search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசம்"

    பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    முருகனின் மூன்றாம் படைவீடான பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடத் திற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜைக்கு பின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.

    அதைதொடர்ந்து தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும், பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

    10நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்று, கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், முத்துக்குமார சுவாமி மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வனைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும், நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையில் காப்பு கட்டும் நடைபெறுகிறது. அதன்பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி கொடிப்படத்துடன் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    அதன்பின்னர் விநாயகர் பூஜை, கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்றும் கொடிப்படத்திற்கு தீபாரதனையும் நடைபெற்ற பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோ‌ஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். விழாவில் வருகிற 20-ந் தேதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் உள்ள பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தைப்பூசமான அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிறது.

    மதியம் 12 மணியளவில் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்துக்குமாரசாமி புறப்பாடாகி உய்யகொண்டான் வாய்க்கால் செல்கிறார். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைவார். அன்று இரவு சர்வ அலங்காரத்துடன் முத்துக்குமார சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, வயலூர் வழியாக வரகாந்திடலை வந்தடைவார். அங்கு மண்டகப்படி பெற்று கீழவயலூர் தைப்பூச மண்டபத்திற்கு வந்தடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமத்திற்கு வருவார்.

    22-ந் தேதி காலை 10.31 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு, உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர்் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 11 மணியளவில் 5 சாமிகளும் நான்கு வீதிகளிலும் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வந்தடையும். அங்கு சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு அன்றிரவு 7 மணியளவில், கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும். இதில் முத்துக்குமாரசாமி சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் மண்டபம் சென்றடைவார்.

    தைப்பூசத்தையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளை சோமரசம்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ராணி ஆகியோரின் ஆலோசனையின்படி கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை மாவட்டம் உவரி வங்க கடலோரம் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில், பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக அருள்புரிந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை ஆகியவை நடந்தது. பின்னர், யானை மீது கொடிப்பட்ட ஊர்வலமும், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து விநாயகர் வீதிஉலா நடந்தது. மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதிஉலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, விநாயகர் வீதிஉலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. 22-ந்தேதி பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். 9-ம் திருவிழா அன்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகவும், சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்த விழா வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.

    இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. இன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. 20-ந் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.

    21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    காலை 6 மணிக்கு வடகாவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, மாரியம்மன் 21-ந் தேதி மாலை 3 மணிக்கு கொள்ளிடம் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், அன்று மாலை 3.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும். மறுநாள் (22-ந் தேதி) காலை 5 மணி வரை நடை திறக்கப்படமாட்டாது. பின்னர் காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார். 
    கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதிஹோமம், காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை, 8 மணிக்கு கொடியேற்றம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7 மணிக்கு சமயஉரை, 8 மணிக்கு சாமி அம்பாளுடன் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் யாகசாலை பூஜை, தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சமயஉரை, பஜனை போன்றவை நடைபெறுகிறது. தைபூச நாளான 21-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு ராஜமேளம், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கையில் சாமிக்கு ஆறாட்டு போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.
    நெல்லை மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்றல் தவழும் தென் பொதிகை மலைத்தொடரில் வீற்றிருக்கும் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 21-ந் தேதி நடக்க உள்ளது. தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

    926 படிகளை ஏறி, மலை உச்சியை அடைந்தால், முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்தில் குன்றுக்குள் இருக்கும் முருகனை வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

    இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோவில் தைப்பூச விழா வரும் 21-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

    அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாயம் தழைக்க அகத்திய பூஜை, மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனம், இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தோரணமலையானின் ஆவணப்படம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவில், அழகர்மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா சிறப்புடையதாகும். இங்கு 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இவ்வாண்டிற்கான தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி (சனிக் கிழமை) காலை 11.15 மணி முதல் 11.45 மணிக்குள் மங்கல இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலை யாகசாலை பூஜைகளும், பூதவாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். மறுநாள் 13-ந்தேதி காலை யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து உற்சவருக்கு மகா அபிஷேகமும், சாமி புறப்பாடும் நடைபெறும். பின்னர் அன்று மாலை அன்னவாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளி, புறப்பாடு நடைபெறும்.

    அதன்பிறகு 14-ந்தேதி, 15-ந்தேதிகளில் வழக்கம்போல் பூஜைகளும், மாலை சாமி புறப்பாடும் நடைபெறும். பின்னர் 16-ந்தேதி மாலை பூச்சப்பரத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் மாலை யானை வாகனத்தில் சாமி புறப்பாடும், 18-ந்தேதி பல்லாக்கு புறப்பாடு நடைபெறும். 19-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும், 20-ந்தேதி காலை 11 மணிக்கு தங்கத்தேரிலும், மாலை வெள்ளி மயில் வாகனத்திலும் சாமி புறப் பாடு நடைபெறும். 21-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பின்னர் யாகசாலை கலச அபிஷேகமும், கொடியிறக்கம், தீபாராதனையும் நடைபெறும்.

    திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தினந்தோறும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். முன்னதாக மூலவர் வள்ளி, தெய்வானை சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகவும், சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது.

    12-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.

    21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    காலை 6 மணிக்கு வட காவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

    தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை செய்து வருகிறார். 
    பழனியில், தைப்பூச திருவிழா தொடங்குவதற்கு முன்பே பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.

    திருவிழா தொடங்கியதும், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அப்போது அவர்களுக்கு தங்கும் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

    பழனியில் இருந்து சில கிலோ மிட்டர் தூரம் வரை பக்தர்கள் தங்கும் இடம், அன்னதான கூடம், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை அமைக் கப்பட்டிருக்கும். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்குவதற்கு முன்பே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவந்தனர்.

    அவர்கள் இளநீர், பால், தீர்த்தம், மயில் காவடிகளை எடுத்து ஆடிப்பாடியபடியே பழனிக்கு பாதயாத்திரையாக வந்தனர். பழனி-திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை வசதி உள்ளது. ஆனால் பழனி-உடுமலை ரோட்டில் அந்த வசதி இல்லை. இதனால் பக்தர்கள் சாலை யோரத்தில் நடந்து வருகின்றனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழனி-உடுமலை சாலையில் பக்தர்கள் நடக்க தற்காலிக பாதை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கான உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க கோவில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×