search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமீறல்"

    ‘சென்னை மற்றும் நாகர்கோவில் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகாது’ என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #SatyabrataSahoo #RahulGandhi
    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் தேதியன்று மதுரை சித்திரைத் திருவிழா நடப்பதால் ஏற்படும் சிக்கல் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. கிடைத்த உடன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் அளிக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளின் வழக்கு விவரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தி.மு.க. சார்பில் உளவுப் பிரிவு அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்காக இதுவரை 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வீடியோ படம் எடுத்து கண்காணிக்கும் குழு ஒன்று மற்றும் வீடியோ படங்களை கவனித்து நடவடிக்கை எடுக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 500 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளி குங்கும சிமிள்கள், பரிசு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிகப்படியான பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் தகவல் தெரிவிக்க அனைத்து வங்கிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்து மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமானவரித்துறைக்கு முதலில் தகவல் அளிக்கப்படும்.

    தனி நபர் ரூ.50 ஆயிரம் வரையில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக யார் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 3 ஆயிரத்து 479 ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமத்தை நீடிப்பு செய்யாத 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 துப்பாக்கிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 1,312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயலா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், ராகுல் கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை. முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SatyabrataSahoo #RahulGandhi
    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை நியமித்ததில் விதிமீறல் நடந்ததாக முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி கூறியுள்ளார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்திய 20 ஓவர் போட்டி பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு இ-மெயில் அனுப்பினர். அதே சமயம் 20 ஓவர் உலக கோப்பை தொடரின் அரைஇறுதியில் தன்னை வேண்டுமென்றே ரமேஷ் பவார் ஓரங்கட்டியதாகவும், பலமுறை அவர் தன்னை அவமதித்ததாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.



    ரமேஷ் பவார் சர்ச்சையில் சிக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ்ஷா உள்ளிட்டோர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மறுபடியும் விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இவர்களிடம் கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

    இதற்கிடையே இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு நியாயம், பெண்கள் அணியின் கேப்டனுக்கு ஒரு நியாயமா? என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்கள் அணிக்கான முந்தைய பயிற்சியாளர் கும்பிளேவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்ட போது நடந்த விஷயங்களை இப்போது கசியவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக டயானா எடுல்ஜி கூறியதாவது:-

    கும்பிளேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு அவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தார். கும்பிளேவின் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு அவரையே தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க செய்ய தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி விரும்பியது. ஆனால், கோலியிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரவிசாஸ்திரி பயிற்சியாளராக வர வேண்டும் என்பதே கோலியின் ஆசை. காலக்கெடுவுக்குள் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. அவருக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது முற்றிலும் விதிமீறல் என்று அப்போது எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். கும்பிளே ஒரு ஜாம்பவான். இந்த விவகாரத்தில் அவர் அவமதிக்கப்பட்டார். வில்லன் போல் அவரை சித்தரித்தனர். ஆனாலும் பெருந்தன்மையுடன் எதை பற்றியும் பேசாமல் அவர் ராஜினாமா செய்தார். எது எப்படி என்றாலும் ரவிசாஸ்திரி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதே உண்மை.

    கும்பிளே வேண்டாம் என்று கோலி கூறிய போது செவி சாய்த்தீர்கள். இதே போல் பெண்கள் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது. அணியின் முக்கிய வீராங்கனைகளான அவர்களின் கருத்தை நாம் புறக்கணிக்க கூடாது. பயிற்சியாளர் குறித்து அவர்கள் இ-மெயில் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. அணியின் நலனுக்காக வெளிப்படை தன்மையுடன் உண்மையாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி அல்ல. கும்பிளேவை நீக்கும்படி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு தொடர்ச்சியாக தகவல்கள் அனுப்பி மறைமுக நெருக்கடி கொடுத்தார்.

    இவ்வாறு கூறியுள்ள எடுல்ஜி, ரமேஷ் பவாருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளார். பயிற்சியாளரை வீராங்கனைகளின் ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது என்று ஏற்கனவே கைவிரித்து விட்ட வினோத் ராய், கும்பிளேவுக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதன் தொடர்ச்சியாகவே அவர் விலகினார் என்றும் குறிப்பிட்டார். #AnilKumble #RaviShastri #DianaEdulji
    இந்தியாவில் போக்குவரத்து வழிமுறைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு புதிய எடுத்துக் காட்டாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அமைந்திருக்கிறது. #TrafficViolation



    பொது மக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைக்க பூனே நகர போக்குவரத்துக் காவல் துறை மிகவும் கடுமையாக இருக்கிறது. போக்குவரத்து காவல் துறையின் துணை ஆணையர் தேஜஸ்வி சத்புட் விதிகளை மீறுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். 

    இவரது கடுமையான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக பூனே நகர போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை இருக்கிறது. இதுவரை போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.22.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. 

    நேம் அன்ட் ஷேம் எனும் திட்டத்தை பூனே நகர போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்படுகின்றன. இத்துடன் விதிமீறுபவர்களின் டாப் 200 பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.




    விதிமீறுவோர் சிக்கினால், விதிமீறலுக்கு ஏற்ப அபராத தொகை அவர்களுக்கு இ-செல்லான்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அதன் பின் அபராத தொகையை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செலுத்த வேண்டும். 

    விதிமீறியவர்களின் பட்டியலை சுவாரஸ்யப்படுத்தும் வகையில், ஒருவர் 32 முறை விதிமீறி முதலிடத்திலும் மற்றொருவர் 20 முறை என இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஜனவரி 1, 2018 முதல் கடுமையாக்கப்பட்ட விதிகள், ஆகஸ்டு 31, 2018 வரை மொத்தம் 10,18,560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பத்து லட்சம் வழக்குகளில் இதுவரை ரூ.22,54,62,250 வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போக்குவரத்து விதிமீறுவோரில் பெரும்பாலானோர் சிக்னல்களில் நிறுத்தாமல் செல்வது, மக்கள் சாலையை கடக்கும் வழிகளை கடப்பது, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வது, சீட் பெல்ட் போடாமல் கார் பயணம் செய்வது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது உள்ளிட்டவை இருக்கிறது.
    ×