கொடுத்தார்.

    அந்த இரு மலைகளையும் பூர்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர். எதிர்பாராத விதமாக அவர் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது.

    இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். இடும்பன் அசுரனாக இருந்த போதிலும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், பூர்சவனத்தில் உள்ள சிவமலை, சக்திமலையை பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்கும் என்றார்.

    இடும்பனும் அவனது மனைவி இடும்பியும் அங்கு சென்று அம்மலையை தூக்க சிவனை வேண்டி தவமிருந்தனர். அப்போது நீண்ட கம்பு ஒன்று தோன்றியது. சிவன் அருளால் நாலா பக்கங்களில் இருந்து நாக பாம்புகளும் அங்கே வந்தன. அந்த பாம்புகளை கம்பில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்த படி பொதிகை வரும் வழியில் திரு ஆவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான்.

    இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கினான். அவனால் முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்று விளையாடிக்கொண்டிருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான்.

    மலையில் இருந்து இறங்கி விடும்படி சொன்னான். அந்த சிறுவன் இறங்க மறுத்ததுடன் “இது நான் தங்கப் போகும் மலை” என்ற வாதிட்டான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச்சிறுவன் தன் கையில் இருந்த தண்டத்தால் இடும்பனை லேசாகத்தட்ட, அந்த அடியைத் தாங்க முடியாமல் இடும்பன் கீழே விழுந்து இறந்தான்.

    இதைகண்டு அவன் மனைவி இடும்பி கதறினாள். அசுரர்களுக்கே வில்வித்தை கற்றுக்கொடுத்த தன் கணவனைக் கொல்லும் தகுதி, அசுரர்களை வென்ற அந்த முருகனைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என உறுதியாக நம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள். அச்சிறுவன் மயில மேல் முருகனாக காட்சி தந்து இடும்பனை எழுப்பி அருள் புரிந்தான்.

    “இடும்பா இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். நீ இந்த இரு மலைகளையும் தோளில் சுமந்து வந்தது போல எனக்குரிய வழிபாட்டு பொருட்களை பக்தர்கள் காவடியாக கொண்டு வர வேண்டும். உன்னை முதலில் வழிபட்டே என்னை வழிபட வேண்டும். உன்னை வணங்கியவர் என்னை வணங்கிய பயன் பெறுவார்கள் என்றார். இதனால் இடும்பனை தரிசித்தால் இன்னல்கள் பறந்தோடி விடும். கடந்த 2000-ம் ஆண்டு பழனிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது. 540 படிகள் ஏறி இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும்.

    அப்படியானால்தான் முருகனை வழிபட்ட முழு பலனும் கிடைக்கும். பழனி பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டல் தொலைவில் இடும்பன் மலை உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடும்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து இருக்கும்.
    ×