search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.
    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.

    சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார்.

    வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார்.

    அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி'' என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

    ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க'' என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார்.

    1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

    `பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு.

    இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

    தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

    சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

    என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?'' என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

    "உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள். 5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.

    திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

    அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

    "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்'' என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

    இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை'' படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்:

    "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?'' என்றேன்.

    "சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்...'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார்.

    உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு...'' என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.

    எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

    எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

    அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார்.

    அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

    அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.

    படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அதுபற்றி வாலி கூறுகிறார்:-

    "நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.

    "மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''

    நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.

    "என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

    "வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.

    பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.

    அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி.

    அப்போது, அவர் தந்தை காலமானார்.

    வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.

    மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.

    அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.

    இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.

    கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்குமë நல்ல காலம் பிறந்தது.

    ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.

    வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.

    மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.

    ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.

    "நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.

    "பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''

    "ஆமாம் சார்!''

    "அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''

    ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

    வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.

    வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.

    மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.

    காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.

    `எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

    கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

    "வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

    1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

    அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

    தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

    அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

    வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

    இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

    எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    "கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

    உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

    பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

    "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

    (1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

    "மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

    ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

    அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

    "ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

    அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

    அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

    பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

    "வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

    ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

    "கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

    அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

    நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

    ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

    வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

    உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

    அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

    முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

    "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

    மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர்.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.

    கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தவர்.

    கே.ஆர்.ராம்சிங், 1915-ல் நாகர்கோவிலில் பிறந்தார். தந்தை பெயர் ரூப்சந்திரலால். தாயார் ராதாபாய். இவர்கள் ராஜபுத்திர வம்சாவழியினர்.

    நாகர்கோவில் இந்து உயர்நிலைப்பள்ளியில் "இன்டர் மீடியட்'' (தற்போதைய "பிளஸ்-2'') வரை படித்தார்.

    பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவரது தகப்பனார், உடல் நலம் குன்றி இறந்து போனார். அப்போது ராம்சிங்குக்கு வயது 15. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    இவ்வாறு தொடங்கிய இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது.

    தனது நடிப்பால், கணீரென்ற குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த "ஸ்ரீராமபால கான வினோத சபா'' என்ற நாடகக் கம்பெனி நடிக்க அழைத்தது. இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், எம்.கே.முஸ்தபா, "சட்டாம்பிள்ளை'' வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

    கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.

    நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

    1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.

    தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.

    டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.

    ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.

    கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,

    பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.

    1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.

    இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.

    சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.

    பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!

    இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.

    ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.

    அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.

    இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.

    பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.

    பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்

    குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.

    ராம்சிங்கின் மனைவி பெயர் லட்சுமி.

    இவர்களுக்கு சந்திரமோகன், ரவீந்தர் என்ற மகன்களும், ரோகிணி என்ற மகளும் உள்ளனர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' பட்டம் உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றவர், ராம்சிங்.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.

    தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.

    முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு'' என்று கூறிவிட்டார்.

    ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.

    முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.

    அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், "சந்திரலேகா''வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், "சந்திரலேகா''வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு "டூப்''பாக ஆடினார்.

    ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.

    பின்னர் "மகாபலிசக்ரவர்த்தி'', "மின்மினி'', "தேவமனோகரி'', "பாரிஜாதம்'' முதலான படங்களில் நடித்தார்.

    1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி'' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.

    1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் "ஓர் இரவு'' படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.

    பின்னர் "சர்வாதிகாரி'', "ஏழை உழவன்'' போன்ற படங்களில் நடித்தார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "திரும்பிப்பார்'' படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)

    வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.

    1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.

    இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.

    சிவாஜி -சரோஜாதேவி நடித்த "இருவர் உள்ளம்'' படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.

    "அறிவாளி'' படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.

    மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.

    பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    "தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.

    "டவுன் பஸ்'' படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.

    நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "அன்னையின் ஆணை''யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "தேன்மொழி'' என்று அண்ணன் பெயரிட்டார்.

    அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, "உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு'' என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.''

    இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

    முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக''த்தின் நிறுவனத் தலைவர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, "கலைவாணர் விருது'' உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெருமëபுதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.

    "குறத்திமகன்'' படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "வாழையடி வாழை'', "தசாவதாரம்'' ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு "பொண்ணுக்கு தங்கமனசு'' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது.

    1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக "பாரதவிலாஸ்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்று தேர்வு எழுதினார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே நடிக்கத்தொடங்கிய ஜெயசித்ரா, 10-ம் வகுப்பு படிக்கும் வரை திரைப்படங்களில் நடித்ததை மறைத்து வந்தார். சில ஆசிரியைகளுக்கு இது தெரிந்தாலும், தெரிந்ததுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

    தொடர்ந்து சிவாஜியுடன் "சத்யம்'', "லட்சுமி வந்தாச்சு'', "பைலட் பிரேம்நாத்'', "ரத்தபாசம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    சிவாஜி பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "பாரதவிலாஸ் படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்க கற்றுக்கொடுத்தார். அப்போது நான் பாக்கு போட்டுக்கொண்டு டயலாக் பேசுவேன். அதற்கு சிவாஜி, "இப்படி பாக்கு போடக்கூடாது'' என்று கூறினார். அன்று முதல், நடிக்கும்போது நான் பாக்கு போடுவது இல்லை. சத்தியம் படத்தில் அதிகமாக டயலாக் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.

    "பொன்வண்டு'' என்ற படத்தில் நடிக்கும்போது, 11-ம் வகுப்பு தேர்வு எழுதமுடியாமல் போயிற்று.

    பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் "நவரத்னம்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, "நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்" என்றார்.

    டைரக்டர் கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்'' என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    தொடர்ந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் 3-வது தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபிறகுதான், ஜெயசித்ராவுக்கு "குணச்சித்திர நடிகை'' என்ற பெயர்கிடைத்தது. "டொட்டடொய்ங்'' என்ற மேனரிசம் அந்தப் படத்தில்தான் வந்தது.

    அந்த படத்தில் நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "நான் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்தேன் என்று பல நடிகைகளிடம் பாலசந்தர் சார் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் சந்தேசமாக இருந்தது. அவரது டைரக்ஷனில் நடித்தை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

    தேவர் பிலிம்சாரின் "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்றாலே மிருகங்கள் இருக்கும். இந்த படத்தில் பாம்பை நடிக்க வைத்தார்கள்.

    படத்தில் பாம்பை கண்டாலே சிவகுமாருக்கு பிடிக்காது. திருமணத்தின் போது, பாம்பை ஒரு கட்டிடத்திற்குள் போட்டு தீ வைத்து விடுவார். பாசமான பாம்பு இறந்து விட்டதே என்று ஜெயசித்ரா மயக்கமாகி விடுவார்.

    முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட அறையில் ஜெயசித்ராவின் மீது பாம்பு ஊர்ந்து சென்று, அவர் முகம் அருகே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாம்பு ஜெயசித்ராவின் முகத்திற்கு நேராக நின்று அவரது உதட்டை தனது நாவால் வருடிவிடும். உடனே கண் விழிக்கும் ஜெயசித்ரா, "தெய்வமே நீ உயிரோடுதான் இருக்கிறாயா?'' என்று வசனம் பேசுவார்.

    இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.

    பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது. எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று வணங்கிக்கொண்டு இருந்தார்.

    பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும். உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான் இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேசவேண்டும். அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக் கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம் செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

    இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர் பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன். அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கண்கூடாகக் கண்டேன்.

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    1975-ம் ஆண்டு "சினிமாப்பைத்தியம்'' என்ற படத்தில் நடித்தார். "கல்யாணமாம் கல்யாணம்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

    அதேபோல "அக்கரைப்பச்சை'', "கலியுககண்ணன்'', "வண்டிக்காரன்மகன்'', "பணக்காரப்பெண்'', "தேன்சிந்துதே வானம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தில் கமல் ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த சமயத்தில், தெலுங்கு படதயாரிப்பாளர் ராமாநாயுடு மூலம் "சோகாடு'' என்ற படம் மூலம் சோபன்பாபுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிக்கத்தொடங்கினார்.

    ஜெயசித்ராவின் திருமணம் 1983-ல் நடந்தது. கணவர் பெயர் கணேஷ். இவர் தொழில் அதிபர்.
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

    ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா. இவர் கால்நடை டாக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!

    ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலக்கட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954-ம் ஆண்டு "ரோஜலு மாராயி'' (தெலுங்கு "காலம் மாறிப்போச்சு'') படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

    1955-ம் ஆண்டு "மகாவீரபீமன்'' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் திரவுபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின்னர் "தெய்வபலம்'', "சிவகாமி'' உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.

    திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

    இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்தபோது "பக்தபோதனா'' என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11-வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.

    முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டிவந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க "கேமரா டெஸ்ட்'' எடுத்தனர். ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, "நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார், விட்டலாச்சாரியார்.

    திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளைமகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்னசத்தியம் மாஸ்டர், எம்.எஸ்.சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.

    இந்தநிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கேமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால், "இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை, பிறகு வாய்ப்பு தருகிறேன்'' என்றார், விட்டலாச்சாரியார்.

    அதன்பின்னர் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது அழைத்துச்சென்று, இரண்டு வசனங்களை பேசச்சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், "தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்'' என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதுதான், "ஜெயசித்ரா'' என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார்.

    இந்தப்படத்தில், குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார்.

    இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து, ரசிகர்களிடம் `சபாஷ்' பெற்றார்.

    "பாசமலர்'' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ...'' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.
    "பாசமலர்'' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ...'' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

    அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த "பாசமலர்'' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

    மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், "வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ'' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

    இந்தப்பாடல் பெரிய "ஹிட்'' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

    அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, "பாசமலர்'' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "பணமா பாசமா'' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

    அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்'' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

    டைரக்டர் ஸ்ரீதர், "சிவந்த மண்'' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

    அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

    "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்'' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த "ஹம்மிங்'', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

    அந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறைய படங்களில் பாடினார்.

    அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:

    "காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.''

    "ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.''

    "கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.''

    "அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.''

    "துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.''

    "குடிமகனே பெரும் குடிமகனே.''

    "பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.''

    - இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.

    எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

    "கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு "கலைமாமணி'' விருது கொடுத்து கவுரவித்தது.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், "நந்தி விருது'' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் "வெண்ணிற ஆடை.'' அதில் அவர் பாடும் முதல் பாடலான "நீ என்பதென்ன... நான் என்பதென்ன...'' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

    கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.

    எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

    எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

    இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.''

    இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

    "உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-

    "வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

    எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்'' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி.

    ×