search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா.
    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.

    திலீப்குமார் - வைஜயந்திமாலா நடித்த "மதுமதி'' உள்பட ஏராளமான இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. தென்னாட்டில் இருந்து முதன் முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "செம்மீன்'' மலையாளப் படத்துக்கு இசை அமைத்தவரும் அவர்தான்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "முள்ளும் மலரும்'' படத்தில் டைரக்டர் மகேந்திரன் முடிவு செய்த இடைவேளை வேறு. இப்போது தியேட்டரில் பார்த்த இடைவேளை வேறு.

    இதனால் என்னைவிட, டைரக்டர் மகேந்திரன் அதிகம் அதிர்ந்து போனார். அதற்கப்புறம் படம் பார்க்கப் பிடிக்காமல் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.

    தியேட்டர் முதலாளி தன் வீட்டில் சமைத்த சாப்பாட்டுடன் எங்களைப் பார்க்க வந்திருந்தார்.

    அவரைப் பார்த்ததும் மகேந்திரன் கோபமாக, "என்ன சார் இது! இடைவேளை இந்த இடத்தில் இல்லையே! எப்படி மாறியது?'' என்று கேட்டார்.

    தியேட்டர் அதிபரோ எங்கள் டென்ஷனை கண்டுகொள்ளாமல் "ஓ! அதுவா... சார்! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நம்ம தியேட்டர் ஆபரேட்டர் இருக்கிறானே, அவன் ஒரு டைரக்டருக்கு மேல சார்! சொன்னா நம்பமாட்டீங்க. இந்த படத்துல இடைவேளை போடற இடம் சரியில்லை. ரஜினி மேல லாரி ஏறுகிற மாதிரி ஒரு சீன். அப்ப இடைவேளை போட்டாத்தான் "ரஜினிக்கு என்னாச்சு?'' என்ற பதட்டத்தோடு படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது "கை மட்டும்தான் போய்விட்டது'' என்று காட்டினால் ஒரு `பஞ்ச்' இருக்கும் என்றான் சார்! சொன்னது சொன்னபடி சீனை கட் பண்ணி முன்னே பின்னே போட்டு எப்படி சூப்பரா பண்ணியிருக்கான் பார்த்தீங்களா? அதனாலதான் நான் அவன் விஷயத்திலே தலையிடறதே இல்லை சார்!'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    அதோடு, டைரக்டர் மகேந்திரனை பார்த்து, "இப்ப படம் எப்படியிருக்கு சார்?'' என்றும் கேட்டார்.

    மகேந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மகேந்திரனைப் பார்த்து, "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா'' என்று பாடினேன்.

    பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

    பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

    இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.

    அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.

    "பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.

    முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.

    பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.

    காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

    லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடைïறு இல்லாதிருந்தது.

    இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.

    சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.

    பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.

    நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.

    தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.

    இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.

    அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.

    சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.

    இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.

    இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்ïமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.

    ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.

    "பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.

    இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மிïசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.

    ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மிïசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மிïசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மிïசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மிïசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

    தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக "சிகப்பு ரோஜாக்கள்'' என்ற படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.

    கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தை, ஒரு "மர்டர் மிஸ்ட்ரி'' படமாகத்தர பாரதி திட்டமிட்டிருந்தார். படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.'' அடுத்தது வாலி எழுதிய "நினைவோ ஒரு பறவை'' பாடல்.

    ரெக்கார்டிங்கை பார்ப்பதற்காக, கமல் வந்திருந்தார். ரிகர்சல் பார்த்து முடித்த நேரத்தில் "பிரேக்'' விடப்பட்டது

    அந்த நேரத்தில் கமல் சில ஆங்கிலப் பாடல்களைப் பாடிக்காட்டினார். நன்றாக இருந்தது.

    நான் கமலிடம், "படத்திலும் நீங்களே இந்தப் பாட்டை பாடிவிடுங்கள்'' என்றேன்.

    "ஓ பாடலாமே'' என்றார். ஜானகியுடன் சேர்ந்து பாடினார். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே "ஹிட்'' ஆயின. படமும்தான்.


    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.
    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-

    "சென்னை கமலா தியேட்டரில் `கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.

    அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ``மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, ``அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ``எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ``அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.

    உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது.

    இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ``படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.

    என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன.

    நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ``ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்.

    எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.

    பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம்.

    மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ``நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!

    அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டிïன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது.

    இந்த டிïனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

    அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ``ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார்.

    நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.

    ``ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன்.

    அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது.

    பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம்.

    இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ``இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும்

    சொன்னார்.என்னிடம் மிïசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன்.

    வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ``இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார்.

    இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது, இன்னொரு சம்பவம்.

    டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசிலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். ``மேகத்திலே வெள்ளி நிலா, காதலிலே பிள்ளை நிலா'' என்ற சரணம் போய்க் கொண்டிருந்தது.

    அப்போது எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்தார். ``ராஜா சார்! நீங்கள் கம்போசிங்கில் வெறும் ஆர்மோனியத்துடன் பாடும்போது காதருகில் மிகவும் மெல்லிய குரலில் பாடுவது போல இருந்ததே! இப்போது இவர்கள் பாடும்போது பலமான குரலில் வருவது போலல்லவா இருக்கிறது'' என்றார்.

    மகேந்திரனோ அவர் பங்குக்கு, ``ராஜா! இவ்வளவு சத்தமாக பாட்டைக் கேட்டால், கட்டிலில் தூங்கும் பையன் எழுந்து விடமாட்டானா?'' என்றார்.

    நான் டி.எம்.எஸ். - சுசிலா பாடிக் கொண்டிருந்த அறைக்குப் போனேன்.

    டி.எம்.எஸ்.சிடம், ``அண்ணா! குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவனும், மனைவியும் பாடும் ரொமாண்டிக் பாடல் இது. மெதுவாகக் கேட்க வேண்டும். இதுவோ பெரிய மலைச்சாரலில் நின்று கொண்டு ``மேகத்திலே வெள்ளி நிலா'' என்று பாடுவது போல் வருகிறது. உங்களுக்கு தெரியாததல்ல. மெதுவாகப் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    அவர், ``ராஜா! நான் மெதுவாகத்தான் பாடுகிறேன். இப்போ கேளு''என்றவர் பாடினார். மிகவும் சன்னமாக குரல் ஒலிக்க, மெதுவாகத்தான் கேட்டது.

    ``பிறகு எப்படி ரிக்கார்டிங்கில் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்கிறது?'' என்று கேட்டேன்.

    ``நான் என்னப்பா பண்றது? என் குரல் அமைப்பு அப்படி! நேரில் கேட்டால் மென்மையாகவும் மைக்கில் கேட்டால் கம்பீரமாகவும் ஒலிக்கிற குரலாக ஆண்டவன் கொடுத்து விட்டான்'' என்றார், டி.எம்.எஸ்.

    உள்ளே போய் இருவருடைய குரலையும் குறைத்து பாடலைப் பதிவு செய்தோம்.

    ஆனாலும், அது ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக பாடுகிற மாதிரி வரவில்லை.

    மகேந்திரன் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் அவருக்கு டைரக்டு செய்யும் வாய்ப்பு வந்தது. ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து வார இதழ் ஒன்றில் தொடர் கதையாக வந்திருந்த ``முள்ளும் மலரும்'' கதையை படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார். திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்யும் ஏற்பாடுகளை தொடர்ந்தார்.

    ரஜினி, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என நட்சத்திரங்கள் முடிவானார்கள்.

    கம்போசிங் நடந்தது. அப்போது ``16 வயதினிலே'' படத்தைப் பற்றியும், பாரதிராஜாவின் திறமையைப் பற்றியும் மட்டுமே மகேந்திரன் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார். அதே நேரம், ``தரத்தில் உயர்ந்த நல்ல படமாக இதைக் கொண்டு வந்து விட வேண்டும்'' என்றும் சொன்னார்.

    ``செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்'', ``அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை'', ``ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'' ``நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'' போன்ற பாடல்கள் உருவாயின. பாலு மகேந்திராதான் கேமரா. மகேந்திரனும், பாலு மகேந்திராவும் நல்ல நண்பர்கள்.

    ரஜினியின் நல்ல நடிப்பு, படத்தின் இயக்கம், கேமரா, கதை, திரைக்கதை எல்லாம் கச்சிதமாக அமைந்து படத்துக்கு வெற்றியை தேடித்தந்தன.

    ஒரு படத்தின் வெற்றிக்காகவே ஒட்டுமொத்த ïனிட்டும் உழைத்தாலும், வெற்றியைத் தருவது நமக்கும் மேலே உள்ள ஒருசக்தி.

    இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. நானும் மகேந்திரனும், சேலத்தில் ``முள்ளும் மலரும்'' ஓடிய ஒரு தியேட்டருக்கு போன போது அது நடந்தது.

    தியேட்டர் முதலாளி எங்களை வரவேற்று அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தார்.

    படத்தின் ஆறாவது ரீலில், ரஜினி மீது லாரி ஏறியது போல் ஒரு சீன் வரும். அங்கே இடைவேளை என்று போட்டு விட்டார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் பார்த்தவரை படத்தின் இடைவேளை அது இல்லை.என்னைவிட மகேந்திரன் இன்னும் அதிர்ச்சியாகி இருந்தார்.

    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

    தனது இசைப்பயண அனுபவம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பைரவி படத்தை தயாரித்த கலைஞானம், "மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை (பின்னணி இசை சேர்ப்பு) முடிக்க வேண்டும். அந்த அளவுக்குத்தான் என்னிடம் பணம் இருக்கிறது. எனவே மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை முடித்துவிடுங்கள்'' என்று என்னிடம்

    சொல்லிவிட்டார்.இதுமாதிரியானதொரு நெருக்கடியை இதுவரை சந்தித்திராதவன் என்ற முறையில், அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    நான் அவரிடம், "படம் மிகவும் சீரியசாக மனதைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவே, மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அதோடு மூன்று நாளைத் தாண்டிவிட்டால் யார் பணம் கொடுப்பது?'' என்று கேட்டேன்.

    அவரோ, "எப்படியும் மூன்று நாளைக்குள் முடித்தாகணும்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் நான் இன்னும் கோபமாகி, "மூன்று நாட்களுக்கும் மேலாக ரீரிக்கார்டிங் போனால் என் சம்பளப்பணத்தை நீங்கள் தரவேண்டாம். அதை ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கொடுத்து விடுங்கள்'' என்றேன்.

    கலைஞானம் பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

    ரீரெக்கார்டிங் தொடங்கியாயிற்று. படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் போல, ஹீரோவின் தங்கையை கெடுப்பது, அவளின் மரணம், அதன் இறுதிக்காட்சிகள், ஹீரோவின் சபதம், வில்லனின் ஆட்களோடு சண்டை என்று போய்க்கொண்டிருந்தது.

    எல்லா ரீல்களிலும் மிïசிக். மூன்று நாட்களுக்குள் முடியவில்லை. "சரி; அப்படியே இரவும் தொடர்ந்து வேலை செய்து முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதனால் இரவு 9 மணிக்கு முடிக்க வேண்டிய கால்ஷீட்டை முடிக்காது, இரவும் தொடர்ந்து வேலை செய்து அதிகாலை 4-30 மணிக்கு

    முடித்தோம்.கலைஞானத்திடம் `வருகிறேன்' என்றுகூட சொல்லாமல் கிளம்பினேன்.

    அப்போது அவர் நான் எதிர்பாராத ஒரு காரியம் செய்தார். என்னுடைய பாக்கி சம்பளத்தை கையில் வைத்தார்.

    "நீங்கள்தான் பணம் இல்லை என்றீர்களே?'' என்று கேட்டேன்.

    "பரவாயில்லை. கலைஞர்கள் வயிறெரியக்கூடாது'' என்றார், கலைஞானம்.

    நான் அவரிடம், "வேண்டாம். எனக்கு வருத்தமில்லை'' என்றேன்.

    அவரோ, "இல்லையில்லை, கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேசிய தொகை கொடுத்தால்தான் மரியாதை'' என்று சொன்னவர், மேற்கொண்டு என்னை எதுவும் பேசவிடாமல் கையில் பணத்தை வைத்தார்.

    ஜெய்சங்கர், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் காயத்ரி. இதில் "வாழ்வே மாயமா?'' என்ற பாடல், நல்ல பாடலுக்கு இசையமைத்தோம் என்ற திருப்தியை தந்தது.

    இந்தப் படத்தில்தான் இந்தியத் திரை இசையில் முதன் முதலாக `எலெக்ட்ரிக் பியானோ' உபயோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து டி.என்.பாலு இயக்கிய "ஓடி விளையாடு தாத்தா'' என்ற காமெடிப் படத்துக்கு இசையமைத்தேன். இது சோபியா லாரன்ஸ் நடித்த "ரோமன் ஹாலிடே'' என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

    பத்ரகாளியை அடுத்து ஏ.சி.திருலோகசந்தரின் "பெண் ஜென்மம்'' படத்திற்கும் என்னையே இசையமைக்க அழைத்தார். இந்தப் படத்தில் `செல்லப்பிள்ளை சரவணன்' என்ற பாடல் எனக்கு பிடிக்கும். இப்போது கேட்டாலும், அதில் மூன்றாவது சரணத்திற்கு முன்வரும் இசையை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    ஸ்ரீதேவி நடித்த `சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்ற படம் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது. ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தாய்மார்கள், இருட்டும்வரை தங்களிடம் வேலை வாங்கும் முதலாளிகளைப் பார்த்து கெஞ்சுகிற முறையில் பாடும் பாடலான

    "தண்ணி கறுத்திருச்சு - மணித்தங்கமே

    தவளை சத்தம் கேட்டுருச்சு - ஒயில் அன்னமே

    புள்ளையுமே அழுதிருச்சு - மணித்தங்கமே

    புண்ணியரே வேலை விடு''

    - என்று ஒரு பாட்டு இருக்கிறது.

    சூரியன் மறைந்ததால், தண்ணீரில் இருட்டுப்பட்டு கறுப்பாகிவிட்டது. தவளைகள் கூட கத்துகின்றன. தொட்டிலில் தூங்க வைத்த பிள்ளையும் பசியால் அழுகிறது. புண்ணியவானே காலையில் இருந்து இருட்டும் வரை வேலை செய்து விட்டோம். இப்போது அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காகவாவது செய்த வேலை போதும் என்று சொல்லி, எங்களை விட்டுவிடு'' என்று கெஞ்சும் பாடல் இது.

    இந்த மெட்டை இந்தப் படத்தில் அதன் வார்த்தைகளை விட்டு விட்டு, வேறு வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி பாட்டு எழுதினார். இது ஒரு தாலாட்டுப்பாடல் போல் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

    படம் வெற்றி பெறவில்லை.

    "துணையிருப்பாள் மீனாட்சி'' என்ற படத்தில் `சுகமோ ஆயிரம்' என்று ஒரு பாடல் பிரபலம். இந்தப்படம் தொடர்பான ஒரு விஷயம் சொல்லவேண்டும்.

    "சரசா பி.ஏ'' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் நடராஜன், திருச்சி ரங்கராஜன் என்பவருடன் சேர்ந்து பி.ஆர்.சோமு டைரக்ஷனில் "உயிர்'' என்ற படத்தை ஜெமினி ஸ்டூடியோ உதவியோடு தயாரிக்க இருந்தார்.

    ஏற்கனவே திருவையாறு ரமணஸ்ரீதர் - சரளா கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன்.

    ரமணி (ரமணிஸ்ரீதர்) இன்றைய நடிகர் ராகவேந்தர். இவர் தயாரிப்பாளர்களுக்கு நண்பர்.

    என்னைப்பற்றிசொல்லி இந்தப் படத்துக்கு இசையமைக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்.

    அதற்கு அவர்களோ, "முதன் முதலில் அவருக்கு படம் கொடுத்ததே நாம்தானே. அதற்கும் நீதானே சிபாரிசு செய்தாய். ஜெமினிகணேசன் - பத்மினி நடிக்க தாதாமிராசி டைரக்ஷனில், வாசு ஸ்டூடியோவில் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட, `சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு' என்று அமரன் பாட்டெழுதி ரெக்கார்டு செய்து படம் நின்று போயிற்றே! அந்த ராஜாவைத்தானே சொல்கிறாய்?'' என்று ரமணியை கேட்டிருக்கிறார்கள்.

    "இல்லையில்லை. அது ஏதோ அசந்தர்ப்பம். அதற்காக திறமை உள்ளவர்களை தள்ளி வைத்தால் எப்படி?'' என்று பதிலுக்கு இவர் கேட்டிருக்கிறார்.

    இப்படிச் சொன்னதும் அவர்கள், "சரி சரி! ஒரு 5 பாடல்கள் ரெக்கார்டு செய்து கொடுக்கட்டும். ஏனென்றால் ஜெமினி ஸ்டூடியோவின் ஆதரவில் இந்தப்படம் வரவேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களிடமும் ஒப்புதல் வாங்க இந்தப் பாடல்கள் உதவியாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ரமணி எங்களிடம் வந்து இதைச் சொல்ல, ஸ்டூடியோவுக்கும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கும் என் கையில் இருந்த பணத்தைப்போட்டு ரெக்கார்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வசந்தா, சரளா, ரமணி பாடினார்கள். ஒரே நாளில் 5 பாடல்கள் பதிவாயின. ஜெமினி ஸ்டூடியோவில் கோடீஸ்வரராவ் என்ற என்ஜினீயர் பாடல்களை பதிவு செய்தார்.

    பாடல்கள் "ஓ.கே'' ஆயின. பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.

    இப்போது போல, அப்போதெல்லாம் பூஜைக்கு அழைப்பிதழோ, போஸ்டர்களோ அடிக்கும் பழக்கம் இல்லை.

    பூஜை, பாடல் பதிவு அவ்வளவுதான். எல்லாரையும் நேரிலோ, போனிலோ அழைத்து விடுவார்கள்.

    பூஜைக்கு முதல் நாள். ரமணி காமராஜர் சாலையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.

    அப்போது நான் வீட்டில் இல்லை. இந்த ரமணி எப்போதுமே துறுதுறுவென்றிருப்பார். டிபன் சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வெளியே பீடா ஸ்டாலில் பீடா போட்டால், கடைக்காரரை குஷிப்படுத்த சத்தம் போட்டு ஏதாவது ஒரு பாடலைப் பாடுவார். இப்படிப்பாடும்போது ரோட்டில் டிராபிக்கோ, மாணவ, மாணவியரோ, ஜனங்களோ யார் வேடிக்கை பார்த்தாலும் கவலையே படமாட்டார். பாடி முடித்ததும் காசு கொடுத்துவிட்டு `கண்ணா நான் வரட்டுமா?' என்று கிளம்பிவிடுவார்.

    நாங்களெல்லாம் அவர் பாடுவதையும், சிவாஜி போல் நடித்துக் காட்டுவதையும் சிரித்த முகமாய் ரசிப்போம்.

    வீட்டுக்கு என்னைப் பார்க்க வந்தவர், காத்துக்கொண்டிருக்க முடியாமல் ஒருவித தவிப்பு நிலையில் இருந்திருக்கிறார். அம்மா அவரை "உட்காரு தம்பி'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    உட்கார்ந்தவர் என் ஆர்மோனியப் பெட்டியை எடுத்து ஏதோ வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    எனக்கோ என் ஆர்மோனியம் உயிருக்கு மேல். அதை யாரையும் தொடவிடமாட்டேன்.

    என் ஆர்மோனியத்தை இவர் வாசிப்பதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    "ஏய்! யாரைக் கேட்டு இதைத் தொட்டாய்?'' எப்படி நீ இதைத் தொடலாம்?'' என்று கன்னாபின்னா என்று சத்தம் போட்டேன்.

    அவர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் கத்தியதில் ஏற்பட்ட அதிர்ச்சியையும், அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்றாலும் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு, "ஏய் ராஜா! என்னய்யா இது? இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று என்னை சமாதானப்படுத்த முனைந்தார்.

    ஆனால் நான் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது இருந்தேன். இதனால் மேலும் கத்திவிட்டேன்.

    ஒரு கட்டத்தில் ரமணியால் தாங்கமுடியவில்லை. உடனே அவருக்கும் கோபம் வந்து, "ஏய்! என்னை இந்த (ஆர்மோனியம்) பெட்டியைத் தொடக்கூடாதுன்னு சொல்லி திட்டிட்டே இல்லே? உன் முன்னால் நான் மிïசிக் டைரக்டரா ஆகிக்காட்டலைன்னா நான் ரமணி இல்லை'' என்று சபதம் செய்தார்.

    நானும் விட்டேனில்லை. "நீ மிïசிக் டைரக்டராகு. பேர் எடு. அதனால எனக்கொண்ணும் இல்லை. என் இடம் எனக்குத்தான். உன் இடம்  உனக்குத்தான். ஆனால் நீ ஒரு பாடகனா இந்த சினிமாவில் பேர் எடுக்கவே முடியாது'' என்று கண்மூடித்தனமாக வார்த்தைகளை

    விட்டுவிட்டேன்.அடுத்த நாள் பூஜையில் "உயிர்'' படத்துக்கு ரமணி இசையமைப்பாளர். அவரது இசையில் பாடல் பதிவானது. ரமணி, ரமணஸ்ரீதர் ஆகிவிட்டார்.

    இந்தப் படத்துக்கு நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பாடல்களில் ஒன்றான `புது நாள் இன்று தான்' என்று அமரன் எழுதி வசந்தா பாடிய பாடல், இப்போது "சுகமோ ஆயிரம்'' என்று எஸ்.பி.பி.யும், பி.சுசீலாவும் பாட, `துணையிருப்பாள் மீனாட்சி' படத்தில் இடம் பெற்றது.

    (எஸ்.ஜானகி அழுத சம்பவம் - நாளை)
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

    கலையுலக அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "பாடல்களில் புதுமை என்பது எனக்குப் பிடித்த விஷயம். கிடைக்கிற வாய்ப்புக்களில், அதற்காக முயற்சிக்கவும் செய்வேன். ஆனால் அம்மாதிரி முயற்சிகளுக்கு வார்த்தைகள் மூலம் முதலிலேயே முட்டுக்கட்டை போடுவதும் தொடர்ந்தே நடந்தது.

    ஆரம்பத்தில் ஜி.கே.வி.யிடம் கன்னடப்படங்களுக்கு பணியாற்றியபோதும், இம்மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. அழகான இலக்கியத் தரம் வாய்ந்த பாடல் அமையும்போது, வினியோகஸ்தர்கள் யாராவது தற்செயலாக வந்து கேட்க நேர்ந்தால், அப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட் மிகவும் மட்டமாக இருக்கும்.

    கன்னடத்தில், "உச்சா ஹாடு நமகு யாத்தக்கே?'' (இது மூத்திரப்பாட்டு - நமக்கெதற்கு) என்பார்கள்.

    அதாவது, தியேட்டரில் படம் பார்ப்பவர்களை, பாத்ரூமுக்குப் போகவைக்கும் பாட்டாம்.

    ஒரு சமயம் பஞ்சு சாரையும், என்னையும் பார்த்த ஒருவர், "இந்த `மச்சானைப் பார்த்தீங்களா?' மாதிரி ஒரு டாப் கிளாஸ் பாடல் ஒண்ணு போடலாமே'' என்றார்.

    "அந்தப் பாடலை யாரும் கேட்காமல் நாமே தானே போட்டோம்'' என்று நானும் பஞ்சு சாரும் பேசிக்கொண்டோம். அதை இவர் போன்றோருக்கு எப்படிப் புரியவைப்பது?

    அதுமாதிரி "கவிக்குயில்'' படம் ரிலீசானபோது இந்த கசப்பை நான் அனுபவிக்க நேர்ந்தது. படத்தில் `காதல் ஓவியம் கண்டேன்' என்ற அந்தப் பாடலை தியேட்டர் ஆபரேட்டரிடம் சொல்லி வெட்டி வைத்து விட்டுத்தான் ஓட்டினார்கள்.

    `இவர்கள் இப்படித்தான் மட்டம் தட்டுவார்கள்' என தெரிந்து வைத்திருந்ததால் பொருட்படுத்தாமல் இருப்போம். அதோடு நிறைய வேலை இருந்ததால், இதையெல்லாம் கேட்டு வருத்தப்படவும் நேரமில்லை. நாங்கள் பாட்டுக்கு காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகு போல, சினிமா வெள்ளத்தில் விழுந்து வெற்றி அலைகளுக்கு எழும்புவதும், தோல்விப் பள்ளங்களில் வீழ்வதும் இல்லாது, மணற்பாங்கான பகுதியில் அமைதியாக ஓடும் ஆறு போல ஒரே சீராக போய்க்கொண்டிருந்தோம்.

    ஆரம்ப காலங்களில் என் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தால், மைக் முன்னால் ரிகர்சலின் போது ஒரு காரியம் செய்வான். அன்று அவன் பாட வேண்டிய பாட்டு எந்த ஸ்ருதியில் என்ன ராகத்தில் இருக்கிறதோ, அதே ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் கம்போஸ் செய்த பாடலை பாடிக்காட்டுவான்.

    எனக்கோ, இதை நான் எம்.எஸ்.வி.யிடம் இருந்து காப்பியடித்து விட்டேன் என்று சொல்வது போல குத்தும்.

    இப்படி நான் நினைக்க காரணமிருக்கிறது. சிறு வயதில் பாவலர் அண்ணன் கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடலை வாசிக்க, ஜனங்கள் கை தட்டினால், இந்த கைதட்டல்கள், பாராட்டுகள் எல்லாம் இதை இசை அமைத்தவர்களுக்குத்தான் போய்ச் சேரவேண்டும், ஜனங்கள் எனக்காக கைதட்டவில்லை என்பதில் தெளிவாக இருந்தவன் நான்.

    இன்னொருவரின் டிïனை நான் காப்பியடித்தால் அதனால் எனக்கு எப்படி பெயர் வரும்? கம்போஸ் பண்ணியவருக்கல்லவா அது போய்ச்சேரும். அந்த ஸ்ருதியில் இருக்கும் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக, அதன் காப்பி என்று எஸ்.பி.பி. சொல்கிறானோ என்று மனம் துக்கப்படும்.

    பாடல் வெளிவந்து ஜனங்கள் பாராட்டியவுடன் அவனே வந்து, "டேய்! அந்தப் பாடல் ரொம்பப் பிரமாதம், அதைப் பாடும்போது இப்படி வரும் என்று தெரியாது'' என்று நல்லபடியாகப் பேசிவிடுவான்.

    இசையில் புதுப்புது முயற்சிகளுக்கு நான் தயாராக இருந்ததால், நாளடைவில் எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் கூட, `ராஜா! உங்க ரெக்கார்டிங்கிற்கு வருவதாக இருந்தால் பரீட்சைக்கு போகும் மாணவன் மாதிரி பயந்து கொண்டே வரவேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள்.  எல்லாம் ஜாலியாகத்தான். புதுமை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்போது அவர்களுக்கும்தானே பெயர்!

    ஆனால் இன்று வரை நான் யாருக்கும் பரீட்சை வைக்கவில்லை. எனக்கு நானே ஒவ்வொரு படத்திலும் பரீட்சை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்திலும் கற்றது எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்கிறேன்.''

    அண்ணன் பாஸ்கர் அடிக்கடி போய் சந்திக்கும் நண்பர்களில் ஒருவர் கலைஞானம். அவர் அப்போது தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தார். அங்கே அவருடன் தூயவன், மகேந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.

    கலைஞானம் நல்ல கதை ஞானம் உள்ளவர். அவர் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும், டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாஸ்கர் டைரக்ட் செய்யப் போவதாகவும், படத்தில் ரஜினி - ஸ்ரீபிரியா ஜோடியாக நடிப்பதாகவும் கூறினார். இந்தப் படத்துக்கு இசையமைத்துத்தர என்னைக் கேட்டார். ஒப்புக்கொண்டேன்.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் செட்டில் ரஜினியை பார்த்துப் பேசினேன். அன்றைய தினம், கால் நொண்டியானதும் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    டைரக்டர் கே.பாலசந்தர் சாரிடம் இரண்டு ஹீரோக்களாக கமலும், ரஜினியும் நடித்துக் கொண்டிருந்தவர்கள், தனித்தனியாக நடிக்க முடிவெடுத்த நேரத்தில் ரஜினிக்கு இந்தப் படம் வந்திருந்தது.

    இது தனி ஹீரோ படம். அடுத்து "புவனா ஒரு கேள்விக்குறி'' என்ற படத்தில் சிவகுமாருடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது.

    ரஜினியை ஷூட்டிங்கில் பார்த்தபோது, ஒரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது போல் தெரிந்தது. எனக்குள்ளும் தான் அப்படியொரு `நெருப்பு' ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இருவருடைய பேச்சும், சாதிக்க வேண்டிய இலக்கு பற்றியே வெறியோடு இருந்தது.

    "பைரவி'' பட செட்டில் கலைஞானமும் பாஸ்கரும் என்னிடம், "தேவையான பாடலை உடனடியாக ரெக்கார்டு செய்ய வேண்டும்'' எனச்சொன்னார்கள்.

    கவிதா ஓட்டலில் கவியரசர் கண்ணதாசனுடன் கம்போசிங்கிற்கு போனோம்.

    டைரக்டர் பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, "நண்டூருது நரிïருது'' என்று கிராமப்புறத்தில் பாடப்படும் குழந்தைகளின் விளையாட்டுப் பாடலை பல்லவியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே டிïனை `நண்டூருது நரிïருது' என்ற சந்தத்தை வைத்தே தொடங்கியிருந்தேன்.

    கண்ணதாசனும் `நண்டூருது' என்றே தொடங்கி, தங்கையை இழந்து நிற்கும் அண்ணன், தங்கையை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் சரணத்தில், உச்சஸ்தாயியில் "ஏழைக்கு வாழ்வு என்று எழுதியவன் எங்கே?'' என்று எழுதியவுடன், பாடலின் வல்லமை எங்கேயோ உயரத்துக்குப்

    போய்விட்டது.இந்தப் பாடலுக்கான காட்சி படமாக்கப்படும்போது, நான் இருந்தேன். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய அந்த அருமையான ஆண்மைக் குரலின் வார்த்தைகளுக்கு, ரஜினி காலிழந்து கட்டைகளோடு நிற்க, ஒரு டிராலி ஷாட் போட்டு ரஜினியிடம் காமிரா போய் நிற்பதாக எடுத்தார், டைரக்டர் பாஸ்கர்.

    எடுக்கும்போதே அந்த `ஸ்பிரிட்' தெரிந்தது. அது படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.

    இந்தப் படத்திலேயே `கட்டப்புள்ள குட்டப்புள்ள' என்ற கிராமியப் பாடலையும் டைரக்டரும், கலைஞானமும் போடச் சொன்னார்கள். கவிதா ஓட்டலில் கம்போஸ் நடந்தபோது, கலைஞானம் என்னைக் கேட்காமல் வினியோகஸ்தர்கள் சிலரை வரவழைத்து விட்டார். அதில் குடந்தையைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார்.

    அவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே கவிக்குயில் பாடல் பதிவின்போது ஏற்பட்ட சம்பவம் நினைவுக்கு வர, இவர்கள் நம் பாடல் இப்படித்தான் வரவேண்டும் என்று தீர்மானம் செய்தால், நாம் புதிதாய் எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து போயிற்று. எனவே யாராவது "பாடலை பாடிக்காட்டுங்கள்'' என்று கேட்டால், பாடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

    பாடல்களை கவியரசரும் எழுதிவிட்டார். எல்லாவற்றையும் முழுமையாக பாடிவிட்டேன்.
    இந்த நேரத்தில் கலைஞானம், வினியோகஸ்தர்களை அழைத்து வந்தார். கவியரசருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு என்னைப் பார்த்து "பாடலைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுங்கள்'' என்றார்.

    ஆனால், நானோ எல்லாரும் ஆவலுடன் பாட்டை எதிர்பார்த்தும் ஆர்மோனியத்தை மூடிவிட்டு எழுந்து விட்டேன்.
    எழுந்தவன் கலைஞானம் அவர்களிடம் கூலாக, "இங்கே பாடினா ஒன்றும் புரியாது. டி.எம்.எஸ் - சுசிலாவை பாட வைத்து மிïசிக்கோடு ரெக்கார்டு செய்து போட்டுக் காட்டிவிடுவோம். அப்போது நன்றாக இருக்கும்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த யாருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

    கண்ணதாசன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்பது அவர் எங்களைப் பார்த்த பார்வையில் இருந்தே புரிந்து போயிற்று.

    ரிக்கார்டிங் சமயத்தில் எனக்கும் கலைஞானத்துக்கும் ஒரு தகராறு.

    "மூன்று நாளைக்குள் ரிக்கார்டிங்கை முடிக்கத்தான் பணம் இருக்கிறது. அதனால் எப்படியாவது மூன்று நாளைக்குள் முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதுவரை இதுபோன்றதொரு பிரச்சினையை சந்தித்து இராததால், கலைஞானம் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம்
    வந்துவிட்டது.
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா.
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா. மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூகாம்பிகை மீது நான் பாடிய கன்னடப் பாடல்களை, சினிமாவில் எனக்கு இசையமைப்பாளர் அங்கீகாரம் கொடுத்த பஞ்சு அருணாசலம் சாரிடமும் போட்டுக்காட்ட விரும்பினேன்.

    அப்போதே இரவு 10-30 மணி ஆகியிருந்தது. இருந்தாலும் போனேன். பாடல்களைக் கேட்டவர் பிரமை பிடித்தவர் போலானார். "பக்திப்பாடல் இப்படிக்கூட ஜீவனை உலுக்குவதாக அமையுமா என்ன? இதுபோல பக்திப்பாடல் வருவது இதுதான் முதல் தடவை. இது முற்றிலும் உண்மையான தெய்வீக நிலையில் பாடிய பாடல்கள் என்றார்.

    அங்கேயே அண்ணி (பஞ்சு அருணாசலத்தின் மனைவி) இருவருக்குமாக டிபன் எடுத்துக்கொண்டு வந்து பரிமாறினார்கள். சாப்பிடத் துவங்கும்முன் அவரிடம், "அண்ணி! இந்தப் பாடல்களை கேட்டீர்களா?'' என்று கேட்டேன்.

    "அய்யோ! கேட்கும்போதே உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது'' என்றார்.

    நான் அவர்களிடம், "அண்ணி! அது யாருன்னு நினைச்சீங்க? அது என் அம்மா'' என்றேன். அதோடு நில்லாமல், "நான் கூப்பிட்டால் இப்ப இங்கே வருவாங்க'' என்று விரலை சொடுக்கினேன்.

    நான் விரலை சொடுக்கிய அந்த வினாடியில் அண்ணிக்கு ஆவேசம் வந்துவிட்டது. சத்தமாக "ஏய் நான்தாம்ப்பா அது'' என்று குரல் கொடுத்தார்கள்.

    அவர்கள் சத்தமாக `ஏய்' என்ற நொடியில் என் கைகள் தானாக கூப்பியது. கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. உள்ளம் கரைந்து கசிந்தது. சிறிது நேரம் அப்படியே இருந்து மனம் சாந்தமானதும் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

    இந்தப் பாடல்களை வருடத்தின் முதல் நாள் அம்மாவின் சன்னதியில் ஒலிக்கச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இதற்காக டிசம்பர் 31-ந்தேதி மூகாம்பிகை போய்விட்டேன். இரவு தங்கி காலை 4 மணிக்கு சவுபர்ணிகாவில் குளித்து, நிர்மால்ய சேவை பார்த்துவிட்டு காலை 6 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு டேப் ரிக்கார்டருடன் போனேன்.

    அங்கே தரிசனத்துக்கு நிற்கும் பகுதியையொட்டிய திண்ணையில் ஒரு பக்கத்தில் டேப் ரிக்கார்டரை வைத்து அந்த பாடலில் இரண்டு பாடல்களை போட்டேன். சிறிதளவே பக்தர்கள் இருந்த அந்த சூழ்நிலையில் மனம் ரம்மியமானது. உள்ளம் அன்னையிடம் ஏங்கியது. "அம்மா! இந்தப் பாடலை நீ ஏற்றுக்கொண்டாயா என்பதை எனக்குப் புரியுமாறு நீ தெரிவிக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டேன்.

    இந்நிலையில் இரண்டாவது பாடல் முடிந்து `டேப்'பை `ஆப்' செய்தேன்.

    ஆனால் நான் பாடிய ஸ்ருதி மட்டும் என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இது எங்கிருந்து கேட்கிறது என்று யோசித்தேன். அப்போதுதான் கோவிலில் காலை 7 மணியை அறிவிக்கும் கோவில் மணியை அடிக்கிறார்கள்; அந்த ஓசை அடங்காது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்தது.

    அடடா! அம்மா அல்லவா என் வேண்டுகோளுக்கு பதில் சொல்லி இருக்கிறாள். "பார்த்தாயா நீ பாடிய ஸ்ருதி என் கோவிலின் மணிச்சுருதியில் இருந்து இம்மிகூடப் பிசகாமல் அப்படியே பின்னிப் பிணைந்திருப்பதை!'' என்று எனக்கு உணர்த்துவதைப் போலிருந்தது.

    மெதுவாக கேட்ட அந்த கோவில் மணி ஓசையின் ஸ்ருதியை என் பாடலுடன் இணைத்துப் பார்த்தேன். ஆச்சரியம். எள்ளளவும் பிசகாத அதே

    ஸ்ருதி.அம்மாவின் கருணையை எண்ணி ஆனந்தமானேன்.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    தனது இசை குரு தன்ராஜ் மாஸ்டருக்கு சேவை செய்த அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற செய்தி வந்தது. நானும் `வயலின்' கல்யாணமும் போனோம். அவர் உட்கார பயன்படுத்தும் ஈஸி சேரில் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அதிலேயே `பாத்ரூம்' வேறு போயிருந்தார். கைத்தாங்கலாக பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்தோம்.

    நோய் உபாதையிலும் இசைக்குள் ஆழ்ந்துபோன அவரது குணநலன் வெளிப்பட்டது. அவரைத் தூக்கும்போது `மெதுவாக மெதுவாக' என்பதற்கு பதில் `அன்டான்டே அன்டான்டே' என்றார். இது, "இசையில் மெதுவாக வாசிக்கவும்'' என்பதை குறிக்கும் இத்தாலிய மொழிச்சொல்.

    இசையை மட்டுமே அறிந்த அவர், உடல் செயலிழந்து போனாலும், உயிரில் கலந்து போன இசையைக்கொண்டே தனது தேவையை சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.

    அவரை பெஞ்சில் படுக்க வைத்து ஈஸி சேரை சுத்தம் செய்து காயப்போட்டோம். ரூமில் இருந்த பேனை வேகமாக ஓடவிட்டோம். காலை அமுக்கிவிடச் சொன்ன வார்த்தைகள் முனகல் போல கேட்டது. கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.

    வலது காலை நானும், இடது காலை கல்யாணமும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். விரல்களை பிடித்து விடுமாறு சொன்னார். பெருவிரலை பிடித்தேன். `அன்டாண்டே' என்றார். மெதுவாக பிடித்து விடவேண்டுமாம்!

    அப்படியே அடுத்த விரல்களை பிடித்து விட்டேன். "டேய் இ ஸ்ட்ரிங்' என்றார். "சார்'' என்றேன். அவர் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில்.

    "கிட்டாரில் ஓப்பன் ஸ்ட்ரிங் எது?'' என்று கேட்டார்.

    "இ ஸ்ட்ரிங் சார்'' என்றேன்.

    "ம்... அதை பிடித்துவிடு'' என்றார்.

    அவரது, கால் பெருவிரல்தான் கிட்டாரின் கீழ் ஸ்தாயி கணக்கில் `இ ஸ்ட்ரிங்'காம். இந்த வகையில் சுண்டு விரல் முதல் ஸ்ட்ரிங்காம். விரல்கள் எல்லாமே கிட்டார் வாத்தியத்தின் தந்திகள் ஆகிவிட்டன!

    உலகத்தின் எந்த இசை மேதை வாழ்விலும் இப்படியொரு சம்பவத்தை நான் அறிந்ததில்லை.

    நாங்கள் அங்கிருந்த நேரத்தில் சாயி லாட்ஜ் முதலாளி, மாஸ்டரை பார்க்க வந்திருந்தார். அவர் எங்களிடம், "நீங்கள் இவரை அவசியம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல வேண்டும். இது சாதாரணமாக வரும் தேக அசவுகர்யம் இல்லை. அதிகமாக குடித்ததால் சேரியில் எங்கேயோ விழுந்து கிடந்திருக்கிறார். சேரி ஆட்கள் தூக்கி வந்து வீட்டில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். காலில் அடிபட்டிருக்கிறது. கைகளைப் பாருங்கள், சிராய்ப்பு எப்படி இருக்கிறது? ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் "ஈரல்'' ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்'' என்றார். தொடர்ந்து அவரே, "உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்'' என்றும் யோசனை சொன்னார்.

    நாங்களும் தாமதிக்கவில்லை. ஒரு டாக்சியை வரவழைத்தோம். ரூமில் இருந்து அவரை தூக்கி குறுகலான படிகள் வழியாக இறக்கி, டாக்சியில் ஏற்றுவதற்குள்ளாகவே சிரமப்பட்டுப் போனோம்.

    மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நானும் கல்யாணும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் உடனிருந்து மாஸ்டரை

    கவனித்துக்கொண்டோம்.மறுபடியும் அவரை சாயி லாட்ஜ் 13-ம் நம்பர் அறையில் கொண்டு போய் சேர்த்தோம்.

    உடல் நலிவு சரியாகிவிட்டது. ஆனால் சோர்வாக இருந்தார். ஆனால் இன்னும் அன்டாண்டே, அடாஜியோ போன்ற இத்தாலிய இசைக் குறிப்பு வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன.

    அன்டாண்டே என்றால் `மெதுவாக' என்று சொல்லிவிட்டேன். அடாஜியோ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமல்லவா, அதற்கு `இன்னும் மெதுவாக' என்று அர்த்தம்.

    கொஞ்சம் அவர் பழைய நிலைக்கு திரும்பும்வரை சாயி லாட்ஜில் இருந்து விட்டு, டாக்டர் கொடுத்த மருந்துகளை எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி சொல்லிவிட்டு விடை பெற்றோம். சாயி லாட்ஜ் மானேஜரிடமும் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    குரு பக்தி ஒருபுறம் இப்படி என்றால், `அம்மா' மூகாம்பிகை மீதான பக்தி இன்னொரு புறம் ஆழமாக போய்க்கொண்டிருந்தது. அம்மா மீதான பக்தி மேலீடு அதிகரித்த பிறகு தனது இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டார், இளையராஜா.

    அதுபற்றி கூறுகிறார்:-

    "அம்மா மீதான என் ஈடுபாடு அதிகரித்த பிறகு திரை வாழ்விலான என் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன் யாரிடமும் உற்சாகமாக உரையாடுவது, நகைச்சுவை விஷயங்களை சிலாகித்து மகிழ்வது என்றிருந்த என் போக்கு அடியோடு மாறிற்று. நடை, உடை, பாவனைகளில் கூட மாறுதல் தெரிந்தது.

    கதை சொல்ல டைரக்டர் என்று யார் வந்தாலும், கதையுடன் `பாடல் சிச்சுவேஷன்' கேட்பதோடு சரி. பேச்சுவார்த்தை முடிந்து

    போகும்.அம்மா பக்தியில் என் ஆன்ம பலம் கூடியிருந்த போதிலும், திரை வாழ்க்கையில் என் வேலையிலும் கவனமாகவே இருந்தேன். கவிக்குயிலை தொடர்ந்து, அவர் எனக்கே சொந்தம், உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என படங்கள் தொடர்ந்தன. ஒவ்வொன்றிலும் புதிதாக செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பேன்.

    கவிக்குயில் படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடல் இருந்தாலும், "காதல் ஓவியம் கண்டேன்'' என்றொரு பாடலை படத்தின் பிற்பகுதியில் சேர்க்க பஞ்சு சார் விரும்பினார். இந்தப் பாடலை சுஜாதா என்ற 10 வயது சிறுமியைக்கொண்டு பாட வைத்தோம். குழந்தைதானே தவிர, குரல் என்னவோ பி.சுசிலா, எஸ்.ஜானகி போல பெரியவர்களின் தரத்தை ஒத்திருந்தது.

    இந்தப் பாடலில்தான் முதன் முதலாக இசை மேதை `பாக்'கின் காலத்திய இசையைப்போல கொடுத்து, அதன் மேல் நம் நாட்டு இசையான `வீணை'யை வாசிக்க வைத்து பாடலை பதிவு செய்திருந்தேன். சினிமா இசையில் இரு வேறு பாணி இசைகள் ஒன்றாக கலந்தது அதுவே முதல் முறை. அது நன்றாகவும் அமைந்ததில் வெற்றி கிடைத்தது.

    ஆனால், இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே வினியோகஸ்தர்கள் சிலர் கேட்டுவிட்டு, "படத்தில் இந்தப்பாடல் வரும்போது, ரசிகர்கள் புகை பிடிக்க வெளியே போய் விடுவார்கள்'' என்று கமெண்ட் அடித்தார்கள்.

    அதோடு நின்று விடாமல் "அவர்கள் புகை பிடிப்பதற்காக நாம் ஏன் பாடல் போடவேண்டும்?'' என்று படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு சாரிடமும் கேட்டுவிட்டார்கள்.

    இது விஷயம் என் காதுக்கு வந்தபோது நொந்து போனேன். புதிய விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது என்று நான் உற்சாகமாக பணிபுரிந்த நேரத்தில், மட்டமான அவர்கள் பேச்சு என் இதயத்தில் குத்துவது போல் இருந்தது.

    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.
    மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இரட்டையர்களில், தேவராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். "சிட்டுக்குருவி'' படத்தில் காதலனும், காதலியும் தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு சூழ்நிலையில் ஒரு பஸ்சில் இருவரும் அருகருகே அமர்ந்து போகிறார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

    இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் `கவுண்ட்டர் பாயிண்ட்'டை உபயோகிக்க முடிவு செய்தேன்.

    இதுபற்றி தேவராஜிடம் விளக்கி சம்மதமும் வாங்கிவிட்டேன்.

    கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது டிïனை வாசிக்கச் சொல்லி கேட்டார். "ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டிïன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அண்ணே! இரண்டு டிïனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டிïனுக்கு இன்னொரு டிïன் பதில் போலவும், அமையவேண்டும். அந்த பதில் டிïனும் தனியாகப்பாடினால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல் ஒரே பாடலாக ஒலிக்கவேண்டும்'' என்றேன்.

    பதிலுக்கு வாலி, "என்னய்யா நீ! இந்த நட்ட நடு ராத்திரியில `சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே! முதல்ல ஒரு "மாதிரி'' பாடலை சொல்லு!'' என்றார்.

    உடனே வேறு ஒரு பாடலைப்பாடி விளக்கினேன். நான் ஒரு டிïனையும், அமர் ஒரு டிïனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.

    ஆண்: பொன்

    பெண்: மஞ்சம்

    ஆண்: தான்

    பெண்: அருகில்

    ஆண்: நீ

    பெண்: வருவாயோ?

    - இப்படி பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதை தனியாகவும், பெண் பாடுவதை தனியாகவும் பிரித்துப் படித்தால் தனித்தனி அர்த்தம் வரும்.

    அதாவது `பொன் தான் நீ' என்கிறான் ஆண்.

    `மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள், பெண்.

    சேர்ந்து பாடும்போது `பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ' என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.

    `சரி' என்று புரிந்ததாக தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பிறகு கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென எழுதினார்.

    பாடல் என் கைக்கு வந்தது.

    இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்ததில் எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று.

    இந்தப் பாடலை ரெக்கார்டு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாடவேண்டும் அல்லவா.

    ஏவி.எம். சம்பத் சாரிடம் "ஒரு குரல் பாடுவதை மட்டும் முதலில் ரெக்கார்டு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி "பிளே'' செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.

    டைரக்டர்கள் தேவராஜ் - மோகன் இருவரில், மோகன் சாருக்கு கம்போசிங் சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் "உம்''மென்றே காணப்பட்டார்.

    `எப்படி வருமோ?' என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

    தேவராஜோ உற்சாகமாக இருந்தார். "இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கிற நேரத்தில் அதைப்பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் `கலைஞனாக' இருப்பதற்கு அர்த்தம் என்ன?'' என்று பேசினார்.

    இந்தப் பாடலின் இடையிடையே, பஸ்சில் கண்டக்டர் "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்... இறங்கு!'', "இந்தாம்மா கருவாட்டுக்கூடை! முன்னாடி போ!'' என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரை பேச வைத்தேன்.

    அந்தப் பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பை பெற்றது.''

    - இப்படிச் சொன்ன இளையராஜா, மூகாம்பிகை அம்மன் பேரில் கொண்ட பக்தியால் 4 பாடல்களை அதுவும் கன்னடப் பாடல்களை பாடி அன்றைய இசை உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபற்றி கூறியதாவது:-

    "என்னதான் பாடல்கள் இசையமைப்பு, பாட்டுப் பயிற்சி என்று பிசியாக இருந்தாலும் அம்மா மூகாம்பிகை மீது எனக்கு ஒரு கவனம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மூகாம்பிகை போவதும், யார் வந்தாலும் என் செலவில் அழைத்துப்போவதும் தொடர்ந்தது.

    இந்த நேரத்தில் அம்மாவைப் பற்றி கன்னடத்தில் பக்திப்பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தாமதமின்றி கன்னடப் பாடலாசிரியர் உதயசங்கரை சந்தித்தேன். "மூகாம்பிகை அம்மன் பற்றி 4 பக்திப்பாடல்கள் எழுதித்தர வேண்டும்'' என்று கேட்டேன்.

    அவரோ பிசியாக இருப்பதாகவும், இன்னொரு நாள் எழுதித் தருவதாகவும் சொல்லிவிட்டார்.

    நான் அவரை விட பிசியாக இருந்தும், குறிப்பிட்ட அந்த நாளில் அந்த 4 பாடல்களையும் ரெக்கார்டு செய்தே தீருவது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.

    என் பிடிவாதம் தெரிந்து கொண்ட உதயசங்கர், "எப்படியாவது பாடல்களை எழுதித்தந்து விடுகிறேன். ஆனால் நான் ரெக்கார்டிங்கிற்கு வரமுடியாது. என்னுடைய உதவியாளரை அனுப்புகிறேன். ஆனால் உன்னால் கன்னடத்தில் பிழையின்றி பாடமுடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கன்னடம் சரியில்லை என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

    "பரவாயில்லை; முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நாளில் ரெக்கார்டிங் தொடங்கி விட்டேன். டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் புதல்வர் கே.எஸ்.ரமணனின் "ஜெயஸ்ரீ ரெக்கார்டிங் தியேட்டரில்'', குறைந்த வாத்தியங்களை வைத்துக்கொண்டு பாடினேன்.

    அப்போது என் மனமெல்லாம் அம்பாளின் திருவடியிலேயே ஒன்றியிருந்தது. பாடும்போது உடலெங்கும் ஒரு அதிர்வு இருந்து கொண்டிருந்தது.

    4 பாடல்களையும் ரெக்கார்டு செய்து முடிக்கும் நேரம் உதயசங்கர் வந்தார். பாடலின் கன்னட உச்சரிப்பில் தவறு ஏதும் இருக்கிறதா என்பதை கேட்பதற்காக வந்தார்.

    பாடலைக் கேட்டவர்: "கன்னடப் பாடகர்களே பாடினாலும் இத்தனை தெளிவான கன்னடமாக இருக்காது. அவ்வளவு நன்றாக பாடிவிட்டீர்கள்'' என்று பாராட்டினார்.

    அந்த டேப்பை ஜி.கே.வி.யிடம் போட்டுக்காட்ட அவர் வீட்டுக்குப்போனேன். என்னைப் பார்த்ததும், "வாடா ராஜா!'' என்றார். அவருக்கு பாடல்களை போட்டுக் காட்டினேன். "இது நீ பாடலைடா? அம்பாளே வந்து பாடியிருக்கா'' என்று பாராட்டினார்.

    அண்ணியும் (ஜி.கே.வி.யின் மனைவி) உடனிருந்து பாடலை கேட்டார். "அண்ணி! எப்படி இருக்கிறது?'' என்று கேட்டேன்.

    "ஐயோ அதைக் கேட்காதப்பா? எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது'' என்றார்கள்.

    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.
    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளிகிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்கு கொஞ்சம் கவலையாகி விட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டுமே.

    ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

    ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார். அதுதான் "சின்னக்கண்ணன் அழைக்கிறான்'' என்ற பாட்டு.

    பாடலைப் பாடியவர், "இதுதான் புதிது. சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் `ஸகரிக மரினி' என்று ஆரோகணபரமான பிரயோகத்தை - அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே! அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாடமாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே'' என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி இது.

    ஓரளவு படங்கள் வந்து, ஓய்வில்லாத வேலைகள் தொடர்ந்தன. இருந்தாலும் நானும், பாஸ்கரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்தான் இருந்து வந்தோம்.

    ரெக்கார்டிங்குக்கு நான், அமர், பாஸ்கர் மூவரும் டாக்சியில்தான் போவோம்.

    ஒருநாள் வீட்டில் இருந்து மூவரும் டாக்சியில் கிளம்பினோம். மந்தைவெளி வழியாக, நந்தனம் மவுண்ட்ரோடு கிராசிங்கில், சிக்னலுக்காக காத்திருந்தோம். காலை 6-30 மணி இருக்கும். அப்போது பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.

    அதில் முன் சீட்டில் சாண்டோ சின்னப்பதேவர் கையை கார் கதவில் வைத்தபடி உட்கார்ந்திருந்தார். அப்படியே பக்கத்தில் நின்றிருந்த எங்கள் டாக்சியை கவனித்தார். என்னை பின்சீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டு, "ஏய் கேவலப்படுத்தாதீங்கப்பா'' என்றார்.

    எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொடர்ந்து அவரே பேசினார்.

    "என்னப்பா நீங்க! இவ்வளவு பெரிய பேர் எடுத்திட்டு டாக்சியிலே போறீங்களேப்பா! கேவலப்படுத்தாதீங்க. சீக்கிரமா ஒரு கார் வாங்குங்கப்பா'' என்றார்.

    இதற்குள் சிக்னல் கிடைத்துவிட, "சரிங்க அய்யா'' என்று விடைபெற்றோம்.

    அதற்கும் முதல் வாரம்தான் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கையால் `கலைமாமணி' விருது வாங்கியிருந்தேன்.

    அங்குதான் தேவர் அவர்களிடம் என்னை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    நான்தான் இளையராஜா என்று அவரால் நம்பமுடியவில்லை. என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.

    அப்போது பார்த்து நடிகை கே.ஆர்.விஜயா அங்கு வர, "ஏம்மா, இங்க பார்த்தியா? இவருதான் இளையராஜாவாம்மா'' என்று ஆச்சரியப்படும் பாணியில் அறிமுகப்படுத்தினார்.

    கலைமாமணி விருது விழாவில் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எங்களை தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்ததும் வணக்கம் போடுபவர்களும், மரியாதை செலுத்தும் அதிகாரிகளுமாய் வந்து போய்க்கொண்டிருந்தாலும் எங்களுடன் சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.

    பழகுவதில் அவரது எளிமை கண்டு எனக்குள்ளும் அவரிடம் சகஜமாகப் பேசும் ஆர்வம் எழுந்தது. நானும் சாதாரணமாக, "அண்ணே! உங்ககூட ரெயிலில் வந்தது ரொம்ப ரொம்ப மோசம்ணே'' என்றேன்.

    "ம்... என்ன சொல்றே?'' தனது ஆச்சரியத்தை கேள்விக்குறியாக்கினார் எம்.ஜி.ஆர்.

    "ஆமாண்ணே! அன்னைக்கு மதுரை பாண்டியனில் நீங்க மதுரைக்குப் போனப்போ, அதே வண்டியில் நானும் இருந்தேண்ணே.''

    "ஆமாமா? எனக்கும் சொன்னாங்க'' என்று சொன்ன எம்.ஜி.ஆர், "ஆமா அதுல என்ன மோசம்'' என்று திருப்பிக் கேட்டார்.

    "இல்லண்ணே! நீங்க அந்த ரெயிலில் வர்றது வெளியே தெரிஞ்சு, காலையில் ரெயில் சோழவந்தான் விட்டுக் கிளம்பும்போது, ரசிகர்கள், வண்டி கிளம்பவும் செயினைப் பிடித்து இழுத்து நிறுத்தி உங்களைப் பார்க்க ஆர்வத்தோடு அவங்க செய்த கலாட்டா...''

    நான் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "ம்... ம்... அப்புறமா?'' என்று கேட்டார்.

    "இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்துவதும், நீங்கள் கையைக் காட்டியவுடன் விட்டு விடுவதுமாக இருந்தார்கள். இப்படி காலையில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு காலை 10 மணிக்குத்தானே மதுரைக்கே வந்து சேர்ந்தது.''

    நான் இப்படிச் சொன்னதும், "ஆமா தம்பி... மக்கள் அவ்வளவு ஆர்வமா இருந்தா நாம என்ன செய்யமுடியும்?'' என்று மக்கள் தன் மீது வைத்திருந்த அன்பை சிலாகித்தபடி சொன்னார் எம்.ஜி.ஆர்.

    இதற்குள் விழா தொடங்கி விட்டது. எம்.ஜி.ஆர். கையால் கலைமாமணி விருது வாங்கினேன்.

    தேவர் அன்றைக்கு என்னைப் பார்த்தவர், இப்போது வாகனப் பயணத்தின்போது மறுபடியுமாக என்னைப் பார்க்கிறார். டாக்சியில் நாங்கள் வருவதைப் பார்த்ததும், சொந்தமாய் கார் வாங்கும் எண்ணத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டார்.

    அடித்தளம் என்று உறுதியாக சொல்லக் காரணம் உண்டு.

    சொந்தக்கார் விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டு `நேரம் வரும்போது அமைவது அமையும்' என்று இருந்துவிட்டேன்.

    ஆனால் பாஸ்கரும், அமரும் அதை சீரியசாக எடுத்துக்கொண்டார்கள். ஜி.ராமநாதனின் உதவியாளராக இருந்த ராமச்சந்திரனின் தம்பி டி.பி.துரைமணி ரிலையன்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கார் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டார்கள்.

    அது டி.எம்.டபிள்ï 3335 என்ற அம்பாசிடர் கார்.

    என் ஆர்மோனியம் பெட்டி போல எனது இன்னொரு உடன் பிறப்பு.

    படங்கள் அதிகமானதால் உதவியாளர் தேவைப்பட்டது. பாஸ்கரின் நண்பர் ஒருவர் வந்தார்.

    இத்தனை காலங்களும் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு வந்த என் இளவயது உயிர்த்தோழன் எம்.சுப்பிரமணியன் அவ்வப்போது என்னைப் பார்த்துப்போக வருவதுண்டு.

    அப்படி வந்த ஒரு நாள் அவரிடம், "ஏம்ப்பா! உனக்கு காலேஜில் என்ன சம்பளம்?'' என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்பது - சுப்பிரமணியனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். "ஐயாயிரம் ரூபாய் வாங்கறேன். என்னப்பா திடீர்னு இப்ப இந்தக் கேள்வி?'' என்று கேட்டார்.

    "அதை நான் தந்தால் என்னிடம் மானேஜராக வேலை செய்ய முடியுமா?'' என்று கேட்டு விட்டேன்.

    "ஏய்! என்னப்பா இது?''

    "ஆமாப்பா. நாமெல்லாம் ஒண்ணா இருந்தா நல்லாயிருக்கும் இல்லையா?'' என்றேன்.

    அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருந்தது.

    அவர் ஆவடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் புரொபசராக இருந்தார். நான் கேட்டதற்காக வேலையை விட்டுவிட்டு உடனே எங்களிடம் வந்துவிட்டார்.

    தமாசுக்காக அவரை, "என்ன மானேஜர் ரெடியா? போகலாமா? அடுத்து என்ன புரோகிராம்?'' என்று நான், அமர், பாஸ்கர் மூவருமே கிண்டல் செய்வோம்.

    அம்மாவும் வெற்றிலைப்பாக்கு போட்ட வாயோடு கன்னத்தில் கை வைத்தபடி எங்களை ஆச்சரியமாய் பார்ப்பார்கள். அதோடு, "அட போங்கப்பா! உங்களை பண்ணைபுரத்துல பார்த்த மாதிரி அப்படியே இருக்கு. இப்படியே கடைசிவரை இருங்கப்பா'' என்பார்கள்.

    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:-

    "அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.

    ஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.

    அமரும் டிïனைக் கேட்டுவிட்டு "செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.

    "செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.

    செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா?

    இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.

    "சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.

    படம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.

    படத்தைப் பார்த்தேன்.

    `அடடே! பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா?' என்று பிரமித்துப் போனேன்.

    அவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.

    இந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.

    இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

    இந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

    16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.

    கேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.

    அந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.

    இசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், "அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.

    பதிலுக்கு நான், "என்ன... என்ன? என்னடா எந்த இடத்துல?'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.

    அமர் தயங்கியபடி "இல்லே! இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...

    அவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.

    "இது உன் ஐடியாவா?''

    "இல்ல... பாரதியுடையது!''

    திரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், "ஏன்யா! ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன?'' என்று கேட்டேன்.

    "ஒங்கிட்டயா? நானா? சொன்னா சும்மா விட்டுருவியாக்கும்? உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்! மானம் போயிடாது!'' என்று சொன்னார், பாரதி.

    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.
    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

    "16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

    நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.

    பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.

    நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

    "16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

    பாடல் திருப்தியாக வந்தது.

    இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

    இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

    மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

    நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

    கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

    நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

    "செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

    பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

    மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

    ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

    பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

    "பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

    என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

    எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

    பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.

    யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

    மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

    அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

    மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.

    இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

    ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

    பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

    நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

    இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

    அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

    மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

    அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

    தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

    அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

    "இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

    அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை.
    ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார்.
    ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார். கடைசியில், குரு ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, இளையராஜாவை சம்மதிக்க வைத்தார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "16 வயதினிலே கதையைக் கேட்டு ராஜ்கண்ணு `ஓ.கே' சொன்னதும், கதாநாயகனாக யாரைப்போடலாம் என்று கேட்டார். அப்போது சிவகுமார் நடித்த "அன்னக்கிளி'' போன்ற படங்கள் நன்றாகப் போனதால் ராஜ்கண்ணு பாரதிராஜாவிடம், "சிவகுமாரைப் போடலாமே'' என்று கூறியிருக்கிறார்.

    பாரதிராஜாவோ திட்டவட்டமாக மறுத்து, "இந்தக் கதைக்கு கமலஹாசன்தான் சரியாக இருப்பார்'' என்று தன்பக்க காரணங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் "கமலஹாசனே நடிக்கட்டும்'' என்று ராஜ்கண்ணு கூறிவிட்டார்.

    பாரதி சொன்னது சரிதான். சிவகுமார் நன்றாகவே செய்திருக்கலாம். கமலஹாசன் இடத்தில் சிவகுமாரை இப்போது நம்மால் கற்பனைசெய்து பார்க்க முடியுமா?

    அடுத்து இசையமைக்க யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, பாரதி, "இளையராஜாவைப் போடலாம்'' என்று என் பெயரை சொல்லியிருக்கிறார்.

    "என்ன பாரதி! விளையாடறீங்களா? இளையராஜாவாவது கிடைக்கிறதாவது? அவர் இருக்கிற பிஸியில இதுமாதிரி படத்துக்கெல்லாம் வருவாரா?'' என்று கேட்டிருக்கிறார், ராஜ்கண்ணு.

    "இல்லையில்லை. இளையராஜா என் நண்பன்தான்'' என்று பாரதி சொல்ல, ராஜ்கண்ணு நம்பவே இல்லை.

    உடனடியாக நம்ப வைக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று எண்ணிய பாரதி, என் அண்ணன் பாஸ்கரை அழைத்துக்கொண்டு ராஜ்கண்ணுவை போய் பார்த்திருக்கிறார்.

    "வாங்க பாரதி'' என்றவர், "இவர் யாரு?'' என்று பாஸ்கரை கேட்டிருக்கிறார். "இவர் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர்'' என்று பாரதி சொல்ல, உடனே பாஸ்கருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கிறது. இப்போது `உண்மையிலேயே இளையராஜா பாரதிராஜாவின் நண்பர்தான் போலிருக்கிறது' என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்.

    ராஜ்கண்ணு பாஸ்கரிடம், "தம்பியிடம் சொல்லி படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.

    "அதுக்கென்ன சார்! இதில் ஒரு பிரச்சினையும் இல்லே. தம்பிகிட்ட நான் சொல்றேன்'' என்று பாஸ்கரும் தன் பங்குக்கு படுகூலாக சொல்லிவிட்டார்.

    அதே வேகத்தில் என்னிடம் வந்து, "டேய்.. பாரதிக்கு படம் வந்திருக்கிறது. நாமதான் மிïசிக்'' என்று சொன்னார்.

    நான் அண்ணனிடம், "பாரதியின் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கப்போவதில்லை'' என்றேன்.

    அண்ணன் அதிர்ந்து போனார். "என்னடா சொல்றே?'' என்று, தன் அதிர்ச்சியை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.

    பாரதிக்கும், எனக்கும் ஏற்கனவே இருந்த பந்தயம் பற்றி அண்ணனிடம் விவரித்தேன். "பாரதியின் முதல் படத்துக்கு அண்ணன் ஜி.கே.வெங்கடேஷ்தான் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்குகூட நான் இசையமைக்கும்படி ஜி.கே.வி.தான் சொல்ல வேண்டும்'' என்றேன்.

    பாஸ்கருக்கு என் பிடிவாத குணம் தெரியும். ஒரு முடிவெடுத்தால் அதில் இருந்து என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை அறிவார். அதனால் பாரதியை சந்தித்தவர், "விடு! எங்கே போயிடப்போறான்? இரண்டு மூணு நாள் விட்டுப் பிடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்'' என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

    அவர் சொன்ன மூன்று நாள் மட்டுமல்ல... மூன்று வாரம் போனபோதும் என் நிலை அதுவாகத்தான் இருந்தது.

    வாரங்கள் ஓடி மாதங்களானபோது, சகோதரர்களுக்குள் பிரச்சினை ஆகிவிட்டது. பாஸ்கரும், அமரும் (கங்கை அமரன்) என்னை பாரதி படத்துக்கு இசையமைக்க வற்புறுத்தினார்கள்.

    பாரதியோ, இந்த காலக்கட்டத்தில் என்னைப் பார்க்க வரவேயில்லை. நானும் இறங்கி வருவதாக இல்லை.

    ராஜ்கண்ணுவோ, "என்னாச்சு? என்னாச்சு?'' என்று என் விஷயமாய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

    இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பாஸ்கர், நேராக ஜி.கே.வி.யிடம் போய்விட்டார். அவரிடம் முழு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.

    ஜி.கே.வி. என்னை கூப்பிட்டு அனுப்பினார். என்னிடமும் விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், "சரிடா! போ! வேலையைச் செய்''

    என்றார்."இல்லண்ணா! நான் சொன்னா சொன்னதுதான்'' என்றேன்.

    "என்ன, சொன்னா சொன்னதுதான்! நான் இசையமைக்கச் சொன்னாத்தான் பாரதி படத்துக்கு இசையமைப்பேன்னு சொல்லியிருக்கே அதானே?'' ஜி.கே.வி. கேட்க, "ஆமா! அதுமட்டுமில்ல. பாரதிக்கு முதல் படம் நீங்கதான் இசையமைக்கணும். இரண்டாவது படத்தைக்கூட நீங்க சொன்னாத்தான் நான் இசையமைக்கறதா ஐடியா.''

    அவருக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது. "என்னடா இதெல்லாம், சின்னப்பசங்க மாதிரி! நான்தான் சொல்றேனில்லே... போடா, போய்ச் செய்'' என்றார். இதற்குப்பிறகும் மறுக்க முடியவில்லை. ஒத்துக்கொண்டேன்.

    பாடல் பதிவுடன் பூஜை என்று முடிவு செய்யப்பட்டது. கம்போசிங்கிற்காக ராஜ்கண்ணுவின் ஆபீசுக்குப் போனேன்.

    பூஜைப் பாடலாக, சப்பாணியை வெறுத்து வந்த மயிலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, அந்த மனமாற்றம் சப்பாணிக்கும் தெரிய வருகிற ஒரு பாடலை கம்போஸ் செய்யலாம் என்று பாரதி சொன்னார்.

    இதற்கிடையில், என்னுடைய ஒரு டிïனை என்னைக் கேட்காமல் பாரதியிடம் பாஸ்கர் பாடிக்காட்டி, "ஓ.கே''யும் செய்து வைத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. கம்போசிங் தொடங்கும் முன்பு அதைப் பாடிக்காட்டச் சொன்னார்கள்.

    `சும்மா கேட்பதற்காகத்தான் போலிருக்கிறது' என்று எண்ணி நான் அந்த டிïனை பாடிக்காட்டினேன்.

    "இதுவே போதும். இது ஓ.கே'' என்றார் பாரதி.

    அந்த டிïனை பஞ்சு சார் (பஞ்சு அருணாசலம்) ஏற்கனவே அவரது `கவிக்குயில்' படத்துக்கு "ஓ.கே'' செய்து இருக்கிறார்.

    இப்போது இவர்களும் "ஓ.கே'' சொல்லியிருக்கிறார்கள்!

    எனக்கு மனசுக்கு கஷ்டமாயிருந்தது. என் இக்கட்டான நிலையை பாரதியிடம் விளக்கினேன்.

    பாரதியோ, "பாஸ்கர் இதை பாடிப்பாடி அதற்கேற்ப எப்படி எப்படி `ஷாட்ஸ்' எடுக்கவேண்டும் என்று மனதில் நிறைய கற்பனைகளை செய்து வைத்துவிட்டேன்'' என்றார். அதோடு, "நான் நினைத்திருக்கும் அந்தக் காட்சிக்கு இதுபோல எந்த டிïனுமே அமையாது'' என்றும் உறுதிபடக் கூறிவிட்டார்.

    நான் விடவில்லை. "அது எப்படி பாரதி? நான் பஞ்சு சார் செலக்ட் பண்ணின டிïனை `இது பாரதிக்கு வேணுமாம்' என்று எப்படிச் சொல்வேன்? இதைவிட நல்லா டிïனா உனக்குப் போடறேன்'' என்றேன்.

    பாரதி வேண்டா வெறுப்பாக, "ம்... ம்... உன் இஷ்டம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தார். என்ன பாடினாலும் கவனிக்காமல் சிரத்தையின்றி இருந்தார். கடைசியாக ஒரு டிïனை அடிக்கடி பாடிக்காட்டி "இது நல்லா வரும்'' என்றேன்.

    பாரதி அரை மனதுடன்தான் அந்த டிïனுக்கு `ஓ.கே' சொன்னார். பாடலை எழுத கவிஞர் கண்ணதாசனை அழைக்கலாம் என்று

    சொன்னேன்."கவிஞருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ? அதற்கு புரொடிïசர் என்ன சொல்வாரோ?'' என்றார், பாரதி.   "அதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றேன்.

    கவிஞர் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், "இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க'' என்றேன்.

    இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.
    இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

    "அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெற+வில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.

    இந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏவி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.

    அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். "அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.

    என்னைப் பார்த்ததும் "நீங்கள்தான் இளையராஜாவா?'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.

    ஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே "என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.

    இதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். "நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்''

    என்றார்.இப்படிச் சொன்னதோடு, "மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.

    சந்தோஷமாக விடைபெற்று வந்தேன்.

    இதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.

    வந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.

    பாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த "மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. "மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.

    அப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக்

    காட்டினார்.தமிழில் அதற்கு "தீபம்'' என்று பெயர் சூட்டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.

    இந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.

    அதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

    அப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

    அப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய "தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.

    அவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.

    அதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் "வாடா பாலமுருகா! உட்கார்!'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.

    பாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து "உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி "உட்கார், மகேந்திரா!'' என்று சொன்னார்.

    பாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.

    சிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், "இல்லண்ணே! நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    சிவாஜியை "தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.

    பிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு? உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா! என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்!

    தீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே "பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.

    இங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.

    பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.

    இசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் "ஓ.கே'' சொன்னார்.

    பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, "ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி

    விட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.

    நான் மட்டும் வாலி அண்ணனிடம், "அண்ணா! வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.

    "எப்படி?'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.

    "டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.

    "இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.

    "தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.

    உடனே அவர், "ராஜா பாருங்க! ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.

    "இது சரியாக இருக்கிறது'' என்றேன்.

    அன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, "யோவ்! சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல?'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.

    ஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், "அதெல்லாம் இல்ல வாலி! சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு?'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

    இந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, "இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்?'' என்று கேட்டார்.

    சிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.

    அதை வாசித்தேன். கேட்டு விட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.

    அடுத்த பாடல்தான் "வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''

    இந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.

    இந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.

    இது என் மூன்றாவது வெற்றிப்படம்.''

    "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.
    "அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.

    அவரது இரண்டாவது படமான `பாலூட்டி வளர்த்த கிளி' சரியாகப் போகவில்லை. என்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "கொலை கொலையா முந்திரிக்கா'' பாடல் ஹிட்டாகி, இளையராஜா பெயரை தக்க வைத்துக்கொண்டது.

    இரண்டாவது படம் வெளியான பிறகும் இளையராஜா தொடர்ந்து `இசை' கற்றுக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். இதற்கென சுவாமி தட்சிணாமூர்த்தி என்ற இசை அமைப்பாளரிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தியின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது இரண்டு படங்களுக்கு இசையமைத்துவிட்ட நிலையிலும் அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆசை எனக்குள் இருந்தே வந்தது. இனியும் தள்ளிப்போடலாகாது என்ற முடிவுக்கு வந்து, சென்னை மந்தைவெளியில் இருந்த அவரது வீட்டுக்குப்போய் கேட்டேன்.

    என் ஆர்வம் புரிந்து கொண்டவர், "நாளையில் இருந்து பாடம் தொடங்கலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    மறுநாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு தட்டுடன் போனேன்.

    அவர் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை முடித்து, எனக்கு பாடம் தொடங்கினார்.

    ஆரம்பப் பாடமான சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

    அவரோ ஏதோவொரு கீர்த்தனையைத் தொடங்கி விட்டார். அவர் சொல்லித் தரும் பாடங்களை குறித்துக்கொள்ள `நோட்டு' கொண்டு போயிருந்தேன். கீர்த்தனையில் இருந்து தொடங்கி விட்டதால் எழுதும் வேலை ஒன்றும் இல்லை.

    பாடினார். அதையே என்னைத் திரும்பப் பாடச் சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை.

    சரி செய்தார். மறுபடியும் பாடினேன்.

    ஊஹும். அவர் மாதிரி வரவேயில்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது.

    அன்று மட்டுமில்லை. அடுத்து நான் போன மூன்று மாதங்களிலும் இதே தான் என் நிலை. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று. என்றாலும் அவர் பாடுவதும், அவர் பாட்டுக்கு நான் பாடிப்பார்ப்பதுமாக 6 மாதங்கள் ஓடிப்போயிற்று.

    சுவாமி அப்போது, "நந்தா என் நிலா'', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

    நானும் இரண்டொரு படங்களுக்கு இசையமைப்பை தொடர்ந்ததோடு, ஜி.கே.வி.யிடமும் பிசியாக இருந்தேன்.

    இதற்கிடையே சுவாமி ஒருநாள் என்னிடம் தனது படம் ஒன்று பின்னணி இசை சேர்ப்புக்கு (ரீரிகார்டிங்) வந்துவிட்டதாகவும், அதற்கு `காம்போ' (இசைக் கருவி) வாசிக்க யாரும் கிடைக்கவில்லை என்றும் என்னிடம் சொன்னார்.

    நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், "அதனாலென்ன சுவாமி! நான் இல்லையா? நீங்க சொல்றப்போ வந்துடறேன்'' என்றேன்.

    சொன்னது போலவே அவரது படத்துக்கு `கம்போ' வாசிக்கப்போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு, நான் ஒரு உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும். அங்கிருந்த எல்லாரும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

    ஸ்டூடியோவில் வேலை செய்வோருக்கும் ஷூட்டிங் புளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் வந்தவர்களுக்கும் தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் "காம்போ'' வாசித்த நாலு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது.

    இப்படி பார்த்துப் போனவர்களில் ஒருவரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப் பார்த்தால்கூட அந்த சம்பவம் பற்றி வியந்து பேசுவார்.

    சுவாமிக்கும் என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. `இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஏற்பட்ட ஆச்சரியம்தான் என்மேல் அவருக்கான அன்பை கூட்டிற்று என்றும் சொல்லலாம்.

    அப்புறம் அந்த இசைப் பயிற்சி என்னாயிற்று என்று கேட்பீர்கள். அது அவ்வளவுதான்.

    இந்த நேரத்தில் மாஸ்டர் தன்ராஜை பார்க்க விரும்பினேன். தன்னிடம் இசை கற்றுக்கொண்டவர்களில் ஒருவராவது தன்னை வந்து பார்க்கவில்லை என்று அவர் குறைப்பட்டுக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.

    ஜோசப்பிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து மாஸ்டரின் தொடர்பு நின்று போனது. இருந்தாலும் அவர் மீதான மரியாதையும் அன்பும் குறையவே இல்லை.

    ஒருநாள் கையில் ஒரு ஐயாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்கப்போனேன்.

    என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், "நீ ரொம்பவும் பிசியா இருப்பதை கேள்விப்பட்டேன். இருந்தாலும் இசையில் மேற்கொண்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்கறதை மறந்துடக்கூடாது. உனக்கு இதுக்காக எப்ப `டைம்' ஒதுக்கி வர முடியுமோ வா. நான் இருக்கிறேன்'' என்றார்.

    அவர் கையில் ஐயாயிரம் ரூபாய் பணத்தை வைத்தேன். இப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் போலானார். "என்கிட்ட எத்தனையோ பசங்க கத்துக்கிட்டு சினிமாவில் நல்லா சம்பாதிக்கிறானுக. இதில் ஒருத்தன்கூட என்னை கவனிக்கணும்னோ, பார்க்கணும்னோ நினைச்சது கிடையாது. பிசியா இருக்கிற நீ என்னை பார்க்க வந்ததே பெரிசு. பணம், காசு கிடக்கட்டும். ஆனா ராஜா நீ `கிரேட்'டுடா!''

    இப்படி  அவர் சொன்னது எனக்கு  ஆசீர்வாதமாகவே  பட்டது.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    தொடர்ந்து வந்த படங்களுக்கான இசையமைப்பின்போது "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்'' என்ற பாடல், ஒத்திகையின்போது சின்னதாய் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது இளையராஜாவுக்கு.

    அதுபற்றி கூறுகிறார்:

    `அன்னக்கிளி' டைரக்டர்கள் தேவராஜ் - மோகன், "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்துக்குப் பிறகு "உறவாடும் நெஞ்சம்'' என்ற படத்தை இயக்கினார்கள். இதே நேரத்தில் பஞ்சுவின் "அவர் எனக்கே சொந்தம்'' படமும், காரைக்குடி நாராயணனின் `துர்காதேவி' படம் சங்கரய்யர் டைரக்ஷனிலும் தொடங்கியது.

    "உறவாடும் நெஞ்சம்'' படத்தில் "ஒருநாள், உன்னோடு ஒரு நாள்'' பாடல் பதிவாகும் போது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்னணி இசையில் வயலினோடு ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கம்போஸ் செய்யப்பட்ட இசை, ஒரு ஒத்திகையிலும் சரியாக வரவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது.

    கோவர்த்தன் மாஸ்டர், "சரிய்யா, டேக் போகலாம். அதற்குள் எப்படியாவது பிராக்டீஸ் செய்து வாசிப்பார்கள். சரியாக வந்துவிடும்'' என்று நம்பிக்கை கொடுத்தார்.

    `டேக்' போய் விட்டோம். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் - ஜானகியும் பாடிக்கொண்டிருந்தார்கள். நிறைய டேக்குகள் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, மிïசிக் சரியாக வரவில்லை.

    கடைசியாக ஒரேயொரு டேக்கில் மிகவும் சரியாக வாசித்து விட்டார்கள். அதுதான் இசைத் தட்டில் இன்றும் இருப்பது.

    இதுபோல எத்தனை பாடல்களில் ஒரேயொரு டேக்கில் மட்டும் சரியாகப் பாடியிருப்பார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.''

    ×