search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.
    கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.

    அண்மையில் வெளியான "சிவாஜி'' படத்தில், சிகப்பான இரு பெண்கள் கறுப்பு `மேக்கப்'பில் அங்கவை, சங்கவை என்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள் அல்லவா?

    1963-ம் ஆண்டிலேயே, ஏவி.எம். தயாரித்த "நானும் ஒரு பெண்'' படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயகுமாரி, படம் முழுக்க கறுப்பு மேக்கப்பில் நடித்து, சிறந்த நடிகை என்று புகழ் பெற்றார்.

    படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, `இப்படி கறுப்பு நிறத்தில் நடித்தால், ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்த பேரும், புகழும் பறிபோய்விடும்' என்று பலரும் பயமுறுத்தினார்கள். விஜயகுமாரிக்கும் அச்சம் ஏற்பட்டது.

    இதையெல்லாம் மீறி அவர் கறுப்புப் பெண்ணாக நடித்தது எப்படி?

    அதில் சுவையான கதையே அடங்கியிருக்கிறது. அதுபற்றி விஜயகுமாரியே கூறுகிறார்:-

    "நானும் ஒரு பெண் படப்பிடிப்பு தொடங்கிய வேளையில்,  "வசந்தி'' படத்தின் பூஜை, சாரதா ஸ்டூடியோவில் நடந்தது. இது ஏ.எல்.எஸ். தயாரிப்பு. நானும் அந்தப் படத்தில் நடித்ததால், பூஜைக்குச் செல்லத் தீர்மானித்தேன். "நானும் ஒரு பெண்'' படத்துக்காகப் போட்ட கறுப்பு `மேக்கப்'புடன் சென்றேன்.

    என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும், "நடிகைகளை அழகாகப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நீ இந்த கறுப்பு மேக்கப்பில் நடித்து உன் பெயரையே கெடுத்துக் கொள்ளப் போகிறாய்!'' என்று சொன்னார்கள்.

    கறுப்பு நிறத்துடன் நடிப்பதை, நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால், எல்லோரும் சேர்ந்து பயமுறுத்தியதால் எனக்கும் அச்சம் ஏற்பட்டது. `எதிர்காலம் பாதிக்கப்படுமோ!' என்று பயந்தேன்.

    நான் மனக்கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தபோது, சிவாஜிகணேசன் அங்கே வந்தார்.

    "இந்த மேக்கப் எந்தப் படத்துக்கு?'' என்று கேட்டார். "ஏவி.எம். தயாரிக்கும் நானும் ஒரு பெண் படத்தில் இப்படி நடிக்கிறேன்'' என்று சொன்னேன்.

    உடனே சிவாஜி, "விஜி! உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் பெண்ணாக இருந்திருந்தால் ஏவி.எம். செட்டியார் அவர்களிடம் போய், இந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்குக் கொடுங்கள் என்று கேட்டிருப்பேன்'' என்றார். அத்துடன், "விஜி, இந்த கறுப்பு வேடம் உனக்கு பெரிய புகழை கொடுக்கப்போகிறது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு மனதை குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக நடி!'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்தியது போலவே "நானும் ஒரு பெண்'' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், சிறந்த படத்துக்கான மத்திய அரசின் விருதையும், (வெள்ளிப்பதக்கம்) பெற்றது.

    இதில் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக நான் நடித்திருந்தேன். எஸ்.வி.ரங்காராவ், ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். திருலோகசந்தர் டைரக்டு செய்திருந்தார்.

    இந்தப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு பெண்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வந்தன.

    அதில் ஒரு கடிதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த கடிதம் ஒரு பெண் ரசிகை எழுதியது. அதில், "நான் கறுப்பாக இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னை வெறுத்தார். கல்யாணம் ஆகியும், கன்னியாகவே வைத்திருந்தார். இந்நிலையில், நீங்கள் நடித்திருந்த "நானும் ஒரு பெண்'' படத்தை அவர் பார்த்துவிட்டு வந்தார். அதன்பின் அவர் மனம் மாறி என் மீது அன்பு காட்டினார். எங்கள் வாழ்வும் மலர்ந்தது. நாங்கள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இதற்கு காரணம் "நானும் ஒரு பெண்'' படத்தில் நீங்கள் கறுப்பாக நடித்ததுதான்!'' என்று எழுதி, அதில் "நன்றி'' என்பதை அவருடைய ரத்தத்தில் எழுதி இருந்தார்.

    ஒரு பெண் வாழ்க்கை மலர்வதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைக்கும்போது, அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    "நானும் ஒரு பெண்'' படத்திற்கான விருதை வாங்க டெல்லிக்கு சென்றோம். அங்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கையில் பரிசைப் பெற்றேன்.

    அடுத்த நாள் நானும் என் கணவரும் பாராளுமன்றத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு நேருவை பார்த்தோம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், என் கணவர் தி.மு.கழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். எல்லோரும் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தும் இன்று வரை தமிழ்நாடு சட்டசபைக்கு நான் சென்றதில்லை. டி.வி.''யில்தான் சட்டசபை எப்படி நடக்கிறது என்று பார்த்திருக்கிறேனே தவிர, ஒருநாளும் நேரில் பார்த்ததில்லை!

    அடுத்து, நான் நடித்த படம் பீம்சிங் டைரக்ட் செய்த "பார் மகளே பார்.'' இந்தப்படத்தில், சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, முத்துராமன் நான் எல்லோரும் நடித்தோம். இதில் முத்துராமன், ஜோடியாக நான் நடித்தேன். இதுவும் ஒரு வெற்றிப்படம்.

    ஏவி.எம். தயாரித்த "காக்கும் கரங்கள்'' படத்தில் நானும், என் கணவரும் நடித்தோம். இதன் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப் படத்தில்தான் சிவகுமார், முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவும் வெற்றிப்படம்தான்.''

    - இவ்வாறு கூறினார் விஜயகுமாரி.

    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.
    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், குடும்பப்பாங்கான கதைகளுக்கு அருமையாக வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த காலக்கட்டம் அது. திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்ட பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்), கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "சாரதா'' என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டார்.

    இது புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டது.

    விபத்தில் ஆண்மை இழந்து விடும் கதாநாயகன், மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வான். இதை விரும்பாத கதாநாயகி, பெரிய மனப்போராட்டத்தில் இருப்பாள். இறுதியில், கணவன் காலில் விழுந்து ஆசி பெறும்போது, உயிர் போய்விடும்.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாகவும், விஜயகுமாரி கதாநாயகியாகவும் நடித்தனர். மற்றும் எம்.ஆர்.ராதா, நாகையா, எம்.வி.ராஜம்மா, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

    படத்தின் கதை - வசனத்தை உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார், கோபாலகிருஷ்ணன்.

    கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...'', "மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு'', "தட்டுத்தடுமாறி நெஞ்சம்'' என்பது உள்பட எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தன.

    "சாரதா'', 16-3-1962-ல் வெளிவந்தது. கதை, வசனம், நடிப்பு, பாடல் என்று அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

    குறிப்பாக, விஜயகுமாரியின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.

    சாரதா பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "ஏ.எல்.எஸ். அவர்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மெஜஸ்டிக்'' என்ற ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து, அதற்கு "சாரதா ஸ்டூடியோ'' என்று பெயர் சூட்டினார்.

    சாரதா படத்திற்கு பிறகு ஏ.எல்.எஸ். எடுத்த படங்களுக்கெல்லாம் படத்தின் கதாநாயகிகளின் பெயரையே சாந்தி, ஆனந்தி, வசந்தி என்று வைத்தார். இந்தப் படங்களில் எல்லாம் நான்தான் கதாநாயகியாக நடித்தேன்.

    "சாரதா'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, சரவணா பிலிம்ஸ் தயாரித்த "பாதகாணிக்கை'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இந்தப் படத்தின் டைரக்டர் கே.சங்கர். ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, அசோகன், எஸ்.வி.சுப்பையா, எம்.வி.ராஜம்மா, ஆகியோருடன் கமலஹாசனும் சின்னப்பையனாக நடித்தார்.

    இந்தப் படத்தில் என்னுடைய மேக்கப் சரியில்லை என்று கூறி, ஹரிபாபு என்ற பெரிய மேக்கப்மேனை எனக்கு மேக்கப் போட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ஹரிபாபு, வெளியே எங்கேயும் போகமாட்டார். நடிக - நடிகைகள் அவர் வீட்டிற்குப்போய்தான் மேக்கப் போட்டுக் கொள்ள
    வேண்டும்.

    இதனால் நான் மேக்கப் போட்டுக் கொள்வதற்காக, அதிகாலை 4-30 மணியிலிருந்து 5 மணிக்குள் புறப்பட்டுப் போவேன். ஏறத்தாழ அதே நேரத்தில், என்.டி.ராமராவும் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக்கொள்ள வருவார். அப்போது என்னைப் பார்த்த என்.டி.ஆர், என்னை தெலுங்குப் படத்தில் நடிக்க அழைத்தார். அதற்கு நான், "எனக்கு தெலுங்கு தெரியாதே'' என்று சொன்னேன்.

    "நான் உனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்து சின்ன சின்ன ஷாட்டாக எடுக்கிறேன். அதன் பிறகு உனக்கு தெலுங்கில் நடிப்பது சுலபமாகப் போய்விடும்'' என்றார்.

    அப்போது நான் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால், என்.டி.ஆர். அவ்வளவு ஆர்வமாக கேட்டும், என்னால் நடிக்க முடியாமல் போயிற்று.

    அன்று அவர் கூறியபடி தெலுங்குப் படத்தில் நடித்திருந்தால், தெலுங்குப்பட உலகிலும் எனக்கொரு கதாநாயகி அந்தஸ்து கிடைத்து இருக்கும்.

    அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா

    அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கதை நன்றாக இருந்தும், பாட்டுக்கள் எல்லாம் அருமையாக அமைந்திருந்தும் படம் ஓடவில்லை.

    அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.

    இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.

    அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.

    உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ப.நீலகண்டன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். நிறுவனம் எடுத்த படம் "ஆனந்தி.'' இதில் நானும் எஸ்.எஸ்.ஆரும் கதாநாயகன், கதாநாயகி. எம்.என்.நம்பியாரும் இதில் நடித்திருந்தார். இந்தப்படம் சுமாராக ஓடினாலும், இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்; நெஞ்சிலே நினைவிருந்தால் நீரிலும் தெய்வம் வரும்'' என்ற அந்தப்பாடலை, அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருப்பேன்.

    தொடர்ந்து "பணம் பந்தியிலே'', "உல்லாசப்பயணம்'', "தேடி வந்த திருமகள்'', "அவன் பித்தனா'', "வழிகாட்டி'', "அல்லி'' முதலிய படங்கள் வந்தன. இவை நானும் எஸ்.எஸ்.ஆரும் இணைந்து நடித்த எங்களுடைய சொந்தப் படங்கள்.

    பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.

    இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.

    அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார். அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன்.

    பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.

    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    விஜயகுமாரியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். தந்தை ராமசாமி கவுண்டர். தாயார் தங்கலட்சுமி அம்மாள்.

    விஜயகுமாரிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை.

    விஜயகுமாரி மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்.

    ஒரு சமயம், விஜயகுமாரியை பள்ளி ஆசிரியை அழைத்து, "இந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நீ கட்டாயம் நடனம் ஆடவேண்டும். தட்டிக் கழிக்க எந்தக் காரணமும் சொல்லக்கூடாது'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

    ஆட மறுத்தால், ஆசிரியை தன்னை நிச்சயம் பெயிலாக்கி விடுவார் என்று விஜயகுமாரி பயந்தார். என்றாலும், எந்த நடனத்தை எப்படி ஆடுவது என்று புரியவில்லை. இதுபற்றி ஆசிரியையிடம் கூற, "வேதாள உலகம்'' படத்தில் பத்மினி ஆடிய "வாசமுள்ள பூப்பறிப்பேனே'' என்ற நடனத்தை ஆட பயிற்சி அளித்தார்கள்.

    பள்ளி ஆண்டு விழாவில் பயந்து கொண்டேதான் ஆடினார், விஜயகுமாரி. ஆனால் நடனம் சிறப்பாக இருந்ததாகக் கூறி, பரிசும் வழங்கினார்கள்!

    ஒரு வாரம் கழிந்தது. விஜயகுமாரியை ஆசிரியை அழைத்தார். "நீ அழகாக இருக்கிறாய். ஆகவே சினிமாவில் நடிக்க முயற்சி செய். சிறந்த நடிகையாக வருவாய்'' என்றார்.

    அவர் மீது விஜயகுமாரிக்கு ரொம்பகோபம். காரணம், அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது! அம்மா சினிமாவுக்கு அழைத்துப் போனால், அழுதுகொண்டே போவார். படம் பார்க்கும்போது, தூங்கி விடுவார்!

    ஆனால் ஆசிரியை விட்டபாடில்லை. `சினிமாவில் நடி. வாழ்க்கையில் முன்னேறலாம்' என்று உபதேசித்தபடி இருந்தார்.

    இதனால் மெல்ல மெல்ல, விஜயகுமாரி மனதில் சினிமா ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

    ஒரு நாள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "அப்பா! நான் சினிமாவில் நடிக்க வேண்டும்!'' என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான். அப்பா `பளார்' என்று விட்ட அறையில், விஜயகுமாரியின் கன்னம் வீங்கிவிட்டது!

    "உன்னை பள்ளியில் ஆடவிட்டதே தவறு. சினிமா கேட்கிறதா, சினிமா! இனிமேல் நீ பள்ளிக்குப் போகவேண்டாம்!'' என்று கோபத்துடன்

    கூறினார்.அன்று விஜயகுமாரி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தார். காய்ச்சல் வேறு வந்துவிட்டது.

    அதை பார்த்துவிட்டு அவர் அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார்.

    அந்தக் காலத்தில் சில குடும்பங்களில் யாருக்காவது உடல் நலம் இல்லை என்றால், டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதில் ஜோதிடரைக் கூப்பிடுவார்கள்!

    விஜயகுமாரியின் அப்பா ஒரு ஜோதிடரை அழைத்தார். விஜயகுமாரியின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்'' என்ன செய்யலாம் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்கள்'' என்றார்.

    ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர், "உங்கள் மகள் நிச்சயமாக சினிமாவில் நடிப்பாள். பேரும் புகழும் பெறுவாள்'' என்று அடித்துச்
    சொன்னார்.

    அந்த சமயத்தில் பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. "புது முகங்கள் தேவை. போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை, பெற்றோரிடம் காண்பித்தார், விஜயகுமாரி.

    அப்பா, அம்மா இருவரும் கலந்து பேசி, மகள் விருப்பத்துக்கு தடை போடவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். விஜயகுமாரியை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று சில படங்கள் எடுத்து, ஏவி.எம். நிறுவனத்துக்கு தபாலில் அனுப்பி வைத்தார்கள்.

    இதன் பிறகு நடந்தது பற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நான் தீவிர அம்மன் பக்தை. எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனபத்திரகாளி அம்மனையும், எங்கள் குல தெய்வம் முருகனையும் தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன், ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கடிதம் வரவேண்டும் என்று! எப்போதும் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் தபால் காரரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

    ஒருநாள் ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தது. அதில் எங்களை ஏவி.எம்.மிற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

    நானும், என் பெற்றோரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றோம்.

    அங்கு மானேஜர் வாசுமேனன் அவர்களைப் போய்ப் பார்த்தோம். வாசுமேனன் என்னைப் பார்த்ததும், "போட்டோவில் பெரிய பெண் போல் தெரிகிறாய். நேரில் சின்னப் பெண்ணாக இருக்கிறாயே!'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

    பிறகு, "உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?'' என்று கேட்டார். எனக்கு தெரிந்த அந்த ஒரே நடனம் - பள்ளியில் ஆடியதுதான். அந்த நடனத்தை நானே பாடிக்கொண்டு ஆடினேன்.

    "சரி. ஊருக்குப் போங்கள். நாங்கள் மறுபடியும் கடிதம் போடுகிறோம்'' என்று வாசுமேனன் கூறினார்.

    எங்களுக்கு ஒரே குழப்பம். `என்ன நடக்குமோ' என்ற கவலையுடன் ஊருக்குத் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். "இனிமேல் ஏவி.எம்.மிலிருந்து கூப்பிட மாட்டார்கள். நீ பள்ளிக்குப் போய் படி. ஒருவேளை ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தால் நாம் போவோம்'' என்று சமாதானம் சொல்வது போல சொல்லி, என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார். 
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

    இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு வந்தபோது, படத்தில் லட்சுமியும் இருக்கிறார் என்பது தெரிந்து ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட பரவசத்தை ஸ்ரீபிரியாவே பகிர்ந்து கொள்கிறார்:-

    "எனக்கு லட்சுமியை ரொம்ப பிடிக்கும். அவங்களோட "சட்டைக்காரி'' படத்தையெல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறேன். நடிப்பில் தனித்துவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு வேண்டியவர்களே கொஞ்சம் பயமுறுத்தினார்கள். "லட்சுமி பிரமாதமான நடிகை. அவர் கூட நடிக்கும்போது நீ காணாமல் போயிடப்போறே'' என்று பயமுறுத்தினார்கள். ஆனால் படத்தில் நடிக்கும்போது நட்பில் நாங்கள் ரொம்பவே ஒன்றிப் போனோம். படத்தில் `ஆச்சி'யும் இருந்தார். மூன்று பேரும் செட்டில் இருந்து விட்டால் அரட்டை! அரட்டை! ஒரே அரட்டைதான்!

    ஒரு கட்டத்தில் எங்கள் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாத டைரக்டர் முக்தா சீனிவாசன், "உங்களை கட்டி மேய்க்க என்னால் முடியவில்லை. கடவுள் சத்தியமா உங்க மூணு பேரையும் ஒண்ணா வெச்சு இனிமே படம எடுக்கவே மாட்டேன். எனக்கு வேலையே நடக்க மாட்டேங்குது'' என்றார்.

    எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க முடியாமலே போய்விட்டது. ஒன்று நானும் ஆச்சியும் இருப்போம். இல்லேன்னா லட்சுமியும், நானும் இருப்போம். எப்படியோ டைரக்டர் முக்தா சீனிவாசன் சொன்னது நடந்துவிட்டது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் "ஆண்பிள்ளை சிங்கம்.''

    திட்டமிட்டு படமாக்கும் ஆற்றல் இவரிடம் இருப்பதை ஸ்ரீபிரியா தெரிந்து கொண்டார். தேவையில்லாமல் நடிகர் - நடிகைகளை காக்க வைக்கிற பழக்கமும் இவருக்கு இருந்ததில்லை. தொழிலில் இவர் காட்டிய ஈடுபாடு ஸ்ரீபிரியாவை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இப்படி அவர் "ஒரு கொடியில் இரு மலர்கள்'', "சொந்தமடி நீ எனக்கு'', "எனக்குள் ஒருவன்'', "மோகம் முப்பது வருஷம்'' என படங்களை தொடர்ந்தார்.

    இதில், "மோகம் முப்பது வருஷம்'' படத்தில் மட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் ஸ்ரீபிரியாவுக்கு திருப்தி இல்லை. தைரியமாக, "இந்த கேரக்டரில் நான் நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடமே கேட்டும்விட்டார்.

    இந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, இப்படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதிய மகேந்திரன் அவரை சந்தித்தார். "படத்தில் 3 பெண் கேரக்டர்கள் இருந்தாலும் நீங்கள் நடிக்கிற பாமா கேரக்டரோடுதான் ரசிகர்கள் ஒன்றிப் போவார்கள். படம் வெளிவரும்போது ரசிகர்கள், பாமா பற்றிதான் பேசிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமும் அழுத்தமும் கொண்ட கேரக்டர்'' என்று விளக்கம் தந்தார்.

    அதன் பிறகு பாமா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீபிரியா. அவர் குணமானதும் படப்பிடிப்பு தொடங்கியது. படம் ரிலீசானபோது மகேந்திரன் சொன்னது போலவே நடந்தது. படம் பார்த்த ரசிகர்கள் பாமா கேரக்டர் பற்றியே பேசினார்கள்.

    ஸ்ரீபிரியாவை கவர்ந்த இன்னொரு இயக்குனர் டி.என்.பாலு. டைரக்டர் ராமண்ணாவிடம் உதவியாளராக இருந்தபோதே "நான்'', "மூன்று முகம்'' போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர். இவர் டைரக்டரானதும் இயக்கிய "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசன் கதாநாயகன். அவருக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    டி.என்.பாலு பற்றி ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னார்:-

    "பாடல் காட்சியின்போது எனக்கு சரியாக வாயசைக்க வராது என்பதை கண்டுபிடித்து திருத்தியவர் இவர்தான். பாட்டு சீனில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருப்பேன். `இப்படிச் செய்தால் நீ பாடுகிற மாதிரி திரையில் எப்படித் தெரியும்? முதலில் அதை சரி பண்ணு' என்றார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் இருக்கும் திறமையை பட்டியலிட்டு பாராட்டும் குணம் இருந்த அளவுக்கு, குறைகளை பக்குவமாக சொல்லி சரி செய்யும் பண்பும் இவரிடம் இருந்தது. இவரது "ஓடி விளையாடு தாத்தா'' காமெடிப்படம் எனக்கு காமெடியில் ரொம்ப நல்ல பெயர் தேடித் தந்தது. "நல்லதுக்கு காலமில்லை'' படத்திலும், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தார்.

    கமல் நடித்த "சங்கர்லால்'' படத்தை, இவர் இயக்கியபோதுதான் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சினை. படத்தில் கமல் ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தவர், நான் இரண்டொரு தடவை தேதிகளை மாற்றினேன் என்பதற்காக, உணர்ச்சிவசப்பட்டு கவுன்சிலில் என் மீது புகார் கொடுத்துவிட்டார். பிறகு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து போயிருந்தாலும், நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

    திடீரென அவர் இறந்தபோது, மனது தாங்காமல் அஞ்சலி செலுத்தப் போனேன். அப்போது என்னை கட்டிக்கொண்டு அழுத அவர் மனைவி, "அய்யோ அது (ஸ்ரீபிரியா) எவ்வளவு நல்ல பொண்ணு. நான் அவசரப்பட்டு புகார் கொடுத்து அது மனதை புண்படுத்தி விட்டேனேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரே!'' என்று அழுதார். ஏற்கனவே சோகத்தில் இருந்த நான், அவங்க அப்படிச் சொன்னதும் உடைந்து கதறிவிட்டேன்.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    இந்தியில் சஞ்சீவ்குமார்- ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த படம் "மாசூன்.'' இந்தப் படத்தில் நடித்த இருவருக்குமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தமிழில் "வசந்தத்தில் ஓர் நாள்'' என்ற தலைப்பில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீபிரியா நடித்து முடித்தபோது கைதட்டி பாராட்டினார்.

    "நிஜமாகவே உயரத்தில் மட்டுமல்ல... பண்பிலும் உயர்ந்தவர் அவர்'' என்று திருலோகசந்தரைப் பாராட்டிய ஸ்ரீபிரியா, மேலும்

    சொன்னார்:-"ஏவி.எம். ஸ்டூடியோவில் சின்னத்திரை தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தேன். நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. திடீரென அந்தக் கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து உயரமான மனிதர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்தால் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்! என்னைப் பார்த்ததும், "என்னம்மா எப்படி இருக்கீங்க?'' என்று பாசத்துடன் விசாரித்தார். என்னைப் பார்த்ததும், வந்த வேலையை கூட தள்ளிவைத்துவிட்டு தேடிவந்து நலம் விசாரிக்கும் அந்த மாதிரியான அன்பை யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

    ஒருமுறை அவர் இயக்கிய, சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த "பாரத விலாஸ்'' படத்தை, டிவி.யில் பார்த்தேன். தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அவர் அமைத்திருந்தார். மனம் நெகிழ்ந்துபோய், உடனே அவர் போன் நம்பரை தேடிப்பிடித்து பாராட்டினேன். "படம் இயக்கி இத்தனை வருஷம் கழித்தும் பாராட்டுகிற பண்பு உன்போன்ற சிலருக்கு இருப்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "தெய்வமகன்'' போன்ற படங்கள் எப்போதும் சினிமாவில் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார், ஸ்ரீபிரியா. 
    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தெலுங்கில், `பிரேமபாசம்' என்ற பெயரில் காதலுக்கு புது இலக்கணம் சொன்ன படம் பெரும் வெற்றி பெற்றது. ஒரு அழகான இளம் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் இளைஞன் ஒருவன், அவள் காதல் கிடைக்கப் பெற்ற பிறகு அவளை உதாசீனம் செய்கிறான். காதலியை பல்வேறு கட்டங்களில் வெறுப்பேற்றி, அவளை வேறொரு திருமணமும் செய்ய வைத்து விடுகிறான். அதன் பிறகுதான் அவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்த விஷயமே காதலிக்கு தெரியவருகிறது.

    இந்த உணர்ச்சிபூர்வ காதல் கதையை தமிழில் எடுக்க விரும்பினார், பாலாஜி. அதுவே கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிக்க "வாழ்வே மாயம்'' என்ற பெயரில் படமானது.

    இந்தப் படத்தில் கதாநாயகி என்ற இடத்தில் ஸ்ரீதேவிதான் இருந்தார். நோயுற்ற பிறகு தன்னைத் தேடிவரும் நாயகனுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுக்கும் `விலை மாது' கேரக்டரில் நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    இந்தக் கேரக்டரிலும் நடிப்பது தொடர்பாக முதலில் தன் அதிருப்தியை வெளியிட்டார், ஸ்ரீபிரியா. ஆனால், படத்தில் ஸ்ரீதேவி கேரக்டருக்கு இணையாக அவரும் பேசப்பட்டார்.

    இந்தப் படத்தில் கமலின் காதலியாக வரும் ஸ்ரீதேவியும், விலைமாது கேரக்டரில் வரும் ஸ்ரீபிரியாவும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீபிரியா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைக்கும்படி செய்திருந்தார், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன். ஏற்கனவே "பில்லா'' படத்தில் ஸ்ரீபிரியாவின் கேரக்டரை ஏ.எல்.நாராயணன் மெருகேற்றியிருந்தார். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாகப் பளிச்சிட்டது.

    இந்தப் படத்தில் நடித்த வகையில் ஸ்ரீபிரியாவுக்குள் இன்னொரு சந்தோஷமும் இருக்கிறது. பாலாஜி தயாரிக்கும் எல்லாப் படங்களிலுமே கதாநாயகன் பெயர் `ராஜா' என்றும் கதாநாயகி பெயர் `ராதா' என்றும் இருக்கும். "வாழ்வே மாயம்'' படத்தில், கதாநாயகன் ராஜாவாக கமல் நடித்தார். `ராதா' கேரக்டரில் ஸ்ரீபிரியாதான் நடித்தார். ஸ்ரீதேவி, `தேவி' என்ற கேரக்டரில் நடித்தார். இப்படி பாலாஜி பட `நாயகி' பெயரில் நடிக்க நேர்ந்ததே பெரிய திருப்திதான் ஸ்ரீபிரியாவுக்கு.

    அடுத்தடுத்து 2 படங்களில் பெரிய கேரக்டர் அமையாததால், தயாரிப்பாளர் பாலாஜி தனது புதிய தயாரிப்பில் ஸ்ரீபிரியாவாலேயே மறக்க முடியாத கதாநாயகி கேரக்டரை கொடுக்க நினைத்தார். அப்போது இந்தியில் ரண்தீன்கபூர், ஹேமமாலினி நடித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த "ஹாத் கீ சபாய்'' என்ற படத்தின் தமிழ் உரிமை வாங்கி அதில் கமலஹாசனையும், ஸ்ரீபிரியாவையும் ஜோடியாக நடிக்க வைத்தார். அந்தப் படமே "சவால்.'' படம் தமிழிலும் வெற்றி பெற்றது. ஸ்ரீபிரியாவின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது.

    எத்தனையோ நடிகைகளுடன் நடிக்க நேர்ந்த போதிலும், ஸ்ரீபிரியாவின் "மரியாதைக்குரிய நடிகை'' பட்டியலில் இருந்தவர் மனோரமாதான்.

    அதற்கான காரணத்தை ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "மற்ற நடிகர் - நடிகைகள் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர் `ஆச்சி' மனோரமா. புதுமுகம் ஆயிற்றே என்றெல்லாம் ஒதுங்கிப் போகமாட்டார்.

    என் நான்காவது படமான "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் ஆச்சியும் இருந்தார். படத்தில் ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடியாக நடித்தனர். நான் தேங்காய் சீனிவாசனின் ஜோடியாக நடித்தேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சேலத்தில் நடந்தது. `ஆச்சி'யும் வந்திருந்தார். நான் நடிக்க வருவதற்கு முன்பே, எங்கள் குடும்பத்துடன் ஆச்சிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் நான் சினிமாவுக்கு வந்தபிறகு, என்னை ரொம்பவும் அக்கறையுடன் பார்த்துக்

    கொள்வார்.எப்போதும் படப்பிடிப்புக்கு என்னுடன் பாட்டி வருவதுண்டு. `ஆச்சி'யுடன் எனக்கு படப்பிடிப்பு என்றால், பாட்டி வரமாட்டார். இந்த வகையில் ஆச்சி என் இன்னொரு அம்மா ஸ்தானத்தில் இருந்தார்.

    "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படப்பிடிப்பில் அன்று எனக்கும் ஆச்சிக்கும் சீன் இருந்தது. முதலில் எனக்கு மேக்கப் போட்டார்கள். எனக்கு மேக்கப் போட்டவர் ஏதோ பெயருக்கு அவசரமாக போட்டு விட்டு போய்விட்டார். நான் நடிக்க வேண்டிய அன்றைய காட்சிக்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உடையும் `ஏனோதானோ' என்றிருந்தது.

    நான் மேக்கப் ரூமை விட்டு வெளியே வரவும் `ஆச்சி' என்னைப் பார்த்து விட்டார். `மேக்கப்' என்ற பெயரில் என் முகம் இருந்த விதம் ஆச்சிக்குள் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது. என் கையைப்பிடித்து மறுபடியும் மேக்கப் ரூமுக்கு அழைத்துப் போனார்.

    மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம், "ஒரு தமிழ்ப்பொண்ணு நடிக்க வந்தா அவளுக்கு இந்த மாதிரிதான் மரியாதை கொடுப்பீங் களா?'' என்று உரத்த குரலில் கண்டித்ததுடன், எனக்கு மறுபடியும் மேக்கப் போட ஏற்பாடு செய்தார். சரியான உடைகளையும் தரச்செய்தார்.

    அன்றைக்கு என்னுடன் என் அம்மாவோ, பாட்டியோ இருந்திருந்தாலும், `ஆச்சி' அளவுக்கு நிச்சயம் செய்திருக்க முடியாது. இந்த வகையில் ஆச்சி, எனக்கு இன்னொரு அம்மா.

    இப்படிப்பட்ட ஆச்சியிடமே ஒரு தடவை ஏதோ ஒரு காரணத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டேன். அம்மா - பெண்ணுக்கிடையே வந்து போகும் சாதாரண மோதலாக அதை ஆச்சி எடுத்துக் கொண்டார். எனக்கு அப்போது ஆச்சி அளவுக்கு பக்குவம் ஏது?

    ஒருநாள் ஷெட்டில் என் கண்ணில்பட்ட ஆச்சியின் ஹேர் டிரஸ்ஸரிடம், "மேடம் நல்லா இருக்காங்களா?'' என்று கேட்டுவிட்டேன். அடுத்த கணம் எங்கிருந்துதான் ஆச்சி வந்தாரோ, என்னை பிலுபிலுவென பிய்த்துவிட்டார்.

    "என்னை மேடம்னு கூப்பிடற அளவுக்கு நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?'' என்று கோபத்துடன் கூறினார். அவர் அப்படி உரிமையுடன் என் மீது கோபப்பட்டு, மீண்டும் என்னுடன் சமரசமாகிவிடவேண்டும் என்பதுதான் என் திட்டம்! அது நன்றாகவே நடந்தேறியது.

    இப்போது நான் நடிக்கும் "இம்சை அரசிகள்'' சீரியலில்கூட எனக்கும் ஆச்சிக்கும் சமமான கேரக்டர்கள். ஆச்சி அவருக்கே உரிய ஆற்றலில் சின்னத்திரை ரசிகர்களையும் குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    எப்போதும் என்னை வாய் நிறைய `ஆலு' (ஒரிஜினல் பெயரான அலமேலுவின் சுருக்கம்) என்று வாய் நிறைய அவர் அழைப்பதே தனி அழகு.''
    புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கியபோதே, சில படங்களை ஸ்ரீபிரியா டைரக்ட் செய்தார்.
    நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.

    தமிழில் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும், கதை நன்றாக இருப்பதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

    இந்தப் படத்தின் கதை உரிமையை அனைத்து மொழிகளுக்கும் ஸ்ரீபிரியாவிடம் டைரக்டர் கே.பாலசந்தர் வாங்கினார். இது, ஸ்ரீபிரியாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

    கதையை வாங்கியதும், தெலுங்கில் சரிதாவை வைத்து படத்தை இயக்கினார் பாலசந்தர். அங்கே படம் மிகப்பெரிய வெற்றி.

    "ஒரு தோல்விப்படத்தை எப்படி வெற்றிகரமாக மாற்றமுடியும்'' என்பதை அன்றே செய்து காட்டினார், கே.பாலசந்தர். இதில் கதை என்னுடையது என்பதில் எனக்கொரு பெருமை. அவ்வளவுதான்'' என்கிறார், ஸ்ரீபிரியா.

    இதே காலகட்டத்தில் டைரக்டராகவும் தன்னை வெளிப்படுத்தினார், ஸ்ரீபிரியா. "சாந்தி முகூர்த்தம்'' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஸ்ரீபிரியாவை ஒரு தரமான இயக்குனராக நிலைநிறுத்த, தொடர்ந்து "நானே வருவேன்'' என்ற படத்தை இயக்கினார். இதே படத்தை கன்னடத்திலும் இயக்கினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், தெலுங்கில் பிரபல இயக்குனராக திகழ்ந்த தாசரி நாராயணராவ் தெலுங்கில் இயக்கிய "சிவரஞ்சனி'' படம் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழில் "நட்சத்திரம்'' என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தில் ஸ்ரீபிரியா நடிகையாகவே நடித்திருந்தார். இந்தப்படம் தெலுங்கில் பெற்ற வெற்றியை, தமிழில் எட்டவில்லை.

    டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "இளமை ஊஞ்சலாடுகிறது'' படம் ஸ்ரீபிரியாவுக்கு இன்னொரு திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் கமலஹாசனின் காதலியாக இருந்து ரஜினியின் மனைவியாக மாறும் கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தக் கேரக்டரில் ஸ்ரீபிரியா நடிப்பதாக இல்லை. அதுபற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "படத்தில் ஜெயசித்ரா நடித்த கேரக்டரில்தான் நான் நடிப்பதாக இருந்தது. கதைப்படி அந்த கேரக்டருக்கு அத்தனை முக்கியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப்படத்தை தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் அப்போது புகழின் உச்சியில் இருந்த ஜெயசுதா நடித்தார். நான் ஸ்ரீதரிடம், "படத்தில் நீங்கள் எனக்கு தருவதாக சொன்ன கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. மெயின் ரோல் தந்தால் பண்ணுகிறேன். சின்ன கேரக்டரில் நான் நடிக்க விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வந்து விட்டேன்.

    நான் இப்படி மனதில் இருப்பதை படபடவென கொட்டிவிட்டு வந்தது ஸ்ரீதர் சாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும் என்று எண்ணினேன். ஆனால் என் தைரியத்தைப் பார்த்தோ, அல்லது நம்பிக்கை வந்தோ அந்த மெயின் கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார். நான் நடிக்க மறுத்த கேரக்டரில் சில நாட்களில் ஜெயசித்ரா நடித்தார்.

    படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆடை நேர்த்திக்காக இந்தப் படத்தில்தான் நான், பேசப்பட்டேன். ஸ்ரீதர் சாரின் கலை அழகுணர்வுக்கு கிடைத்த மரியாதையாக இந்தப் பாராட்டை எடுத்துக் கொண்டேன்.

    இந்தப்படம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. ராஜேஷ்கன்னா, சத்ருகன்சின்கா நடித்தார்கள். என் கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். என்ன காரணத்தாலோ இந்தியில் படம் சரியாக ஓடவில்லை.''

    இவ்வாறு கூறினார், ஸ்ரீபிரியா.

    நடிகர் பாலாஜி அப்போது பட அதிபராகவும் மாறி நிறைய படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் புகழ் ஏறுமுகமாக இருந்தபோது, அவரை கதாநாயகனாக்கி "பில்லா'' என்ற படத்தை தயாரித்தார். படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    இந்தப் படத்தில் தனது கேரக்டர் சின்னதாக இருப்பதாக கூறி ஆரம்பத்தில் நடிக்க மறுத்திருக்கிறார், ஸ்ரீபிரியா. படத்தில் தனது கேரக்டர் வலுவில்லாததாக இருக்கிறது என்று அவர் கதை வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கூறினார்.

    ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னதும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், "வேண்டுமானால் பார். படத்தில் உன் கேரக்டரும் பேசப்படும். அதற்கு நான் பொறுப்பு'' என்றார்.

    இந்தப்படத்தில் நடித்தது பற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "தயாரிப்பாளர் பாலாஜி எப்போதுமே என் போன்ற கலைஞர்களின் மரியாதைக்குரியவர். அவர் கம்பெனியில், சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற பேதம் கிடையாது. ஒவ்வொரு நடிகர் - நடிகைக்கும் நாற்காலி போட்டு அதில் எம்பிராய்டரியில் அவர்கள் பெயரை பதித்து இருப்பார்கள்.

    அதுமாதிரி சம்பள விஷயத்திலும் அவர்களின் அணுகுமுறை புதுமையானது. யார் நடிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் சம்பளப் பணத்தையே கொடுப்பார்கள். அதுவரை நான் நடித்த படங்களில் என் சம்பளத்தை அம்மாவிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். முதன் முதலாக இந்தப் படத்தில்தான் என் சம்பளத்தை நான் வாங்கினேன்.

    அப்போது கூட பாலாஜி சாரிடம், "அம்மாவிடம் கொடுத்து விடுங்களேன் சார்'' என்று சொல்லிப் பார்த்தேன். அவரோ, "என் படத்தில் நடிப்பவர் யாரோ, அவர்தான் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்'' என்று கூறிவிட்டார்.

    பாலாஜி சாரின் "பில்லா'' படம் இந்தியில் வந்த `டான்' படத்தின் ரீமேக். அமிதாப்பச்சனும், ஜீனத் அமனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டியபோது முழுவதும் பார்க்காமல் தூங்கிவிட்டேன். கடைசியில் என் கேரக்டர் இதுதான் என்று வந்தபோது `சின்ன ரோல்' என்று தயங்கினேன்.

    கதை வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன், இந்தியில் சின்னதாக இருந்த கேரக்டரை, தமிழில் பெரிதாக உருவாக்கித் தருகிறேன் என்றார்.

    ஆனாலும் படம் வந்தபோது என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றவே செய்தது. என்றாலும் அந்த கேரக்டரில் நான் பேசப்பட்டேன். ஏ.எல்.நாராயணன் சார் சொன்னது உண்மையாயிற்று.

    இந்தப் படத்தில் என் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்பதை தயாரிப்பாளர் பாலாஜி சாரும் தெரிந்தே வைத்திருந்தார். "பில்லா'' படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தவர், "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய கேரக்டர் உண்டு'' என்று

    சொன்னார்.இப்படி எல்லோருமே நம்பிக்கைïட்டுகிற விதமாக சொல்லவே செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். பாலாஜி சார் அப்படியில்லாமல், அவரது அடுத்த படத்தில் எனக்கு பெரிய கேரக்டரே கொடுத்தார். "சவால்'' என்ற அந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடித்தேன். இப்போதுகூட மறக்க முடியாத கேரக்டர் அது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    "நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது.

    வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

    "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது.

    சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.

    படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார்.

    "அவ்வளவுதானே! கவலையைவிடு'' என்று அம்மா சொன்னார்.

    அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது. "நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

    இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார்.

    இந்திப்படத்தில் ரேகா நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள்.

    இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டிïனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல்.

    1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.

    இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.

    "நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருக்கிறார். அவற்றில் முக்கியமானது "தசாவதாரம்'' படம். இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவை கேட்டார் இயக்குனர். ஸ்ரீபிரியா மறுத்துவிட்டார்.

    "நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட நடிகர்! அவர் ராமாயண நாடகத்தில் நடித்தபோது கைகேயி வேடத்தில் நடித்தார். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால் எந்த கேரக்டரிலும் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உன்னால் இந்த சூர்ப்பனகை கேரக்டரிலும் நடித்து பெயர் வாங்க முடியும்'' என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

    இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும், எந்த கேரக்டரிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    கதாநாயகியாக திரைக்கு அறிமுகமாகியிருந்தாலும் காமெடி, அதிரடி என சகல விஷயமும் தொட்டவர், இவர். கமலஹாசனுடன் நடித்த "பட்டிக்காட்டுராஜா'' படத்தில் `வில்லி' கேரக்டரில் கூட வந்தார். அதுமாதிரி "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் கதாநாயகன் ஜெய்சங்கர் என்றாலும், படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார்.

    இந்த மாதிரியான `சவால்' கேரக்டர்கள், சின்ன கேரக்டர்களிலும் நடித்த அனுபவம் இருந்ததால் சூர்ப்பனகை கேரக்டரையும் சிறப்பாகவே செய்தார், ஸ்ரீபிரியா.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை மீது டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாருக்கு பிரியமும் அதிகம். மரியாதையும் அதிகம். அந்த அடிப்படையில் தன்னை `சித்தப்பா' என்றே அழைக்கச் சொல்வார். ஆரம்பத்தில் வாய் தவறி `சார்' வந்தாலும், "நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறேன்?'' என்று குரலில் கடுமை காட்டி கேட்பார். வசனங்களை இவர் சொல்லித் தருவதே தனி அழகு. காட்சியை விவரிக்கும்போதே அவரிடம் இருந்து வசனங்கள் வந்து விழும். ஒத்திகையின்போது பேசவேண்டிய வசனத்தை சொல்லிக் கொடுப்பவர், மறுபடி `டேக்'கின் போது இன்னமும் கூடுதலாக சில வசனங்களை சேர்ப்பார். ஆனால் அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்களும் அற்புதமாக இருக்கும்.

    தசாவதாரம் படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும்போதே, "வாய் வலிக்குது'' என்று அவரிடம் கிண்டல் செய்திருக்கிறேன். வசனம் அதிகம் இருப்பதைப்பற்றி கிண்டல் செய்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்வார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதுபற்றி பேசாமல் சிரிக்க மட்டும் செய்வார்.

    அவர் சொன்னபடி தசாவதாரம் படத்தில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, "வாயில்லாப்பூச்சி'', "பாலாபிஷேகம்'', "உள்ளத்தில் குழந்தையடி'' உள்பட ஏழெட்டு படங்களில் நடித்தேன். எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.

    நான் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட டைரக்டர்களில் இவரும் ஒருவர். "நாளை பூஜை. படத்தில் நீயும் இருக்கிறாய். பூஜைக்கு வந்துவிடு'' என்பது மட்டுமே இவரது திடீர் அழைப்பாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருக்கிறதோ அத்தனை கேரக்டர்களையும் உயிரோட்டமாகத் தரும் இயக்குனர் என்ற வகையில் நான் மட்டுமல்ல, பல நடிகர் - நடிகைகள் இவரிடம் `படத்தில் தங்களுக்கு என்ன கேரக்டர்' என்று கேட்கமாட்டார்கள்.

    சமீபத்தில் நான் இயக்கும் டெலிவிஷன் சீரியல் ஒன்றுக்காக கற்பகம் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தபோது குதூகலத்துடன் என் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டார். "நீ டைரக்ட் பண்றதை பார்க்கும்போது எனக்கே நடிக்கணும் போல இருக்கு'' என்று சொல்லி என்னை பாராட்டினார். அப்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.'' இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டார். 
    தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' இதன் கதாநாயகியாக `படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள்.
    தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' இதன் கதாநாயகியாக `படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள். அதை ஏற்க சாண்டோ சின்னப்ப தேவர் மறுத்துவிட்டார்.

    ஸ்ரீபிரியாதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் தேவர் உறுதியாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் வேடிக்கையானது. "ஸ்ரீபிரியாவின் உண்மைப் பெயர் அலமேலு. எனவே, அலமேலுவாக அந்தப் பெண்தான் நடிக்க வேண்டும்'' என்றார், தேவர்!

    இந்தக் காலக்கட்டத்தில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த இரண்டொரு படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார், தேவர்.

    "ஆட்டுக்கார அலமேலு''வின் "முதல்நாள் படப்பிடிப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்தது. தேவரின் மருமகன் தியாகராஜன்தான் டைரக்டர். ஸ்ரீபிரியா ஆற்றில் குளிக்கிறபோது பாடுகிற பாடல் காட்சிதான் முதல் காட்சியாக எடுக்கப்பட இருந்தது.

    அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, வேகமாக காரில் வந்து இறங்கினார் தேவர். டைரக்டரை பார்த்து, "மாப்ளே! முதல் `ஷாட்'டே ஓ.கே. ஆகணும். இல்லாவிட்டால் `பேக்கப்' பண்ணிட்டு, எல்லாரும் ஊருக்குப் புறப்பட வேண்டும்'' என்றார். இதனால் ஸ்ரீபிரியாவுக்கும், மற்றவர்களுக்கும் பரபரப்பும், படபடப்பும் அதிகமாயின. ஆயினும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஸ்ரீபிரியா இயல்பாக நடித்தார். முதல் ஷாட்டே ஓகே ஆகியது. "ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி'' என்ற பாடல் காட்சிதான் அது.

    இந்தப் படத்துக்குப் பிறகு, தேவர் பிலிம்சில் ஏழெட்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்தார், ஸ்ரீபிரியா. பூஜை போட்டதும், முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாவைத்தான் படம் பிடிக்கச் சொல்வார், தேவர். அந்த முதல் ஷாட் என்ன தெரியுமா? "மருதமலை முருகன் அருளால் மகத்தான வெற்றி கிடைக்கணும்'' என்று ஸ்ரீபிரியா வசனம் பேசுவதுதான்!

    பிரபல ஹீரோக்கள் நடிக்கும் சமயத்தில்கூட, முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாதான் இந்த வசனத்தைப் பேசி நடிக்க வேண்டும். இதை கதாநாயக நடிகர்கள் கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்களிடம், "தப்பா நினைச்சுக்காதீங்க. இது `லக்கி பாப்பா'ங்கறதால முதல் வசனத்தைப் பேச வைக்கிறேன்'' என்பார்.

    ஆட்டுக்கார அலமேலு படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதை இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியில் ஸ்ரீபிரியா கேரக்டரில் ராமேஸ்வரி நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் `கொட்டேலு பொன்னம்மா' என்ற பெயரில் எடுத்தபோது அதில் ஸ்ரீபிரியா நடித்தார். தமிழில் அலமேலு. தெலுங்கில் பொன்னம்மா. "கொட்டேலு'' என்றால் தெலுங்கில் ஆடு என்று அர்த்தம்.

    இந்தப்படமும் வெற்றி பெற, ஸ்ரீபிரியாவுக்கு தெலுங்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. அவரை ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் "கொட்டேலு'' பொன்னம்மா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

    இப்போதும் ஆந்திரா பக்கம் யாராவது அவரைப் பார்த்தால்கூட, `கொட்டேலு பொன்னம்மா' என்று அழைப்பது தான் ஆச்சரியம்!

    ஸ்ரீபிரியா நடிக்க வந்த புதிதில் யாருடனும் பேசவே ரொம்பத் தயங்குவார். படப்பிடிப்பு இடைவேளையில்கூட, முகத்தை `உம்' என்று வைத்துக் கொண்டிருப்பார். `கலகல'வென்று பேசும் அளவுக்கு அவரை மாற்றியது அவரது அம்மா கிரிஜாதான்.

    `எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோரும் உன்னிடம் மதிப்பும், மரியாதையும் வைப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும் அவசியம்' என்று எடுத்துக் கூறினார். இதனால், ஸ்ரீபிரியா தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டார்.

    ஸ்ரீபிரியா, எல்லோருடனும் கலகலப்பாகப் பேசாமல் இருந்ததற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் மொழிப்பிரச்சினை! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், ஆங்கிலப் பள்ளியில் படித்த காரணத்தால், நாக்கில் ஆங்கிலம்தான் துள்ளி விளையாடியதே தவிர, தமிழில் கோர்வையாகப் பேசத் திணறினார்!

    அப்படியிருந்த ஸ்ரீபிரியா, பின்னர் அழகாகவும், சரளமாகவும் தமிழ் பேசியது எப்படி? அவரே கூறுகிறார்:-

    "நான் இந்த அளவுக்கு தெளிவாக தமிழ் பேசுவதற்கு பின்னணியில் இருப்பது "தினத்தந்தி''தான். என் முதல் தமிழ் ஆசான் "தினத்தந்தி''தான் என்பதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

    அம்மா சொன்ன யோசனையின் பேரில், தினமும் "தினத்தந்தி'' வந்ததும், பெரிய எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் சேர்த்து படிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.

    கலைஞரின் அழகுத் தமிழ் வசனங்கள் எனக்குப் பிடித்தன. கலைஞரின் வசனங்களை சிவாஜி சார் பேசுவது தனி அழகு. இந்த அழகு என்னை கவர்ந்ததால், கலைஞரின் வசனங்களையும் உச்சரிக்கப் பழகினேன்.

    சமீபத்தில் ஒரு டெலிவிஷன் பேட்டியில் முதல்வர் கலைஞர் அவர்கள், தமிழில் நன்றாக வசனம் பேசும் 5 பேரைப்பற்றி கூறினார்கள். அந்த 5 பேரில் என்னையும் அவர் சேர்த்திருந்ததைப் பார்த்ததும், நிஜமாகவே நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழ்த்தாயின் தவப்புதல்வரின் அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

    இப்போது எனக்கிருக்கும் தமிழ் ஆர்வம் மட்டும் நான் நடிக்க வந்த புதிதில் இருந்திருந்தால், எனக்கு தமிழ் அல்லாத "ஸ்ரீபிரியா'' என்ற பெயரைக்கூட வைக்க விட்டிருக்கமாட்டேன். இப்போது தமிழில் திருமூலரை படித்து ரசிக்கும் அளவுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருப்பதை எனக்கு கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்'' என்றார் ஸ்ரீபிரியா.

    டைரக்டர் பி.மாதவனின் முதல் படத்தில் அறிமுகமான ஸ்ரீபிரியா, தனது 5-வது படமாக மீண்டும் மாதவன் இயக்கிய படத்தில் நடித்தார். அந்தப் படம் "பாட்டும் பரதமும்.'' சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில், அவருடன் ஜெயலலிதாவும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்தனர்.

    கதாநாயகிகள் இருவரே தவிர, ஒருநாள் படப்பிடிப்பில் கூட இருவரும் சேர்ந்து வருகிற மாதிரி காட்சிகள் வரவில்லை என்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ரொம்பவே வருத்தம். கதை அப்படி என்றாலும், கடைசியில் `கிளைமாக்ஸ்' பாடல் காட்சியில் இருவரும் வருகிற மாதிரி ஒரு காட்சி இருந்தது. ஆனால் தனது காட்சியை முடித்துக் கொடுத்துவிட்டு ஜெயலலிதா போன பிறகே, ஸ்ரீபிரியா அந்தக் காட்சியில் நடிக்க அழைக்கப்பட்டார். அப்போதும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாததில் ஸ்ரீபிரியாவுக்கு ஏக வருத்தம். 
    புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.
    புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.

    காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-

    "தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.

    செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.

    ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.

    இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.

    காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே  பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.

    எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.

    ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.

    "உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.

    அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.

    செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.

    இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.

    ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.

    காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.

    ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).

    இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.

    அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.

    ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.

    ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.

    அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

    முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.

    இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.

    ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார். 
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.

    அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.

    இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.

    அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!

    அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் "ஒரு கை ஓசை'' (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

    இப்படி, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை'' என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் "புதிய பாதை''); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: "சிகரம்.''

    சாருசித்ரா சீனுவாசன், "தீஸ்ரி மஞ்ஜில்'' என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

    படம் முடிந்ததும், "இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.

    சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.

    என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.

    கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

    பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்'' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.

    நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்'' என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.

    நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்' அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.

    படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்'' என்றேன். "சரி'' என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.

    திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!'' என்றார்.

    "அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!'' என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.

    படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.

    பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாïர் போய் வரலாம்'' என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!'' என்று கூறிவிட்டேன்.

    "காதல் ஓவியம்'' படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.

    "பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்'' என்றேன்.

    "உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!'' என்றார்.

    அதற்கு நான், "யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் "ஜெகன்மோகினி'' படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்'' என்றேன்.

    ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

    ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா.'' படம் ஓடவில்லை.

    "அலைகள் ஓய்வதில்லை'' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, "அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது'' என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.

    நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.

    அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!''

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.
    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.

    "மெல்லத் திறந்தது கதவு'' படம் 1986 செப்டம்பர் 12-ந்தேதி வெளியாயிற்று. இதை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தனர்.

    இதில் இடம் பெற்ற முக்கிய பாடல்கள்:-

    1. "ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிருச்சு!''

    2. "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா?''

    3. "தேடும் கண் பார்வை தவிக்க...''

    4. "வா வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுது!''

    5. "தில் தில் தில்... மனதில் ஒரு தல் தல் தல் காதல்''

    "மெல்லத் திறந்தது கதவு'' படத்தை ஏவி.எம். தயாரிக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை.

    அதுபற்றி ஏவி.எம். சரவணன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

    "1985-ம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திடீரென்று பாரதிராஜா டெலிபோன் செய்தார். "சார்... நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.

    இருவரும் வந்தார்கள்.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.

    என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாட்டுகள் மட்டுமல்ல, அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர்.

    ஒருமுறை அப்பச்சி (ஏவி.எம்) என்னை அழைத்து "விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டு விடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரிய வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே'' என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் பிடிக்கும். அவர் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு.

    பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் "மெல்லத்திறந்தது கதவு.''

    இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. "நானும் எம்.எஸ்.வி.யும் சேர்ந்து இப்படத்துக்கு மிïசிக் பண்றோமே'' என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசை மேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது.

    பாடல்களுக்கான டிïனை எம்.எஸ்.வி. அவர்கள் போட்டார். ஆர்க்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.

    பாடல்கள் மிக இனிமையாக அமைந்தன. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் பணியாற்றிய விதமும் இனிமையாக இருந்தது.

    படம் வெளியானதும் முதலில் சுமாராகத்தான் போயிற்று. நாட்கள் ஆக ஆகத்தான் பிக் அப் ஆயிற்று.

    நடுவில் ஒரு தமாஷ் நடந்தது.

    மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது. எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    மதுரையில் இப்படி படத்தை முன்னும் பின்னுமாக மாற்றிப்போட்டு அது வரவேற்பைப் பெற்றது என்ற விவரம் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாக கசிந்து, மற்ற தியேட்டர்காரர்களும் அப்படியே செய்யத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் பின்னர் பிரச்சினை ஏதும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தியேட்டரில் காண்பித்துக் கொண்டிருந்த மாதிரியே மாற்றிப்போட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினோம்.

    "இது தேவைதானா'' என்று அதிகாரிகளே கேட்டார்கள்.

    "படத்துக்குத்தான் சர்டிபிகேட் ஏற்கனவே கொடுத்தாயிற்றே. எப்படிக் காட்டினால் என்ன?'' என்று அவர்கள்

    அபிப்பிராயப்பட்டார்கள்.நாங்கள்தான் வற்புறுத்தி மீண்டும் ஒரு சர்டிபிகேட் வாங்கினோம்.

    அப்போது குறும்புக்கார அதிகாரி ஒருவர், "தலைப்பு எப்படி? `மெல்லத் திறந்தது கதவு' என்றுதான் இருக்கப் போகிறதா? இல்லை, `கதவு திறந்தது மெல்ல' என்று மாற்றப் போகிறீர்களா?'' என்று கிண்டலடித்தார்.''

    இவ்வாறு சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.

    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    கடற்கரையில் உதயமான கற்பனை

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

    ×